விமானம் தரையிறங்க ஆரம்பித்தது. மனமெங்கும் மகிழ்ச்சி வியாபிக்க, ஓங்கி உயர்ந்து நின்றிருந்த கட்டங்களையும் ஊர்ந்துகொண்டிருந்த வாகனங்களையும் யன்னல் கண்ணாடிக்குள்ளால் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள், பாமதி.
இருபது வருடங்களுக்கு முன், முதன்முதலாக ரொறன்ரோவுக்கு வந்திருந்த அந்தப் பொழுது மீண்டும் அவளின் நினைவுக்கு வந்தது. அவளின் கண்கள் சட்டென ஈரமாகின. மனம் சற்றுக் கனத்தது.
ஸ்பொன்சரில் அம்மாவைக் கனடாவுக்குத் தேவகி கூப்பிட்டிருந்தபோது பாமதிக்கும் அவளுக்கும் பல கனவுகள் இருந்தன. தன்னந்தனியனாகத் தங்களை வளர்த்து ஆளாக்கிவிட்ட அம்மாவைக் கண்கலங்காமல் கவனிக்க வேண்டும், குளிர்காலத்தின் கஷ்டம்கூடத் தெரியாமல், ஆறு மாதம் சிட்னியிலும், ஆறுமாதம் ரொறன்ரோவிலுமாக மாறிமாறி அவவை வைத்திருந்து, விரும்பியதெல்லாம் செய்துகொடுக்க வேண்டும் என்றெல்லாம் அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், விதி வேறொரு பாதையை வகுத்திருந்தது. மனமெல்லாம் சிலிர்க்க அம்மாவைச் சிட்னியில் வரவேற்பதற்குப் பதிலாக, அழுதழுது வீங்கிய கண்களுடன், வானம்கூட இருண்டுபோயிருந்த ஒரு நாளில், அம்மாவுக்கு விடைகொடுப்பதற்காக பாமதி ரொறன்ரோவுக்கு வந்திருந்தாள். ரொறன்ரோவில் அவள் தங்கியிருந்த அந்தப் பத்து நாட்களும் தேவகியும் அவளும் அம்மாவைப் பற்றியே மீளவும்மீளவும் கதைத்துக் கதைத்து மறுகினர்.
வெறித்தனமாக உயிர்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஈழத்தின் நீண்டகாலச் சரித்திரத்தின் கறைமிக்க ஒரு காலகட்டமான 83 ஜூலையின் இருபத்தி ஐந்தாம் திகதி, அவர்களின் இரத்தக் கண்ணீருடன்தான் விடிந்திருந்தது. அதிகாலையில், யாழ்ப்பாணப் புகையிரத நிலையத்தில் கடமையிலிருந்த அவர்களின் அப்பாவை படையினரின் கோரத்தாண்டவம் பலிகொண்ட நாள் அது. அவரின் உயிரற்ற உடலைப் பார்த்ததும் அம்மா கதறியபடி மயங்கிப்போன அதிர்ச்சி இப்போதும் அவர்களைச் சில்லிட வைப்பதுண்டு.
அதன்பின்னர் பதின்மவயதுகளில் இருந்த அவர்களை வளர்க்கவும், நாட்டுப் பிரச்சினைகளின் தாக்கங்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்கவும் அவர்களின் அம்மா பட்டபாடும் வலியும் சொல்லிமாளாது. அமைதியை நிலைநாட்டவென 87இல் ஈழத்துக்கு வந்திருந்த இந்தியப் படையினர் நாளாந்த வாழ்க்கையை மேலும் பீதி நிறைந்த பொழுதுகளால் நிரப்பியதும், அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த போராட்டக் குழுக்களுக்கு இடையிலான மோதல்களும், முடிவில் உக்கிரமடைந்த போரும் வாழ்தலைப் பெரும் போராட்டமாக மாற்றின. செல் வீச்சுக்களாலும், பொம்மர் தாக்குதல்களாலும், துப்பாக்கிச் சூட்டுக்களாலும் நிறைந்துபோயிருந்த அந்தக் கொடுரமான சூழலிலிருந்து தப்புவதற்கான முயற்சியாக அவர்கள் ஊர் ஊராக இடம்பெயர வேண்டியிருந்தது.
முடிவில், அந்தத் துர்ப்பாக்கிய நிலை ஆளுக்கொரு கண்டத்தில் அவர்கள் வாழ்வதற்குக் காரணமானது. ஊரில் அம்மாவைத் தனியே விட்டிட்டு கண்காணாத தேசத்தில் எப்படி வாழ்வது என்ற அவர்கள் மறுத்தபோது, அவர்கள் பாதுகாப்பாக இருந்தால், தானும் மன அமைதியுடன் இருக்கலாமென அவர்களின் அம்மா அவர்களை வற்புறுத்தினார். அம்மாவின் வற்புறுத்தலில் இருந்த நியாயத்தையும், அவவின் அந்த மன உரத்தையும் அவர்களால் மீற முடியவில்லை.
இப்படியாகப் பிரிந்த நாளில் இருந்து, மீண்டும் அக்காவுடன் எப்போது கொஞ்ச நாட்களாவது ஒன்றாக வாழலாம் என்பதே பாமதியின் கனவும் நினைவுமாக இருந்தது. கடைசியில் அவளின் இளைய மகளும் பல்கலைக்கழகக் கல்வியை முடித்தவுடன் அவளுக்குக் கொஞ்சம் ஆசுவாசம் கிடைத்தது. இனிப் பிள்ளைகள் தம்பாட்டைத் தாமே பார்த்துக்கொள்வர், அக்காவிடம் போய்விட்டு வரலாமென பாமதி திட்டம் போட்டாள். ஆனால் அதுவும் கொரோனாவால் புஷ்வானமானது. பின்னர் மேலும் இரண்டு வருடம் அவள் காத்திருக்க வேண்டியிருந்தது. முடிவில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவுடன், அக்காவின் 60வது பிறந்தநாளிலாவது அவவுடன் இருக்கலாமென்பது அவளுக்கு மிகவும் இனித்தது. துணிந்து அவள் தனியப் புறப்பட்டுவிட்டாள்.
குடிவரவுப் பிரிவிலிருந்து வெளியே வந்த பாமதி சுங்கப்பிரிவைக் கடந்தவுடன், தான் வந்துசேர்ந்ததைச் சொல்வதற்காகக் கணவரை அழைத்தாள். “காத்திருந்து போறாய், சந்தோஷமாக இருந்திட்டு வா” என அவர் மீண்டும் அவளை வாழ்த்தினார்.
சூட்கேஸ் இரண்டையும் தள்ளுவண்டிலில் வைத்துத் தள்ளிக்கொண்டு வெளியில் வந்த பாமதி, தேவகியைப் போனில் அழைத்தபடி, நாலாபுறமும் அவளைத் தேடினாள். ஆனால், முகமூடியுடன் நின்ற அக்காவை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. தேவகிதான் ஓடிவந்து அவளைக் கட்டிக்கொண்டாள். அவளின் கண்கள் அகன்று கனிவாகச் சிரித்தன. “அப்பாடா எத்தனை வருஷமாச்சு, இந்த ஒருமாதமும் நானும் நீயும்தான் உலகமெண்டிருக்கப்போறம், எல்லாருக்கும் சொல்லிட்டன்”, மிகுந்த பரபரப்புடன் கூறினாள் அவள். பாமதி மிகுந்த வாஞ்சையுடன் தேவகியின் கையைப் பிடித்துக்கொண்டாள்.
காருக்குள் ஏறிய பின்பும், தேவகியைக் கண்வெட்டாது பார்த்தாள் பாமதி. “படத்திலை பாக்கிறது, சூமிலை சந்திக்கிறது... ஒண்டுமே நேரபாக்கிறமாதிரி வராதுதான். நல்ல வடிவாய் இருக்கிறாய் அக்கா, அம்மாவைப் பாக்கிறமாதிரிக் கிடக்கு. உனக்கு அறுபதெண்டு சொல்லவே ஏலாது, தூ, தூ, நாவுறுபடக்கூடாது.” தேவகி இடது கன்னத்தில் குழிவிழ அழகாகச் சிரித்தாள்.
“சரி, சரி புழுகினது காணும், நீயும் நல்லாய்த்தானிருக்கிறாய். சித்தி நல்ல வடிவெண்டு, பிள்ளையள் எப்பவும் சொல்லுவினம்… வீட்டுக்குப் போறதுக்குக் குறைஞ்சது ஒரு மணித்தியாலமாவது எடுக்கும். ஏதாவது குடிச்சிட்டுப் போவமே,” என்று சொன்ன தேவகி அடுத்த திருப்பத்தில் காரைத் திருப்பினாள்.
‘செக்கண்ட் கப்’ என்ற கடைக்குச் சென்று மவ்வின் உடன் ‘கிஸ்பிஸ்கஸ் பெர்ரி மின்ற் ஐஸ்ட் ரீ’ என ஓடர் பண்ணியவள், “இந்தக் கடை கனடாவின்ர சொந்த பிராண்ட், சிட்னியில இருக்காது எண்டதாலைதான் இங்கை வந்தனான், செவ்வரத்தம் பூச்சேர்த்து, தேங்காய்ப்பால் சேர்த்தெல்லாம் தேத்தண்ணி போடலாமெண்டு நாங்கள் நினைச்சாவது பாத்திருப்பமே!” என்றபடி முகத்தை ஆச்சரியக்குறிபோல நிமிர்த்தி பாமதியைப் பார்த்தாள் தேவகி.
“ம், இப்பிடி நாங்க கவனிக்காம விட்ட விஷயங்கள் எத்தினை இருக்கெண்டு பெருமூச்சுவிடத்தான் எங்களாலை முடியும்.”
“சரி, நீ சொல்லு, எப்பிடியிருக்கு, நல்லாயிருக்கா? நாளைக்கு நயாகராவுக்குப் போவம். நான் அந்த போர்டரிலைதான் வந்திறங்கினனான், தெரியும்தானே. அண்டைக்கு நான் அதைப் பாத்துப் பிரமித்த பிரமிப்பு இருக்கே. எனக்கு அது இப்பவும் நல்ல ஞாபகம். அதைப் பாக்க ரண்டு கண் காணாது எண்டு நாளைக்கு நீயும் சொல்லப்போறாய், பார்... சரி, சரி நான்தான் நெடுகக் கதைக்கிறன். எப்பிடி இருந்தது பயணம்? களைச்சுப் போனியே? என்னவெல்லாம் பாக்கோணுமெண்டு நினைக்கிறாய்?”
“ஓ , அக்கா, நான் வந்தது உன்னோடை இருக்கமட்டும்தான். அது மட்டும் போதும். இடங்கள் பாக்கிறதுக்கு எண்டு நாங்க ஓடித்திரியத் தேவையில்லை.”
தேவகி நிறைவாகச் சிரித்தாள். “எப்படியெண்டாலும் என்னோடைதானே இருக்கப்போறாய். எங்களுக்கெண்டு ஒரு அறையைக்கூட நான் ஒதுக்கியிருக்கிறன்... ஏ, என்ன பிடிக்கேல்லையே, ஏன் குடிக்கேல்லை?”
“இல்லை, இல்லைக் குடிக்கிறன், நல்லாயிருக்கு.”
X X X
தேவகி வீட்டுக் கதவைத் திறந்தபோது சமையல் மணம் மூக்கை நிறைத்தது. “வாங்கோ, வாங்கோ. உங்களுக்குக் கோழிதான் பிடிக்குமெண்டு கோழிக் கறி சமைச்சிருக்கிறன்,” என்றபடி குசினி வாசலில் நின்றபடி அவர்களை வரவேற்றார் தேவகியின் கணவர் பாலா.
“ஓ, நீங்களா சமைச்சனியள்?” ஆச்சரியத்துடன் பாமதி அவரைக் கேட்டாள். அவளுக்குத் தேவகியில் பொறாமையாகக்கூட இருந்தது.
“என்ரை கோழிக்கறி தேவகிக்கு நல்லாய்ப்பிடிக்கும். சாப்பிட்டுப் பாத்திட்டு எப்பிடியிருக்கெண்டு நீங்களும் சொல்லுங்கோவன்.” நீல நிற ஏப்ரனுடனும், தலையில் ஒரு கறுப்பு நிற ஹெயர் நெற்றுடனும் பாத்திரங்களைக் கழுவியபடி வாயெல்லாம் பல்லாகச் சிரித்தார் பாலா. வயதுபோனது அவரிலும் தெரியவேயில்லை எனப் பாமதி தனக்குள் நினைத்துக்கொண்டாள்.
“பாலா நல்லாய்ச் சமைப்பார். சாப்பிட்டால் நீ விடமாட்டாய். சரி, வா அறையைக் காட்டுறன். குளிச்சிட்டு வாவன், கொஞ்சம் அலுப்புத்தீரும்,” என்றபடி அவர்களுக்கென அவள் ஒதுக்கிவைத்திருந்த அறைக்குக் கூட்டிச்சென்றாள் தேவகி.
அறை சிறியதாக இருந்தாலும் மிகவும் நேர்த்தியாக இருந்தது. கதவுக்கு எதிரே இருந்த யன்னலுக்குப் பக்கத்திலிருந்த மேசையில் அவர்கள் நான்கு பேரும் சேர்ந்திருக்கும் படம் ஒரு அழகான பிறேமுக்குள் வைக்கப்பட்டிருந்தது. கட்டில் தலைமாட்டில் உடலெல்லாம் பூப்போட்ட பச்சை நிறச் சாரியில் சிந்து சிரித்தபடி நின்றிருந்தாள் சூட்கேசுகளை மேசைக்குப் பக்கத்தில் வைத்தாள் பாமதி.
“இது சிந்துவின்ரை அறை. எப்பவாவது எங்களோடை வந்து நிக்கேக்கை பாவிப்பாள், மற்றும்படி சும்மாதான் கிடக்கிறது” என்றபடி இரட்டைக் கண்ணாடிக் கதவுகளில் ஒன்றைத் திறந்த தேவகி, “உன்ரை உடுப்புக்களை இதுக்கை வைக்கலாம்.” என அதற்குள் ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்த தட்டுக்களைக் காட்டினாள்.
“சிந்து இருக்கிற இடம் இங்கையிருந்து கனதூரமோ?”
“பெரிய தூரமெண்டில்லை. காரிலை போனால் ஒரு 15 நிமிஷத்துக்குள்ளை போயிடலாம்.”
“அப்ப ஏன் அவள் அங்கை தனிய இருக்கிறாள்? இங்கையிருந்து வேலைக்குப் போகேலாதோ?”
“இந்தக் காலத்துப் பிள்ளையளைப் பற்றித் தெரியாதே! பிறைவேசி வேணும் என்பினம். அதோடை அவளிட்டைக் காருமில்லை. சூழலைப் பாதுகாக்க வேணுமாம் எண்டு சைக்கிள்தான் பாவிக்கிறாள். அதாலை வேலைக்குக் கிட்டவா இருக்கிறது அவளுக்கு வசதியாயிருக்குது. அதோடை ......” வசனத்தை அவள் முடிக்கமுதல் வாசல் மணி அடிக்கும் சத்தம் கேட்டது. “அச்சுவாக்கும்,” எண்டபடி அவள் விலக வின்ரரிலும் சைக்கிள் பாவிக்கேலுமே என்ற கேள்வியுடன், அந்த அறையுடன் இணைந்திருந்த குளியலறையை நோக்கி நடந்தாள், பாமதி.
குளித்துவிட்டு உடுப்பை மாற்றிக்கொண்டு அவள் வெளியே வந்தபோது, சாப்பாட்டு மேசையில் அம்மாவுடனும் அப்பாவுடனும் அவளுக்காகக் காத்திருந்த அச்சு எழுந்து, “சித்தி, ஹவ் ஆர் யூ?” என அவளைக் கட்டிக்கொண்டான்.
“நல்ல உயரமாக வளர்ந்திட்டான்,” என அவளைவிட உயரமாக இருந்த அச்சுவை அண்ணாந்து பார்த்து அவனின் தலையை ஆதரவாகத் தடவிக்கொடுத்தாள் பாமதி. பின் சாப்பாட்டு தட்டொன்றை எடுத்துக்கொண்டு அவனுக்கருகில் இருந்த கதிரையில் இருந்துகொண்டாள்.
சோற்றுக்கு மேல் கீரையையும் பருப்பையும் மட்டும் அச்சு போடுவதைப் பார்த்த பாமதி “ஏன் அச்சுவுக்குச் சிக்கன் பிடிக்காதா?” என்றாள்.
தலையை வலமும் இடமுமா ஆட்டிய அச்சு, “சித்தி, ஐ டோன்ற் ஈற் மீற்,” என்றான்.
“விலங்குகளை வதைக்கக்கூடாதெண்டு அவன் நினைக்கிறான்” என விளக்கம் கொடுத்தார் பாலா.
“ஓ, அப்ப உங்கடைபாடு பெரிய கஷ்டம்தான். ரண்டு சமையல் சமைக்கோணும்.”
“அவன் எங்கடை சாப்பாடு பெரிசாய்ச் சாப்பிடுறதில்லை. எங்களுக்குக்குத்தான் அதில்லை எண்டால் பொச்சமடையாது,” என்றாள் தேவகி.
“எங்கடை வீட்டில வெள்ளிக்கிழமையிலும் மச்சம் வேணும். இல்லாட்டில் பிள்ளையள் சாப்பிடாதுகள்” என்ற பாமதியிடம், “இந்தக் காலத்திலை சிலர் மச்சத்தை அதிகமாய்ச் சாப்பிடுகினம், சிலர் சாப்பிடுறதேயில்லை. ஆனா, அந்தக் காலத்திலை நல்ல நாள் பெருநாளுக்கு மட்டும்தானே நாங்க மச்சம் சாப்பிட்டனாங்கள்,” என்றார் பாலா.
“இப்ப ஊரிலும் எப்படியோ,” எனச் சலித்துக்கொண்டாள் பாமதி.
சாப்பிட்டு முடிந்தகையுடன், “ஓகே சித்தி, வில் மீற் நெக்ஸ்ற் சண்டே,” என்றபடி அச்சு வெளியேறினான்.
“அச்சுவும் இப்ப உங்களோடை இல்லையா?”
“எங்களோடைதான் இருக்கிறான். இண்டைக்கு அவன் காம்பிங் போறான்.”
“ஓ, இப்பிடியெல்லாம் தனிய அனுப்புறனீங்களே?”
“21 வயசாயிட்டுது. யூனிவசிற்றியிலை இருக்கேக்கை என்ன செய்யிறான் எண்டு நாங்க பாக்கிறமே, பேந்து என்னெண்டு வீட்டிலை கட்டிவைச்சிருக்கிறது?”
“உங்களுக்குக் கிட்டவா ஒரு யூனிவேசிற்றியும் இல்லையோ? எங்கட பிள்ளையளை நாங்க காரிலை கொண்டுபோய் இறக்கிப்போட்டு, பிறகு போய்க்கூட்டிக்கொண்டு வந்திடுவம்,”
“இருக்குத்தான், ஆனா அவனுக்கு விருப்பமான படிப்பு கிங்ஸ்ரன் எண்டு இங்கையிருந்து 250 கிலோமீற்றர் தூரத்திலை இருக்கிற இடத்திலை இருக்கிற யூனிவேர்சிற்றியிலதான் இருந்தது. அதோடை தூரத்திலை இருந்து படிச்சா தங்கடைபாட்டிலை வாழ்றதுக்குப் பழகுவினமெண்டு நாங்களும் நினைச்சம்.”
அப்படித் தேவகி சொன்னதும் தங்களின் பிள்ளை வளர்ப்பை அவள் விமர்சிப்பதாக பாமதிக்குத் தேவகியில் கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. இருந்தாலும் அவளின் பிள்ளைகளைப்போல தன்னுடைய பிள்ளைகள் தமிழில் நன்கு கதைக்கமாட்டார்கள் என்பதில் தனக்குக் கவலையாக இருக்கிறதென அவள் சொன்னபோது பாமதிக்குக் கொஞ்சம் தனக்குள் பெருமையாக இருந்தது.
அடுத்த நாள் நயாகார நீர்வீழ்ச்சியைப் பார்க்கப் போனபோது, பழசெல்லாம் மீட்டிக் கொண்டதில் முதல் நாள் கொஞ்சம் விலகிப்போயிருந்த மனம் திரும்பவும் ஒட்டிக்கொண்டமாதிரி பாமதி உணர்ந்தாள். சிறிய பிள்ளைகளாக இருந்தபோது, ஒன்றாகப் பாடசாலை சென்றதை, நெசவுவேலை முடிந்து அம்மா வந்தபின், மூவருமாகச் சேர்ந்து அன்றிரவு உணவைச் சமைப்பதை, பின் அம்மாவின் இரு புறங்களிலும் படுத்திருந்தபடி கதைபேசுவதை, வாக்குவாதப்படுவதை, கொஞ்சி மகிழ்வதை எல்லாம் மீளவும் பேசிப்பேசி இருவரும் மகிழ்ந்தனர். சகோதரர்களாக மட்டுமன்றி, நண்பர்களாகவும் இருந்த அவர்களை, கணவர்மார் செய்த சுயதொழிலுக்கு ஒத்தாசையாக இருக்கவேண்டியிருந்த நிலை எப்படி மாற்றிவிட்டதென ஆதங்கப்பட்டனர்.
அடுத்த சனிக்கிழமை இரவு கறுப்புநிற ஆண் ஒருவனுடன் சிந்து வீட்டுக்கு வந்திருந்தாள். வந்ததும் வராததுமாக, “சித்தி மீற் போல், போல் திஸ் இஸ் மை பாமதிச் சித்தி,” என இயல்பாக அறிமுகம் செய்தாள். சிந்துவுக்கு ஆண் நண்பர் ஒருவர் இருக்கிறார் என்பது பாமதிக்கு முதலிலேயே தெரிந்திருந்தாலும் இருவரும் அப்படிச் சேர்ந்து வருவார்கள் என அவள் எதிர்பார்க்கவேயில்லை. போல் அடிக்கடி சிரித்தான். சிரிக்கும்போது அவன் பற்கள் பிரகாசமாக இருந்தன. அவர்களின் உரையாடல்களிலும் இடையிடையே அவன் கலந்துகொண்டான். அதனால், அவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே கதைக்கவேண்டியிருந்தது. அது பாமதிக்கு மிகுந்த அசெளகரியத்தைக் கொடுத்தது. ‘பிள்ளையளுக்குக் கலாசாரத்தையும் சொல்லிக்கொடுத்து நாங்க வளர்க்கிறதாலை எங்கட பிள்ளையள் இப்பிடி ஒரு வேற்றின ஆளுடன் உறவுகொள்ள மாட்டார்கள்’ என தனக்குள் தானே ஆசுவாசப்பட்டுக் கொண்டாள்.
தமிழ், தமிழ் என்று உரிமைக்குப் போராடிப் போராடி, இருந்தவற்றையும் இழந்துபோட்டு, இப்போது இப்படி வேறு இனத்தவர்களைத் தங்களின் துணைவர்களாகப் பிள்ளைகள் தெரிவுசெய்வதைச் சில தமிழர்கள் அனுமதிப்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதுவும் சிந்துவுக்கு அவனுடன் ஒருவருடம்தான் பழக்கம், அதற்குள் அவனுடன் சேர்ந்து வாழ்கிறாள் என்பதில் பாமதிக்கு பெரிய அசூசையாக இருந்தது.
இப்படியாக இரண்டு வாரம் கழிந்தது. இடையிடையே எப்போ வீட்டுக்குத் திரும்பிச்செல்வேன் என பாமதிக்குத் தவிப்பாக இருந்தது. இருந்தாலும்கூட தன் மனநிலை பற்றித் தன் கணவருக்குச் சொல்லவேண்டுமென்ற எண்ணமோ அல்லது அப்படிச் சொல்வதற்கான சந்தர்ப்பமோ அவளுக்குக் கிடைக்கவில்லை.
அடுத்த வாரம், தேவகியின் பிறந்தநாளின்போது மீளவும் முரண்களை எதிர்கொண்டார்கள். பிறந்தநாளன்றுகூட தேவகி கோவிலுக்குப் போகாமல் இருந்ததை பாமதியால் ஜீரணிக்கமுடியவில்லை. கோவிலுக்குப் பொதுவில் போவதில்லை என அவள் சொன்னபோது, இப்படி இருந்தால் கலாசாரத்தை எப்படிப் பிள்ளைகளுக்குக் கடத்துவாய் எனப் பாமதி அவளைக் கேட்டாள். அது அவர்களுக்கு இடையில் கலாசாரம் என்றால் என்ன என்ற வாக்குவாதத்தை ஏற்படுத்தியது. தேவகியின் மொத்தக் குடும்பமும் அவள் பக்கம் சேர்ந்துகொண்டதால், தான் தனித்துப் போய்விட்டதாக பாமதி மனம் நொந்தாள்.
அடுத்த நாள் ‘அழியாத கோலங்கள் 2’ என்ற திரைப்படத்தை இருவரும் விரும்பிப் பார்த்தனர். பிரகாஷ்ராஜின் நடிப்பை விதந்தனர். அர்ச்சனா இல்லாமல் வேறு ஒருவர் அந்தப் பாத்திரத்தில் நடித்திருந்தால் நல்லாயிருந்திருக்கும் என அபிப்பிராயப்பட்டனர். ரேவதி மாதிரி புரிந்துணர்வுள்ள ஒரு மனைவி உண்மையில் இருக்கமுடியுமா என அதிசயப்பட்டனர். இருவர் படம் பற்றிய கதையும் வந்தது, அதனைத் தலைவியுடன் ஒப்பிட்டு எம் ஜி ஆர் – ஜெயலலிதா காதலை அலசினர். அப்படியே கதைத்தபடி இருவரும் நித்திரையாகிப் போயிருந்தனர். அடுத்த நாள் எழும்பியபோது ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு படுத்திருந்தனர். பாமதிக்கு மனம் இலேசாக இருந்தது.
“தப்பட் எண்டு ஒரு இந்திப் படம் வந்திருக்குப் பாத்தனியோ, நல்ல படம். பார்க்காவிட்டால் இரவைக்குப் பாக்கலாம்” எனத் தேவகி சொன்னாள். வேறு மொழிப்படம் எதுவும் பார்த்ததில்லை என அதை ஆவலாகப் பார்க்க ஆரம்பித்த பாமதிக்கு அரைவாசியில் அலுத்துவிட்டது. அவளால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. ஆனால், தேவகி அவளை வற்புறுத்திப் பார்க்கவைத்தாள்.
“ஒரு தடவை அடிச்சதுக்காக ஆரேனும் டிவோஸ் கேட்பினமோ? இதென்ன கதை, அதோடை அனேகமான ஆம்பிளையள் கூடாத ஆட்கள் எண்டெல்லோ காட்டுகினம்,” பாமதிக்கு மிகவும் கோபமாக இருந்தது. அது வெறும் அடி அல்ல, அவளின் சுயமதிப்புக்கு ஏற்பட்ட பாதிப்பு, அவன் அப்படி தன் மேலதிகாரியை அடிப்பானா என தேவகி வைத்த வாதத்துக்கு மனைவியிட்டைத்தானே இயல்பாக இருக்கலாமென பாமதி சொன்னபோது தேவகியால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நெருக்கமானவர்களுக்கு மேலும் மதிப்பளிக்க வேண்டியது அவசியமென அவள் வாதிட்டாள்.
ஒரே சூழலில், ஒருவரால் வளர்க்கப்பட்ட நாங்கள் எப்படி இப்படி வேறுபட்டுப் போனோம், அம்மா இருந்திருந்தால், அவ என்ன நினைத்திருப்பா என நினைத்தபோது பாமதிக்கு அழுகையே வந்துவிட்டது.
X X X
அன்றைய நிகழ்வின் பின்னர் பாமதியுடன் ஏதாவது கதைப்பதற்கு முன்பாக ஒரு தடவை யோசித்தபின்பே வாய்திறக்கவேண்டி இருக்கிறதென பாலாவிடம் சொல்லிக் குறைப்பட்டுக் கொண்டாள் தேவகி. அவளிடமிருந்து சற்று அந்நியப்பட்டிருப்பதாக தேவகி உணர்ந்தாள்.
அடுத்த இரண்டு வாரத்தில் பாமதி மீளவும் சிட்னி போகும் நாள் வந்தது. கார்வரை வந்த அனைவரும் பாமதியைக் கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டனர். அடுத்த முறை தாங்கள் சிட்னிக்கு வருவதாகச் சொல்லிக்கொண்டனர். அவர்களைத் தானும் கட்டியணைத்த பாமதி தேவகியின் காரின் முன் சீற்றில் வழமைபோல் ஏறிக்கொண்டாள்.
கார் ஏயர்போட்டைப் போய்ச்சேரும்வரைக்கும் தமிழ்ச் சினிமாப் பாட்டுக்கள் ஒன்றன்பின் ஒன்றாக அதற்குள் ஒலித்துக்கொண்டிருந்தன. அதன் பின்னணியில் இடையிடையே அவர்கள் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொண்டனர்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
- FeTNA (வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை) இன் 'அமெரிக்கக் கதைகள்’ சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை. அவர்களின் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. -