பாரிஸ் மாநகரில் 51 -வது இலக்கியச் சந்திப்பு கடந்த சனி - ஞாயிறு (30 - 31 மார்ச் 2024) தினங்களில் சிறப்பாக நடைப்பெற்றது. புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள படைப்பாளிகள், இலக்கிய இரசிகர்கள், ஆர்வலர்களால் பல வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இலக்கியச் சந்திப்பு நிகழ்வுகள் ஐரோப்பாவில் ஜேர்மனி, பிரான்ஸ், லண்டன், டென்மார்க், நோர்வேஇ சுவிஸ் மற்றும் கனடாஇ இலங்கை எனப் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து நடைபெற்றுவந்தன. கொரோனாக் காலத்தில் மட்டும் இலக்கியச் சந்திப்பு தடைப்பட்டிருந்தது. கடந்த வருடம் 50 -வது இலக்கியச் சந்திப்பு அனலைதீவில் நடைபெற்றது.
இலக்கியச் சந்திப்புக்கென நிரந்தர நிர்வாகக் குழு இல்லை. ஒவ்வொரு நாட்டிலும் இதனை நடத்துவதற்கெனப் பொறுப்பேற்றுக்கொள்பவர்கள் தங்களுக்குள் ஒரு குழுவை அமைத்து இலக்கியச் சந்திப்புக்கான ஒழுங்குகளை மேற்கொள்வது வழமை. அந்த வகையில் 51 -வது இலக்கியச் சந்திப்பு பாரிஸ் மாநகரில் நடைபெறச் சிறப்பான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.
சனிக்கிழமை காலை (30 - 03 - 2024) பங்கேற்பாளர்களின் தன்னறிமுகத்துடன் நிகழ்வு ஆரம்பமானது. விஜியின் தொடக்கவுரையைத் தொடர்ந்து சிற்றிதழ்கள் அறிமுகம் இடம்பெற்றது. தில்லைநடேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 'காலம்" சஞ்சிகை குறித்து டானியல் ஜெயந்தன், 'ஜீவநதி" குறித்து மாதவி, 'மறுகா" குறித்து அகரன், 'வளர்" குறித்து அசுரா ஆகியோர் அறிமுக உரைகளை நிகழ்த்தினர்.
அடுத்ததாக 51 -வது இலக்கியச் சந்திப்பு கதைமலர் 'இமிழ்" வெளியிடப்பட்டது. பிற்பகல் 'மலையக இன அடையாளம் பற்றிய பன்முகப் போக்கும் நோக்கும்" என்ற பொருளில் குணரட்ணராஜா தலைமையில் என். சரவணன் உரையாற்றினார். தொடர்ந்து அரவிந்த் அப்பாத்துரை தலைமையில் 'தமிழ் - பிரெஞ்சு மொழிபெயர்ப்பு இலக்கியங்கள்" என்னும் தலைப்பில் லெற்றிஷியா இபானேஸ் (பிரெஞ்சுப் பெண்மணி) சிறந்த உரை வழங்கினார்.
"இரு சகாப்தங்களுக்கு மேலான LGBTQ (திருநங்கைகள்) குறித்த தமிழிலக்கிய முன்வைப்புகளும் அதுசார் சிக்கல்பாடுகளும்" என்னும் பொருளில் விஜயன் தலைமையில் ஹரி ராஜலட்சுமி உரையாற்றினார். 'சமகாலத்தில் இலங்கை இன முரண்பாடுகளின் திசை" என்னும் பொருளில் றஷ்மி தலைமையில் ராகவன் உரையாற்றினார். தொடர்ந்து MADE IN SRI LANKA என்ற தனி நடிப்பு ஆற்றுகையை வி. பாஸ்கர் சிறப்பாக வழங்கினார்.
ஞாயிற்றுக்கிழமை காலை நூல்கள் அறிமுக நிகழ்வு தர்மு பிரசாத் தலைமையில் ஆரம்பமானது. 'நினைவு மறந்த கதை" நூல் குறித்து கலா சிறிரஞ்சன், 'சற்றே பெரிய கதைகளின் புத்தகம்" குறித்து நெற்கொழுதாசன், 'ஓய்வு பெற்ற ஒற்றன்" குறித்து வானிலாஇ 'வயல் மாதா" குறித்து நவமகன் ஆகியோர் அறிமுக உரைகளை வழங்கினர்;.
கே. டானியலின் 'சாநிழல்" நாவல் குறித்து வி. ரி. இளங்கோவன் உரை நிகழ்த்தினர். இந்நாவலின் அறிமுக நிகழ்வுகள் அண்மையில் யாழ்ப்பாணம், சென்னை, தஞ்சாவூர், கனடா - ரொறன்ரோ ஆகிய இடங்களில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
தொடந்து 'பாலியல் சுரண்டல் - எதிர்கொள்ளலும் பொறுப்புக்கூறலும்" என்னும் பொருளில் விஜி தலைமையில் உமா உரையாற்றினார். பிற்பகல் 'போரும் ஏகாதிபத்தியமும்" என்னும் தலைப்பில் உதயகுமார் தலைமையில் நிர்மலா ராஜசிங்கம், கலையரசன் ஆகியோர் உரையாற்றினர்.
தொடர்ந்து எம். ஆர். ஸ்ராலின் தலைமையில் 'தமிழ் இனப்புல இயக்கவியல் (கோலாம்பூர் - சிங்கப்பூர் - பாரிஸ்)" என்னும் பொருளில் டெலோன் மாதவன் உரையாற்றினார். 'இலங்கையில் சாதியம் - கள அனுபவம்" என்னும் தலைப்பில் துரைசிங்கம் தலைமையில் தேவதாசன் உரை நிகழ்த்தினார். நிறைவாக 51 -வது இலக்கியச் சந்திப்பின் கணக்கு விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. 52 -வது இலக்கியச் சந்திப்பினை சுவிஸ் நாட்டில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.
சுவிஸ், லண்டன், ஜேர்மனி, நெதர்லாந்து, டென்மார்க்இ நோர்வே நாடுகளிலிருந்து வந்த பலர் இலக்கியச் சந்திப்பில் இரு நாட்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. இரு நாட்களும் உணவும் வழங்கப்பட்டது. மாற்றுக் கருத்தாக்கம், மக்கள் சார்ந்த கருத்து, விவாதங்கள், உடன்பாடுகள், முரண்பாடுகள, சர்ச்சைகள், கேள்விகள், காரசாரமான உரையாடல்கள், சிறந்த உரைகள் எல்லாமே இடம்பெற்றாலும் தோழமையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவெய்தின.