
பட்டலந்த படுகொலையின் அறிக்கையானது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின், (13.3.2025) மலையக பாராளுமன்ற தலைமைகள் பின்வரும் கூற்றுக்களை கூறினர்:
“எம்மை குறை கூறுவதில் பயனில்லை. மலையக திட்டங்களை நடைமுறைப்படுத்துங்கள்’’- எனத் திகாம்பரமும், “ இது போதாது, இதனோடு ஜேவி;பி யினரையும் சேர்த்துத்தான் விசாரிக்க வேண்டும்” என மனோ கணேசனும், “54 தொழிற்சாலைகளை ஜேவி;பி யினர் எரித்ததை மறப்பதற்கில்லை” என -ஜீவன் தொண்டமானும் தம் உரையில் கருத்து தெரிவித்திருந்தனர்.
மொத்தத்தில், பட்டலந்த படுகொலைகளை விமர்சிக்கும் அதே போர்வையில், மலையக மக்களின் பொருளாதார நிலைமைகள் குறித்தும் ஒரு பிடி பிடித்திருந்ததை நாம் அவதானிக்க கூடியதாகத்தான் இருக்கின்றது. இருந்தாலும், இதே தலைமைகள்தாம், ஒருவர் மாறி ஒருவராய் 50 ஆண்டுகள் மலையகத்தை ஆட்சி புரிந்து வந்தவர்கள் என்ற உண்மையையும் நாம் மறப்பதற்கில்லை.
ஏனெனில் மலையக மக்களின் வேதனம் குறித்து அல்லது வீட்டுக் குறைபாடுகள் குறித்து முழக்கமிடும் இதே தலைமைகள், நேற்று வரை, என்ன செய்தனர் என்ற கேள்வி மனதை குடைவதாகத்தான் உள்ளது. ஏனெனில், இவர்கள் பாராளுமன்றம் மாத்திரமில்லாமல் மாகாண சபை, உள்ளுர் அதிகார சபை என எங்கெங்கு அதிகாரங்கள் குவிந்திருந்ததோ அதையெல்லாம் வாரி சுருட்டி விட, இதே தலைமைகள்தாம் கடந்த காலங்களில் பின் நின்றதாயில்லை. நாங்கள்தான், “மலையக மக்கள்” என்றும் சரி அல்லது இதுவே ‘எமது தேசியம்’ என மனோ கணேசன் போன்றோர் கூறினாலும் சரி, இதுவே இவர்களது அரசியலானது. ஆனால் இத்தனை காலமும், இப்படியாக அதிகாரங்களை குவித்து கொண்ட இவர்கள், ஆக மொத்தத்தில், கடந்த காலங்களில் செய்ததுதான் என்ன என்ற கேள்வி மாத்திரம் எஞ்சி நிற்பதாகவே உள்ளது. நிலசீர்திருத்த சட்டமாகட்டும் அல்லது காணியுரிமை சட்டமாகட்டும் அல்லது சம்பள உயர்வுகள் ஆகட்டும், இவர்கள் மலையக மக்களின் ஒட்டுமொத்த விடயங்களில் எதைத்தான் செய்தார்கள் என்பது பிரச்சினையாகின்றது. இக்கேள்வியின் பின்னணியிலேயே, இவர்களின் கடந்த காலங்கள், பற்றிய சந்தேகமும் எழுந்தபடி இருப்பதானது இச்சந்தேகங்களுக்கு பக்கபலம் சேர்ப்பதாக உள்ளது. ஆனால் இன்று இவர்கள், மலையக மக்களின் சார்பிலேயே, நாம் அரசுக்கு முன்வைக்கும் கோரிக்ககைகள் இவை என இவர்கள் ஜேவி;பி அரசுக்கு வைக்கும் சவால்களானது சிரிப்பைத்தான் வரவழைக்கின்றது. இந்த பின்னணியிலேயே, இவர்கள் இன்று “இதைசெய்-அதைசெய்” என்று அரசுக்கு குரல் கொடுக்கும் போது, கடந்த 50 வருடமாய் இவர்கள் செய்ததென்ன என்பதெல்லாம் புரியாத புதிராகவே இருக்கின்றது.