ஆய்வுச் சுருக்கம்
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி" தமிழ்க் குடியினர் ஆவார். இத்தகைய தமிழர்கள் தொடக்க காலத்தில் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையினை வாழ்ந்து வந்தனர்.  தாம் வாழும் சூழலை பிறருக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காகவும், தாம் உணர்ந்துக் கொண்ட  கருத்தினை பிறருக்கு கூறும் வகையில் மனிதரிடமிருந்து தோற்றம் பெற்றதே வாய்மொழி இலக்கியமான பழமொழியாகும். பழமொழிகளைப் போலவே விடுகதைகளும் வாய்மொழி இலக்கியமாகக் கருதப்படுகின்றன. மக்கள் தங்களின் வாழ்க்கை முறையில் பயன்படுத்திய பழமொழிகளையும் விடுகதைகளையும்  வாய்மொழி வழியாகவே வழங்கி வந்தனர். ஆனால் அவற்றினை ஏடுகளில் எழுதவில்லை. அதனால் தான் பழமொழியினை வாய்மொழி இலக்கியம் என்று குறிப்பிடுகின்றனர். ஒருவர் செய்யும் செயலில் ஏதேனும் சில குறைபாடுகள் இருப்பின் அத்தகைய செயலினைச் சுட்டிக்காட்டி அமையக்கூடிய சிறு கருத்தே பழமொழியாகும். நாட்டுப்புற மக்களின் மகுடமாக விளங்கக் கூடியவை நாட்டுப்புற பழமொழிகளாகும் . அன்றைய காலகட்டத்தில் பழமொழிகள் இல்லாத சமுதாயத்தினை நாம் காண முடியாது. ஏனென்றால் அந்தளவிற்கு பழமொழிகள் மக்களிடம் மிகுந்த செல்வாக்கினை பெற்றவையாகவே விளங்கின.

இத்தகைய பழமொழிகள்  ஒருவரின் அனுபவப் போக்கினை பிறர் அறிந்து கொள்ளும் வகையில் அமைந்தவையாகும். மக்களின் வாழ்வில் சிறப்பு பெற்ற பழமொழிகள்  இன்றைய காலத்தில் எவ்வாறு வழங்கப்படுகின்றன, அவற்றினைப் பற்றிய கருத்துகள் என்ன? அவை எந்த பொருண்மையில் மக்களிடம் வழங்கப்பட்டு வருகின்றன என்பதைக் குறிப்பிடும் வகையில் இவ் ஆய்வுக்கட்டுரை அமைந்துள்ளது.

முன்னுரை

ஆரம்ப காலத்தில் மனிதர்களின் வாழ்க்கை முறையானது இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையாகவே இருந்தது.  மனிதர்கள் ஒரு செய்தியினை தான் அறிந்து கொள்வதற்கும் பிறரிடம் இருந்து செய்தியினை பெறுவதற்கும் மொழியானது ஒரு இணைப்பு கருவியாகவும் பாலமாகவும் பயன்படுகிறது.  மனிதர் தம்மிடம்  உள்ள செய்தியினை பிறருக்கு கூறும்போது தாம் சொல்ல விரும்புகின்ற செய்தியானது பெரியதாக இருந்தால் அவற்றைச் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது என்பது  அவர்தம் இயல்பாகும். இத்தகைய முறையினைத் தான் நன்னூலார் பத்து வகையான குற்றங்களில் ஒன்றான "குன்றக்கூறல்"என்ற முறைமையில் குறிப்பிட்டுள்ளார் . அதனால் தான் அன்றைய காலத்தில் நம் முன்னோர்கள் தாம் சொல்ல விரும்புகின்ற செய்தியினை பழமொழிகள் மூலமாகவும் விடுகதைகள் மூலமாகவும் குறிப்பால் பிறருக்கு பொருள் உணர வைத்தனர். இதன் அடிப்படையில் நம் முன்னோர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவையே பழமொழிகளாகும். இவை இயற்கை சூழலை பொறுத்தே அமைபவையாகும். அதனால் தான் பழமொழிகள் காலத்தைக் காட்டும் கண்ணாடியாக இன்றைய உலகில் விளங்குகின்றன .

பழமொழிகளின் அமைப்பு முறைகள்

இன்றைய காலத்தை விட நம் முன்னோர்களுடைய காலகட்டத்தில் பழமொழிகள் செல்வாக்கு மிகுந்தவையாகவே இருந்தன.  அதற்கு முக்கிய காரணம் அன்றைய காலகட்டத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிகள் இல்லாமல் இருந்ததேயாகும். அன்றைய மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களின் ஒரு கூறாக அமைந்தது இத்தகைய பழமொழியாகும். பழமொழியானது உணர்ச்சி பூர்வமாகவும், சிந்திக்கும் விதமாகவும், கேலி கிண்டலாகவும், சிலேடையாகவும் , சொற்றொடராகவும் அமைந்ததாகும். அதுமட்டுமின்றி பழமொழிகள் இயற்கையோடு இணைந்த பொருட்களைக் கொண்டு அமைந்தவையாகும். பெரும்பாலான பழமொழிகள்  உவமை, உருவகம் என்ற இரு தன்மைகளை கொண்டவையாகவே அமைகின்றன. ஒருவர் பழமொழியினைக் கூறும்போது அதனை  உற்று நோக்கிப் பார்த்தால் அவர் சொல்ல விரும்புகின்ற செய்தியோ ஒன்றுதான், ஆனால் அவர் ஒப்பிட்டு காட்டுவது இரு பொருளை.

“தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை"

இத்தகைய பழமொழியை நாம் பார்த்தோமானால் அவர்கள் கூறிய உவமைக்கு தகுந்த பொருளும் அமைந்துள்ளது. இதனைத் தொல்காப்பியர் பொருளதிகாரத்தில் "உவமமும் பொருளும் ஒத்தல் வேண்டும்"(தொல்-பொருள் நூ.எண்-279 என்று குறிப்பிடுகின்றார். விடுகதையானது எப்படி எத்தகைய கருப்பொருளில் வேண்டுமானாலும் அமைகிறதோ அதுபோல பழமொழியும் எத்தகைய பொருள்களில் வேண்டுமானாலும் அமையலாம் அதற்கென குறிப்பிட்ட வரையறைகள் கிடையாது.  இதனைப் போல தான் நாற்கவிராச நம்பி மக்கள் வாழும் நிலத்தின் அடிப்படையில் கருப்பொருளினை பதினான்கு வகையாக குறிப்பிடுகின்றார்.

"ஆரணங்கு உயர்ந்தோர் அல்லோர் புள் விலங்கு
ஊர் நீர் மரம் உணா பறை யாழ் பண்
தொழில் எனக் கருஈர் எழுவகைத்து ஆகும்". (அகப்பொருள் விளக்கம் நூற்பா.எண்-19)

கருப்பொருளானது நிலத்தையும் காலத்தையும் அடிப்படையாகக் கொண்டு பிறப்பதுவே ஆகும். அதேபோலதான் பழமொழிகளும் மக்களின் வாழ்க்கை நிலையில் அவர் அடைந்த மாற்றத்தையும், கால நிலையையும் அவர்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் அமைந்தவையாகும். இத்தகைய பதினான்கு வகையான கருப்பொருள்களின் அடிப்படையில் கூட சில பழமொழிகள் அமைந்துள்ளன அவை.

1. நாம் ஒன்று நினைக்கத்
தெய்வம் ஒன்று நினைக்கும்.

2. உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்தாகாது.

3. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.

4. தென்னை வைத்தவன் தின்றுவிட்டுச் சாவான்
பனையை வைத்தவன் பார்த்துவிட்டுச் சாவான்.

5. கொடிக்குக் காய் பாரமா?

6. நன்செய்க்கு ஏழு உழவு
புன்செய்க்கு நான்கு உழவு.

7. ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும்.

எந்த ஒரு இலக்கியத்தினையோ அல்லது இலக்கணத்தையோ படைத்தாலும் அதற்கென சில விதிமுறைகளும் அமைப்புகளும் உள்ளன.

"அவற்றுள்
பெருங்காப்பிய நிலை பேசும் காலை
வாழ்த்து வணக்கம் வருபொருள்......" ( தண்டியலங்காரம் நூற்பா.எண்-8)

என்று தண்டியலங்காரமானது எப்படி காப்பியத்திற்கு இலக்கணம் கூறியுள்ளதோ அதுபோல பழமொழிகளிலும் இரு சொற்கள் இருந்தே தீர வேண்டும் என்கிறார் ஆலன் டாண்டிஸ்.  அதுமட்டுமின்றி பழமொழியானது தலைப்பும், முடிவுரையும் பெற்றிருக்க வேண்டும் என்ற வரைமுறையினை குறிப்பிடுவதாக சு. சக்திவேல் அவர்கள் குறிப்பிடுகின்றார். இதிலிருந்து நாம் பார்க்கும் போது எந்த ஒரு பழமொழியும் ஒரே பொருளில் உவமையின்றி அமையாது என்பதினை நாம் நன்கு அறிகிறோம். நம் முன்னோர்கள் இதுதான் பழமொழி.  அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அமைப்பு முறையினைப் பயன்படுத்தி பழமொழியினைக் கூறி வந்தவர்கள் அல்லர். நாம் சொல்லுகின்ற பழமொழியானது பிறரைச்  சிந்திக்க வைக்கும் அளவு இருத்தல் வேண்டும் என்ற அமைப்பு முறையில் நம் முன்னோர்களினால் உருப்பெற்றதே பழமொழியாகும்.

பழமொழியின் உண்மைத் தன்மை

நாட்டுப்புறவியலின் வகைகளில் முக்கிய ஒன்றாகக் கருதப்படுவது நாட்டுப்புறப் பழமொழிகளாகும். இவை நாட்டுப்புற மக்களிடம் பெரும் பங்களிப்பினை பெற்றுள்ளவையாகும். நாட்டுப்புற மக்கள் தம் வாழ்க்கையில் வினையின் காரணமாக நிகழக்கூடிய அனுபவத்தினை பிறரருக்கு கூறும் வகையில் மக்களிடம் தோற்றம் பெற்றவையே இத்தகைய நாட்டுப்புற பழமொழிகளாகும். அதனால்தான் இது ஒரு பாமர மக்களின் அறிவுச் சுரங்கமாக விளங்குகின்றது. பழமொழியானது பிறரின் அறிவாற்றலையும், சிந்தனையாற்றலையும் சோதிக்கும் வகையில் அமைந்தவையாகும். இதே போல தான் விடுகதைகளும் கூட ஒருவரின் சிந்தனையாற்றலையும், கற்பனை திறனையும் அறிந்து கொள்ளும் வகையில் அமைந்தவையாகும்.

“ மோனை எதுகை முரணே இயைபு என
நல்நெறி மரபினை தொடை வகை என்ப”. ( தொல் பொருள்- நூற்பா எண்-467)

என்ற நூற்பாவில் தொடை வகையினை குறிப்பிடுகின்றாரோ அதுபோல பழமொழிகளிலும் மோனை, எதுகை, இயைபு ,முரண் போன்ற முறைகளில் அமைந்திருப்பதை நாம் காணலாம்.

மோனை:

பாம்புக்குப் பல்லில் விஷம்
பங்காளிக்கு உடம்பெல்லாம் விஷம்.

இத்தகைய பழமொழியில் அடி மோனை சீர் மோனை இடம் பெற்றுள்ளது.

எதுகை:

கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷன்.

மேற்கூறப்பட்ட பழமொழியில் அடி எதுகை இடம் பெற்றுள்ளது.

இயைபு:

நாயைக் கண்டால் கல்லைக் காணோம்
கல்லைக் கண்டால் நாயைக் காணோம்

மேலே குறிப்பிட்டுள்ள பழமொழியில் "காணோம்" என்ற இயைபுத் தொடை அமைந்துள்ளது.

முரண்:

எண்ணிச் செய்கிறவன் செட்டி
எண்ணாமல் செய்கிறவன் மட்டி உலகளவு .

மேற்கூறப்பட்டுள்ள பழமொழியில் "எண்ணி ,எண்ணாமல் " என்ற முரண் தொடையானது அமைந்துள்ளது.

பழமொழியானது ஒரு உண்மை தன்மையினை உடையவையாக இருத்தல் வேண்டும் ஒருவர் ஒருவரை பார்த்து சொல்கின்ற பழமொழியானது ஏதேனும் ஒரு உண்மையான கருத்தினை உணர்த்தக் கூடியயதாக இருத்தல் வேண்டும். அதுமட்டுமின்றி அவர் பயன்படுத்துகின்ற சொற்கள் மக்களின் பேச்சு வழக்கு முறையில் உள்ளவையாக அமைதல் வேண்டும் .ஒரு பழமொழியானது ஒரு வரிகளிலோ அல்லது இரு வரிகளிலோ அமைந்திருத்தல் வேண்டும். அவை செய்யுள் வடிவிலோ, உரைநடை வடிவிலோ, கதையின் போக்கிலோ அமைதல் கூடாது. பழமொழியானது அளவில் சிறியதாக இருக்க வேண்டும் ஆழ்ந்த கருத்தினை பெற்றிருத்தல் வேண்டும். இத்தகைய முறையில் அமைபவையே உண்மைத் தன்மையினை உடைய பழமொழிகள் ஆகும். இம்முறைக்கு மாற்றாக பழமொழிகளின் தன்மைகள் அமைந்திருந்தால் அவை மக்களிடம் மிகுந்த செல்வாக்கினைப் பெற இயலாது.

மக்களின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், இயற்கை சூழலையும், வாழ்க்கை முறையினையும், உண்மை கருத்தினையும் மக்களுக்கு உணர்த்தக்கூடிய தன்மையில் பழமொழிகளானது அமைந்திருத்தல் வேண்டும். விடுகதையும் பழமொழியும் ஒரே மாதிரியான நிலைத்த தன்மையினை உடையவையாகும். நாம் ஒருவரிடம் கூறக்கூடியவை பழமொழிகளாக இருந்தாலும் விடுகதைகளாக இருந்தாலும் அவை மக்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய தன்மையினை முதலில் பெற்றிருத்தல் வேண்டும். நம் முன்னோர்கள் சொல்ல விரும்புகின்ற செய்தியினை சுருக்கமாகவும் ,தெளிவாகவும், இனிமையாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் சொல்வதற்கு பயன்படுத்திய சிறு ஆயுதம் தான் விடுகதைகளும் பழமொழிகளும். பழமொழியும் விடுகதையும் ஏதேனும் ஒரு உன்னத கருத்தினை உலகிற்கு உணர்த்தும் வகையில் உண்மை தன்மையுடன் அமைந்தவையே ஆகும் . பழமொழியானது இயல்பாகவே அல்லது இயற்கையாகவே உருவகத் தன்மையினையும் உவமைத்தன்மையினையும் ,உடையவையாக நல்ல கருத்தினை பெற்றெடுத்தல் வேண்டும்.

பழமொழியின் பயன்பாடுகள்

நாட்டுப்புற மக்களின் அறிவின் சுருக்கமே நாட்டுப்புற பழமொழிகளாகும். அன்றைய காலகட்டத்தில் மக்கள் தங்களின் அறிவுத்திறனையும் , கற்பனை திறனையும் , சிந்திக்கும் ஆற்றலையும், பகுத்தறி திறனையும் தாம் வளர்த்துக் கொள்ளும் விதமாகவும் தங்களின் பொழுதினை போக்கிக்கொள்ளளும் பொழுதுபோக்கு சாதனமாகவும் அமைந்தவையே இத்தகைய நாட்டுப்புற பழமொழியும் விடுகதைகளுமாகும். நாட்டுப்புற இலக்கியங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய பழமொழிகளும் விடுகதைகளும் இறைவனாலோ அல்லது பெரும் மேதைகளினாலோ படைக்கப்பட்டு இவ்வுலக மக்களுக்கு அருளியவை அல்ல.  மானிடர்  ஆரம்ப காலகட்டத்தில் தம்முடைய அறிவாற்றலினை வளர்த்துக் கொள்ளும் விதமாகவும் தம் கருத்தினை பிறருக்கு கூறும் விதமாக அவர்கள் அவர்களுக்காகக் கூறிக் கொண்டவையே பழமொழிகளும்,  விடுகதைகளும் ஆகும். இத்தகைய பழமொழிகளில் உயிர் பண்புகளும், உணர்வுப் பண்புகளும், அறிவுப் பண்புகளும் அடங்கியுள்ளன என சு. சக்திவேல் அவர்கள் குறிப்பிடுகின்றார்.

சங்க மருவிய காலத்தில் எப்படி புலால் உண்ணுதல், பரத்தையர் தொடர்பு, கள் குடித்தல் போன்ற தீய செயல்களினை தடுப்பதற்கு எப்படி நீதி நூல்கள் தோன்றின என சு. ஆனந்தன் அவர்கள் கூறுகின்றாரோ அதுபோல மக்கள் ஏதேனும் ஒரு தவற்றினை செய்யும் போது இத்தகைய செயலினை செய் இத்தகைய செயலினை செய்யாதே என எடுத்துரைக்கும் வண்ணம் பயன்படக்கூடியவையே பழமொழிகளாகும். மனிதரின் சிந்தனை ஆற்றலையும் அவரின் அனுபவத்தினையும் வெளிப்படுத்தும் வகையில் பயன்படக்கூடியவையே இத்தகைய பழமொழிகளாகும். பழமொழியினை சொல்வதற்கு ஒரு குறிப்பிட்ட கால நேரம் குறிப்பிடவில்லை அதற்கு முக்கிய காரணம் ஒருவர் செய்யும் தவறினையோ அல்லது அவர் அடையும் புகழினையோ உடனே அவருக்கு உணர்த்த வேண்டும் என்பதுதான் பழமொழியின் முக்கிய நோக்கமாகும். அதுவே அவர் தவறினை செய்துவிட்ட பிறகு சில நேரம் கழித்துப் பழமொழியினை அவரிடம் கூறினால் அதற்கு பொருள் தெரியாத அவர் அந்தப்பழமொழியினை எதற்குச் சொன்னார் என்பது  தெரியாமல் திகைக்கக்கூடும் . அதனால்தான் பழமொழிக்கு வரையறுத்த கால நேரம் குறிப்பிடவில்லை . ஒரு குற்றச் செய்தியானது மனித சமுதாயத்திற்கு நன்மையாகவும் தீமையாகவும் அமைகின்றதே என மா .ப. குருசாமி எப்படி குறிப்பிடுகின்றாரோ அதுபோல பழமொழியானது நன்மைக்கும் தீமைக்கும் பயன்படக்கூடியவையாகும்.

மக்களின் அனுபவ முதிர்ச்சியினையும் அறிவு கூர்மையினையும் எடுத்துரைக்கும் வகையில் அமைந்தவையாகும். படிப்பறிவே இல்லாத பாமர மக்கள் கூட எந்த அளவிற்கு நுட்பமான முறையில் தன் அறிவினை பயன்படுத்தி பழமொழியினையும் விடுகதையினையும் படைத்துள்ளன என்பதனை நாம் அறிந்துகொள்ளளும் வகையில் பயன்படுகின்றது. அது மட்டுமின்றி பண்டைய கால மக்களின் பழக்கவழக்கங்களையும், பேச்சு முறைகளினையும், பயன்படுத்திய பொருட்களையும் நாம் அறிந்து கொள்ள பழமொழி, விடுகதை போன்ற வாய்மொழி வழக்காறுகளானது பயன்படுகின்றது.

பழமொழியில் தமிழ் இலக்கியங்களும் பிறவகை பெயர்களும்

காலங்காலமாக நம் முன்னோர்களால் வழங்கப்பட்டு வருபவையே பழமொழிகளாகும். இவை நம் மூதாதயர்களிடம் இருந்து தோன்றிய பழம்பெரும் மொழியாகும். பழங்காலத்திலிருந்தே மக்களின் வாழ்க்கை முறையில் வாழ்ந்து வருபவை பழமொழிகள் ஆகும். இத்தகைய பழமொழியினை பழகுமொழி, சொலவடை, பண்டைய பழமொழி, பழவார்த்தை, உலகமொழி, நீதிமொழி, முன்சொல், தொன்றுபடு பழமொழி, மூதுரை, மூத்தோர்சொல், எழுதா இலக்கியம் அல்லது வாய்மொழி இலக்கியம், முதுமை பழமொழி, நெடுமொழி, வழக்கு, மொழிமை , பழவார்த்தை, தொன்நெறி மொழி எனவும் அழைக்கப்படுகின்றன அது மட்டுமின்றி

" ஏது நுதலிய முதுமொழி யான ".(தொல்-பொருள்-நூற்பா-எண்-393)

என தொல்காப்பியர் பழமொழியினை முதுமொழி, முதுசொல் என்ற பெயரில் குறிப்பிடுகின்றார் . இதே போலவே கொன்றை வேந்தனில் "மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் " (75பாடல்) திருவெம்பாவையில் "முன்னைய பழம்பொருட்டு முன்னைய பழம்பொருளே" (9பாடல்) எனவும் குறிப்பிடுகின்றனர். மூதுரை ,முதுமை, முதுசொல், பழஞ்சொல் ,முன்சொல், மொழிமை என தமிழில் பழமொழிக்கு சில பெயர்களினை குறிப்பிடுகின்றன. இதைத் தவிர பிற இலக்கிய இலக்கண நூல்களிலும் பழமொழியினை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. குறிப்பாக நாம் பார்த்தோமானால் இலக்கணங்களில் தொல்காப்பியமும் இலக்கியத்தில் அகநானூறு, புறநானூறு ,பரிபாடல் மதுரைக்காஞ்சி, குறுந்தொகை போன்ற நூல்களிலும் கபிலரின் இன்னா நாற்பது என்ற நூலிலும் பழமொழியினை பற்றிய குறிப்புகள் கூறியுள்ளார். அது மட்டுமின்றி திருவள்ளுவர்

"அடுத்து காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்".(குறள் -706)

என்று பழமொழியினை பயன்படுத்தியுள்ளார் என சு .சண்முகசுந்தரம் குறிப்பிடுகின்றார் .

முன்றுரை அரையனார் பழமொழி நானூறு என்ற நூலின் வழியாக ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழியினை குறிப்பிடடுகின்றார் .அவை

“ ....................................................
"விரிகடல் சூழ்ந்த வியன்கண்மா ஞாலத்து
உரியதனிற் கண்டுணர்ந்தார் ஓக்கமே போலப்
பெரியதன் ஆவி பெரிது. ’’(பழமொழி நானூறு-பா.எண்-1)

காப்பியங்களில் கூட சில ஆசிரியர்கள் பழமொழியினை பயன்படுத்தி உள்ளனர். சீவக சிந்தாமணியில் "புலிக்கு வால் உருவி விடலாமா" என்ற பழமொழி வரியானது(2197பாடலில்) அமைந்துள்ளது. திருத்தக்க தேவர் "உதிரம் உறவறியும்" என விமலையார் இலம்பதத்தில் குறிப்பிடுகிறார் . இதே போல் இரட்டைக் காப்பியங்களிலும் பழமொழியினை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன மேலும் சில அறநூல்களான நல்வழி, ஆத்திச்சூடி, நன்னெறி, கொன்றை வேந்தன் , மூதுரை போன்ற நூல்களிலும் காணப்படுகின்றது . சதக நூல்களில் குமரேச சதகம் என்ற நூலானது" உலகம் மொழி" என்ற பெயரில் குறிப்பிடுவதாக சு சக்திவேல் அவர்கள் குறிப்பிடுகின்றார். இதிலிருந்து நாம் அறிந்தது என்னவென்றால் பழமொழிகள் இல்லாத இலக்கியமும் இல்லை இலக்கணமும் இல்லை என்பதுதான் அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பழமொழி என்பது அன்றைய மக்களிடமும் நூலினை படைத்த புலவர்களிடமும் நன்மதிப்பினை பெற்று விளங்கியுள்ளன என்பதனை நம்மால் அறிந்து கொள்ளமுடிகின்றது.

பழமொழிகள் வழங்கும் முறைகள்

பழமொழியானது  நுட்பமாகவும், சுருக்கமாகவும், தெளிவாகவும், சொல்ல வேண்டிய செய்தியினை எடுத்துரைக்கும் வகையில் அமைந்தது  ஆகும். ஒரு காரணத்தினை உணர்த்தி அக்கருத்தினை காரணத்துடன் விவரிப்பதே பழமொழி ஆகும். இத்தகைய பழமொழியினை வழங்கும் முறையில் மாற்றம் ஏற்படவில்லை ஆனால் மக்கள் அத்தகைய பழமொழியினை புரிந்து கொள்ளும் முறையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பழமொழியானது ஏதேனும் ஒரு உண்மை நெறியினை விளக்கக் கூடியவையாக தான் அமையும் ஆனால் இன்றைய காலகட்டத்தில் உள்ள மக்கள் தம் முன்னோர்கள் கூறிய பழமொழிகளின் உண்மையான அர்த்தத்தினை அறியாமல் நம் முன்னோர்கள் கூறிய பழமொழியினை அப்படியே பொருள் கொள்கின்றனர். இதனால் பழமொழியினை பற்றிய செல்வாக்கானது மக்களிடம் குறைந்து கொண்டே வருகின்றது. அதுமட்டுமின்றி பழமொழியின் உண்மையான பொருள் மக்களிடம் குறைந்து கொண்டே வருகின்றது.


”ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்
தான் பிள்ளை தானே வளரும்”

இத்தகைய பழமொழியின் உண்மையான பொருள் வேறு .  ஆனால் இன்றைய காலகட்டத்தில் மக்கள் இதற்கு அர்த்தம் கூறும் விதமோ வேறு. இவற்றின் உண்மையான அர்த்தமானது  ஆண்மகன் ஒருவன் பிறர் வீட்டில் வளர்ந்த பெண்ணைத்  தான் மணந்து வந்த பிறகு அவளை நன்கு பாதுகாத்து அவளுக்கு உணவளித்து வந்தால் அவளின் வயிற்றில் வளரக்கூடிய அவனின் பிள்ளையானது நலமாக இருக்கும் என்பதுதான் இதனின் உண்மையான பொருள். ஆனால் இன்று மக்களிடம் வழங்கக்கூடிய கருத்தானது எவன் ஒருவன் பிறர் வீட்டு பிள்ளை பசியால் வாடிய போது அந்த குழந்தைக்கு உணவளிக்கின்றானோ அவனின் வீட்டுப் பிள்ளைகள் பசியால் வாடும் போது யாரேனும் ஒருவர் உணவளிப்பார் என்ற ஒரு புதிய கருத்தினை உண்டாக்குகின்றனர். இதே போல தான் பெரும்பாலான பழமொழிகளின் உண்மை பொருளினை அறியாமல் பழமொழியினைத்  தன் வாழ்க்கையில் தவறான பொருளில்  வழங்கி வருகின்றனர். எந்த ஒரு செயலினையும் நாம் குறிப்பிட்ட காலத்திற்கு தொடர்ந்து செய்து கொண்டே வந்தால் எப்படி அந்த பழக்கம் நமக்கு பழகி விடுமோ அது போல தான் பழமொழிகளும் .மக்கள் நம் முன்னோர்கள் எதற்காக பழமொழியினை கூறியிருப்பார்கள் என ஆராய்ந்து அறிந்து உண்மை பொருளினை அறியாமல் எப்படி பழமொழியினை கூறியுள்ளார்களோ அதனை அப்படியே பொருள் கொண்டு வழங்கி வந்ததினால் பழமொழியின் உண்மை தன்மையானது அழிந்து போய்விட்டது.

நிறைவுரை

மானிடர்  என்று தம்முடைய கருத்தினைப் பிறருக்கு பகிர நினைத்தார்களோ  அன்றே நாட்டுப்புற இலக்கியங்களானது தோற்றம் பெற்றது . பாமர மக்களின் அல்லது நாட்டுப்புற மக்களின் அறிவு களஞ்சியமாக விளங்க கூடியவை பழமொழிகளாகும். பழமொழிகளும் விடுகதைகளும் மக்களின் வாழ்க்கைச் சூழலினை எடுத்துரைக்கும் வகையில் அமைந்தவை ஆகும். இவை நாட்டுப்புற மக்களின் அடையாளமாகவும் திகழ்கின்றன. பழமொழியானது ஒருவரின் நன்மை தீமையினை சுட்டி அவற்றிற்கான நீதியினை குறிப்பிடுவதினால் இவை நீதி களஞ்சியமாகவும் திகழ்கின்றன இத்தகைய சிறப்புமிக்க பழமொழிகளானது நாளடைவிலே மனித சமுதாயத்தில் பயன்படுத்தும் விதமானது குறைந்து கொண்டே வருகின்றன.

"புதியன புகுதலும் பழையன கழிதலும்
வழுவல கால வகையினானே."(நன்னூல்-சொல்-நூ.எண்-462)

என்ற நன்னூலாரின் கூற்றுப்படியும்

"கடிசொல் இல்லைக் காலத்துப் படினே".(தொல்-சொல்-நூ.எண்-452)

என்ற தொல்காப்பியரின் கூற்றுப்படியும் எப்பொழுதுமே புதியதாக ஒரு கருத்தானது தோற்றம் பெற்றால் பழைய கருத்துகளானது மறைதல் என்பது மக்களின் வாழ்வில் இயல்பான ஒன்றுதான் அதனை நாம் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். அதற்கு முக்கிய காரணம் அறிவியல் வளர்ச்சியும் நாகரிக வளர்ச்சியுமேயாகும்.அன்றைய காலகட்டத்தில் மக்கள் வாழ்ந்த சூழலும் வேறு வளர்ந்த சூழலும் வேறு அதே இன்றைய மக்கள் வாழ்கின்ற சூழலும் வேறு வளர்கின்ற சூழலும் வேறு உணவு என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றுதான் ஆனால் மக்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப உணவு உண்ணும் முறையில் சில மாறுபாடுகள் தோன்றுகின்றது அல்லவா அதே போல தான் பழமொழிகளும் நாளடைவில் மறைந்தும் சூழலுக்கு ஏற்ப மக்களிடம் புதிய கருத்துக்கள் தோன்றியும் காணப்படுகின்றன. பழமொழியானது முற்றிலுமாகவே மக்களிடம் இருந்து மறைந்து போகவில்லை இன்றும் சில கிராமங்களில் மக்கள் தான் பேசும் போது பழமொழியினை பயன்படுத்துகின்ற வழக்கு மக்களிடம் இருந்து வருகின்றன .

துணை நின்றவை

1. சு. சக்திவேல், நாட்டுப்புற இயல் ஆய்வு ,மணிவாசக பதிப்பகம் 31 சிங்கர் தெரு, பாரிமுனை சென்னை. 600 108 (முதல் பதிப்பு 1983)
2. கோ. வில்வம்பதி (உரையாசிரியர்) நன்னூல் மூலமும் உரையும் பழனியப்பா பிரதர்ஸ் ,கோனார் மாளிகை 25, பீட்டர் சாலை சென்னை- 600 014 (முதல் பதிப்பு 2003).
3. வ.த. ராமசுப்பிரமணியம் (உரையாசிரியர்) தண்டியலங்காரம் மூலமும் தெளிவுரையும், முல்லை நிலையம் 9, பாரதி நகர்- முதல் தெரு, தியாகராஜ நகர் சென்னை- 600 017 (முதல் பதிப்பு 2011).
4. ச. திருஞானசம்பந்தம் (உரையாசிரியர்) தொல்காப்பியம் சொல்லதிகாரம் மூலமும் உரையும் கதிர் பதிப்பகம் தெற்கு வீதி, திருவையாறு- 613 204 (முதல் பதிப்பு 2013).
5. ச. திருஞானசம்பந்தம் (உரையாசிரியர்) தொல்காப்பியம் பொருளதிகாரம் மூலமும் உரையும் கதிர் பதிப்பகம் 93 ,தெற்கு வீதி, திருவையாறு -613 204 (முதல் பதிப்பு 2020).
6. ச. திருஞானசம்பந்தம்(உரையாசிரியர்) நாற்கவிராசநம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கம் கதிர் பதிப்பகம் 93, தெற்கு வீதி, திருவையாறு- 613 204 (முதல் பதிப்பு 2010).
7. முன்றுறை அரையனார் (புலியூர் கேசிகன் உரை) பழமொழி நானூறு மூலமும் உரையும் சாரதா பதிப்பகம் சென்னை- 600 014 (முதல் பதிப்பு 2010).
8. மா.பா. குருசாமி இதழியல் கலை வெளியிட்டகம் சர்வோதய இலக்கிய பண்ணை 32/1 மேல வெளி வீதி ,மதுரை- 625 001 (முதல் பதிப்பு 1988).
9. சு. சண்முகசுந்தரம் நாட்டுப்புற இயல் வெளியீடு காவியா 16 ,இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம் சென்னை- 600 024 (முதல் பதிப்பு 1975).
10 புலவர் குழந்தை நீதிக்களஞ்சியம் சாரதா பதிப்பகம் ஜி- 4 சாந்தி அடுக்கம் 3,ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு, ராயப்பேட்டை ,சென்னை- 14 (முதல் பதிப்பு 2007).

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R