1
அவரது முகத்தில் ஒரு சிறிய புன்னகை இழையோடிக் கொண்டிருந்தது. அப்பப்பா… பிய்த்து எடுத்து விட்டார்கள்… பிய்த்து! இப்போது, ஆழ்ந்த ஓர் அமைதி… நிம்மதி!! பெயர் தெரியாத ஒரு பயங்கர விலங்கின் கவ்வலில் இருந்து விடுபட்டு, அதன் கோரப் பற்களில் இருந்து தப்பி, … இப்போது அவரது இதழோரத்தில் அந்த நிம்மதி குடியிருக்க, அவரது இறுதிச்சித்திரம், அந்த கம்பீரமான, மிக மிக விலையுயர்ந்த அந்த சவப்பெட்டிக்குள், அடக்கமாய் கிடத்தப்பட்டிருந்தது. உண்மை. அவரது வாழ்க்கையும் ஒரு விதத்தில் அப்படித்தான் அமைந்திருந்தது.
2
“ஆ… நீங்கள்… உங்களுக்கு ஏற்கனவே அறையொன்று ஒதுக்கப்பட்டிருக்கின்றது… உள்ளே வாருங்கள்… இப்படி… இங்கே… சாப்பிடுவீர்களா…”
“ஓ… துறவறத்தை அவர் இருமுறை விட்டகர்ந்தார்… வலது கையை முன்னால் நீட்டி, நாயொன்று பாய்ந்து வெடுக்கென கவ்வுவதுப் போல், விரல்களை வெடுக்கென முன்னால் நீட்டி மடக்கி கூறினார் :
“எல்லாமே சாத்தான்தான்… சாத்தான் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மனிதனைப் பாய்ந்து கவ்வும். சாத்தானிடமிருந்து தப்புவது அப்படியொன்றும் எளிதான விஷயமல்ல. கடினமான காரியம்… அதற்கு தெரியும் - எப்படி வருவது – எப்படி கவ்வுவது என்பது…” முன்பு அது ஏஞ்சலஸ் ஆகத்தானே இருந்தது… அதன் பிறகுத்தானே… அதற்கும் ஆசை வந்தது… தானும் ஓர் கடவுளாக மாற வேண்டும் என்று… அப்படித்தானே இவரும்…“உலகை அழகாக்க கடவுள் மனிதனை அனுப்பினார் பின்னர், மனிதன், பாவம், தனியாக இருப்பானே என்று ஒரு பெண்ணை அனுப்பி வைத்தார்… அந்த இடத்தில்தான் சாத்தானும் வந்து புகுந்தது… அதனால்தானே இவ்வளவு கஷ்டமும் மனிதருக்கு…”
“கடவுள்தான் கூறிவிட்டாரே... மனிதா... உன்னை இவ்வளவு அறிவுடன் படைத்துவிட்டேன்... சாத்தானும் இருக்கின்றான். நானும் இருக்கின்றேன்... இனி தேர்வு செய்ய வேண்டியது நீ... ஹீயூகோ பாவம்... அவர் துறவறத்தை விட்டகன்று... அந்நேரம் நான் இந்தியாவில் படித்துக்கொண்டிருந்தேன்... அவர் பெரியவராய் இருந்த போது நாங்கள் எல்லோரும் சின்னஞ் சிறுசுகள்... உயர்ந்த வளர்ந்த மனிதர் அவர்... சுற்றி சுற்றி வருவார்... அனைத்தையும் பார்க்கும் திறன் கொண்ட ஒரு மனிதர்... நம்ப முடியவில்லை... கேள்விபட்டதும்...’
3
சவ ஊர்வலத்தில் கலந்துக்கொண்ட யாவரும் ஏதோ ஓர் வகை வன்மத்துடன் - கசப்புடன் காணப்பட்டவர்களாகவே இருந்தார்கள். குருபீடத்தை சேர்ந்த இன்னுமொரு வணக்கத்துக்குரிய சகோதரர்... பிலிப்... அவரிடம் கூட, ஏதோ ஒரு வகையில், ஏமாற்றப்பட்டுவிட்ட ஓர் கசப்பு தெரிந்தது. துக்கத்தின் ரேகை – பெருமளவில், ஏன் ஒட்டு மொத்தமாய் என்று கூட சொல்லலாம்... இல்லை எனலாம்.
“பெரிய கேக்கை அவன் மாத்திரமே உண்ண பார்க்கின்றான்... சரியா இது...” அவரது வழக்கறிஞர் நண்பன் ஒருமுறை செய்த முறைப்பாடு இது – ஒரு தடவை, இவன் குறித்து யூகோ கூற முற்பட்டார் :
“மூக்குக்கு அப்பால் பார்க்க தெரியாதவன். ஆனால் உலகத்தை, ஏதோ கையில் வைத்து அளந்து கொண்டிருப்பதாக, நினைத்துக் கொண்டிருக்கின்றான்...” “சிறு வயதில் சாரத்தில் மீன் பிடிப்போம்... நாள் முழுவதும் கிரிகெட்... உணவுத்தட்டின் ஓரத்தில் எப்போதும் ஒரு மீனின் கண், வைக்கப்பட்டிருக்கும்... பிடித்தமானது... எனக்கு… மிகச்சிறந்த மீனின் கண் அது... அப்போது, எங்கள் வியாபாரமே, மீன் வியாபாரம் தானே...’.
“குருபீடமா... சிறுவனாய் இருந்த போது பாதிரிமார் தங்கியிருந்த மடத்துக்குள், நான் புகுந்து விடுவேன். அனைத்தும் வெள்ளை நிறம்... மேசைவிரிப்பு. கண்ணாடி டம்ளர்கள். தட்டுக்கள். தூய்மை... கைத்துடைக்க, வெள்ளைத்துவாலை... வாய்துடைக்க வெள்ளைத்துவாலை... மாலையில் சான்ட்விச்... அமைதி... ஒழுங்கு... சத்தமே இராது... மௌனம்... மணியடிக்கும்... பின்னர்தான் முடிவு செய்தேன். குருபீடத்தில் இணைந்துவிட வேண்டும் என்று...”
4
குருபீடத்தில் இருந்து விட்டகன்றதா... இரண்டு மூன்று விடயங்கள் இருக்கலாம்... முதலில், எனது தந்தை இறந்துவிட்டார்... எனது தலைமை குருவானவரிடம் சென்று முறையிட்டேன்... தனது, சுட்டு விரலால், காற்றில் இரண்டு சிறிய வட்டங்களை இட்டு கூறினார் : ‘இரண்டு சிறிய நாணயங்கள்... மொத்தமாய். முப்பது சதம்... பஸ்சில் போய் வர...”
“ஒரு நாள் காலை மணியடிக்க மறந்து, நன்றாக அயர்ந்து தூங்கிவிட்டேன். பிழைதான். இரண்டு மணிநேரம்... மண்டியிட்டு... சிலுவையின் முன், கைகளை அப்படியே அகலவிரித்தப்படி... மடக்காமல்...”
“ஸ்கொலர்சீப் எல்லாம் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு... நான் பொருளாதாரத்தில் விசேட சித்தி பெற்றிருந்தேன். ஆனால் ssc யைக் கூட ஒழுங்காக பாஸ் பண்ணாதவனை, நல்ல இடங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். எனக்கு வெறுமனே பாகிஸ்தானை தந்தார்கள்... சட்டத்தையும் முதலில் படிக்க விட வில்லை... நான் சட்டக்கல்லூரியில் நுழைந்தது கூட ஒரு குருட்டு அதிஷ்டம் என்றே கூற வேண்டும். ஒருவன் தன் பிள்ளையை சேர்க்க வந்தான். அப்போது நான் குருபீடத்திலிருந்து அகலவில்லை. டிலாசாலின் பாடசாலை அதிபராக இருந்தேன். அந்நேரத்தில், எனது சம்பளம் இருபத்தைந்தாயிரம்... அவனது பாக்கெட்டிலிருந்து ஓர் பேப்பரை உருவி, என்னிடம் நீட்டிபிடித்தான். அதிசயமான அதிசயம். அது சட்ட கல்லூரியின் வினாத்தாள். நான் அவனது பிள்ளையை அனுமதிக்க மறுத்துவிட்டேன். ஆனால் அந்த கேள்விகள் என் மனதில் நின்றுவிட்டன.
“ஒரு வகையாக ரோமுக்கு ஓர் ஆறு மாதத்திற்கு அனுப்பிவைத்தார்கள். வரும் போது... ஒவ்வொருவனும் எழுதுகின்றான். எனக்கு ஒரு சீடி ப்ளேயர் வேண்டும்... ஒருவனுக்கு கெமரா. ஒருவனுக்கு விலை உயர்ந்த பியானோ. ஒருவன் மாத்திரம் எழுதியிருந்தான் : ஏதேனும் மத நூல்கள் இருந்தால், கொண்டுவா என்று”
“யார் இவர்கள்... இரவு நேரங்களில், பாடல்களுக்கேற்ப, தும்புத்தடிகளை வைத்துக்கொண்டு பால்ரூம் நடனம் ஆடுபவர்கள். இவற்றை பார்த்து, நான் துக்கித்த நாட்களும் அநேகம் உண்டு. இங்கேதான் விடயம் இப்படியென்றால், ரோமிலும் விடயம் இப்படித்தான்... அங்கு வந்து சேர்ந்த இளைஞர்கள் எல்லோரும், எதை எதையோ சொல்லிவிட்டு ஞாயிறு கூட்டங்களுக்கு வரமாட்டார்கள் - தப்பி விடுவார்கள். இவ் இளைஞர்களில் மிகக்குறைந்த இளைஞனுக்கு வயது ஒரு ஐம்பதைத் தாண்டியிருக்கும். இவர்களில், நான்தான் மிக மிக இளவயதினன். மகிழ்ந்து போனார்கள் - ஞாயிறு கூட்டங்களுக்கு சரியானா ஆள் கிடைத்துவிட்டதாக. பின்னர்தான் முடிவு செய்தேன்... இது ஒரு மூழ்கும் கப்பல். இதில் இருப்பதால், ஒன்றுமே ஆகப்போவதில்லை என்று... வெளியேறினேன்”.
5
ஆனால், வழக்கறிஞர் தொழிலில் இவர், நன்கு கால்பதித்தப் பின், தனது முன்னை நாள் சகோதர குருமார்கள் அனைவரையும் கிறிஸ்மஸ் போன்ற திருநாளில் வீட்டுக்கு அழைத்து, அவர்களை கௌரவித்து விருந்தளித்து மகிழ்ந்தார். கிட்டத்தட்ட, ஒரு நாற்பது பேர் வரை அவர் வீட்டுக்கு வந்து குழுமி விடுவார்கள் - மகிழ்ச்சியுடன்.
ஒரு முறை டிலாசால், புற்றரைகளில், வழக்கறிஞர் நண்பர்களுக்கான ஓர் ஒன்று கூடலை ஏற்பாடு செய்து இருந்தார். ஓர் ஆறேழு வழக்கறிஞர் குடும்பங்கள் அந்த மாலையை தத்தம் குடும்பங்களுடன், அந்த புற்றரையில் மகிழ்ந்து கொண்டாடினார். தூரத்தே, டிலாசாலின் ஓய்வு பெற்றோர் முதியோர் இல்லம் தோற்றம் தந்தது. அங்கே சுகவீனமுற்ற வயோதிப மதகுருக்கள் இருந்தார்கள். அவ்உயர்ந்த கட்டிடங்கள், பெருமூச்சு விட்டவாறே, இருளில், அசையாது நின்றிருந்தன. வழக்கறிஞர்களும், குடும்பத்தாரும், பல்வேறு வகையான உணவு வகைகளை பரிமாறி சுவைத்து மதுவையோ அல்லது வேறு பானங்களையோ அருந்தி மகிழ்ந்தவாறே அளாவுதலில் ஈடுபட்டிருந்தனர். இடைநடுவே இவர் எழுந்து, சிறிதளவு உயர்ரக மதுவை ஒரு சிறிய கண்ணாடி டம்ளரில் ஊற்றி எடுத்துக்கொண்டு, மெதுவாய், இருட்டில், ஓர் கட்டிடத்தை நோக்கி செல்ல துவங்கினார் : ‘ஓர் வயதான மதகுரு… வயோதிபத்தில் இருக்கின்றார்… நோய்வாய்ப்பட்டு… கொடுத்த உடன், உடனடியாக திரும்பிவிடுவேன்…’ - இருட்டில், தனியாக, அம்மதுவை சிந்தாமல் கவனமாக எடுத்துக்கொண்டு மறைத்தார் இருளில்.
6
அந்த மூன்று மாத சடங்குக்காய் என்னையும் அழைத்திருந்தார்கள். இரண்டொரு மதகுருக்கள்… ஒருவர் சிறு சிறிய குறுந்தாடியுடன் அமர்ந்திருந்தார். அவர், இவரது சமகாலத்து மதகுரு அல்லது இவரை விட, காலத்தில் மூத்தவராயும்; இருக்கலாம். ‘நடந்து வருவோம்… வழி நெடுக… நாய்கள்… குரைக்கும்… காலம் செல்ல செல்ல எம்மை பார்த்து பழகிவிட்டன… ஹியூகோ கூறுவார் : ‘அதோ, அந்த நாய் எனது’ என. அது ஓர் அழகான நாய்தான். அவர், எங்கள் பயணத்தின் போது, எம்முடன் ஒன்றாகவே நடந்தார். அதன் பிறகு நான் இந்தியா சென்றுவிட்டேன்… கிட்டத்தட்ட பத்து வருடங்கள் எப்படி போனது என்றே எனக்கு தெரிந்தபாடில்லை… பாருங்கள்… ஒருமுறை அங்கு வரும் சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வாங்க சென்றிருந்தேன். வாங்கி முடிந்ததும் தான் தெரியவந்தது. ஐந்தாயிரம் போதவில்லை என… மொத்தமாய் இருபத்தேழாயிரம் ரூபாய். நான் கூறினேன் : இப்பொருட்களை உள்ளே எடுத்து வையுங்கள். நாளை வந் வாங்கிக் கொள்கின்றேன் என்று… கடைக்காரர் ஏன் என கேட்டார். உண்மையை சொல்லிவிட்டேன்… ஓ… அப்படியா – நீங்கள் இதனை எடுத்து செல்லலாம்… நான் உங்களை நம்புகின்றேன்… நாளை வந்து தாருங்கள்… அன்றைய ஐந்தாயிரம் இன்று இருபத்தைந்தை தாண்டும்… இப்படியெல்லாம், மனிதர்கள், வாழ்வில், ஆங்காங்கே. இப்படித்தான் இந்த பயணம் இருந்திருக்கின்றது…’
“சேர்ந்ததா? என்னை கடவுள் அழைத்திருந்தார். எமது பாஷையில் ‘ஓர் அழைப்பு’ (A Call) என்பார்கள். இதன் காரணமாய்தான் நான் குருபீடத்தில் இணைந்தேன். நூலா… சிரித்துக் கொண்டார்… நீங்கள் கேட்கும் நூல் எமது நூலகத்தில் இருக்க கூடும்… ஆனால் அங்கு பாம்புகள் இருக்கின்றனவே…”; “பாம்பு?” ஹீயூகோ குறிப்பிட்ட அந்த இரண்டொரு ஏமாற்றங்களை எண்ணி துக்கித்;தேன்.
7
ஓர் ஏரியின் அருகே, ஓரமாக, ஒரு சாய்வு நாற்காலியில், கால்களை நீட்டிபோட்டு கொண்டு அமர்ந்திருந்தார். அவருக்கு பின்னால் ஏரியும், மிக உயர்வான நெடித்த கருப்பந்தைலம் மரங்களும் அழகாக நின்றிருந்தன. மென் காற்று சீராய் வீசி அடித்தது. பூனை ஒன்று அவருக்கு, நேரெதிராய் இருந்த நாற்காலியில் சாய்ந்து படுத்திருந்தது. சாம்பல் நிறமும் அழகிய கண்களை கொண்டதும் அது. கூறினார் : ‘என்னையே உற்றுப் பார்க்கின்றது… நானும் சில நேரம் உற்றுப்பார்த்தேன். பின் தலையை திருப்பி, இப்படி சாய்ந்து கொண்டேன். பூனையும் என்னைப்போல் வலப்புறமாய் தலையை திருப்பி சாய்ந்து படுத்துக்கொண்டது. நான் இடப்புறமாய் சாய்ந்து ஓரக்கண்னால் அவதானித்தேன். அதுவும் இடபுறமாய் தலையை திருப்பி சாய்ந்து கொண்டது. கால்களையும் கைகளையும் இப்படி வைத்துக்கொண்டேன். பூனையும் இதுபோலவே செய்கின்றது…”
மற்றொரு முறை பாசிக்குடா கடலுக்கு சென்றிருந்தோம். பிள்ளைகள் அனைவரும் கடலில் பாய்ந்து அலைகளில் புரண்டு கும்மாளம் அடித்துக்கொண்டிருந்தார்கள். இவர் கடலை நோக்கி வந்துக்கொண்டிருந்தார். ஒரு ரூபாய் நாணய அளவில் இவரது முழங்காலில் ஒரு சிறு காயம். தோல் உறிந்து இரத்தம். கவலையுடன் விசாரித்தேன். இவரது முகபாவனையில் எந்தவொரு சலனமும் இல்லை. யாதொன்றும் நடக்காததைப் போல் இருந்தார். ‘கடப்பதற்கு பலகையொன்று போட்டிருந்தார்கள். வழுக்கிவிட்டது. விழுந்துவிட்டேன்! தேங்கிய அந்த நீரில் உப்பும் இருந்திருக்க வேண்டும். அழுக்கு வேறு.
‘காயத்தை சுற்றி பின்னர் ஒரு பிளாஸ்டர் போட்டுவிடலாம்’ என்று விளக்கமளித்தார். பின், என் முகபாவத்தை பார்த்தோ என்னவோ : ‘எனக்கு பழகிவிட்டது. எரியாது…’ என கூட்டி சொன்னார்.
“உங்களுக்கு டயபெடிக் வேறு…”
“அது சரி. உப்பு ஒன்றும் செய்யாது…”
8
அவரது மனைவியின் கிராமத்துக்கு ஒருமுறை சென்றிருந்தோம். அது ஒரு சிறு கிராமம். கிட்டத்தட்ட தலைநகரிலிருந்து ஒரு அறுபது கிலோமீற்றர் தூரமிருக்கலாம். அவளுக்கு, நெல் காணி, வளவுகள், வீடு, கடை – என அநேக பூர்வீக சொத்துக்கள். ‘பட்’ வகை மாமரங்கள், தேர்ந்த வாழைமரங்கள், நவீன ஆரஞ்சுகள், என பலதையும், அங்கே அவர் பயிரிட்டிருந்தார். மணற்தரையில் உரமூட்டைகளை அடுக்கி, பரப்பி கன்றுகளை அங்கே நட்டிருந்தார். மறுபுறத்தில், வாத்துக்கள், கோழிகள், ஆடுகள், நாய்கள் என ஒரு பட்டாளமே நின்றது…
திடீரென ஒரு சிறுவன் அங்கு தோன்றினான். அவனது முகத்தை உற்று நோக்கும்படி என்னை வேண்டிக்கொண்டார். அவனுக்கு ஓர் பதினெட்டு வயது இருக்கலாம். ஆடாமல், அசையாமல் நின்றிருந்தான் அவன். முகச்சாயல், பாவனை எல்லாமே, இவரை அப்படியே உரித்து வைத்திருந்தது. ‘என்ன புரிகிறது’ என கேட்டார். எனக்கோ ஒன்றும் புரிந்ததாக இல்லை. அவன் ஒரு முட்டாள் போலவும் யாதொன்றும் புரியாதவன் போலவும், கிட்டத்தட்ட, ஒரு சவம் போலவும் அனைத்தும் மரத்துப் போனவன் போலவும் தோற்றம் தந்தான். பின்னர் ஒரு முறை, அவரது வீட்டில் ஒரு உதவியாளனாக அவன் வேலை செய்துக்கொண்டிருந்த போது, சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போனான்.
9
இவர் வழக்கறிஞர் தொழிலில் காலடி எடுத்து வைத்தது அலாதியான ஒரு விடயம். இவரது சீனியர், ஒரு மிக பிரசித்தமான வழக்கறிஞர். “இது குறித்த ஓர் சமர்ப்பணத்தை நாளைக்குள் எழுதி வாருங்கள்” என முதல் நாளிலேயே அவர் கூறிவிட்டார். வழக்கை வாசித்துப்பார்த்தால் தலை கால் புரியாத ஒன்று. அது சகஜம். சட்டக்கல்லூரியில் இருந்து அப்போதுதான் வெளியேறி, ஒரு வேகாத பாணைப்போல் அவர், அன்று இருந்திருக்கக்கூடும். அதிலும் வழக்கறிஞர் பின்னணி இல்லாத அவரது குடும்பம். வெறும் மீன் கண்ணை உணவுத்தட்டின், ஓரத்தில் வைப்பதை விட வேறு என்ன செய்வதாம்…? மறுபுறத்தில், இத்தனை நாளும்;, குருவானவராய், காலம் தள்ளிய அவஸ்தை வேறு. கூடவே ஒரு சதம்தானும் கைகளில் இல்லாமல் வீதிக்கு வந்துள்ள நிலைமை வேறு.
ஒரு வழியாக விசாரித்து, ஏதோ ஒரு தூரத்து உறவு, என்ற நீதவான் ஒருவரை தேடிப்பிடித்து, அவரிடம் சென்று, அவர் சொல்ல சொல்ல உட்கார்ந்து, எழுதி முடித்து, இரவு பத்துமணி அளவில், பையில் பணமும் இல்லாமல், வீதிக்கு வந்து, நடந்தே, தான் தங்கியிருந்த அறைக்கு வந்து சேர்ந்த போது அதிகாலை இரண்டு மணி. இனியும் தூங்க முடியாது. அனைத்தையும், அப்போதே, அமர்ந்து, தெளிவான கையெழுத்தில் படியெடுத்து, மீண்டும் குளித்து, அவசர அவசரமாய், தனது சீனியரிடம் சேர்ப்பித்த போது…
‘காலை மூன்று மணிவரை அவர் வேலைச்செய்வார.; அவரது கண்களில் நீர் வடியும். ஆனாலும், மேசையை விட்டு அகலமாட்டார். இரவு பத்து-பதினொரு மணிவரை – சட்ட ஆலோசணையில் ஈடுபட்டிருப்போம். காலையில் குளித்து மிக மிக நேர்த்தியாக குறுக்கு விசைக்கான தனது தயாரிப்புகளுடன், தயாராகிவிட்டிருப்பார். நடு இரவில், தூக்க கலக்கத்தில், திடுக்கிட்டு விழித்து, மேசைக்கு சென்று, தன் வழக்கு பைலை புரட்ட ஆரம்பித்துவிடுவார். நான் முதல் நாள் தந்த அந்த சமர்ப்பணத்தை பார்த்துவிட்டு, தலையை ஆட்டியப்படி கூறினார் : ‘பரவாயில்லை. நீ இங்கே தாக்குப்பிடிக்கலாம்…’
மற்றொரு முறை, மற்றொரு ஏரியின் முன் அமர்ந்திருந்தோம். அவருக்கு பின்னால் இங்கேயும் ஏரி – முழு நீலநிறத்தில் - அற்புதமான காற்று, சுவாத்தியம் - இளஞ்சூரியன் - கண்ணுக்கு மிக குளிர்ச்சியான தெளிந்த நீலநிறம், : எங்கும்… ‘தூய சுடர் வான்வெளியே…’ அடடா, இப்படியான தெளிவான வான்நிலை… அடிக்கடி பார்க்க வாய்க்காது… அடக்கமாட்டாமல், இவரிடம் கூறினேன்… அற்புதமாய் இருக்கின்றது, வானமும் ஏரியும்… திரும்பிப்பாருங்கள்… இவர் திரும்பினாரில்லை… தலையை மாத்திரம் மெதுவாக ஆட்டி புன்னகைத்தார் - நல்ல சுவாத்தியம்தான். ஒரு மூன்று ஃபயில்களை முடிக்கலாம்… - ஒரே மூச்சில்…
10
“அந்த நாட்களில், இந்த வீட்டை நான் கட்டிக்கொண்டிருந்தேன். இன்னும் இரு நாட்களில், இருபத்தைந்தாயிரத்தை நான் கொடுத்தாக வேண்டும். ஒரு சதமில்லை. என்ன செய்வது… மேசையில் அப்படியே தலைக்குப்புற படுத்துவிட்டேன். தட்டியெழுப்பினார். பேசாமல், என்னை அவரது அறைக்கு கூட்டிச்சென்றார். ஒன்றும் கேட்கவில்லை. உன்முகம் இன்று சரியில்லை. உன் துயர் என்ன என்றார். பின் அவராகவே மேசைக்குள் கையை விட்டு இருபத்தைந்தாயிரத்தை எடுத்து என்னிடம் நீட்டினார். அப்பப்பா…இது எப்படி நடந்தது? எப்படி அவருக்கு தெரிந்தது - இது இறைவனின் அருளா… ஒன்றுமே எனக்கு புரியவில்லை… எவ்வளவு தொகை என்று என்னிடம் கேட்டாரும் இல்லையே…” அதிசயப்பட்டார்.
இன்னுமொரு சீனியர் - பெண்கள் விடயத்தில் மிகுந்த உஷார் பேர்வழி என்றும் தன் கண்முன்னாலேயே சில விஷயங்களை பார்த்ததாகவும் இவர் குறித்தார். சம்பந்தப்பட்ட சிறுமி அகன்றபின் அவர் - ம்… இவளிடமும் ஒருவாறு வெற்றிப்பெற்று விட்டேன் என்று சிரித்ததையும் பிரஸ்தாபித்தார் அமைதியாக… அவரது சீனியர் தன் வயோதிப காலத்தில் பயங்கர ஒரு தோல் வியாதியால் அவதியுற்றிருந்தார். “இதற்கு மருந்தில்லை ய10கோ. காரணம், இது, எமக்கு எதிரான கட்சிக்காரர்கள் கொடுத்த சாபம் மாத்திரம் அல்ல. – எமது சொந்த கட்சிக்காரர்களும் எனக்கெதிராக கொடுத்திருக்க கூடிய சாபத்தின் விளைவே இது. இதற்கு மருந்தில்லை… யூகோ…”. அவரது சீனியர் புகழ்பெற்ற ஒரு விவாகரத்து வழக்கறிஞர் ஆவார்.
பிற்காலத்தில் நானும் இவரும் ஒருமுறை இவரது வீட்டில் உணவருந்தி கொண்டிருந்த போது அங்கு வந்த இவரது மனைவி வெடித்து சிதறினாள் : “இவரை முழுதாக நீங்கள் அறிய மாட்டீர்கள்… போக்கிரித்தனம் அதிகம் உடையவர்… ‘மனைவியின் கொத்தளிப்பு குறித்து அவர் ஒன்றுமே கூறினாரில்லை. வெறுமனே உணவை உண்பதில் மாத்திரம் கவனம் செலுத்தினார். ஆனால் பின் நாட்களில் தனது இரண்டாம் மனைவி குறித்து இவர் விடயங்களுடன் விடயங்களாய் பிரஸ்தாபிக்க தவறவில்லை…. ஆம். இருக்கலாம். கார்க்கி இலக்கியம் கூறுவதுபோல் , ஆன்மாவில் நகைகளைத் தொங்க விட முடியாது என்றுதான் தோன்றுகிறது."
அவரது சீனியர் நன்கு உயரமான வெள்ளைநிற தோற்றம் கொண்ட, மெலிந்த வாகுடைய வயோதிபர். ஆனால் அவர் காலத்தில், நாட்டின் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர்களில் ஒருவராய் திகழ்ந்தாராம். இருந்தும் சாதியடிக்கில் மிகக் கீழானவராய் இருந்தவராம். ஆனால் அவரது மனைவியோ இலங்கையின் முக்கிய செல்வந்தரின் மகளாய் வளர்ந்தவளாயினும், இவர் மேல் தீராத காதல் கொண்டு மோகித்து விட்டாளாம். இதை அறிந்த அவரது குடும்பத்தார் அவளை அழைத்து, சரி உலகம் புரியாதவளாய் இருக்கின்றாய். இவன் பின்னால் சுற்றுகின்றாய்… முதலில் உலகத்தை ஒருமுறை சுற்றிவிட்டு வா. பின்னர் யோசிக்கலாம் என்று கூறி அவள் உலகம் சுற்றி வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அவளை ஒரு விமானத்தில் ஏற்றி இங்கிலாந்திற்கு அனுப்பிவைத்தார்களாம். இங்கிலாந்து சென்ற அவள், முழு உலகத்தையும் சுற்றிப்பார்த்துவிட்டு, மூன்று மாதம் கழித்து நேரே வீட்டுக்குவந்து, ‘நல்லது. இவரைத்தவிர வேறு யாரையும் தான் திருமணம் செய்யப்போவதில்லை’ என்று கூறிவிட்டாளாம்.
வயது சென்று, புற்றுநோயால் அவதிப்பட்ட அவளைக்காண இவர் செல்வது வழக்கம். அவளது பிறந்தநாளன்று, அன்று, ஒருமுறை, இவளுக்காக இவர், தனித்த ஒரு ரத்த சிவப்பு ரோஜாமலர், ஒரு வாழ்த்துமடல், சில சாக்லேட்டுக்கள் - இவற்றை எடுத்துக்கொண்டு போனார். கூறினார் : “நீட்டிய போது, அவள் அப்படியே ஆடாது, அசையாது கண்ணீர் கொட்டினாள்… ஆம். சில தினங்களில், அவள் எனக்கு உணவளிப்பது வழக்கம் - சட்ட ஆலோசனைகளின் போது நாங்கள் அனைவரும் தாமதமாகி விட்டால்… எமது சீனியருடன், அவள் அன்பாக தரும் உணவை உண்டு…” மௌனமானார்.
11
அவரது, சீனியரும், சீனியரின் மனைவியும் இறந்த பின் சீனியரின் தமக்கை குறித்த அனைத்து விவகாரங்களுக்கும் பொறுப்பாளராக இவர் நியமிக்கப்பட்டார் - சட்டரீதியாக. தவறாமல், இவர் கோர்ட்டுக்கு போகும் முன், அந்த தமக்கையை நாளும் விஜயம் செய்து, அவளுக்கு தேவையான மருந்து-மாத்திரை அனைத்தும் சரியாக கொடுப்படுகிறதா, அவள் சாப்பிட்டாளா – என்பதை எல்லாம் விலாவாரியாக அவளது இரண்டு உதவியாளர்களிடமும் இருந்து விசாரித்து, பின் அவளுக்கு தேவையான அனைத்துக்கும் ஆடர்களைப் பிறப்பித்த பின்னர், நீதிமன்றம் செல்வதை வழமையாக கொண்டிருந்தார்.
பின், மாலையும், முடிந்தால் ஒரு விஜயம்.
அவள் இருந்த வீடு, கொழும்பில் செல்வந்தர்கள் மாத்திரமே, தமது பாரிய வீடுகளை கட்டி சுகித்து வரும் மிக மிக விலையுயர்ந்த பிரதேசங்களில் ஒன்றாகும். அப்பிரதேசத்தில், தெருவின் ஒரு முனையில் துவங்கி, மறுத்தெருவின், மறுமுனையில் வெளிப்படும் மிகப்பெரிய வீடு, அவளது. அழகிய, பெரிய நந்தவனம் வேறு. இப்பெரிய வீட்டில் தனித்திருக்கும் இம்மூதாட்டியின் அன்றைய சொத்து பெறுமானம் நூற்றிமுப்பது கோடிக்கு அதிகம் என்பார் இவர். இன்று, இந்த இருபது வருடங்களின் பின், குறைந்தது இத்தொகையை நூறால் பெருக்கிக் கொண்டாக வேண்டும் - விடயத்தின் உண்மைப் பெறுமானத்தை விளங்கிக்கொள்ள. இது தவிர, வேறுபலவிதமான சொத்துக்களும் அவளுக்கு. அவளது உயில், பாங்க் செக்புக் உட்பட அனைத்து விவகாரங்களும் இவர் பொறுப்பில்.
அண்மையில், ஏதோ ஒன்றுக்காய், ஓர் விலையுயர்ந்த காரை வேறு, இவருக்கு பரிசளித்திருந்தாள். அவளிடம் கீத் முதல் கேப்ரியல் வரை பல்வேறு விதமான மூல ஓவியங்களும் இருந்தன. அன்று, அவரது வழக்கு முடிந்த பின், நேராக அங்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம்.
காவலாளி வந்து கதவை திறந்துவிட்டான். தோட்டக்காரன் வளர்ந்திருந்த குரோட்டன்களை அளவாக கத்தரித்துக் கொண்டிருந்தான். இருந்தும், பரந்துகிடந்த அந்த வீட்டில் ஒரு மயான அமைதி குடி இருந்தது. திறந்திருந்த அந்த கதவுகளின் இருமருங்கிலும், நின்ற அகன்ற கண்ணாடிகளிலும், இடமில்லாதவாறு, பேப்பர் துண்டுகளை – பழைய, மஞ்சள் நிறம் பூத்துவிட்ட – பேப்பர் துண்டுகளை கத்தரித்து, கத்தரித்து ஒட்டியிருந்தார்கள். உள்ளே, ஒரு புறமாய் கிளை பிரிந்து சென்றது அவ்வீடு.
சுவரெல்லாம் பெரிய பெரிய ஓவியங்கள் - புகழ்பெற்ற ஓவியர்களினது. மொத்தத்தில், பத்து-பதினைந்தை விட அதிகமாய் தேறலாம். வீடு நிறைய பழங்காலத்து பொருட்கள்… இதுவும், சாயம் போனதுப்போல், மங்கி, புகைப்பிடித்;து…
ஆங்காங்கு அறைகள் திறந்து போட்டப்படி, வாயை பிளந்து கிடந்ததாய்…
கட்டில்கள், மெத்தைகள், விரிப்பின்றி அப்படி… அப்படியே…
யாருக்காக இவையெல்லாம்…
அவளுக்கு பிள்ளைகள் இல்லை. கணவனும் இறந்துவிட்டான்.
நான் ஓவியங்கள் ஒவ்வொன்றாய் பார்வையிட தொடங்கினேன்.
“அனைத்தையும் சப்புகஸ்கந்த ஃபவுன்டேசனுக்கு எழுதி வைத்துவிட்டாள்…”
ஓர் அறைக்குள், மெதுவாய் நுழைந்தார்… சைகையால் என்னையும் அழைத்;தார்.
நான் தயங்கி தயங்கி உள்ளே சென்றேன்.
மிகப்பெரிய அறை…
ஒருபுறமாய் ஒரு கட்டில்… கட்டிலுக்கு நேரெதிராய் ஒரு டிவி… அந்த டிவியை தவிர, அறையில், மற்ற அனைத்தும் பழங்கால பொருட்கள்.
கட்டிலில் அவள் கிடந்தாள்…
நன்கு வெந்து அவிந்த போஞ்சியைப் போல்…
துவண்டு கிடந்தது, அவளது மெலிந்த உடம்பு…
குழம்பி, வரண்டு, பரந்து கிடந்த தலை… பக்கவாட்டில்… உதவியாள் - ஒரு நடுத்தர வயதுப்பெண்மணி… தலையைப்பிடித்து, சற்றே முரட்டுத்தனமாக அவளை ஆட்டினாள் : “அம்மா எழுந்திருங்கள்… யூகோ மாத்தியா வந்திருக்கின்றார்” ஆனால் இவ் ஆட்டத்துக்கெல்லாம் அவள் மசிந்தபாடில்லை. யூகோ அவசர அவசரமாய் அவளைத்தடுத்தார்… இல்லை… இல்லை… உறங்கட்டும்… தூக்க மாத்திரையாக இருக்க வேண்டும்.
தலையை விட்டதும், தலை சுரணையற்று மீண்டும் தலையனையில் விழுந்தது. தொடர்ந்து தூக்கம்.
நான் அறையைவிட்டு வெளியே வந்தேன்.
வரவேற்பறையை தாண்டி உள்ளே சென்றால், கீத்தின் காமரசம் சிந்தும் மற்றுமொரு ஓவியம்… காளையை குளிப்பாட்டும் நிர்வாண மனிதன். முரட்டு காளையின் உன்மத்தம் நிறைந்த முகம்… இது உள்ளறை.
வெளியறையில் சற்றே நளினமான ஓவியங்கள்…
புறப்படும்போது யூகோ கூறினார் : கண்ணாடிகளில் ஒட்டப்பட்டிருந்த பழைய, மங்கி மஞ்சளாகிப்போன, பேப்பர் துண்டுகளைக்காட்டி : “அவள் தான்… வெட்டி வெட்டி ஒட்டுவாள்… தினமும்… அதோ… அந்த கிருஷ்ணன் என்னைப்பார்த்து சிரிக்கின்றான் என்பாள்…”
12
ஜேகப் ஜோசப்பை நான் தற்செயலாகத்தான் சந்திக்க நேர்ந்தது. அவர் இன்னுமொரு மூத்த வழக்கறிஞர் ஆவார். “அந்த ட்ரஸ்ட் இருந்ததல்லவா… அதில் கிடைத்த காசு… ஒருமுறை எனது மருமக்கள் இருவர்… ஆளுக்கு ஒரு லட்சம் கொடுத்திருந்தார்… சின்ன சின்ன வட்டி… ஏனோ அவர்கள் காசை திருப்பி தந்தப்பாடில்லை… என்னால்தான் காசை கொடுத்திருந்தார் என்பதும் ஓர் உண்மைதான்… எனக்கு நோடீஸ் அனுப்பிவிட்டார் - பணத்தை கேட்டு… ஹஹ்ஹா… சிரித்தார், மனம்விட்டு. அந்த ட்ரஸ்ட் வீடு… அதனையும் விற்றார்கள்… உயர்ந்த ஓர் தொகை கிடைத்திருக்கலாம்… பெறுமதியான வீடுதான் அது… ஆனால் அவள் இறந்தப்பின் அதுவும் ஒரு சுமைதான்… வாங்கக்கூடிய ஒரு நல்ல ஆளை நான் சிபாரிசு செய்தேன். இல்லை, இல்லை – ஏற்கனவே விற்றுத்தீர்ந்தாகிவிட்டது என்றார். நல்ல பணம் வந்திருக்கும். மருத்துவ விடுதி… அப்படியே கட்டியிருந்தாலும் எத்தனையோ கோடி மிஞ்சியிருக்கும், அந்த ட்ரஸ்டடில்;.
13
அவரது குடும்பம் வித்தியாசமானது. ஒவ்வொரு நாளும், புது புது உணவாக அவரது மனைவி சமைத்துப் போடுவதாக அமைதியுடன் கூறுவார். அவள் ஒரு ஆசிரியை – ஆங்கில ஆசிரியை. அவர்களது ஒரே மகள் கிட்டத்;தட்ட ஒரு சிறுவனைப்போல் விறைப்புடன் காட்சித்தருவாள். ஓடி திரிவாள். அவள் விரும்புவது கூட ஆண்களின் உடையையே. ஆனால் அவள் மேல் அனைத்து பாசத்தையும்; பொழிந்தார். ஆனால் அப்பொழிவு சற்றே வித்தியாசப்பட்டதுதான். அவளை ஓர் உயர்தர பாடசாலைக்கு அனுப்பி வைத்தார். நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருந்த பெண்கள் சென்ற பிரபலமான கல்லூரி அது. ஐந்தாம் வகுப்பில், அவளது ஆசிரியை அவளை இழுத்து அவளது கன்னத்தில் அறைந்துவிட்டாளாம். கேள்விப்பட்டவுடன், அந்த ஆசிரியையே, இவளுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடாத்த தன் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார். வகுப்பு முடிந்து அவள் போகும்போது ஐந்து உணவு பொட்டலங்களை அவரது குடும்பத்தார் அந்த ஆசிரியைக்கு தினமும் கட்டித்தந்தாக வேண்டும். அவள் இனி வீட்டுக்கு சென்று எப்படி சமைப்பதாம்? வகுப்பு இப்படித்தான் நடந்தது. “இந்தியா சென்றுவந்த போது முந்நூறு சாரிகளை என்மனைவிக்கு வாங்கிவந்துவிட்டேன். பாடசாலை ஆசிரியைகள் மத்தியில் கடும் போட்டி. யார் நல்ல சேலை உடுத்துவது என. ‘நாளைக்கு ஒன்றாய் கட்டிப்போ’ என்று கூறிவிட்டேன்”.
14
“நம்பமாட்டீர்கள் அவன் கால்கள் அப்படி குச்சைப்போல் மெலிந்திருந்தன… இரண்டு மெலிந்த குச்சில்கள்தான்…” ஓர் வயோதிபனான, மெலிந்த, புது வேலைக்கார கிழவன் பொறுத்து கூறிக்கொண்டிருந்தார். அவரது வீட்டில் மொத்தம் ஐந்து வேலைக்காரர்கள் இருந்தனர். நாய்களைக் குளிப்பாட்டவும், அவற்றுக்கு சமைக்கவும், அவற்றுக்கு சோறு வைக்கவும்… அவற்றிற்கு தனி தனியாக கூடு செய்யப்பட்டு ஒன்றின் மேல் ஒன்று அடுக்கப்பட்டிருந்தது. புதியவர்கள் வந்துவிட்டால், அவை கர்ண கடூரமாக ஊளையிடும.; அல்லது குரைக்கும.; அல்லது கூட்டை அடித்து பிராண்டும். “அவனது கண்களில் கண்ணீர் வழிந்தது… என்னால் என்ன செய்ய முடியும்… முடிந்ததைத்தான் நான் செய்கின்றேன் என்று வானத்தைப்பார்த்து ஓலமிட்டான்… மறக்கமுடியவில்லை… இது நான் எதிர்பாராதது… இப்படி கத்துவான் என்பது. இது, உண்மையில் நான் எதிர்பாராதது… இன்னமும் நெஞ்சு பாராமாக இருக்கின்றது…” – அவரது நினைவில் அந்த குச்சு கால்களை உடைய, அந்த கிழட்டு வேலைக்காரன், வானத்தைப் பார்த்து ஓலமிட்ட அந்த நிகழ்வு மறைய இரண்டொரு நாட்கள் ஆகியிருக்கும் என்பது புரிந்தது. இவ்வளவும் அந்த வேலையாளை அவரது மனைவி திட்டித்தீர்த்தப்பின் நடந்த விடயங்களாகும்.
அவரது மனைவியிடம,; எந்தவொரு வேலையாளும் நிரந்தரமாக அல்லது நீண்டகாலமாக இருக்க முடியாது என்பது நண்பர்கள் வாதிடுவர். வாட்டி எடுப்பதில் தேர்ந்தவள். கண்ணில் திரிப்போட்டு பார்த்திருப்பாளாம். அவர்கள் கூறுவர், மகள் வேறு விதம். நாய்களை பிரியமாட்டாள். ஒரு முறை எனது எட்டு வயது மகனுக்கு ஒரு நாய் குட்டியை பரிசளிக்க இவர் முன்வந்தார். மகளின், கண்களில் பொல பொலவென்று கண்ணீர் கொட்டிவிட்டது. இவ்வளவுக்கும் எண்பது நாய்கள் - கூட்டில். அடைபட்ட நிலையில். ஏன் இப்படி?
ஒரு முறை கூறினார் : “தூங்கிக்கொண்டிருந்தேன். காலை மூன்று மணியிருக்கும். ஒரு தொலைபேசி அழைப்பு… பொலிஸிடமிருந்து… ஒரு பையன்… ஐந்து போன்களுடன்… கைது செய்துவிட்டோம்… ஊருக்கு போகின்றானாம்… பெயர்… உங்கள் வீட்டு ஆளாம்…” – வருத்தப்பட்டார். “அவனை முன்னுக்கு கொண்டுவர இருந்தேன்…” உண்மைதான்… அவனை படிக்க செய்தார்… ஏதேதோ வகுப்புகளுக்கும் அனுப்பி வைத்தார்… வாகனம் ஓட்டும் அனுமதிப்பத்திரத்தையும் எடுத்து தந்தார்… ஆனால் அவனது ஓட்டம்?
ஒருமுறை அவரது வீட்டில் நான் தங்கநேர்ந்தது. அவராகவே எழுந்து, உடுத்தி, கடைக்கு சென்று, எனக்கு தேவைப்படும் டூத்பிரஷ், சோப், சவரகருவிகள் - இத்தியாதி - இவற்றை வாங்கி, அழகுற ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு எனக்கான படுக்கையறையில் மூலையில் இருந்த சிறு மேசையில் வைத்துவிட்டார். வேலையாட்கள் நிறைந்திருந்த அவ்வீட்டில் ஏன் இவர், இவராகவே நடந்து சென்றார். இது, பைபிலின் ஒரு ஏடா என்பதும் எனக்கு தெரியவில்லை.
ஆனால் எதை எடுத்தாலும், அதில் ஒரு சிரத்தை – ஓர் மௌனம் ஒட்டி இருப்பதை நான் கண்டேன். நான்கைந்து வழக்கறிஞர் குடும்பங்களுடன் சுற்றுலா செல்லும் போது இவர் மாத்திரம் எல்லோருக்கும், அவரவர், விரும்பிய உணவு பொருட்களை தனித்தனியே எடுத்து வந்திருப்பார். சிறு பிள்ளைகளுக்கு அந்தந்த விளையாட்டு பொருட்கள் வேறு…
இவர் இறந்த பின்னர் அந்த வழக்கறிஞர் குடும்பங்கள் ஒன்று சேர்ந்தார்களில்லை – அவர்கள் இருந்தார்களா என்பது கூட தெரியவில்லை – ஒருமுறை எக்குத்தப்பாக நீதிமன்றில் ஒருவரை சந்தித்தேன் : ஆம் அவர்தானே இணைக்கும் ஒரு புள்ளியாக இருந்தவர். அவரது மறைவு சோகமானது. தனது இறுதிக்காலத்தில் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். நடக்கும் போது அவரது வலதுக்கால் இடறியது… நீதிமன்றத்திற்கு செல்வதை முற்றாக தவிர்த்தார். அவரது எண்பது நாய்களில், ஒன்று நடக்க முடியாதது. பிறப்பிலிருந்தே அது, தன் பின்னங் கால்களில் குறைப்பாடு கொண்டிருந்தது. அதன் மேல் அளவுக்கடந்த பிரியம் கொண்டார் அதற்கு ‘மிக்கி பூஸ்’ (Micky Boose) என்று பெயரிட்டிருந்தார். அவரது கடந்தகால அவமானங்கள், நினைவுகள் அவரை வாட்டி வதைக்கும் போது ‘மிக்கி பூஸ்’ என்று வெடித்து அலறுவார். ‘மிக்கி பூஸ்’ செய்வதறியாது அவரை அனுதாபத்துடன் ஏறிட்டு பார்க்கும், அன்னாந்து காலை இழுத்திழுத்து நடந்து அவரது படுக்கையில் அவருடனே படுக்கும்.
அவரது மறைவுக்கு பின் அவரது ஆத்மார்த்த நண்பன் என கருதப்பட்ட ஒரு வழக்கறிஞன் ட்ரஸ்ட்டின் அனைத்து நிர்வாகத்தையும் அவரது குடும்பத்திலிருந்து பிய்த்தெடுத்துக் கொண்டான். இவனைத்தான் ‘மூக்குக்கப்பால் பார்க்கத் தெரியாதவன்’ என இவர் செல்லமாக வரையறுத்திருந்தார். உண்மையில், அவனது குடும்பமே இவருடன் நெருக்கமாய் ஒட்டுறவாடியது. கிட்டத்தட்ட, அவன், அவர்களின் ஒரு குடும்ப அங்கத்தினனாகவே மதிக்கப்பட்டான். அவனது சிறிய மகனுக்கு ‘குக்கூ பெட்’ என செல்லமாக இவர் பெயரிட்டு மகிழ்ந்திருந்தார். அதாவது, செல்ல குயில் குஞ்சு என. எட்டு வயதான அவனை கொஞ்சலுடன் வீட்டுக்கு அழைத்து, ஆங்கிலம் படிப்பித்தார், கரிசனையோடு. இதற்காய், கிழமைதோறும், ஓர் இரண்டு மணி நேரத்தை செலவிட்டார். இதனையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஓர் ஆசிரியனை இலகுவாக ஒழுங்குப்படுத்தி இருந்திருக்கலாம். ஆனால் இவர் கூறினார் : கூடாது அது கூடாது. நானேதான் கற்பித்தாக வேண்டும்” என. அவரில் புரியாத விடயங்களில் இதுவும் ஒன்றெனலாம். “இதுபோலவே, இதே நண்பன் நெஞ்சு வலியால் துடித்த போது, இவர் ஆழ்ந்த கரிசனை அவனை கொண்டு ஒரு மருத்துவமனையில் சேர்ப்பித்தார். முழு செலவையும் பொறுப்பேற்பதில் ஆனந்தம் கொண்டார். ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து நண்பர்கள்பால், அவர் செயல்படுவதை நான் அடிக்கடி காண நேர்ந்தது.
இவரது மனைவி என்னிடம் கூறினாள் : “ட்ரஸ்டுக்குரிய காரையாவது இவனிடமிருந்து உங்களால் எங்களுக்கு பெற்றுத்தர முடியுமா… தயவு செய்து”. அவள் இன்னும் ஏதேதோ நியாயப்பாடுகளை அடுக்கத் தொடங்கினாள். ஆனால், அவளைத் தடுக்கும் வகையில் நாய்கள் பயங்கரமாக பிராண்டி ஊளையிட்டு சண்டை பிடித்தன – வாழ்க்கை என்றும் இப்படி இருக்கவே கூடாது என, அவை கூற வருபவை போல. ஆனால் அவற்றை விட, ‘மிக்கி பூஸ்’ அவரை அண்ணாந்து அனுதாபத்துடன் பார்க்கும் சித்திரமே என் மனதில் இப்போது அடிக்கடி தோன்றியது. அவர், இறுதிக்காலத்தில் அடிக்கடி, வாய்விட்டு வெடித்து சிதறுவார் ‘மிக்கி பூஸ்…’.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.