ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், 1974 ஆம் ஆண்டு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் கொழும்பு கட்டுப்பெத்தை பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்சங்கத்தின் தமிழ் விழா நடந்தது. இவ்விழாவில் காலை, முதல் மாலை வரையில் கருத்தரங்குகள் இடம்பெற்றன. இரவு நிகழ்ச்சியில் நாதஸ்வர கலைமேதை அளவெட்டி என்.கே. பத்மநாதன் குழுவினரின் கச்சேரியைத் தொடர்ந்து சங்கத்தின் நுட்பம் மலர் வெளியிடப்பட்டது.
அதன்பின்னர் இரண்டு நாடங்கள் மேடையேறின. இரண்டுமே அக்காலப்பகுதியின் இலங்கை அரசியலையும் தொழிற்சங்கங்களின் செயற்பாடுகளையும் அங்கதச்சுவையுடன் சித்திரித்திருந்தன. மாவை நித்தியானந்தனின் ஐயா லெக்ஷன் கேட்கிறார் என்ற நாடகம் நவீன நாடக வரிசையில் சபையோரை சிரிப்பிலும் சிந்தனையிலும் ஆழ்த்தியது.
அடுத்து, கலைஞர் ( அமரர் ) சுஹேர் ஹமீட் எழுதி, இயக்கிய ஏணிப்படிகள் நாடகம் மேடையேறியது. வழக்கத்திலிருந்து மாறுபட்ட முற்றிலும் வித்தியாசமான நாடகம் ஏணிப்படிகள். இதில் பிரதான பாத்திரம் ஏற்று திறம்பட நடித்தவர் க. பாலேந்திரா என்ற மாணவர்.
அக்காலப்பகுதியில் தங்கமூளை என வர்ணிக்கப்பட்ட கலாநிதி என். எம். பெரேரா நிதியமைச்சராகவிருந்தார். ஏணிப்படிகள் நாடகத்தில் தங்கமூளை என்ற சொற்பதம் அங்கதமாக வெளிப்பட்டது.தொழிற்சங்கத் தலைவர்கள் எவ்வாறு தொழிலாள வர்க்கத்தினரை தமது நலன்களுக்காக சுரண்டுகிறார்கள் என்ற செய்தியை கருப்பொருளாகக் கொண்டு மேடையேறிய அந்த நாடகத்தை இன்றளவும் மறக்கமுடியாதிருப்பதுபோன்றே, குறிப்பிட்ட பிரதான பாத்திரம் ஏற்று நடித்த கலைஞர் க. பாலேந்திராவையும் என்னால் மறக்கமுடியாது.
1974 ஆம் ஆண்டுதான் பாலேந்திராவை இராமகிருஷ்ண மண்டபத்தில் முதல் முதலில் சந்தித்தேன். அதன்பின்னர் கலைஞர் தாஸீசியஸின் இயக்கத்தில் கதிரேசன் மண்டபத்தில் நடந்த பிச்சை வேண்டாம் நாடகத்திலும் பாலேந்திரா பிரதான பாத்திரம் ஏற்று நடித்திருந்தார். பின்னாளில் இவரை மணந்த ஆனந்தராணியும் இந்நாடகத்தில் நடித்திருந்தார். 1978 ஆம் ஆண்டு கொழும்பில் தமிழ் அவைக்காற்று கலை கழகத்தை நிறுவிய பாலேந்திரா, பல நாடகங்களை மேடையேற்றினார்.
யாழ்ப்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட பாலேந்திரா, ஈழத்தமிழ் நாடக வரலாற்றில் முக்கிய இடம்வகிக்கின்றார். தற்போது இங்கிலாந்தில் வதியும் பாலேந்திரா – ஆனந்தராணி தம்பதியர் அங்கும் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும், கனடா, அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளிலும் தங்கள் அவைக்காற்று கலைக்கழகத்தின் ஊடாக சுமார் 70 நாடகங்களை மேடையேற்றியுள்ளனர்.
ஒவ்வொரு நாடகமும் பல தடவைகள் மேடையேற்றப்பட்டுள்ளன.
கட்டுப்பெத்தைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியான பாலேந்திரா, இங்கிலாந்தில் பொறியியல் துறையில் முதுகலைமாணிப் பட்டமும் பெற்றவர். தனது பதினேழாவது வயதில், கல்லூரிக்காலத்திலேயே நாடகத்தோடு தன்னை இணைத்துக் கொண்டவர். பல்கலைக்கழகத்தில் பிரவேசித்த பின்னரும் நாடகத்துறையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியவர்.
அக்காலப்பகுதியில் இவர், சாவின் சதி, ஒரு யுகத்தின் விம்மல், தூரத்து இடிமுழக்கம் முதலான நாடகப் பிரதிகளைத் தயாரித்து நெறியாள்கை செய்தவர்.
கட்டுப்பெத்தை பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் நுட்பம் இதழின் ஆசிரியராக விளங்கிய எழுத்தாளர். இந்தியப் பேராசிரியர் – எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் பிரபல்யமான மழை நாடகத்தைத் தயாரித்து நெறியாள்கை செய்ததுடன் அதில் பின்னாட்களில் இவரின் துணைவியான ஆனந்தராணியுடன் இணைந்து நடித்துமிருந்தார். மழை நாடகம் இதுவரை 40 தடவைகளுக்கு மேல் மேடையேறியுள்ளது.
தர்மு சிவராம் ( பிரமிள் ) எழுதிய நட்சத்திரவாஸி , பலி முதலான நாடகங்களை நெறியாள்கை செய்திருக்கும் பாலேந்திரா, அமெரிக்க எழுத்தாளர் ரென்னஸி வில்லியம்ஸ் எழுதிய The Glass Menagerie என்ற நாடகத்தை தமிழில் கண்ணாடி வார்ப்புகள் என்ற பெயரில் நெறியாள்கை செய்து மேடையேற்றினார். இந்த நாடகமும் மழை நாடகமும் இலங்கை வானொலியிலும் ஒலிபரப்பானது.
இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினியில் 1982 இல் முதலாவது தமிழ் நாடகமாக கண்ணாடி வார்ப்புகள் ஒளிபரப்பானது.
- யுகதர்மம் நாடகக் காட்சி -
ஜேர்மனிய நாடகாசிரியரான பேர்டோல்ட் பிறெக்டின் The Exception and The Rule என்ற நாடகத்தை தமிழில் முதன்முதலாக யுகதர்மம் என்ற பெயரிலும் நெறியாள்கை செய்து மேடையேற்றியுள்ளார். இந்த நாடகம் இலங்கையில் மட்டும் 23 தடவைகள் மேடையேறியுள்ளது. பின்னர் இலண்டனில் மீள் தயாரிப்பாக பல மேடைகள் கண்டுள்ளது.
கண்ணாடி வார்ப்புகள், யுகதர்மம் ஆகிய நாடகப்பிரதிகளையும், தான் எழுதிய அரங்கக் கட்டுரைகளையும் தொகுத்து நூலாகவும் வெளியிட்டுள்ளார்.
நாட்டுச்சூழல், அரசியல், மக்கள் அவலம் சார்ந்தும் பல நாடகங்களை மேடையேற்றினார். அந்த வகையில் இயக்கவிதி 3, துக்ளக் ஆகிய இவரது நாடகங்கள் இலங்கை அரசின் தணிக்கைக்கு உட்பட்டது.
இலங்கையிலிருந்து 1982 இல் புலம்பெயர்ந்த பாலேந்திரா, முதலில் நோர்வே நாட்டில் வசித்த பின்னர், லண்டனுக்குச்சென்று நிரந்தரமாகி, இங்கும் தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தை நிறுவி, இன்று வரை தமிழ் நாடகக் கலையை வளர்த்து வருகிறார்.
லண்டனில் இதுவரையில் 48 நாடக விழாக்களையும் கனடா, அவுஸ்திரேலியா, நோர்வே, இந்தியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் 23 நாடக விழாக்களையும் நடத்தியுள்ளார்.
புலம்பெயர் சூழலில் வாழும் தமிழ்ப் பிள்ளைகள் தங்களது சுய அடையாளத்தையும் தன்னம்பிக்கையையும் பேணவும் தமிழிலே பேசி நாடகங்கள் நடிக்கவும் லண்டன் தமிழ் நாடகப் பள்ளியை ஆரம்பித்தவர் . துணைவியாரும் நடிகையுமான ஆனந்தராணியுடன் இணைந்து பல சிறுவர் நாடகங்களை மேடையேற்றி வருகிறார்.
பாலேந்திரா தயாரித்து நெறியாள்கை செய்த பல நாடகங்களில் சுயமொழி நாடகங்கள்தான் அதிகமானவை. ஈழத்து எழுத்தாளர்கள் தருமு சிவராம், இ. முருகையன், குழந்தை ம. சண்முகலிங்கம், பேராசிரியர் சி. சிவசேகரம், பேராசிரியர் சி. மௌனகுரு, மாவை நித்தியானந்தன், சேரன், செழியன், மனோ. மனுவேற்பிள்ளை, யோண்சன் ராஜ்குமார், ச. வாசுதேவன் முதலானோரின் நாடகப் பிரதிகளையும் மொழிபெயர்ப்பு நாடகங்கள் சிலவற்றையும் தயாரித்துள்ளார்.
இந்திய நாடகாசிரியர்கள் இந்திரா பார்த்தசாரதி ( மழை, பசி, சூறாவளி ) ந. முத்துசாமி ( நாற்காலிக்காரர், சுவரொட்டிகள் ) பாதல் சர்க்காரின் முகமில்லாத மனிதர்கள் , மோகன் ராகேஷின் அரையும் குறையும் , மற்றும் கிறிஷ் கர்னாட் , ரஞ்சித் ராய் சௌத்ரி ஆகியோரின் நாடகங்களையும் பாலேந்திரா நெறியாள்கை செய்துள்ளார். மொழிபெயர்ப்பு மற்றும் தமிழாக்க நாடகங்களாக ரென்னஸி வில்லியம்ஸ் எழுதிய The Glass Menagerie – கண்ணாடி வார்ப்புகள், பேர்டோல்ட் பிறெக்டின் The Exception and The Rule - ‘யுகதர்மம்’, கார்சியா லோர்கா எழுதிய The House of Bernarda Alba – ஒரு பாலை வீடு, ஹரோல்ட் பின்ரரின் One for the Road – போகிற வழிக்கு ஒன்று, ஹென்றிக் இப்சன் எழுதிய Enemy of the People – சமூக விரோதி, எரியல் டோப்மன் எழுதிய Death and the Maiden – மரணத்துள் வாழ்வு போன்ற நாடகங்களையும் பாலேந்திரா நெறிப்படுத்தி மேடையேற்றியுள்ளார்.
கடந்த சில வருடங்களாக தனியாகவும் மனைவி ஆனந்தராணியுடன் இணைந்தும் இலங்கையில் பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், சிறுவர் இல்லங்களில் நாடகப் பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருகிறார். பாலேந்திரா பற்றியும் தமிழ் அவைக்காற்று கலைக் கழகம் பற்றியும் இலங்கை பல்கலைக்கழகங்கள், பாடசாலைகளில் நாடகமும் அரங்கியலும் பாடத்திட்டத்தில் மாணவர்கள் கற்று வருகிறார்கள் . பாலேந்திராவின் கலைச்சேவைக்காக பல கலை, இலக்கிய அமைப்புகள் விருதுகள் வழங்கி பாராட்டியுள்ளன.
இறுதியாக பாலேந்திரா – ஆனந்தராணி தம்பதியரை கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் பாரிஸிலும் லண்டனிலும் சந்தித்தேன்.
கடந்த ஓகஸ்ட் மாதம் பாரிஸில் நடந்த வென்மேரி அறக்கட்டளை விழாவிலும், பாலேந்திரா வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பாராட்டப்பட்டார். பாலேந்திரா பெற்றிருக்கும் இதர விருதுகள் :
கலைஞர் பாலேந்திராவின் சேவைக்காக ஈழவர் திரைக்கலை மன்றத்தினரால் “கலாவிநோதர்” என்ற பட்டமும், சிவயோகம் அறக்கட்டளையினரால் “நாடக மணி” என்ற பட்டமும் மற்றும் ஈழகேசரி விருது , பிறென்ற் தமிழ்ச் சங்க விருது, ‘பூபாளராகங்கள்’ விருது, கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன விருது , தமிழினியின் 2004 ஆம் ஆண்டிற்கான விருது, கனடா அகேனம் விருது, கனடா தமிழர் தகவல் விருது, லண்டன் சைவ முன்னேற்றச் சங்க விருது, எஸெக்ஸ் தமிழ்ச் சங்கத்தினால் ‘அண்ணாவி மேதை” என்ற பட்டம் , லண்டன் யூனிற்றி அமைப்பின் ‘கலைப்புரவலர்’ விருது முதலானவை வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
வடமராட்சியிலிருந்து வெளியாகும் ஜீவநதியும் பாலேந்திரா சிறப்பிதழை வெளியிட்டுள்ளது. அயராமல் இயங்கி கலைச்சேவையாற்றும் பாலேந்திராவுக்கு எமது வாழ்த்துக்கள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.