உலக நூல் நாளில் ஒரு நூலினைப் படித்திட வேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்ற ஏதுவாக அமைந்தது 'பேரிகை' என்ற நூல். ஈழமங்கை மு.நவகீதா இன் முதலாவது படைப்பாக 'பேரிகை' என்ற நூல் ஏப்ரல் 20, 2024 சனிக்கிழமை கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய 'நூல்களின் சங்கமம்' நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. அன்றைய நாளில் வெளியிடப்பட்ட 15 நூல்களில் இந்த நூலும் இடம்பெற்றது. ஈழப் பெண்களின் வரலாற்றுப் பதிவாக உருவான சின்னஞ் சிறிய நூலாக 'பேரிகை' என்ற நூல் இருந்தது. வானொலி நிகழ்ச்சி அறிவிப்பாளராக, மேடை நிகழ்ச்சிகளில் சிறப்பாக நெறியாளுகை செய்பவராக மட்டுமே அறிமுகமான நவகீதா இப்பொழுது நூலாசிரியராக அறிமுகமாயுள்ளார். நூலில் காணப்படும் 'என்னுரை' மூலம் அவரது கல்விப் பின்புலம், தாய்மண்ணுடன் ஒன்றிய அவரின் மனவுணர்வு பற்றியெல்லாம் அறியும் வாய்ப்பையும் பேரிகை என்ற நூல் அறியத்தந்தது.
சிலநாட்களுக்குள் உருவாகிய நூலாக இருந்தாலும், அளவில் சிறிய நூலாக இருந்தாலும் சிறப்பான நூலாக நூலாசிரியர் எழுதியுள்ளார். வீரமிகு ஈழமங்கைகள் சிலரின் விபரங்களை அழகான, எளிமையான நடையில் தேடலுடன், நுண்ணிய பார்வையும் மேலிடத் தந்துள்ளார் நவகீதா.
நாங்கள் அனைவரும் அரிய பணிகளைச் செய்தால் புதிய எழுத்தாளர்களை உருவாக்கலாம் என்ற செய்தியை 'பேரிகை' சுட்டி நிற்கிறது.
இந்த நூலில் அரியாத்தை, குருவிச்சி நாச்சியார், தங்கம்மா அப்புக்குட்டி, மங்களம்மா மாசிலாமணி, அன்னை பூபதி போன்ற ஈழமங்கைகளின் பெருமைகளை 'பேரிகை' காவிநிற்கிறது.
நூலிற்கான தலைப்பு 'பேரிகை' யாக அமைவதற்கு இந்த நூலில் உள்ள 'பேரிகை' என்ற கட்டுரை காரணமாகியது எனலாம். 'பேரிகை' என்ற தமிழரின் வாத்தியக் கருவிமேல் இவர் கொண்ட பிரியமும் காரணமாகி இருக்கலாம்.
நூலிற்கான 'என்னுரை', பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்களின் வாழ்த்துரை ஆகியவற்றைக் கடந்து பேரிகை பற்றிய கட்டுரை விரிகிறது. தமிழர்களின் தொன்மைச் சின்னங்களில் முக்கியமானது 'பேரிகை' என்று கூறுகிறார் நூலாசிரியர்.
வீரமங்கைகளின் வரலாற்றைத் தனது நூல் வாயிலாக பேரிகை கொண்டு முரசம் கொட்டிச் செய்தி கூறும் மரபினைப் பின்பற்றிப் பேரிகை என்ற நூல் பிறப்பெடுத்துள்ளது.
'ஜய பேரிகை கொட்டடா, கொட்டடா
ஜயபேரிகை கொட்டடா'
என்ற பாரதியின்' பாடல்வரிகளை நினைவூட்டியவாறு வீரமங்கைகள் பெருமைகளை நூலில் பகிர்ந்துள்ளார் நூலாசிரியர். இவ்வாறான அணுகுமுறை சிறப்பாக உள்ளது. வட இந்தியப் பெண்ணான ஜான்சிராணி இலட்சுமிபாய், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இராணி வேலு நாச்சியார் ஆகியோரின் வீரத்தைக் குறிப்பிட்ட நூலாசிரியர் ஈழத்தில் வாழ்ந்த குருவிச்சி நாச்சியார், நல்ல நாச்சியார் போன்றோரின் வீரத்தையும் குறிப்பிட்டுள்ளார். மதம் கொண்ட யானையை தனது வீரத்தால் அடக்கிய ஈழப்பெண் அரியாத்தா இனது வீரத்தையும் வியந்துரைத்துள்ளார்.
சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களை தமிழ் நிலத்தில் தங்கமாய் ஒளிரும் தாய் தங்கம்மா அப்பாக்குட்டி என்று கூறி அவரின் அறம் சார்ந்த பணிகளின் விபரங்களையும் நூலில் உள்ளடக்கியுள்ளார் நூலாசிரியர். இலங்கையில் பெண்களுக்காக வெளிவந்த முதலாவது பத்திரிகையை வெளியிட்ட மங்களம்மாள் மாசிலாமணி பற்றிய தகவல்களையும் பேரிகை என்ற கடுகளவு நூலில் உள்ளடக்கியுள்ளார். மேலும் அன்னை பூபதியின் அகிம்சைப் போராட்டம் பற்றியும் அவரது தியாகத்தையும் கூறி
" தோன்றின் புகழொடுதோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று" ]
என்ற வள்ளுவன் குறளையும் நினைவூட்டி தனது முதலாவது நூலான பேரிகை நூலினை நிறைவு செய்துள்ளார் ஈழமங்கை மு.நவகீதா.
ஈழமங்கைகளின் பெருமைகளை சான்றுகளுடன் விளக்கிச் செல்லும் பாங்கும் சிறப்பாக உள்ளது. நவகீதா மேலும் பலபடைப்புக்களைத் தந்து மேன்நிலை பெற்றிடவேண்டும் என வாழ்த்திக்கொள்கிறேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.