- முனைவர் வா. காருண்யா, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் - 641 042 & முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி , தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் - 641 042, -
ஆய்வுச்சுருக்கம்
விக்கிமூலம் எனும் திட்டத்தை 72 மொழிகள் பயன்படுத்திக்கொண்டு வருகின்றன. அவற்றுள் தமிழ் விக்கிமூலம் என்பது விக்கிமீடியா அறக்கட்டளைத் திட்டங்களுள் ஓர் இணைய நூலகத் திட்டமாகும். இது பகிர்வுரிமம் கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பாக விளங்கி வருகின்றது. இந்தத் திட்டத்தில் பங்களிக்க, யார் வேண்டும் என்றாலும் இணையலாம். அவர்கள் தங்கள் விருப்பப்படி நூல்களைப் பதிவேற்றலாம், திருத்தலாம். அதன் மேம்பாடு குறித்தும் கருத்துத் தெரிவிக்கலாம். இந்தத் தமிழ் விக்கிமூலத் திட்டத்தில் தமிழ் மொழிக்குரிய நூல்கள் மொத்தம் 2468 மேல் உள்ளன. இந்த நூல்களின் மொத்தப் பக்கங்கள் 3.5 இலக்கத்திற்கும் மேல் உள்ளன. இதில் சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம், வரலாறு, அறிவியல், மொழியியல், கலை, இலக்கணம், பயணம், வாழ்க்கை வரலாறு போன்ற பல்வேறு வகையான நூல்கள் உள்ளன. பழந்தமிழ் இலக்கியம் என்றழைக்கப்பெறும் தமிழின் தொன்மை இலக்கியங்களின் தரவாக்கங்களை விரல்விட்டு எண்ணிடலாம். அவற்றுள் நற்றிணை தொடர்பான நூல்கள் அல்லது மூலநூல் தரவுகள் வெறும் ஒன்று மட்டுமே உள்ளது கவனத்திற்குரியது. அந்தத் தரவு எதிலிருந்து எடுக்கப்பெற்ற மூலம் என்று அறிய முடியவில்லை. இருப்பினும் நற்றிணை சார்ந்த நூல்கள் இவ்வளவுதான் உள்ளனவா என்ற கேள்வியும் கூடவே எழும். அதற்கு என்ன பதில் தரப்போகின்றோம். அதன் மேம்பாடு குறித்து எண்ண வேண்டாமா? இந்த ஆய்வின் மூலம் விக்கிமூலத்தில் இடம்பெறக்கூடிய தன்மையுடைய கட்டற்ற உரிம நூல்களையாவது அடையாளம் கண்டு இணைக்கவேண்டியது காலத்தின் தேவையல்லவா? தன்னார்வலர்களின் கடமையல்லவா? அதை இந்த ஆய்வின் மூலம் எடுத்துரைக்கப்பெறும். அதற்கு அச்சுநிலைகளிலும் இன்னும் பிற நிலைகளிலும் உள்ள தரவுகளை ஓரளவிற்காகவாவது திரட்டிக் காட்டும் பொழுது அல்லது அடையாளப்படுத்திக் காட்டும் பொழுது இவ்வளவு விடுபாடு இந்த நூலிற்கு உள்ளமையை உணர வைக்கமுடியும். இதுபோன்ற ஆய்வுளால்தான் செய்யறிவிற்குத் தேவையான மொழிசார் தரவுகளைத் திரட்டித் தந்து மொழியறிவை மேம்படுத்தலாம். அந்தத் திரட்டல் செய்யறிவுத் தொழில்நுட்பத்திற்கோ இயற்கைமொழி ஆய்விற்கோ பயன்படும் தரவு உருவாக்கமாக மலரும். அது குறித்த புரிதலை இதன் மூலம் பெற இயலும். ஆகவே, விக்கிமூலத்தில் விடுபட்டுள்ள நற்றிணை சார்ந்த நூல்களின் பட்டியலைத் தமிழ் விக்கிமூலத்தில் இணைப்பது குறித்தும் அதன் தேவை குறித்தும் இவ்வாய்வுரை முன்வைக்கின்றது.
திறவுச் சொற்கள் (Keywords)
விக்கிமூலம், நற்றிணை, பதிப்பு, மூலம், உரை, Wikisource, Natrinai.
அறிமுகம்
விக்கிமூலத்தின் வழியாகத் தமிழ்மொழிக்கான இணையவாசல் திறந்துள்ளது. இதில் தமிழ்மொழியின் தரவுகளை மேம்படுத்துவதுதான் தமிழாய்வர்கள், தமிழார்வலர்களின் கடமையும் பணியுமாகும். ஏனெனில் தொல்காப்பியம் தொடங்கி பல்வேறு இலக்கியங்களைக் காலங்காலமாக எப்படிப் பாதுகாத்து வந்தார்களோ, அப்படி இன்று இணைய வளாகத்தில் பாதுகாக்க வேண்டியது நம் கடமையாகும். அதனை முன்னிறுத்தியும் தமிழ் இலக்கிய வரலாற்றின் அடிப்படையிலும் நற்றிணையின் தரவுகளை விக்கிமூலத்தில் பதிவேற்ற வேண்டிய வழிமுறைகளை இந்த ஆய்வு முதன்மை நோக்கமாகக் கொண்டு ஆராய்கின்றது.
நற்றிணையின் சிறப்புகள்
நற்றிணை என்பது சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகும். இது அகப்பொருள் பற்றிய பாடல்களின் தொகுப்பாகும். நற்றிணையில் 9 அடி முதல் 12 அடிகள் வரையிலான 400 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 234-ஆவது பாடல் கிடைக்கவில்லை [15].
அகப்பொருள் இலக்கியத்தின் முக்கிய நூல்
காதலின் பல்வேறு நிலைகளை அழகாகச் சித்தரித்தது
உவமை, உள்ளுறை, இறைச்சிப் பொருள் போன்ற இலக்கியச் சிறப்புகள் நிறைந்தது
அக்காலச் சமூகத்தை அறிய உதவும் ஓர் வரலாற்று ஆவணம் [15]
நற்றிணையில் காதல்
நற்றிணை பாடல்கள் அனைத்தும் அகப்பொருள் பற்றியவை என்பதால், அவைகளில் காதல் பற்றிய கருத்துக்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளன. நல்லிசைப் பாவலர்கள் தங்கள் திறமையால் காதல் உணர்வின் பல்வேறு நிலைகளை அழகாகச் சித்தரித்துள்ளனர் [15].
காதலின் தொடக்க நிலை
நற்றிணை பாடல்களில் காதலின் தொடக்க நிலையான வசந்தம் பற்றிய பாடல்கள் அதிகம் காணப்படுகின்றன. காதலர் ஒருவரை ஒருவர் பார்த்து விரும்பும் நிலை, காதலர் ஒருவரை ஒருவர் நினைத்துத் தவிக்கும் நிலை, காதலர் ஒருவரை ஒருவர் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கும் நிலை போன்றவை இப்பாடல்களில் பதிவாகியுள்ளன [15].
காதலின் வளர்ச்சி நிலை
காதலின் வளர்ச்சி நிலையான பிரிவு பற்றிய பாடல்களும் நற்றிணையில் இடம்பெற்றுள்ளன. காதலர்கள் ஒருவரை ஒருவர் பிரியும் நிலை, பிரிவால் காதலர்கள் துன்பப்படும் நிலை, பிரிவால் காதலர்கள் ஒருவரை ஒருவர் எண்ணி வருந்தும் நிலை போன்றவை இப்பாடல்களில் பதிவாகியுள்ளன [15].
காதலின் நிறைவு நிலை
காதலின் நிறைவு நிலையான கூடுதல் பற்றிய பாடல்களும் நற்றிணையில் இடம்பெற்றுள்ளன. காதலர்கள் ஒருவரை ஒருவர் சேரும் நிலை, சேர்ந்த பிறகு காதலர்கள் ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்தும் நிலை, சேர்ந்த பிறகு காதலர்கள் வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை போன்றவை இப்பாடல்களில் பதிவாகியுள்ளன [15].
நற்றிணையின் இலக்கியச் சிறப்புகள்
நற்றிணை பாடல்கள் உவமை, உள்ளுறை, இறைச்சிப் பொருள் போன்ற இலக்கியச் சிறப்புகள் நிறைந்தவை [15].
உவமை
நற்றிணை பாடல்களில் உவமைகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. காதலின் அழகைப் பறவைகள், மலர்கள், நிலவு, நட்சத்திரங்கள் போன்றவற்றுடன் ஒப்பிட்டு உவமைகள் அமைத்துள்ளனர் [15].
உள்ளுறை
உள்ளுறை என்பது ஒரு பொருளின் மூலம் மற்றொரு பொருளை உணர்த்துவது ஆகும். நற்றிணை பாடல்களில் உள்ளுறைகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. காதலின் உணர்வை மலர்கள், பறவைகள், நிலவு, நட்சத்திரங்கள் போன்றவற்றின் மூலம் உள்ளுறைகள் அமைத்துள்ளனர் [15].
இறைச்சிப் பொருள்
இறைச்சிப் பொருள் என்பது ஒரு பொருளின் சுவை, வடிவம், நிறம் போன்றவற்றை உணர்த்துவது ஆகும். நற்றிணை பாடல்களில் இறைச்சிப் பொருள்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. காதலின் உணர்வை மலர்கள், பறவைகள், நிலவு, நட்சத்திரங்கள் போன்றவற்றின் சுவை, வடிவம், நிறம் போன்றவற்றின் மூலம் இறைச்சிப் பொருள்கள் அமைத்துள்ளனர் [15].
இத்தகுச் சிறப்புமிகு நற்றிணை இலக்கியத்தை மேம்படுத்துவது காலத்தின் கட்டாயம். இதனை நாம் இன்னும் உணரவே, உணர்த்தவே கூகுள் பார்டு தரும் நற்றிணை குறித்த மேல் பதிவுகள் இங்குத் தரப்பெற்றன. இன்னும் நற்றிணையின் ஓலைச்சுவடிகள் எனும் ஒரு குறிப்பையும் கூகுள் பார்டில் தேடினால் அது தரும் விளக்கத்தையும் அது பின்வருமாறு அமைகின்றது.
கூகுள் பார்டு விளக்கத்தில் நற்றிணையின் ஓலைச்சுவடிகள் - குறிப்புகள்
நற்றிணை நூலின் ஓலைச்சுவடிகள் பல இடங்களில் காணப்படுகின்றன. அவற்றில் சில:
கல்வி நிலையங்கள்
சென்னைப் பல்கலைக்கழக நூலகம்
மதுரை காமராசர் பல்கலைக்கழக நூலகம்
திருச்சி பல்கலைக்கழக நூலகம்
மதுரை தமிழ்ச் சங்கம் நூலகம்
கோயில்கள்
திருவாரூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் நூலகம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நூலகம்
திருநெல்வேலி வடமலையார் கோயில் நூலகம்
தனியார் சேகரிப்புகள்
நற்றிணை ஓலைச்சுவடிகளின் சிறப்புகள்
அவைகள் சங்க காலத்தில் எழுதப்பட்டவை என்பதற்கான சான்றுகள் ஆகும்.
அவைகள் சங்க இலக்கியத்தின் உண்மையான தன்மையை அறிய உதவும் ஓர் முக்கிய ஆவணம் ஆகும்.
அவைகள் தமிழ் மொழியின் பழமையையும் வளமையையும் எடுத்துக்காட்டும் ஓர் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
நற்றிணை ஓலைச்சுவடிகளின் பாதுகாப்பு
நற்றிணை ஓலைச்சுவடிகள் மிகவும் அரிய மற்றும் மதிப்புமிக்கவை. அவற்றின் பாதுகாப்பு மிகவும் அவசியம். அவற்றை நன்கு பாதுகாக்க, பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன:
அவைகள் சீராகப் பராமரிக்கப்படுகின்றன.
அவைகள் அணுகுமுறையற்ற இடங்களில் வைக்கப்படுகின்றன.
அவைகள் எப்போதும் கண்காணிக்கப்படுகின்றன.
நற்றிணை ஓலைச்சுவடிகள் தமிழ் இலக்கியத்தின் ஒரு முக்கிய சொத்து. அவற்றின் பாதுகாப்பு என்பது தமிழ் மொழியின் பாதுகாப்பிற்கும் முக்கியமானது [15].
இணையத்தளங்களில் நற்றிணை
அச்சு வடிவில் இருப்பது போல் நற்றிணை நூலானது இணையத்தில் எந்தவொரு தளத்திலும் இல்லை என்பதுதான் இந்தக் கட்டுரை எழுதுகையில் நேர்ந்த உண்மை. நற்றிணைக்கு நேரடியாக இணையத்தில் எழுதிய எளிய உரை [6], மொழிபெயர்ப்போடு கூடிய அருஞ்சொற்பொருள் உரைகள் [7] இணையத்தில் உள்ளன. தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் பின்னத்தூராரின் உரை தட்டச்சு வடிவில் உள்ளது [8]. நற்றிணை மூலம் மட்டும் கூற்றுக் குறிப்புகள், புலவர் பெயரோடு தட்டச்சு வடிவில் பல்வேறு இணையதளங்களில் [9] உள்ளன. ஆனால் விக்கிமூலத்தில் 12 பாடல்களுக்கு மட்டுமே இருக்கிறது [10].
நற்றிணைக்கு மட்டும் அல்லாது எட்டுத்தொகை நூல்களுள் குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல் ஆகியனவும் பழந்தமிழ் செவ்வியல் நூல்களும், அதற்குப் பின்னான இலக்கண, இலக்கியங்களும் விக்கமூலத்தில் ஒருசிலவே உள்ளன. இந்நூல்களை விக்கிமூலத்தில் ஏற்றி வைப்பது என்பது தமிழின் அடுத்தகட்ட நகர்வாக அமையும். சுவடியில் இருந்து அச்சுக்கு வந்து அச்சில் இருந்து உலகளாவிய இணையத்திற்குத் தமிழைக் கொண்டுசெல்லும் பணி இதுவாகும்.
நற்றிணைப் பதிப்புரைகள், உரைகள்
நற்றிணைக்கு உரை எழுதியோரில் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர், உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிப் பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்கோர் ஆவர். பின்னத்தூராரின் உரை 1915ஆம் ஆண்டில் வெளிவந்தது. விடுதலைக்கு முன்பு வந்த இந்நூலை விக்கிமூலத்தில் இருக்கச் செய்வது நற்றிணையை அரும்பாடுபட்டு அச்சில் ஏற்றியதோடு, அந்நூலுக்குச் சிறந்த உரை எழுதிய பின்னத்தூராருக்கு செய்யும் கைமாறாகும்.
உரைவேந்தர் என்னும் சிறப்பைப் பெற்ற ஔவை சு. துரைசாமி நற்றிணை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, புறநானுறு உள்ளிட்ட பல்வேறு நூல்களுக்கு விரிவான உரை எழுதியுள்ளார். இவர் நூல்கள் நாட்டுடைம ஆக்கப்பட்டனவாகும். இவரது உரையில் நற்றிணைப் பாடலின் சூழலை முதலில் ஒரு கதைபோல் சொல்லியிருப்பார்.
சங்க இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு உள்ளிட்ட பல்வேறு பழந்தமிழ் நூல்களுக்கு முன்னவர்களின் உரைகளைத் தழுவி உரை எழுதியுள்ளவர் புலியூர்க்கேசிகன். இவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பெற்ற நூல்களின் வரிசையில் வருவனவாகும்.
இவர்கள் மூவரின் நூல்களுள் புலியூர்க்கேசிகனின் உரைநூல்கள் விக்கிமூலத்தில் உள்ளன. பிற இருவரின் உரைநூல்களை விக்கிமூலத்தில் பதிவேற்றலாம். இப்பணி இணையத்தில் நற்றிணையைக் குறித்த தரவுகளை மேம்பாடடையச் செய்யும். ஏனெனில் இவர்கள் உரைகளில் பல்வேறு தனித்தன்மைகள் இருக்கின்றன.
பின்னத்தூரார் உரை: நற்றிணைக் களஞ்சியம்
பின்னத்தூராரின் நற்றிணைப் பதிப்புரை என்பது அந்நூலுக்குரிய ஒரு கலைக்களஞ்சியம் போன்றதாகும். இவ்வுரையில் புலவர்கள், உள்ளுறை, இறைச்சி, மெய்ப்பாடு, பயன், கூற்றுக் குறிப்பு, கூற்று விளக்கம், அருஞ்சொற்பொருள் என்று நற்றிணைப் பாடல்களின் செய்திகளைத் தனித்தனியே எடுத்து, உரை அர்ப்பணிப்புடன் கொடுத்திருப்பார். இவரது உரைநூல் என்றென்றும் காக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதற்கு விக்கிமூலம் சிறந்த இருப்பிடமாகும். நற்றிணைத் தரவு மேம்பாட்டிற்கு இந்நூல் அடிப்படையானதாகும்.
உரைவேந்தர் உரை : ஊர்ப்பெயர், கல்வெட்டுக் களஞ்சியம்
உரைவேந்தரின் உரையில் வரலாற்றுச் செய்திகள், புலவர்களின் ஊர்கள், பாடலில் பயின்றுள்ள ஊர்கள் பற்றிக் கல்வெட்டுச் சான்றுகளோடு பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளன. நற்றிணையோடு தொடர்புடைய பழங்காலத் தமிழ் மக்கள் பெயர்கள், ஊர்ப்யெர்கள் ஏதேனும் கல்வெட்டில் இடம்பெற்றிருந்தால் அதனை உரிய சான்றுகளோடு அவர் எடுத்துக்காட்டியுள்ளார். இத்தகைய உரை விக்கிமூலத்தில் இருப்பது என்பது நற்றிணைக்கு மட்டும் அல்லாமல் இடப்பெயர், மக்கள் பெயர்கள் மீதான ஆர்வம் உடையோருக்கும் பயன் அளிப்பதாகும்.
விக்கிமூலத்தில் இவர் நூலை ஏற்றுகையில் இடப்பெயர், ஊர்ப்பெயர், மக்கட் பெயர்களுக்குச் சுட்டிகள் (click option) கொடுக்கையில் நற்றிணைத் தரவோடு தமிழ்த் தரவும் மேம்பாடு அடையும்.
புலியூர்க் கேசிகன் உரை : 20ஆம் நூற்றாண்டு மொழிநடை
முதலிருவரின் உரையில் இருந்து மாறுபட்டு 20ஆம் நூற்றாண்டு மொழிநடையில் கேசிகனின் உரைநூல் அமைந்திருக்கும். மேலும் பாடலின் தொடக்கத்தில் அப்பாடலில் இடம்பெற்றிருக்கும் சிறப்புச் செய்திகளை அறிமுக நிலையில் அமைந்திருக்கும். சீர் பிரித்துப் பாடல்கள் அமைக்கப்பெற்றிருக்கும்.
மர்ரே பதிப்பு : நற்றிணை மூலம் மட்டும்
“1957இல் பதிப்பிக்கப்பெற்ற இந்நற்றிணைப் பதிப்பானது மர்ரே எஸ். ராஜம் அவர்களால் வையாபுரிப்பிள்ளை முதலானோர் அடங்கிய பதிப்பாசிரியர் குழுவினை அமைத்துப் பல பிரதிகளை ஒப்புநோக்கிப் பதிப்பிக்கப் பெற்றதாகும்.” [11] இப்பதிப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்தோருள் ஒருவராக வையாபுரியார் பணியாற்றினார். இப்பதிப்பில் யாப்பு பின்பற்றப்படவில்லை. எளிதாகப் படிக்கும் வகையிலான சொல் பிரிப்புக்கு முதன்மை அளிக்கப்பட்டுள்ளது. நிறுத்தக் குறியீடுகள் தேவைப்படும் இடங்களில் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே நற்றிணைப் பாடல்களை எளிதாகப் படிக்கும் வகையில் இப்பதிப்பைப் பதிவேற்றுவது பயன்கொடுக்கும்.
பெருமழைப் புலவர் உரை
21ஆம் நூற்றாண்டு உரையாசிரியர்களுள் குறிப்பிடத்தக்கவர் பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார். சங்க இலக்கிய நூல்களுக்கு விரிவான உரையை தற்கால மொழிநடையில் எழுதியவர். இவர் பின்னத்தூராரின் உரைநூலில் தேவைப்படும் இடங்களில் விளக்கங்களைச் சேர்த்துக் கொடுத்தார். இந்நூலை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டது. பெருமழைப் புலவரின் நூல்களை நாட்டுடைமை ஆக்கவேண்டும் என்ற எண்ணமும் கோரிக்கையும் தற்போது முன்வைக்கப்பட்டு வருகிறது. அது நிறைவேறினால் இந்நூலையும் விக்கிமூலத்தில் தரவேற்றலாம்.
இலக்கியப் புதையல் : நற்றிணை விருந்து
பதிப்புரை, உரைநூல், மூலம் மட்டும் என்று இல்லாமல் நற்றிணையில் உள்ள செய்திகளைக் கட்டுரை வடிவில் திரட்டித் தரும் நூலாக நற்றிணை விருந்து எனும் நூல் உள்ளது. கா. கோவிந்தன் எழுதிய இந்நூல் நாட்டுடைமை நூல்களில் அடங்கும். இந்நூலுக்கு விக்கிமூலத்தில் தட்டச்சு முடிந்த நிலையில் மெய்ப்புப் பார்க்கும் பணி எஞ்சி உள்ளது [12].
விக்கிமூலத்தில் நற்றிணை
நற்றிணையைப் பொறுத்தவரை விக்கிமூலத்தில் ஐந்து நூல்கள் உள்ளன. அவற்றில் நான்கு மூலநூலுடன் உள்ளன. மற்றொன்று தட்டச்சு எழுத்தாவண நிலையில் மட்டும் உள்ளது. அதற்குரிய மூலம் இல்லை [13]. திசம்பர் 30, 2023 நாளில்தான் ஐந்து நூல்கள் இருப்பதைக் கண்டறிந்து நற்றிணை எனும் பகுப்பு இடப்பெற்றுள்ளது [14]. இருப்பினும் இன்னும் பதிவேற்றம் தேவைப்படுகின்றது என்பதை மேற்கண்ட குறிப்புகள் வழியே அறிந்துகொண்டிருப்போம். இனி உள்ள, உருவாக்க இருக்கும் நூல்களை மேம்படுத்தும் வழிமுறைகளைப் பற்றிப் பார்ப்போம்.
நற்றிணை அட்டவணை மேம்பாடு
நற்றிணை சார்ந்து எழுதப்பெற்ற ஆவணங்கள் அச்சு நூல்களிலேயே முடங்கிவிடக் கூடாது எனும் வழிப்புணர்வையும் இங்கு அறிவுறத்தப்பெறுகின்றது.
நற்றிணை அட்டவணை கொண்டிருக்க வேண்டிய உள்ளடக்கங்களைப் பின்வருமாறு கட்டமைக்கலாம்.
ஓலைச்சுவடிகளில் நற்றிணை
மூல நூற்சுவடிகள்
உரை நூற்சுவடிகள்
அச்சு நூல்களில் நற்றிணை
மூலநூல்
உரைநூல்
பழைய உரைகள்
உரைவளம்
தற்கால உரைகள்
ஆய்வுநூல்
இந்திய மொழி ஒப்பீடு-ஒப்பாய்வு
அயல்மொழிமொழி ஒப்பீடு - ஒப்பாய்வு
திராவிட மொழி ஒப்பீடு-ஒப்பாய்வு
தமிழ் இலக்கிய, இலக்கணங்களுக்கிடையே ஒப்பீடு-ஒப்பாய்வு
மொழியாக்கம்
இவ்வாறான வகைப்பாடு காலத்திற்கு ஏற்றதாகும். இதன்படி சிறு முயற்சியைப் பின்வருமாறு பகுத்துப் பார்க்கலாம். இருப்பினும் மு.வ. அவர்களின் வகைப்படுத்தல் முறையையும் இங்கு நினைவில் வைத்துக்கொள்வது நல்லது. அவர் தரும் விளக்கம் வருமாறு;-
''தமிழ் இலக்கிய வரலாற்றைப் பல வகையாகப் பாகுபாடு செய்வது உண்டு தமிழ் இலக்கியம் பற்றிப் பிறமொழியார் அறிந்து கொள்வதற்கு ஏற்ற வகையில், பின்வரும் பாகுபாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பழங்காலம்
சங்க இலக்கியம்: கி.மு.500 முதல் கி.பி 200 வரையில் அகம் புறம் பற்றிய பாட்டுகள்.
நீதி இலக்கியம்: கி.பி. 100 முதல் கி.பி. 500 வரையில் திருக்குறள் முதலிய நீதிநூல்கள், கார்நாற்பது முதலிய வெண்பா முத்தொள்ளாயிரம் நூல்கள்
இரட்டைக் காப்பியங்கள்:கி.பி 100-500
சிலப்பதிகாரம், மணிமேகலை. முதலியன.
இடைக்காலம்:
பக்தி இலக்கியம்: கி.பி. 600முதல் 900 வரையில் நாயன்மார் ஆழ்வார் பாடல்கள்.
பலவகைகள் நூல்கள்: கி.பி. 700-1300
காப்பியங்கள்: கி.பி.500 முதல் 1200 பெருங்கதை, சீவக சிந்தாமணி, முதலிய சமணபௌத்த நூல்கள் டசேக்கிழார், கம்பர், ஒட்டக்கூத்தர், ஒளவையார் முதலியவர்கள் உலா பரணி பிள்ளைத் தமிழ்.
இறையனார் களவியல் முதலிய இலக்கண நூல்கள்
உரைநூல்கள்: கி.பி. 1200 முதல் 1500 வரையில் இளம்பூரணர். பேராசிரியர் முதலியவர்கள்.
வைணவ விளக்க நூல்கள், சைவசித்தாந்த சாத்திர நூல்கள், சிறு நூல்கள், தனிப்பாடல்கள்
புராண இலக்கியம்: கி.பி. 1500 முதல் 1800 வரையில் புராணங்கள், தலபுராணங்கள் இஸ்லாமிய இலக்கியம், கிறிஸ்தவர் வீரமாமுனிவர் முதலானவர்கள் உரைநடை வளர்ச்சி.
பத்தொன்பதாம் நூற்றாண்டு
கிறிஸ்தவ இலக்கியம். இராமலிங்கர், வேதநாயகர் முதலியவர்கள், நாவல் வளர்ச்சி, கட்டுரை வளர்ச்சி.
இக்காலம்
இருபதாம் நூற்றாண்டு:
பாரதி, கல்கி, புதுமைப்பித்தன், சிறுகதை, நாவல்,நாடகம் வாழ்க்கை வரலாறு, கட்டுரை ஆராய்ச்சி முதலானவை'' [19].
இந்தக் குறிப்பு இலக்கிய வரலாற்றுக்கு ஏற்புடையது என்றாலும், நூலக அமைப்பிற்கு எனச் சில வரையறைகளையும் நாம் நினைவில் வைத்துக்கொண்டு பகுத்தல் இன்னும் சிறப்பு.
நற்றிணை நூல் மேம்பாட்டினால் ஏற்படும் விளைவுகள்
விக்கிமூலம் கல்விசார் வளங்களை மேம்படுத்தி வரும் கட்டற்ற தளமாக இருப்பதனால் தமிழில் இயற்கை மொழி சார்ந்த ஆய்வுகள் [2] [3] [4] [5] நிகழ்வதற்குப் பெருந்துணை நல்கும். அவ்வாய்வு மட்டுமின்றி உலகப் பல்கலைக்கழக ஆய்வாளர்களும் ஆய்வுகள் நிகழ்த்த இத்தளம் ஒரு நூலகமாகவும் செயல்படும். மேலும் இதனால் விளையும் பயன்களை,
நற்றிணை ஆய்வுகள் தொடர்ந்து பலமுறைகளில் நிகழ
இந்திய மொழிகளின் ஒப்பிலக்கிய ஆய்வுகள் எளிதில் நடைபெற
உலக மொழிகளின் ஒப்பிலக்கிய ஆய்வுகள் எளிதில் நடைபெற
இயற்கை மொழி ஆய்வுகளுக்கான தரவுகள் கிடைத்திட
விக்சனரி திட்டங்களில் நற்றிணைச் சொற்களை ஏற்படுத்த
விக்கித்தரவில் சேர்க்க
விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் உருவாக்க
நற்றிணை தகவல் பெறுவி கருவியை உருவாக்க
நற்றிணை குறித்த மென்பொருள் உருவாக்க
நற்றிணை கற்றல் கற்பித்தல் கருவிகளை வடிவமைக்க
என அறியலாம்.
முடிவுரை
பழந்தமிழ் இலக்கியங்கள் தமிழின் பழஞ்சொற் களஞ்சியமாகும். அவற்றை ஈராயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகளில் படையெடுப்புகள், பண்பாட்டு அழிப்புகள் செல்லரிப்புகளில் இருந்து காத்து, காப்பாற்றித் தந்துள்ளனர். அவற்றை இணையத்தில், குறிப்பாக விக்கிமூலத்தில் ஏற்றுவது என்பது அவற்றின் காப்புப் பெட்டகமாகும். அதற்கு இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள மேற்காண் நூல்களை ஏற்றி வைப்பதன் வழியாக நற்றிணைத் தரவு மேம்படும்.
ஆகையால் இதுவரை விளக்கப்பெற்றதின் அடிப்படையில் பார்க்கும் பொழுது ஆங்காங்கு நடைபெறும் நற்றிணை ஆய்வுகளை ஓரிடத்தில் குவித்து வைக்கும் ஒரு கருவூல நூலகமாகத் தமிழ் விக்கிமூலம் அமையும் என்பதை உணர முடிகின்றது. இது நடக்கும்பொழுது 72 விக்கிமூலத் திட்டங்களுக்கெல்லாம் முன்னோடித் திட்டமாகத் தமிழ் விக்கிமூலத்திட்டம் அமையும் என்பதையும் தமிழ் இலக்கிய வரலாற்று அடிப்படையில் விக்கிமூலம் திட்டம் மேம்படும் என்பதையும் முடிபாகக் கொள்கின்றது.
துணைநிற்பவை
1. நற்றிணை. (2023, அக்டோபர் 3). விக்கிமூலம். Retrieved 00:43, நவம்பர் 10, 2023 from https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88&oldid=1526121.
2. முனைவர் த.சத்தியராஜ், தகவலுழவன், 17 அக்டோபர் 2022, விக்கிமூலமும் தமிழ் இயற்கை மொழி ஆய்வுகளும், கோயமுத்தூர்: இனம் பதிப்பகம்.
3. முனைவர் த.சத்தியராஜ், முனைவர் ரா.நித்யா, தகவலுழவன், 17 அக்டோபர் 2023, விக்கித்திட்டங்களில் பைத்தான் பயன்பாடு, கோயமுத்தூர் : இனம் பதிப்பகம்.
4. முனைவர் த.சத்தியராஜ், 2022, தமிழ் விக்கிமூலத்தில் குறுந்தொகைத் தரவு மேம்பாடு (E-content development for Kurunthogai resource in ta.Wikisource) Kalviyiyal Maanaaddu Aaivu Kovai 2021, Thoguthi-2.
5.Subalalitha Chinnaudayar Navaneethakrishnan, Sathiyaraj Thangasamy, Nithya R, Info-farmer, Neechalkaran, 2022, Exploring the Opportunities and Challenges in Contributing to Tamil Wikimedia International Conference on Speech and Language Technologies for Low-resource Languages.
6.http://sangacholai.in/8.1.html
7.https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/;
8.https://sangamtranslationsbyvaidehi.com/natrinai-2-2/
9.https://www.tamilvu.org/ta/library-l1210-html-l1210ind-122233
10.http://www.sangathamizh.com/8thokai/8thokai-natrinai-நற்றிணை.html
11.https://www.tamilsurangam.in/literatures/ettuthogai/narrinai/index.html
12.https://ilakkiyam.com/iyal/3680-narrinai
13.https://ta.wikisource.org/wiki/நற்றிணை (12 பாடல்கள் மட்டும்)
14r.க. பாலாஜி, நற்றிணை – பதிப்பு வரலாறு (1915 – 2010), ப. 26
15.https://ta.wikisource.org/wiki/அட்டவணை:இலக்கியப்_புதையல்-1_நற்றிணை_விருந்து.pdf
16. பகுப்பு:மூலநூல் அட்டவணை இல்லா மின்னூல்கள் https://ta.wikisource.org/s/b5le
17. பகுப்பு:நற்றிணை, https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88
18.https://bard.google.com/u/3/chat/d3ea98e1c50be21f
19. வரதராசன் மு., தமிழ் இலக்கிய வரலாறு, சாகித்திய அகாதெமி, புதுதில்லி. (2012), பக்.28-29.
முனைவர் வா. காருண்யா - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.