* தமிழ் விக்கிமூலத்தில் தொல்காப்பியத் தரவு மேம்பாடு - முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் , முனைவர் இரா. நித்யா, கௌரவ விரிவுரையாளர் & விக்கிமீடியர், ஆங்கிலத்துறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அவினாசி, & தகவலுழவன், விக்கிமீடியர், சேலம் -
ஆய்வுச்சுருக்கம்
இந்தக் காலம் தொழில்நுட்ப வளர்ச்சி மிகுந்த காலம். காலத்திற்கு ஏற்ற வளர்ச்சியில் ஒரு மொழி பங்கு கொள்ளும் பொழுதுதான் அம்மொழி வளரும் என்று ஆய்வறிஞர்கள் கருதுகின்றனர். தமிழ் மொழி அவ்வாறே காலத்தைக் கடந்தும் வளர்ந்து வரும் மொழியாக அமைந்துள்ளது. தமிழ் மொழி வளர்ச்சியின் காலப் பரிமாணங்களில் பானையோடு, கல்வெட்டு, ஓலைச்சுவடி, செப்புப் பட்டயம், காகிதச் சுவடி, அச்சாக்கம், மின்னாக்கம், இணையம் ஆகியன அமைந்துள்ளன. அந்த வகையில் இணைய தளத்தில் தமிழ் மொழியின் தரவுகளைப் பதிவேற்றம் செய்வது காலத்தின் கட்டாயம் ஆகும். கல்விசார் வளங்களைப் பல்வேறு இணைய வளங்களில் பல்வேறு மொழிகள் பாதுகாத்து வருகின்றன. அவ்வாறு பாதுகாத்தல் வேண்டும் என்பதைக் கட்டற்ற தன்னார்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அப்படிப்பட்ட ஒரு கல்விசார் வளமாக விக்கிமூலம் அமைந்திருக்கின்றது. இத்திட்டத்தின் வழியாக மொழித்தரவுகளை மேம்படுத்தும் தன்னார்வலர்களுக்கு நிதியுதவி அளித்தும் போட்டிகள் நடத்தியும் ஊக்கப்படுத்தி வருகின்றார்கள் விக்கிமீடியா அறக்கட்டளையினர். இத்திட்டம் கட்டற்ற உரிமத்துடன் கல்விசார் ஆவணங்களைப் பாதுகாக்கும் திட்டமாக விளங்கி வருகின்றது. இது விக்கிமீடியா அறக்கட்டளையின் விக்கித் திட்டங்களுள் ஒன்று. இத்திட்டம் பற்றிய தகவல் இன்னும் பலரைச் சென்றடையவில்லை. விக்கிப்பீடியா சென்றளவில் கூட இத்திட்டம் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.