பாலேந்திராவின் 'அரங்கக் கட்டுரைகள்' புத்தக வெளியீடும் ஆனந்தராணியுடனான அறிமுகமும்! - சிவா முருகுப்பிள்ளை (ஈஸ்வரமூர்த்தி ) -
- முகநூற் பக்கங்களில் வெளியாகும் பயனுள்ள குறிப்புகள் அவற்றின் பயன் கருதிப் பதிவுகளின் இப்பக்கத்தில் வெளியாகும். - பதிவுகள்.காம் -
- சமூக அரசியற் செயற்பாட்டாளர் ஈஸ்வரமூர்த்தி (சிவா முருகுப்பிள்ளை) என் பதின்மப் பருவத்திலிருந்து அறிமுகமான நண்பர்களில் ஒருவர். யாழ் இந்துக்கல்லூரியில் என்னுடன் படித்தவர். அவர் அண்மையில் 'டொரோண்டோ'வில் நிகழ்ந்த நாடகவியலாளர் க.பாலேந்திராவின் 'அரங்கக் கட்டுரைகள் கட்டுரைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு பற்றியெழுதிய சிறப்பான முகநூற் பதிவிது. - வ.ந.கி -
பாலேந்திராவின் நாடக பயணத்தின் 50 வருட காலத்திற்கு மேலான பயணத்தின் அனுபவங்களை ஆவணமாக்கும் முயற்சியாக அவரால், அவரின் இணையர் ஆனந்தராணியுடன் இணைந்து உருவாக்கி புத்தக வெளியீடும் விமர்சன அரங்கும் கனடாவின் ரொறன்ரோவில் கடந்த வாரம் நிகழ்ந்தது. தற்போது எல்லாம் இவ்வாறான பொது நிகழ்வுகளில் நேரில் கலந்து கொள்பவர்கள் மிக அரிதாகிப் போன சூழலில்... இந்நிகழ்வில் பல கருத்து வேறுபாடு உள்ளவர், அமைப்புகள்களைச் சேர்ந்தவர்கள் தனி நபர்கள் என்று வழமையை விட ஐந்து மடங்கு பார்வையாளர்கள் கலந்து கொண்டது பாலேந்திராவின் நாடக உலகப் பயணதிற்கு சமூகத்தில் கிடைத்த அங்கீகாராமாக பார்க்க முடிகின்றது. அவைக்காற்றுக் கலைக்கழகத்தை தனது கட்டப்பெத்தை பல்கலைக் கழக மாணவர் வாழ்வில் அத்திவாரம் போட்டவர்.
இலங்கை பரப்பில் தலை நகரிலும், யாழ்ப்பாணத்திலும் நாடகத்தை பார்க்க நாம் போயாக வேண்டும் என்பதாக பல ஊர் மக்களையும் அரங்கத்திற்கு அழைத்த பெருமை பாலேந்திராவை சாரும். ஆரம்பத்திலேயே குறிபிட்டும்விடுகின்றேன் இந்த நாடகப் பயணத்தின் வெற்றி ஆனந்தராணி இல்லாவிட்டால் நிச்சயம் முழுமைபெற்றிருக்க முடியாது. இதனை அருகில் இருந்த அல்ல தூரத்தில் இருந்து பார்த்து வந்த பலரில் நானும் ஒருவனாக இருந்தாலும் அன்று புத்தக வெளி யீட்டில் இருவரும் தம்மால் உருவாக்கப்பட்ட 70 இற்கும் மேற்பட்ட நாடங்களில் சிலவற்றில் இருந்து ஒவ்வொரு காட்சியை பாடலுடன் நடிப்பை சபையில் முன்வைத்த போது என்னால் இன்னும் அதிக உணரமுடிந்தது. பாடல்களுக்கான உயிர்ப்பை.... இனிமையை... தாளம் போடும் அளவிற்கு பின்னணி இசையான அவர்களின் ஆஸ்தான இசையமைப்பாளர் யாழ் கண்ணன் இல்லாமலே எம் முன்னே கொண்டு வந்தனர். அவர்களின் பாடலுடன் இணைந்து நடிப்பை நான் தாளம் போட்டுத்தான் கேட்டேன். வாசுதேவன் என்ற கவிஞரின் கவிகளும் வலுவாக இருந்தன.
நிகழ்விற்கு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அவரின் ஆரம்ப காலத்து பல்கலைக் கழக சகாக்கள், நாடக நடிகர்களாக சிலர் வந்திருந்தது அதுவும் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு என்பதாக அது இருந்ததும் இந்த ஐந்து மடங்கு பார்வையாளர்கள் எவ்வாறு உருவானார்கள் என்பதை நிறுவுவதற்கு போதுமான ஆதாரத்தை கொண்டிருந்து.