1
பாரதி பிறப்பதற்குச் சரியாக ‘ஐம்பத்து இரண்டு’ வருடங்களுக்கு முன், பிரிட்டிஷாரின் பிரதான காலனிகளில் ஒன்றாக விளங்கிய, இந்துஸ்தானம் (இந்தியா) குறித்து, கார்ல்மார்க்ஸ், 1853ல், பின்வரும் பொருள்பட எழுத நேர்ந்தது : “இந்துஸ்தான் ஆனது, ஒரு பார்வையில், ஆசிய கண்டத்தின் இத்தாலி எனலாம். அல்ப்ஸ் மலைத்தொடருக்கு நிகரான ஒரு இமாலயமும், லொம்பார்டி சமவெளிக்காய் வங்காளத்தின் பரந்த சமவெளிகளும், அபேன்சிக்கு சமமாக டெக்கானும், இலங்கை தீவுக்காக ஒரு சிசிலியும் - மொத்தத்தில் - பூகோள ரீதியாக, இந்தியா, ஆசிய கண்டத்தின் இத்தாலி ஆகின்றது…”
“ஆனாலும் ஒரு சமூகவியல் பார்வையில் - இது இத்தாலியல்ல – ஆனால், கிழக்கின் அயர்லாந்து ஆகின்றது”.
“இந்தப் புதிரான ஒன்று சேர்க்கையின் - இரு அம்சங்கள் - அதாவது இத்தாலியையும் அயர்லாந்தையும் ஒருங்கே உள்ளடக்கும் இப்பண்பலை – ஒரு புறம் அதன் செல்வக்குவிப்பை அர்த்தப்படுத்தினாலும், மறு புறத்தில் அதன் துயரங்களின் சேர்க்கையை எடுத்தியம்புவதாய் உள்ளது”.
“பல நூற்றாண்டு மத சம்பிரதாயங்களின் பின்னணியில், இம்முரண் புரிந்துக்கொள்ளக் கூடியதே”.
“இந்திய மதங்கள், ஒரு புறத்தே இன்ப புலன்நுகர்ச்சிகளை அங்கீகரிப்பதாயும் மறுபுறத்தே முற்றும் துறந்த ஆழ்துறவு நிலையை போதிப்பதாயும் -; கணிகைகளையும், முற்றும் துறந்த முனிவர்களையும், லிங்கங்களில் இருந்து கிருஷ்ண பரமாத்மாவின் சக்கரம் வரை ஒருங்கே ஆராதிப்பனவாக இருக்கின்றன”
“இதற்கு மத்தியிலேயே, கிழக்கிந்திய கம்பனியின் வருகையும் அவர்களது கொடுங்கோல் ஆட்சிமுறையும் நடந்தேறுகின்றது. இக்கொடுங்கோல் ஆட்சி முறையிலேயே, இதுவரை கோலோட்சி நின்றிருந்த இந்திய சமூகத்தின் பன்நெடுங்கால அஸ்திவாரங்களும் தகர்க்கப்பட்டு, ஆட்டங்கண்டு சரியத்துவங்குகின்றன – அவை இன்று முற்றாக சிதைவுறும் நிலையினையும் எட்டிவிட்டதா என்பது இன்றைய கேள்வியாகின்றது”
“இதிலிருந்தே, இச்சிதைவுகளில் இருந்தே, முளை விட வேண்டிய ஓர் புதிய முளையும் தோற்றம் காண வேண்டியுள்ளது. அது எங்கே…?” “அம்முளையை ஆங்கிலேயர், தமது பிரஞ்ஞையற்ற முறையில் இந்தியாவில் விதைத்து விட்டாலும், அம்முளையே எமது மனுகுலத்தின் ப10ரண விடுதலைக்கான மாபெரும் வித்தாக திகழப்போகின்றது…”
“அதாவது ஆங்கிலேயரின் இவ்ஆட்சி முறையிலேயே, ஓர் அழிவும் ஓர் ஆக்கமும் ஒருமித்து நிறைவேற என்றோ விதிக்கப்பட்டாகிவிட்டது…”
இத்தகைய ஒரு சூழலிலேயே, காத்தேயின் வரலாற்று வரிகளை, தற்போதைய இவ்வரலாறும் எமக்கு நினைவுப்படுத்துவதாக உள்ளது :
‘இவ் வேதனைகள்
காய்தல்கள் -
அனைத்துமே - இங்கே
புதிதாய் ஓர் உலகை
சமைத்திடுமோ?
திமூரின்* ஆட்சிமுறையில்
அன்று,
ஒரு கோடி
ஆன்மாக்கள்
பிரஞ்ஞையற்ற விதத்தில்
விழுங்கி தீர்க்கப்பட வில்லையா?’
*திமூர் : ஒரு முகாலய அரசன். இந்தியாவில் ஊடுருவி தன் ஆட்சியை, இந்தியாவில் நிறுவினான். அவனது ஆட்சியின் கீழ் கலையும், அறிவு ஜீவிகளும் செழித்து வளர்ந்தனர் என்று கருதப்பட்டது.
2
மார்க்ஸின் மேற்கண்ட ஆழ்ந்த வரலாற்று அவதானிப்பில், அவர் தேடிய அந்த புதிய முளை எங்கே என்ற கேள்வியுடனேயே பாரதி என்ற பதமும் மேல் எழுவதாய் உள்ளது.
மார்க்ஸ் தேடிய அப்புதிய முளையின் பிரசவம், வெவ்வேறு வடிவங்களில் இந்தியாவில் நடந்தேறுகையில் பாரதியின் நாமமும் இதன் மத்தியில் துலாம்பரமாக ஒளிர்வதாயுள்ளது.
1857-1858ம் ஆண்டில், (அதாவது, மார்க்ஸ் இந்தியாவின் இறுகிய மதங்கள் குறித்தும் அதன் பின்னடைந்த சாதிய அமைப்புகள் குறித்தும் சுட்டிக்காட்டிய ஐந்து வருடங்களின் பின்) முதன் முறையாக, ஆங்கிலேய ஆட்சியில், ஒரு சிப்பாய்க் கலகமும், அதனை தொடர்ந்து, கிழக்கிந்தியக் கம்பனியின் மூடலும் (முப்பது லட்சம் பவுண்கள் அதற்கு நட்ட ஈடாக வழங்கப்பட்டு) அதனை தொடர்ந்து முதன்முறையாக இக்கம்பனி ஆட்சிக்குப்பின், ஓர் ஆங்கிலேய அரசின் ஆட்சிமுறைமையும் - அன்றைய இந்தியாவில் அரங்கேறுகின்றது. சிப்பாய் கலகத்தின் போது மாத்திரம் 800,000 இந்தியர்களும் (இந்திய ராணுவத்தினர் உட்பட) ஆறாயிரம் ஆங்கிலேயர்களும் கொல்லப்பட்டார்கள் என்பது பதிவு. இதனை அடுத்துவரும் 1876-1878ல் பஞ்சத்தில் 60-90 லட்சம் இந்தியர்கள் மடிந்தார்கள் என்பதும் பதிவு.
இதனைத்தொடர்ந்து, ஒரு வலுவான தேசிய இயக்கம், தோற்றம் காணுகின்றது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இம்மாறுதல்களின் மத்தியில், புதிய முளைக்கான மேடை, அன்றைய இந்தியாவில் இடப்பட்டு விட்டதாகவே உள்ளது.
தரகர்கள் - தேசிய முதலாளித்துவம் - அறிவு ஜீவிகள் - ஆங்கிலேய அரசின் எடுபிடிகள், தாதர்கள் ஆகியோர், மார்க்ஸ் குறிப்பிட்ட, அதே திமூரின் ஆட்சியைப் போலவே, ஆழத்தோற்றம் கொள்கின்றனர். ஒருபுறம் பல்வேறு நிலபிரபுக்களுக்கு ராஜா, நவாப் போன்ற அத்தஸ்த்துகள் அளிக்கப்படுகின்றன. மறுபுறம் தேசிய இயக்கங்களும் புதிதாய் முளைக்கின்றன. 1857ல் பிர்லாவின் கம்பனி, இக்காலப்பகுதியில், தொடங்கப்படுகின்றது. இது போலவே, 1868ல் டாடாவின் கம்பனியும், 1907ல் டாடாவின் இரும்பு கம்பனியும் (Tata Steels) ஆரம்பமாகின்றது. 1853ல்;, இந்தியாவில் முதல், இருப்புப் பாதை கட்டுமானம் துவங்கியது. (பம்பாய் - கல்கத்தா) தொடர்ந்து நிலகரி இரும்பு - இவற்றுக்கான தேவையும் அதிகரிக்கின்றது. இவற்றுடன் சிப்பாய்க் கலகமும் இடம்பெறுகின்றது. இப்புதிய தோற்றங்களின் மத்தியிலேயே இதன் முக்கிய இன்னுமொரு கூறாக பாரதி என்னும் மாபெரும் கவிஞனின் தோற்றப்பாடும், இடம்பெறுகின்றது.
பாரதியின் அறிமுகத்தை, அவரின் தந்தையாரின் இறப்பில் கண்டு எடுத்துரைப்போரும் உண்டு. இது போலவே, குறித்த சிந்தனையாளரின் (லெனின்) அவதரிப்பை, அவரின் தமையனாரின் மறைவில் காண்போரும் உண்டு. இப்படியாக, நதிமூலங்களின் இருப்பை கண்டறியும் மனிதரின், அவா தவிர்க்க முடியாததே. ஆனால் மனிதர்களில் நதிமூலங்களை காண்பதும், அவற்றைத் தத்தமது தனிப்பட்ட அவதானங்களோடு சம்பந்தப்படுத்துவதும், சகஜமானது என்றாலும் சம்பந்தமுறுவது ஒரு நதியாக இருக்க வேண்டும் என்பதே இங்கே காணக்கிட்டும் முன் நிபந்தனை ஆகின்றது. இவ்அடிப்படையில், பாரதி என்ற பெருநதியின் அடிப்படை அம்சங்களை இங்கே காண முயல்வதே, இச்சிறுகட்டுரையின் நோக்கமாகின்றது. இம் முயற்சியின் போது மனுகுலத்தின் இன்னுமோர் அதிசயப் பிறவியான கார்ல்மார்க்ஸின், மேற்படி அவதானிப்புகளும் இங்கே இடம்பெறுவது, தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. ஏனெனில், மார்க்ஸின், புதிய முளை எங்கே– என்ற கேள்வியின் மத்தியில், அவரது மேற்படி அவதானிப்புகள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையே.
3
இருபத்து இரண்டு வயதில், பாரதி, மதுரை சேதுபதி கல்லூரில், தமிழாசிரியராய் பொறுப்பேற்கின்றார்.
இக்காலத்திலேயே, அவரது ஆரம்ப கவிதைகளில் ஒன்றான ‘தனிமை இரக்கம்’ என்ற பாடலும் அச்சேறுகின்றது. (விவேகபானு : ஜூலை 1904)
இக்கவிதையானது அவரது முந்தைய கவிதைகளான “காந்திமதிநாத பிள்ளைக்கான கவிதை” (1897-1898) அல்லது எட்டையபுர மன்னருக்கான விண்ணப்பம் (1897) ஆகியவற்றோடு ஒப்பிடும் போது, பாரதி தனது மொழிசார் அணுகுமுறையில், ஓர் வித்தியாசத்தை கடைப்பிடித்துள்ளது தெளிவாகின்றது. 1904ல் பாடப்பட்ட அவனது தனிமை இரக்கம் என்ற கவிதையில் ‘களங்கரை விளக்கொரு’, ‘கோடியாமலங்குமூர்’ ‘முடம்படு தினங்கால்’ ‘வளி’ போன்ற வார்த்தைகளுக்கு அவனே பொருள் கூறி, புழக்கத்தில் இருக்கும், தமிழ் வார்த்தைகளில் விளக்கம் தந்திருப்பது அவதானிக்க கூடியதாய் இருக்கின்றது. (கூடவே காந்திமதிநாத பிள்ளை பேரில் அவன் முதலில் பாடிய, பாரதி சின்ன பயல் என்ற பாடலை, கவிதை சிதையாமல், இரண்டொரு திருத்தங்களுடன், அவன் நொடியில், மறுபடியும் பாட கூடியதாயுள்ளது, அவனது மொழி சார்ந்த ஆளுமையை, அந்த வயதிலேயே,சுட்டுவதாயுள்ளது. (பள்ளி பருவம். வயது 14-15).
அதாவது ‘இளசை ஒருபாவொருபஃது’ (1898) பாடிய பாரதி இப்போது, “சில நூற்றாண்டுகளே நூல் பழக்கம் கொண்டிருக்கும்”, “மக்களுக்கான எளிய பதங்களை” இக்காலப்பகுதியில் நாடி செல்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
மொழிசார்ந்த இம்மாற்றம், மக்கள் சார்ந்த ஓர் அணுகுமுறையினால் வந்த ஒன்று என்பது ஒருபுறம் இருக்க, இஃது அவனது சிறு வயதிலேயே (23 வயது) வந்திருப்பது குறிப்பிடத்தக்கதாய் இருக்கின்றது. அதாவது, தனிமை இரக்கம் பாடி, ஓர் ஆறுவருட இடைவெளிக்குள், அவனிடம் காணக்கிட்டும் இம்மாற்றம் நுணுகி நோக்கத்தக்கது.
சுருக்கமாய்க் கூறினால், இக்காலப்பகுதியில், மொழியின் வளத்தையும் அதன் நெளிவு சுழிவுகளையும் அவன் அறியும் வேளை, அவை மக்களிடம் சென்று சேர வேண்டிய நோக்கத்தை அறிந்தவனாகின்றான். வேறு வார்த்தையில் கூறுவதானால் தங்க கோபுரத்தின் உச்சயில் நின்ற தன் மொழியை மக்கள் அளவி;ல் அவன் இறக்கிக்கொள்வதை, தனது தர்மமாக எண்ண துணிகின்றான் - அதுவும் தனது இருபத்து மூன்று வயதில்.
4
மதுரை சேதுபதியின் தமிழ் ஆசிரியனாக, பாரதியை, பார்க்க நேரிடும் ஜி.சுப்பிரமணிய ஐயர், பாரதியை தேர்ந்து சென்னைக்கு அழைத்துவந்து சுதேசமித்திரனில் இருத்துகின்றார். சில மாத காலங்களிலேயே, அவன் இளையவனாய் இருப்பினும், அவனை சுதேசமித்திரனின் உப ஆசிரியர் பொறுப்பில் இருத்தி விடுகின்றார். (உண்மையில், பாரதியின், தேசபக்திக்கான அடிப்படை அவனது 15-வது வயதிலேயே இதயத்தில் பதிந்துவிட்டது என்ற கலாநிதி கைலாசபதியின் கூற்றை அவதானத்தோடு மனங்கொள்வது சிறப்பானது).
பாரதி, சுதேசமித்திரனின் உப ஆசிரியராக கடமையாற்றும் போது அவன், சக்கரவர்த்தனி என்ற மாத பத்திரிகையின் முழு ஆசிரியர் பொறுப்பையும் ஏற்கின்றான். ஆனால் 1906ல், அதாவது இதில் இருந்து, கிட்டத்தட்ட ஒரு வருடகாலத்தில் அவன் இந்தியா என்ற பத்திரிகையின் முழு ஆசிரிய பொறுப்பையும் ஏற்றுக்கொள்கின்றான். வேறுவார்த்தையில் கூறுவதானால் அவனது தேசியம் சார்ந்த எண்ணங்களுக்கு, புதிய மேடைகள் கிடைப்பதாய் உள்ளன. அதாவது, இப்புள்ளியிலேயே இந்திய தேசிய இயக்கம் அவனை அழைப்பதும், அவன் இந்திய தேசிய இயக்கத்தை பாதிப்பதும் நடந்தேற துவங்குகின்றது.
5
இதற்கு முன்பாக, 1904ல் ‘இந்து’ பத்திரிகைக்கு பாரதி எழுதிய கடிதம், இவ்இளைஞனின் அக்காலத்தைய அரசியலை ஒருவாறு வெளிக்கொணர்வதாய் உள்ளது.
சாதியம் என்பதினையும், விதவைகளின் நிலைமையையும், இந்திய சமூகத்தின் தீரா சாபங்கள் அல்லது இழிவுகள் என்பதனை, இருபத்திரண்டு வயதில், இவ்இளைஞன் கருத்தில் கொள்கின்றான். அவனது கடிதம் கூறுவதாவது : “தேசியம் பொறுத்த ஆழ்ந்த உணர்வு இன்றேல், அரசியல் விடுதலை என்பது இங்கே சாத்தியப்பட போவதில்லை. சாதிய அமைப்புமுறை எங்கெங்கு ஆழ ஊடுறுவி, வேர்கொண்டு பரப்பி நிற்கின்றதோ அங்கே தேசியத்திற்கான உணர்வு எழக்கூடுவதில்லை… பறை சாதியை சேர்ந்த ஒருவன், அவன் தர்மவான் என்றாலும், அவன் பிராமணிய தரகனை விட கீழானவனே… (என்ற எண்ணப்பாடு…)”
மேற்படி வரிகள் பாரதியின் சமுகம் குறித்த பார்வை அன்று எவ்வாறு இருந்துள்ளது என்பதனை தெளிவாக்குகின்றது. அதாவது, 1904ல், (இருபத்திரெண்டு வயதில்) சமூகச் சீர்திருத்தம் அல்லது சாதிய அமைப்பின் தகர்ப்பு என்று வரும் போது மாத்திரமே நாட்டுரிமை மேம்பட போகின்றது என்ற அவனது கருத்தாக உள்ளது.
அடுத்து, இக்கடிதமானது குழந்தை விதவைகள் குறித்து எடுத்து கூறுவது : “குழந்தைப்பருவத்திலேயே விதவையாகிவிட்ட ஒருத்தியை என்றென்றைக்கும், அவள் நரக வேதனையை அனுபவிக்கும் படியாக இருத்திவிடும் கல்நெஞ்சர்கள்…” என இக்கடிதம் நீள்கிறது. இது இவ்இளைஞனின், விதவைகள் பொருத்தும் அவர்கள் மறுமணம் செய்துக்கொள்ள வேண்டிய நியாயப்பாடுகள் குறித்தும் அவனது நிலைப்பாட்டினை தெளிவுற வெளிக்கொணர்வதாய் உள்ளது.
சாதியம் பொறுத்த அவனது விமர்சனம் ஒருபுறம். மறுபுறம் விதவைகள் பொறுத்த அவனது நிலைப்பாடு. இப்பார்வையின் ஊடு அவன் தேசிய காங்கிரஸின் கதவையும் தட்டுவதாயுள்ளது. “இச்சீர்த்திருத்தங்கள் இல்லாத சீர்த்திருத்தங்கள் யாவும், வெறும் கனவும் கற்பனையும் சார்ந்தவையே…”; “இவற்றை உள்வாங்காத தேசிய காங்கிரஸ் என்பது வெறும் கண்கூசும் பகட்டினையும், உள்ளீடற்ற கோதினையும் மாத்திரமே உள்ளடக்குவதாயிருக்கும்…” “இப்படியான கல்நெஞ்சம் கொண்ட ஒருவன் தலைமைப் பீடத்திலிருந்து கொண்டு விழிப்படைந்து வரும் மக்கள் சைன்யத்தை வழி நடாத்த கூடுமா…” என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்தத்தில், பாரதி எனும் இவ் இருபத்தி இரண்டு அல்லது இருபத்து மூன்று வயது இளைஞன், அன்றைய இந்திய தேசிய காங்கிரஸின் தலைமைப் பொறுத்து தன் ஆழமான உறுதியான விமர்சனங்களை வெளிப்படையாக முன்வைப்பதாக உள்ளது. அதாவது, பாரதி என்ற கவிஞனின், பிற்கால கவிதைகளில், காணக்கிட்டும் விமர்சன வரிகளுக்கான அடித்தளத்தை, அன்றே இவ்இளைஞனில் நாம் இனங்காணக்கூடியதாக உள்ளது, என்பதே விடயமாகின்றது.
6
இதனை ஒத்ததாகவே, பாரதி கருணை என்ற தலைப்பின் கீழ் 29.04.1905ல் எழுதியுள்ள கட்டுரையும் குறிப்பிடத்தக்கதாய் உள்ளது. (ஒரு வருடத்தின் பின்னர்)
சென்னை பிரசிடென்சி காலேஜ் தமிழ்சங்கத்தில் இவ்இளைஞன் ஆற்றிய ஒரு சொற்பொழிவின் சாரமே, இங்கு கட்டுரையாக வடிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் காணக்கிட்டும் இரு விடயங்கள் எமது சிந்தனையை தொடக்கூடியன :
1.ஒன்று தெய்வீகக் கருணை என்பது குறித்த அவனது நிலைப்பாடு.
2.மற்றது, ஏழ்மையில் வருந்தும் ஒருவனது, காரூண்யம் பொறுத்து, அவனது தனிப்பட்ட அவதானத்தை கூறும் பண்பு.
இக்கட்டுரையில், இவ்இளைஞன், மனிதரில் காணக்கிட்டும் காரூண்யம், (மானசீகக் கருணை) என்பதனையும் தெய்வீகக் கருணை என்பதனையும் வேறுபடுத்தியும், கருணை பொறுத்து விரிவான விளக்கத்தை தருவதை காணமுடிகின்றது.
“எட்டாயிரம் சமணர்களை கழுவேற்றிய பாண்டியராஜன் போன்றோர்கள் சரித்திரத்தில் மொய்துக்கிடந்தாலும்”, “சரித்திரத்தில் கருணைக்காக புகழப்பட்டவர்கள் ஆயிரத்தில் ஒருவர் என்றாலும், இருக்கவே செய்கின்றது” என்று இவ்இளைஞன் குறிப்பிடுகையில், வரலாற்றின் முரண்படும் அம்சங்களை, இவன் அன்றே உள்வாங்க தொடங்குகிறான், என்பதை காட்டுவதாயுள்ளது.
இத்தகைய ஒரு சரித்திர பிரஞ்ஞையுடனேயே, இவ்இளைஞன் பூமிக்கும் வருகின்றான். மனித கருணையைப்பற்றி அவன் குறிப்பிடும் போது : “கந்தையுடுத்தி... சோறு வேண்டும் என்று கேட்கவும் எண்ணாமல்... மூலையில் இரண்டு குமாரத்திகள் படுத்திருக்க... பிச்சைக்கென்று போன பிள்ளைகள் எப்போது வருவார்... (என) காத்திருக்கும்... வாதநோய்கொண்ட ஓர் கிழவன்... அங்கே ஓர் நாய் படுத்திருப்பதைக் கண்டு... தங்களுக்கென வைத்திருந்த பழஞ்சோறைக் கொண்டுவந்து அந்த நாய்க்கு போடுவதை நான் பார்த்திருக்கின்றேன்...” (பக்கம்-30).
இதனை உயர்ந்த அன்பு – காரூண்யம் என இவ்இளைஞன் அடையாளப்படுத்தினாலும், மேற்படி பகுதியானது, இவ்இளைஞனது தனிப்பட்ட அனுபவங்களை அல்லது தனிப்பட்ட தொட்டுணர்வை அல்லது தனிப்பட்ட தீண்டலை சுட்டுவதாய் உள்ளது. அதாவது, ஏங்கல்ஸ் எவ்வாறு தன் இளவயதில், லண்டனின் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் அலைந்துத்திரிந்து, அங்கு வாழ்ந்த அடிமட்டத்து தொழிலாளர் குடும்பங்களின் நிலைமைகளை தனிப்பட அறிந்து, உள்வாங்கி வெளிப்படுத்தினாரோ அதே செயற்பாடு அல்லது எண்ணப்பாடு இங்கும் காணக்கிட்டுவதாய் உள்ளது. அதாவது, இத்தனிப்பட்ட பங்கேற்பு, அல்லது இத் தனிப்பட்ட அனுபவம் - இதனை நோக்கி, இவ்இளைஞன் ஈர்க்கப்பட்டு, முன்னேறுவதாய் தன் வாழ்வை வடிவமைக்கும் திராணி கொள்கின்றான் என்பதே முக்கியமாகின்றது.
மறுபுறம், கருணையின் பிறிதொரு வடிவமென “தெய்வீகக் கருணை” என்பதனை எடுத்துரைக்கும்; இவன், கௌதம புத்தரின் கூற்றான “உடலையும், மனதையும், அறிவையும், ஆன்மாவையும் பற்றும் நோய்கெல்லாம் மருந்து,அன்பே – சர்வசன அன்பே - இதுவே தெய்வீக கருணையின் வேர்” என்கின்றான்...
கிட்டத்தட்ட, டால்ஸ்டாய், மேற்கொண்ட அதே முயற்சி – அதாவது மதத்க்ச் சீர்திருத்தி, தனது கடவுளை காப்பாற்ற டால்ஸ்டாய் செய்த அதே முயற்சி, இங்கே இந்த இருபத்து மூன்று வயது இளைஞனிடமும் அன்று காணக்கிட்டுவதாய் உள்ளது. ஆனால், இவ் ஆன்மீக நிலைப்பாடு, இனிவரும், இவனது அரசியல் நிலைபாடுகளுடன் எத்தகைய முரண்பாடுகளை தனது பிற்பட்ட வாழ்க்கையில் ஏற்படுத்த கூடும் என்பது இவ்இளைஞன் பொருத்த கேள்வியாகின்றது.
7
இப்பின்னணியில், (1905 ஆகஸ்டிலேயே), பாரதி, விக்டோரியா சக்கரவர்த்தனி என்ற கட்டுரையை “சக்கரவர்த்தனி” என்ற பத்திரிகையில் வரைகின்றான். இக்கட்டுரையின் இரண்டு விடயங்கள் முக்கியத்துவப்படுகின்றன :
“இவ் உலகின் ஐந்தில் ஒரு பங்கை (இவள்) அரசாள திறமை கொண்டிருந்தாள் என்றால், நமது நாட்டில், சிலர் நினைக்கின்றப்படி, பெண்களுக்கு சுயபுத்தியும், சுதந்திரமும் ஆகாது எனும் கொள்கை எத்தனை அறிவற்ற கொள்கையாக உள்ளது…” (பக்கம் 41) என்பது தொடக்கம், “இவளது சமஸ்தான வித்துவான்களாய் ஒர்ட்ஸ் வொர்த்து, டெனிசன், ஆகியோர் விளங்கினர்…” என்பதும் “1858ல்… 30 கோடி ஜனங்களை ஜாதி வித்தியாசம், சமய வித்தியாசம் பாராது சகல ஜனங்களையும் ஒன்றுபோல் நடத்துவது” என்பதும், 1857ல் இந்தியாவில் நடந்த கிளர்ச்சிக்குப் பின், இந்தியாவை கிழக்கிந்திய கம்பனியிடமிருந்து அகற்றி, ஆங்கிலேயே அரசின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவந்த வரைக்கும், அனைத்துமே, விட்டோரியா என்னும் பெண்ணாலேயே நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதனையும் எமது மாதர் மனங்கொள்ள வேண்டும் என்ற எண்ணப்பாட்டில் வரையப்பட்டது இக்கட்டுரையாகும்.
வேறுவார்த்தையில் கூறுவதானால் பிரிடிஷ் அரசின், முதலாளித்துவ செழுமையை இவ்இருபத்து மூன்று வயது இளைஞன் நிராகரிக்காது - அதன் நல்ல பகுதியை ஏற்கின்றான் என்பதே இங்கு குறிப்பிடத்தக்கதாகின்றது. இதனாலோ என்னவோ இக்கட்டுரைக்கு முன்பாக (சரியாக சொல்வதென்றால், கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் முன்னர் - 1904 டிசம்பரில்) இந்துவுக்கு தான் எழுதிய கடிதத்தில், அன்றைய இந்தியாவின் சாதிய கொடுமைகளை சுட்டிக்காட்டும் இவ்இளைஞன், பின்வருமாறு குறித்தான் :
“சப்பாத்து தைப்பவன்… சங்கரச்சாரியார் மடத்தின் பீடாதிபதி ஆவதா…?” “மகத்தான இங்கிலாந்து எங்கே? இந்தியா எங்கே?” என பொருள்பட எழுதுகின்றான். ஆனால் இதனை விட முக்கியமாக, இதற்கு பின்னதாக, தான் எழுதிய கட்டுரையில், (விக்டோரியா) ஓரிடத்தில் பின்வருமாறு குறிக்கின்றான் : “நமது நாடு இனி பெறப்போகும் பெருமைக்கெல்லாம் விக்டோரியா மகாராணியின் நாட்களிலேயேதான் வித்துக்கள் இடப்பட்டன”.
பாரதி, 1905இல், “வித்துக்கள்” என குறித்தது எதனை என்பது, ஆழமான கேள்வியாகின்றது. இதனை, ஆன்மீக பொருளிலேயே, அவன் அன்று கூறினான் என்பதற்கான திட்டவட்டமான சான்று, அன்று இருந்ததாயில்லை. ஆனால் மார்க்ஸ், தனது, மேற்குறித்த கட்டுரையில் கிட்டத்தட்ட, இதே சொல்லாடலை பாவிக்க தவறினாரும் இல்லை எனலாம்.
மார்க்ஸ் இவ் வித்துக்களை (புதிய முளைகளை) பின்வருமாறு அடையாளம் கண்டார் :
“ஆங்கிலேய ஆட்சியில், அழிவும் ஆக்கமும் ஒருங்கே நிறைவேற்றப்பட என்றோ விதிக்கப்பட்டாகிவிட்டது...” “இச்சிதைவுகளில் இருந்தே... புதிய முளையானது தோற்றுவிக்கப்படுகின்றது. அப்புதிய முளையானது, எமது மானுடத்தின் பூரண விடுதலைக்கான வித்தாக இருக்கப்போகின்றது”.
பாரதியின், 1905 காலப்பகுதி எழுத்துக்கள், அவன், கிட்டத்தட்ட மேற்படி புள்ளியை நோக்கி அசைய முற்படுவதைக் காட்டுவதாக உள்ளது. ஆனால், அவன், எந்த ஓர் அடிப்படையில் அசையக் கூடும் - இனி அவன் கைக்கொள்ளவிருக்கும் பார்வை, எத்தகையதாய் இருக்கும் என்ற கேள்வி மேற்படி பின்னணியில், பூதகரமாய் தோற்றம் கொள்ளத்தக்கதே.
முடிவுரை :
1904 நவம்பரில், தனது இருபத்திரண்டு வயதில் பாரதி,சேதுபதி கல்லூரியின் தமிழ் ஆசிரியர் பதவியை ராஜினாமா செய்து சுதேசமித்திரனில் காலடி எடுத்துவைக்கின்றான். வேறு வார்த்தையில் கூறுவதானால் “தேடி சோறு தினம் தின்று” என்ற வாழ்வியல் சார்ந்த, விமர்சன பார்வை ஒன்று, அன்றே, அந்த இருபத்திரண்டு வயது இளைஞனில், குடியேறிவிட்டது எனலாம். அல்லது அவனது “புறப்பாட்டுக்கு” வித்திட்டுவிட்டது எனலாம்.
அதாவது, கலாநிதி கைலாசபதி குறிப்பிடுவதுப்போல, தனிமை இரக்கம் எழுதிய அந்த கை, இப்போது இந்திய சமூக கொதிகலனை தொட முற்படுகின்றது. இச்செயற்பாட்டில், காணக்கிட்டும் இரண்டு முக்கிய கூறுகள்: ஒன்று, அவனது நெஞ்சுரம். மற்றது இனி இந்த சமூகக் கொள்கலன் இவ்இளைஞனை எதனை நோக்கி நகர்த்தி செல்லக்கூடும் அல்லது இவ்இளைஞனால் இக்கொதிகலன், அடையக்கூடிய மாற்றங்கள்தான் யாவை என்பதுவே கேள்வியாகின்றது. ஆனாலும், இதற்குள்ளாகவே இவ்இளைஞனில் பின்னர் வந்துசேரக்கூடிய முக்கிய கூறுகளில் சில இப்போதே, இவ்இளைஞனில் ஆழமாக முளைவிட்டுபதிய முற்பட்டுள்ளதை, நாம் காணக்கூடியதாக உள்ளது.
தேசியத்தை இவன் உள்வாங்குவது மாத்திரமல்ல – தேசியம் தொடர்பிலான தனது விமர்சனங்களையும் முன்வைக்க இவன் பின் வாங்குவதாய் இல்லை. மறுபுறம், பிரிடிஷ்சாரை எதிர்த்த போதிலும், அங்கே காணக்கிட்டும் அதன் செழுமைகளை உள்வாங்கி தனது சமூகத்திடை நிறுத்த பார்ப்பதும் தெரிகின்றது. கூடவே, அவனது மொழி – சரியாகச் சொல்வதென்றால், அவனது கவிதை மொழி, முன்னர் குறித்தவாறு, மாறுதலடைகின்றது. அவனது எளிமை வெளிப்பட துவங்குகின்றது. அதாவது, மக்களை நெருங்கும் ஆர்வமும் அதற்கேற்ப மொழியை கையாளும் நேர்த்தியும், தெரிகின்றது.
ஆக, இவ்இளைய பாரதியில், காணக்கிட்டும் கூற்றுகளை சுருக்கி கூறுவதென்றால்:
சாதாரண பஞ்சை பரதேசியின் பால், தீவிர அனுதாபம் கொண்டவராய், அவர்பால் ஈர்க்கப்படல்.
தேடிச் சோறு நிதம் தின்று’ என்ற பன்நெடுங்கால அறத்திலிருந்து விடுபட்டு, வாழ்வின் கஷ்டங்களை புறந்தள்ளி, புதுவாழ்வை, புது நிலைப்பாடுகளை தேடும் அழகு.
நெளிவு சுழிவுகளை அறிந்த, அற்புதமான மொழி ஞானம்.
அம்மொழியை – உருவத்திலும் சரி – உள்ளத்திலும் சரி – எளிமைப்படுத்தி – தான் வாதிக்கும் தேசிய உணர்வு சார்ந்த, பல்வேறு நிலைபாடுகளுக்கு குந்தகம் விளைவிக்காது – எளிய மாந்தரிடம் சேர்க்கும் போக்கு.
சரித்திரங்கள் பொறுத்த ஞானம். அவற்றின் பல்வேறு போக்குகள் குறித்த பரிச்சயம்.
செழுமைகளை ஆதரிக்கும் அதே வேளை, மறைவாக பழங்கதை பேசாது, ஒன்றை ஆராய்ந்து உள்வாங்கும் பண்பு.
நெஞ்சுரம். (பொய்மை புலமை உலகை நிராகரித்தல் உட்பட).
இவை பாரதி என்ற இருபத்தி மூன்று வயது இளைஞனில், அன்றே குடியிருந்த கூறுகளில் சிலவாம். (இத்துடன், கைலாசபதியின், அவனது 15 – வயது அவதானிப்புகளையும் சேர்ப்பது நன்று).
இருந்தும், பிற்காலத்தே “அல்லா, அல்லா...” எனப்பாட நேர்ந்த, பாரதி, அன்றைய இந்தியாவின், பின்னடைந்த அம்சங்களால், பாதிப்புறாமலும் இல்லை என்பதனையும் இங்கே கூறியே ஆக வேண்டும். விக்டோரியா தொடர்பிலான தனது சக்கரவர்த்தினி கட்டுரையில், இவ்இளைஞன் பின்வருமாறு குறிக்கின்றான் : “பிற்காலத்தே மகமதியார் முதலான, பிரதேசத்தாரின் குறைந்த நாகரீகங்கள் இந்நாட்டிலே படரத் துடங்கிய போது... நம்மவர் ஆகிய ஆரியர்கள் அந்நிய நாகரீகத்தை பின்பற்ற தொடங்கிவிட்டனர்...” (பக்கம் 41)
மேற்படி, குறையினைப் போலவே, 22-23 வயதே ஆகியுள்ள, இவ்இளைஞனது, ஆன்மீக கருத்துக்களும் (அல்லது வேதாந்த கருத்துக்களும்) இனி இவனது அரசியல் கருத்துக்களுடன் எப்படி மோதுவதாக இருக்கக்கூடும் என்பது கேள்வியாகின்றது. இருந்தும் இவன் ஒரு புதிய வித்து. ஒரு புதிய முளை, இளைஞன் இவன் : இவனது வார்த்தைகளிலேயே கூறுவோமானால் :
“வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ...”
பின் குறிப்பு : திரு.சீனி விஸ்வநாதன் அவர்களின் தொகுப்புக்களை அடியொற்றி எழுதப்படுவது. (கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புக்கள் தொகுதி - ஐ : 1897-ஆகஸ்ட் 1905)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.