அஞ்சலி - எழுத்தாளர் பொன் குலேந்திரன் மறைவு! - வ.ந.கிரிதரன் -
எழுத்தாளர் பொன் குலேந்திரன் அவர்களின் மறைவுச் செய்தியினை முகநூல் வாயிலாக அறிந்தேன். துயருற்றேன். உண்மையில் இவரை நான் நேரில் சந்தித்ததில்லை, ஆனால் தொலைபேசி வாயிலாகவும், மின்னஞ்சல் மூலமும் அண்மைக்காலம் வரையிலும் என்னுடன் தொடர்பிலிருந்தார். கடைசியாக இவரது குவியம் அமைப்பும் (குவியம் என்னும் பெயரில் மின்னிதழ் நடத்தி வந்தவர்) தமிழகத்திலுள்ள கொலுசு அமைப்பும் நடத்திய " 2022 ஆம் ஆண்டிற்கான குவியம் - கொலுசு சிறுகதைப்போட்டி'க்காக என்னுடன் தொடர்பு கொண்டிருந்தார். அதற்காக என் சிறு பங்களிப்பையும் அவருக்கு அனுப்பியிருந்தேன்.
சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் என இலக்கியத்தில் பன்முகத்திறமை மிக்கவர். ஆங்கிலத்திலும் எழுதுவதில் வல்லவர். இவரது ஆங்கில நாவல்களும் மின்னூல்களாக வெளியாகியுள்ளன. சிறுவர் இலக்கியத்துக்கும் தன் பங்களிப்பை நல்கியவர். அவரது அறிவியற் சிறுகதைகளை நான் இரசித்து வாசிப்பதுண்டு. அவர் தனது அறிவியற் கதைகள் சிலவற்றைத் தொகுத்து தமிழகத்தின் ஓவியா பதிப்பகமாக வெளியிட்டபோது என்னிடம் அதற்காக அணிந்துரையொன்றினையும் கேட்டுத் தொடர்பு கொண்டிருந்தார். மகிழ்ச்சியுடன் எழுதிக் கொடுத்தேன். ஓவியா பதிப்பக வெளியிட்ட 'முகங்கள்' சிறுகதைத்தொகுப்புக்கும் விமர்சனக் குறிப்பொன்றினை எழுதியிருந்தேன்.
இவர் நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணப் புனித பரியோவான் கல்லூரியில் கற்றவர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பெளதிகத்துறையில் சிறப்பு இளமானிப் பட்டம் பெற்றவர். தொலைதொடர்புத் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர். சந்தைப்படுத்தலிலும் பட்டம் பெற்றவர்.