அறுபதுகளில் ,எழுபதுகளில் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கியவர். இவரது சிறுகதைகள் கல்கியில் சிறப்புச் சிறுகதைகளாக வெளிவந்துள்ளன. இவரது நாவலான 'பொன் மாலைப்பொழுது 'தினமணிக்கதிரில் அறுபதுகளின் இறுதியில் அல்லது எழுபதுகளின் ஆரம்பத்தில் வெளியானது. எனக்கு மிகவும் பிடித்த நாவலாக அப்போது இருந்தது. அதில் வரும் நடுத்தர வயது சோமு இன்னும் நினைவில் நிற்கின்றார். இவரை பெண் எழுத்தாளராகவே அப்போது எண்ணியிருந்தேன். காலப்போக்கில் அவரை மறந்து விட்டேன். அவரது பெயரில் இதயம் சஞ்சிகையில் பல பயணக்கட்டுரைகள் வெளியாகின. ஆனால் அவரை ஆணாகச் சென்னை நூலகம் தளக்குறிப்பு கூறுகிறது:
"எழுத்தாளர் எஸ். லட்சுமி சுப்பிரமணியம் அவர்களின் இயற்பெயர் ஆர்.சுப்பிரமணியம். இவர் 1930 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி பிறந்தார். 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, நமது சுதந்திர தினத்தன்று இவரது முதல் சிறுகதை ‘காவேரி’ மாத இதழில் வெளிவந்தது. ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், தினமணி, கதிர், தீபம், அமுதசுரபி, இதயம் பேசுகிறது, மங்கையர் மலர், ஞானபூமி, மயன், காலைக்கதிர், உங்கள் நலம், ஹெல்த் போன்ற பத்திரிகைகளில் இவரது நாவல், சிறுகதைகள், கட்டுரைகள், பேட்டிக் கட்டுரைகள், தொடர்கதைகள் வெளிவந்துள்ளன. இவரது சுமார் 20 நாவல்கள், 40 குறுநாவல்கள், 1000 சிறுகதைகள், 1500 கட்டுரைகள் வெளிவந்துள்ளன. கற்பனை இலக்கியம், ஆன்மிகம், மருத்துவம், மனோ தத்துவம், பயணக் கட்டுரை, இலக்கியம், சுயசரிதம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எண்பத்தைந்து புத்தகங்களை எழுதியுள்ளார். ஆனந்த விகடன் வெள்ளி விழா, கல்கி வெள்ளி விழா ஆகியவற்றில் சிறுகதைப் பரிசுகளையும், கலைமகள் இதழின் நாராயணசாமி ஐயர் நாவல் பரிசையும் பெற்றுள்ளார். ‘இலக்கிய சிந்தனை’ இவரது சிறுகதையைப் பாராட்டிப் பரிசு அளித்திருக்கிறது. அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் 1998ஆம் ஆண்டு இவரது ஐம்பத்தோர் ஆண்டு தமிழ் எழுத்துப் பணியைப் பாராட்டி விழா நடத்திக் கௌரவித்தது.... ‘ஞானபூமி’ ஆன்மிக மாத இதழில் துணை ஆசிரியராகவும், பின்னர் ஆசிரியராகவும் பணியாற்றி உள்ளார். ‘உங்கள் நலம்’ மருத்துவ மாத இதழின் ஆசிரியராக இரண்டரை ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். சுமார் 100 மருத்துவ நிபுணர்களைப் பேட்டி கண்டு கட்டுரைகளைத் தொகுத்துள்ளார். .. பகவான் ஸ்ரீசத்ய சாயிபாபாவின் தொண்டனாக நாற்பது ஆண்டுகளாகப் பணியாற்றி, அவரது அருளுரைகளைத் தொகுத்துள்ளார். சமுதாய நலப்பணிகளிலும் பங்கெடுத்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலத்தைப் புதுப்பிக்கும் பணி, ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தை உருவாக்கும் பணி ஆகியவற்றின் தலைமைப் பொறியாளராக திறம்பட பணியாற்றியுள்ளார்"
இக்குறிப்பைப் பார்த்தபோது அவர் ஆண் என்று குறிப்பிடப்பட்டிருப்பதை அறிந்தேன். இதை முகநூலில் பதிவாக இட்டிருந்தபோது எழுத்தாளர் யாழ்நங்கை (அன்னலட்சுமி ராஜதுரை) 'உங்களுடைய பதிவைப் பார்க்கும் வரை நானும் இவரை ஒரு பெண் எழுத்தாளர் என்ற கருத்திலேயே இருந்தேன் நல்லதோர் விவரமான பதிவு நன்றி' என்று கருத்துத் தெரிவித்திருந்தார். ஆனால் அண்மையில் பழைய கல்கி ஒன்றில் வெளியான லட்சுமி சுப்பிரமணியத்தின் சிறுகதையொன்றினைப் பார்த்தபோது ஆச்சரியமே ஏற்பட்டது. ஏனென்றால் அச்சிறுகதையுடன் பிரசுரிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் பெண் எழுத்தாளர்.
- எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் -
16.10.1966 கல்கி சஞ்சிகையில் வெளியான பெண் எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியத்தின் படத்துடன் கூடிய அவரது சிறுகதையான அக்கினிப் பிரவேசம் கதையின் பக்கத்தினை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன் ஒரு தகவலுக்காக. இக்கதை கல்கியின் வெள்ளி விழா ஆண்டுச் சிறுகதைப் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்ற சிறுகதை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே பெயரில் ஜெயகாந்தனும் புகழ்பெற்ற சிறுகதையொன்றினை எழுதியிருக்கின்றார். அதுவும் 1966இல் வெளியானதாகத் தெரிகிறது. ஆனால் இவற்றில் எது முதலில் வெளியானது என்பது இக்கணத்தில் உறுதியாகத்தெரியவில்லை.
சென்னை நூலகத் தளக்குறிப்பிலும் பெண் எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியத்தின் படைப்புகளை எழுதியவராக ஆண் எஸ்.லட்சுமி சுப்பிரமணியத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணத்துக்குக் கல்கி வெள்ளி விழாப் போட்டியில் பரிசு பெற்றவர் பெண் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம். ஆண் அல்லர். சென்னை நூலகக்குறிப்பு முற்றாகச் சரி பிழை பார்க்க வேண்டிய நிலையிலுள்ளது.
இதனைப் பார்க்கும்போது ஒன்று தெரிகிறது. ஆண் எஸ்.லட்சுமி சுப்பிரமணியனும், நான் அன்று வாசித்த எஸ்.லட்சுமி சுப்பிரமணியமும் வேறு வேறானவர்கள். அப்படியென்றால் ஏன் ஆண் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் புகழ்பெற்ற பெண் எழுத்தாளரான எஸ்.லட்சுமி சுப்பிரமணியத்தின் பெயரில் குளிர் காய்கின்றார்? பெண் எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியத்துக்கு என்ன நடந்தது?