வடக்கின் அரசியல்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், இரு வேலைத்திட்டங்கள், தமிழ் அரசியலின், தீவிர கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ளன:
ஓன்று பகிஷ்கரிப்பு.
இரண்டாவது, பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது.
‘பகிஷ்கரிப்பு–பொதுவேட்பாளர்’ என்ற இரண்டு கோட்பாடுகளுமே மொத்தத்தில் ஒன்றுதான் என்பதும், இவை பொதுவில் புலம்பெயர் அரசியலின் தீவிரமுகத்தால், வலுவாக ஊக்குவிக்கப்பட்டு வருவன என்பதும் வெளிப்படை.
மறுபுறம், இவை இரண்டுமே வட-கிழக்கு மக்களால் நிராகரிக்கப்படவதாகவே இருக்கும் என்பதும், இது அண்மையில் இடம்பெற்ற விமானப்படை கண்காட்சி அல்லது ஹரகரனின் இசைநிகழ்ச்சி என்பனவும் எதிரொலிக்கும் விடயங்களாகும், என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.
இருந்தும இவ் அரசியல் முரண்களின் தாக்கம் ஏதோ ஒரு வகையில் தமிழரசு கட்சிக்குள்ளும் ஊடுருவத் தவறவில்லை எனக் கூறலாம்.
உதாரணமாக, “தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்துவது காலத்தின் தேவை” என ஒரு புறத்தில் ஸ்ரீதரனும், “தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்துவது இனவாதத்தை தூண்டும் செயற்பாடு” என்று மறுபுறத்தில் சுமந்திரனும் ஒரே தினத்தில், அறிவித்திருப்பது நிலைமையை எமக்கு எடுத்து கூறுவதாய் இருக்கிறது.
வேறுவார்த்தையில் கூறினால், புலம்பெயர் அரசியலின் தாக்கம் முள்ளிவாய்கால் அரசியலுடன் முடிந்தது என்றில்லாமல் தமிழரசு கட்சிக்குள்ளும் தனது வீரியத்தை காட்டி நிற்கின்றது என்பதனையே இவையணைத்தும் தெளிவுற காட்டுவதாய் உள்ளன. ஆனால் இவ் வீரியத்தின் ஒட்டுமொத்த விளைவும் யாதாக இருக்கபோகின்றது என்பதே கேள்வியாகின்றது.
அதாவது, வடக்கையும் தெற்கையும், துருவப்படுத்தும் இவ்வகை அரசியல் காலம் தோறும், அவ்வவ் காலத்திற்கேற்ப, கட்டமைக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டே வந்துள்ளது என்பதும் நாம் அறிந்த ஒரு வரலாறே.
உதாரணமாக, அண்மையில், டலஸ் அழகப்பெருமா அவர்கள் கூட “தமிழ் மக்கள் தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்க கூடாது–மாட்டார்கள்” என கூறினார். (வீரகேசரி : 17.04.2024) (டலஸ் அழகப்பெருமா அவர்களுக்கு, திடீரென தமிழ் மக்கள் மீது ஏன் இத்தனை பாசம் அல்லது கரிசனை என்பதும் கேள்வியே.)
அதாவது, அன்னாரின் இத்துண்டலானது எதனை நோக்கி அல்லது எதனை மையமாக கொண்டு செயற்படுகின்றது என்பதும் இவ்வகை நுண் அரசியலானது இன்றைய ஒரு நடைமுறை எதார்த்தமாகியுள்ளது என்பதனையும் பலரும் இன்று அறிவர்.
அதாவது, துருவப்படுத்தும் அரசியலின் பின்புறமாய், ஆதிக்கசக்திகளின் நலன்கள் கைகோர்ப்பதாய் உள்ளன என்பதே இங்கு அர்த்தமாகின்றது.
மறுபுறத்தில், “பகிஷ்கரிப்பு அல்லது பொதுவேட்பாளர்” என்ற கோசம் உண்மையில் நடைமுறைச் சாத்தியமானது தானா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. ஏனெனில், இந்நடைமுறைகளை ஏற்பதென்றால் முதலில் கட்சிகள் ஒன்றுபட வேண்டும். அப்படியே ஒன்றுபட்டாலும் கூட மக்கள் இதனை ஏற்கும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்பது அடுத்தது. இருந்தும், எதிர்வரும் தேர்தலில், ரணிலின் கரத்தை பலப்படுத்த வேண்டும் எனில், அது யாருக்கூடாகவும், அல்லது எச் சக்திக்கூடாகவும் செய்தாகப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை, (புலம்பெயர் அரசியலின் பின்னனியில், அது செயற்படும் விதங்கள், அதன் நலன்கள், அவ் அடிப்படையில் அது மேற்கொள்ளும் நகர்வுகள் தொடர்பில் இக் கட்டுரை தொடரின் கடந்தகால பதிவுகளை பார்வையிடுதல் உதவியாக இருத்தல் கூடும்).
ஆகவே, யதார்த்தம் இப்படி இருக்கையில், முன்வைக்கப்படும் கோஷங்களின் பின்னால் உள்ள அரசியல் நலன்கள் எமது அவதானத்துக்குரியவை ஆகின்றன.
தென்னிலங்கையின் அரசியல்
இவ்வகை சூழலில் தான், அனுரகுமாரதிஸ்ஸ நாயக்கவின் அலை ஓய்துவிட்டது எனும் கருத்து இன்று ஒரு கேள்வியாக எழுந்துள்ளது.
காரணம், வரிசைகளின் யுகத்தை நினைவுப்படுத்தி, நினைவுப்படுத்தியே தனது வாக்கு வங்கியை கட்டியெழுப்ப முயலும் ரணிலின் திறமைக்கு, சர்வதேசம் உதவிக்கரம் நீட்டுவதாய் உள்ளது.
எரிவாயு முதல் எண்ணெய் வரை, அல்லது டாலர் முதல் அத்தியாவசிய பொருட்களின் விலை வரை, அனைத்தையும் குறைக்கும் போக்கு இதற்குச் சான்று பகிர்வதாய் உள்ளது. மேலும், ரணிலின் திடீர் விஜயங்கள் மலையக்தோட்டங்கள் தொட்டு, அஸ்கிரிய-மல்வத்த பீடாதிபதி வரை வெகு சுமூகமாக நாள்தோறும் நடந்தேறுகின்றன. இவ்விலை குறைப்புகள் அல்லது இவ் விஜயங்கள், அணைத்தும் தற்சமயத்திற்கானது. அல்லது தேர்தல் கால நடவடிக்கைகளில் இவையும் ஒன்று, என்பதனை மக்கள் தெரிந்ததே இருந்தாலும் இதனை இப்போதைய நிரந்தரம் என அவர்கள் மனதார நம்புவதில் விருப்பம் கொண்டுள்ளனர்.
காரணம், இப்போர் வியூகத்தை, எதிர்கட்சிகள் குறிப்பாக அனுரகுமாரதிஸ்ஸ நாயக்க அவர்கள் முகங்கொடுத்துவரும் விதம் உண்மையில் கேள்விக்குரியாகின்றது.
நடைமுறை எதார்த்தத்திலிருந்து, எமது வட-கிழக்கு அரசியல் வாதிகளைப்போலவே, இவர்களும் அன்னியப்பட்டவர்களாகவே தமது நிலைப்பாடுகளை முன்வைத்துவருவது துரதிர்ஷ்டகரமானது.
இச்சூழ்நிலையிலேயே, நாளும் நிதமும், புதிய புதிய விடயங்கள் ஏவி விடப்படுகின்றன. அல்லது கட்டமைக்கப்படுகின்றன.
மிக அண்மையில், ஜீவன் தொண்டமான் அவர்கள், “ஜனாசாக்களை எரித்தமைக்காக அரசு மன்னிப்புகோரத்தான் வேண்டும்” என்றும் “ஆய்வுடன் கூடிய அமைச்சரவை பத்திரத்தை தான் விரைவில் சமர்ப்பிக்க உள்ளதாகவும்” அறிக்கை ஒன்றை விட்டு மக்களை திகிலில் ஆழ்த்திவிட்டார். (விடிவெள்ளி : 04.04.2024)
அனைவரும் மறந்திருந்த இவ்விடயம் தொடர்பில், திடீர் என வெளியான அன்னாரின் இவ் அறிவிப்பானது, தேர்தல் கால அதிரடிகளில் ஒன்றா என்பதனை சிலர் கேள்விக்குட்படுத்த தவறவில்லை.
இதனைப்போன்றே, “நாட்டை அழித்தோருடன் கர்த்தினாலுக்கு தொடர்புண்டு–மக்கள் அவரிடம் ஏமாந்துவிட கூடாது" என்றும் (தினக்குரல் தலைப்புசெய்தி : 21.04.2024) “சுதந்திரகட்சியை ரணிலிடம் தாரைவார்க்க சந்திரிக்கா முயற்சி" (24.04.2024) என்ற அதிரடியும் அண்மையில்; வெளிவர துவங்கியுள்ளன.
அதாவது தனக்கு எதிராக செயற்படக் கூடியவர்கள் அனைவரையும் மோப்பம் பிடித்து (கர்தினால், சந்திரிக்கா அம்மையார் போன்றோர்) அவர்களை குறிவைத்து அபரிமிதமாக சேறுபூசும் கைங்காரியங்கள் இன்று அரங்கேற தொடங்கிவிட்டன எனலாம். இதே போன்று, இச்செய்திகளுக்கு பக்க பலமாய், இத்தகைய செய்திகளை ஊக்குவிக்கும் ‘ஊடக இயக்குவிப்பும்’ இங்கே அவதானிக்கத்தக்கதாய் இருக்கின்றது. (முக்கியமாக, தமிழ் ஊடக இயக்குவிப்பு).
அதாவது, ரஷ்ய-உக்ரைன் போரில் அல்லது ஒரு காஸா-இஸ்ரேல் அழிப்பு நடவடிக்கைகளில், அல்லது ஈரான்- -இஸ்ரேலிய போரில், ஊடகங்கள் எப்படி நுணுக்கமாய் முடுக்கிவிடப்படுகின்றனவோ அல்லது தடை செய்யப்பட்டனவோ அதே விதமாய், இலங்கையின் தற்போதைய தேர்தல் காலகட்டத்தில், இலங்கையின் ஊடகங்களும் முடுக்கிவிடப்படுவது கவனிக்கத்தக்கதாகின்றது. ( உதாரணமாக, முள்ளிவாய்கால் அவலத்தை, சம்பந்தப்பட்டோரின் ஓர்மம் என வர்ணிப்பது எவ்வளவு மடமையானதோ, அது போன்றே, நிலைமைகளை பிழையாக வரையறை செய்வதுமாகின்றது) -
உதாரணமாக, கர்த்தினால் குறித்த செய்தி, ‘தலைப்பு செய்தியாகின்றது’. இது போலவே ‘பொது வேட்பாளர்’ குறித்த செய்தியும் உச்சத்தை தொடுகின்றது.
இதனை அறிந்தோ அறியாமலோ ஒரு விமர்சகர் பின்வருமாறு அண்மையில் எழுதினார் :
“சோழியன் குடுமி சும்மா ஆடுமா? தேர்தல்கள் வரப்போகின்றதல்லவா? உசுப்பேத்த வேண்டும் அல்லவா? கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்...” (எம். புகாரி : விடிவெள்ளி : 18.04.2024) (புகாரி அவர்கள் ஜீவன் தொண்டமானின் ஜனாசா தொடர்பில் ஆய்வு பத்திரமொன்றை சமர்ப்பிப்பது குறித்த விமர்சனத்தை இது உள்ளடக்கி இருந்தாலும், மேலே காணக்கிட்டும் குறிப்பு, முஸ்லீம் சமூகத்தை கடந்து, அனைத்து சமூகங்களுக்கும் ஏற்புடையதாகவே அமைந்து போகின்றது என்பதும் குறிக்கத்தக்கதாகின்றது).
ஆனால், இத் தில்லுமுல்லுகளின் வேர் இத்துடன் நின்றானதாக இல்லை என்பதிலேயே வேரின் ஆழம் தங்கியுள்ளதாக உள்ளது.
ரஷ்ய-உக்ரைன் போர்
CROCUS CITY நகர மண்டபத்தை, ISIS தீவிரவாதிகள் தாக்கியதன் பின் ரஷ்யாவின் முகம் தீவிரமாக மாறுதலடைந்தது. (137 பேர் இறப்பு : 22.03.2024).
இதுவரையில் உக்ரைன் உடனான தனது நடிவடிக்கையை Special operation என்று மட்டும் கூறிவந்த ரஷ்யா, மேற்படி தாக்குதலின் பின்னர், முதல் தடவையாக, தான் ஒரு போரில் ஈடுபட்டிருப்பதாக (At War) அறிவித்து முடித்தது. மேற்படி தாக்குதலுக்கு, ISIS பொறுப்பேற்றிருந்தாலும் ரஷ்யா அவர்களின் ஏற்புடன் சாமாதானமடைந்ததாக தெரியவில்லை. ‘யார் இவர்களின் கொந்தராத்துக்காரர்கள்’ என்பதே ரஷ்யாவின் கேள்வியானது. இதே வேளை ISIS ஐ இயக்குவிப்பது அமெரிக்காவும், ஐக்கிய இராஜ்ஜியமுமே என்ற அதிர்வெடியை இதே தினங்களில் கிரீசின் முன்னால் அமைச்சர் Panagiotis Lafazanis அவர்கள் வீசி எறிந்தார் (Hinthusthan Times: 10.04.2024).
இச்சூழ்நிலையில், அதாவது, ரஷ்யா, தான் போரில் இறங்கியுள்ளதாக, அறிவித்த தினத்திலிருந்து, தனது போர் நடவடிக்கையை முழு வீச்சில் தீவிரப்படுத்தத் தொடங்கிவிட்டது.
ரஷ்யாவின் முழு தேசமுமே ஒரு போர்க் காலத்து நடைமுறையில் இறக்கப்பட்டது. அதன் ஆயத உற்பத்தி கிட்டத்தட்ட ஐந்து மடங்காக பெருகியது. ஆயுத தொழிற்சாலைகள் 24 மணி நேரமும் இயங்க தலைப்பட்டன. தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இராணுவ தயாரிப்புக்களுக்கேற்ப, அதன் உற்பத்தி முறை, பொருளாதார வாழ்வு, நாட்டின் அரசியல் சுவாத்தியம் - அனைத்தும் மாற்றியமைக்கப்பட்டது. புதிய ஆய்வுகள் புதிய கருவிகளை இனங்கண்டன. அவை புதிய உற்பத்தியை செய்தன. விண்வெளியில் புதிய கட்டமைப்பு – புதிய நிர்மாணிப்பு நடந்தேறின. மிக பளுகொண்ட பிரமாண்டமான ரொக்கட்டுக்களை முதல் முறையாக ரஷ்யா விண்ணில் ஏவுவதில் வெற்றி கண்டது (Angara).
அண்மையில் ஐ.நா சபையில் விண்வெளியில் அணு ஆயதங்களை இருத்துதல் கூடாது என்று அமெரிக்காவும் ஜப்பானும் கொண்டு வந்த தீர்மானம் ரஷ்யாவால் வீட்டோ செய்யப்பட்டது. (25.04.2024). இதற்கு பதிலாய், விண்வெளியில் எந்த ஒரு ஆயதத்தையும் இருத்துதல் கூடாது என்ற திருத்தத்தை ரஷ்யா கொண்டு வந்தது. ஆனால் இத்திருத்தத்தை அமெரிக்காவும், ஜப்பானும் எதிர்த்தன. எனவே தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. இதனை விட சீனா-ஈரான் உடனான புதிய உறவுகள் - ஆபிரிக்கா நாடுகள் உடனான புதிய வலைப்பின்னல்கள் அனைத்துமே ரஷ்யாவின் இன்றைய முகத்தை மாற்றியமைப்பதில் பெரும் பங்கு வகித்தன எனலாம். சுருக்கமாகக் கூறினால் விண்வெளி, வான்வெளி, தரைநகர்வு அனைத்துமே ஒன்றினைந்ததாய் நடத்தப்படும் வித்தியாசமான போர்முறை ஒன்றை ரஷ்யா இன்று நடாத்துகின்றது. இத்தகைய ஒரு நடைமுறையிலிருந்து இனி பின்வாங்குவது என்பது, ரஷ்யா என்ற வல்லரசுக்கு சற்று சிரமமானதாகவே இருக்கும். ஏனெனில், முதலீடு செய்யப்பட்டுள்ள அதன் ஆயத தொழிற்சாலைகளை இனி அது கணநேரத்தில் மூடப்படப் போவதில்லை.
போர்களத்தை முன்னிறுத்தி இன்று மாற்றியமைக்கப்பட்டுள்ள அந்நாடும், அதன் உறவுகளும் இனியும் உடனடியாக மூடப்படாது. இவை, போர் முடிந்தாலும், ஏற்றுமதியை நோக்கியே, முக்கியமாக அமெரிக்கா அல்லது மேற்குலகுக்கு எதிரான ஏற்றுமதிகளை நோக்கியே, இருப்பதாக மாறப்போகின்றது.
இதனாலோ என்னவோ முன்னைய பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறுவதைப்போல “உக்ரைனின் போரில் ரஷ்யாவின் வெற்றி என்பது மேற்கத்திய மேலாக்கத்திற்கு சாவுமணி என்றாகின்றது”.
இக்கூற்று குறித்து, கருத்து தெரிவித்த ரஷ்ய வெளிவிவகார அமைச்சர், Lavrov அவர்கள், இது பொறுத்து, சர்வதேச நீதிமன்றம் கவனம் கொள்வது சிறப்பானது என்றார் (19.04.2024). அதாவது, சர்வதேச நீதிமன்றத்தின இருப்பே, நாடுகளின் சமத்துவ அந்தஸ்து – Equality and not hegemonism என்ற அந்தஸ்த்தில் கட்டப்பட்டுட ஒன்று என்ற உண்மை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையிலேயே, போரிஸ் ஜோன்சனின் கூற்றை எங்கே இருத்துவது என Lavrov கேள்வி எழுப்பினார், ஆனால் இதனை விட பின்வரும் கூற்றை Lavrov உதிர்க்க தவறினார் இல்லை :
“புதிய பல்முனை உலகொன்று இன்று உதயமாகிக் கொண்டிருக்கின்றது இதனை மேற்கும் அறிந்தே உள்ளது. இப்புதிய ஏற்பாடு குறித்து அது உணராமலில்லை. ஆனால் ஓர் அமெரிக்க விருப்பு என்பது இனி வரவிருக்கும் ஐரோப்பிய-ஆசிய பாதுகாப்புக்கான கட்டமைக்குள் கொண்டுவருவது என்பது சாத்தியப்படாத ஒன்றாக இருக்கப் போகின்றது” (Tass : 19.04.2024)
வேறு வார்த்தையில் கூறுவதானால் ஒரு முனையிலான உலகுக்கும், பல் முனையிலான புதிய உலகிற்கும் இடையிலான முரண்பாடுகள் வெடிக்க தொடங்கியுள்ளதே, இன்றைய சர்வதேச அரசியலாகின்றது. இதனாலேயே, உலகின் ஒவ்வொரு புள்ளியிலும் இம் முரண்பாடுகள் அல்லது இவ் இழுப்பறிகள் பங்கேற்பதாயுள்ளன. இதனாலேயே, ஒவ்வோர் அங்குலமும் இவ் இழுப்பறிகளால் இனி ஆழமாய் பாதிக்கப்பட போகின்றது என்பதே முக்கியமாகின்றது. முக்கியமாக, இலங்கை போன்ற ஒரு கேந்திரப்புள்ளியில் இருக்கக்கூடிய ஒரு நாட்டில் இம் முரண்பாட்டின் தாக்கம் மிக உக்கிரமாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை. எனவேதான் “வாஷிங்டனின் விருப்பங்களுக்கு மாறாகவே சுமந்திரன் செயற்படுகின்றார் - அவர் வாஷிங்டனுக்கு ஏற்புடையவர் அல்ல. நிராகரிக்கப்படுகின்றார்” என்று விமர்சகர் நேரு குணரட்ணம் அவர்கள் கருத்து தெரிவித்திருப்பது தற்செயலான ஒரு நிகழ்வாக அமையாது. (தமிழ்வின் : 23.04.2024).
வேறுவார்த்தையில் கூறினால் “பொது வேட்பாளர்” என்றும் “பகிஷ்கரிப்பு” என்றும் எமது அரசியல் இன்று கட்டமைக்கப்பட்டாலும், அக்கட்டமைப்பின் பின் யார் யாருடைய நலன்கள் இயங்குகின்றன என்பதே சாரமாகின்றது. இதனை விடுத்து “தமிழரசுக் கட்சியும், சர்ச்சைகளும் ஒட்டிப்பிறந்தவை” என்றும் (தமிழ்வின் : 25.04.2024) “சுமந்திரனை வாஷிங்டன் நிராகரிக்கின்றது” என்றும் கூற முற்படுவது விடயங்களை மறைத்து, காதில் பூச்சூட முயலும் முயற்சியாகவே காணப்படுகின்றது.
அண்மைய ஓர் IMF அறிக்கையின் பிரகாரம், ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சியானது, இவ்வருடம் 3.2 வீதமாய் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. “ இதே அறிக்கையின் பிரகாரம் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி இவ்வருடம் 2.7 வீதம் எனவும், ஐக்கிய இராச்சியத்தின் வளர்ச்சி 0.5 வீதம் எனவும், ஜேர்மனியின் வளர்ச்சி 0.2 வீதம் எனவும், பிரான்சின் வளர்ச்சி 0.7 வீதம் எனவும் ” கூறப்படுகின்றது (BBC : 23.04.2024).
அதிசயம்! ஆனால், இதன் உள்கருத்து : “இக்காரணத்தினாலேயே, ரஷ்யாவானது போர்களத்தில் தோற்கடிக்கப்பட வேண்டிய நாடாகின்றது என்பதே ஆகும்” அதாவது நாங்கள் 61 பில்லியன் டாலர்களை ஒதுக்கிவிட்டோம். இனி, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய யூனியன்… கொடுக்க வேண்டியது… என்பதே இவ் அறிக்கையின் அர்த்தப்பாடாகின்றது. இத்தகைய ஒரு பின்னணியிலேயே பொது வேட்பாளர் என்ற எண்ணப்பாடும் பகிஷ்கரிப்பு என்ற கோசமும் நுணுகி ஆயத்தக்கது – எதார்த்தத்தையும் எமது மக்களையும் மறந்துவிடாது.
சுருக்கமாக கூறுவோமானால், இன்றைய சர்வதேச நடைமுறை புதிய நியமங்களை உலகில் கொணர்வதாய் இருக்கின்றது. இதன் பாதிப்புக்கு இலங்கையோ அல்லது தமிழ் அரசியலோ அந்நியப்பட்டதல்ல. இருந்தும், இச்சர்வதேச அரசியல், இன்று முன்வைக்க கூடிய, நகர்வுகளில் இருந்து, நாடும் எம் மக்களும் உகந்த நடைமுறைகளை தேர்வு செய்தல், காலத்தின் கட்டாயமாகின்றது. இதனை விடுத்து சர்வதேசம் முன்வைக்கும் கனவு நிலை சார்ந்த கோஷங்களில் அடிபட்டு போவது இலகுவானது – ஆனால் எம் மக்களுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்த கூடியது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.