- எழுத்தாளர் ஜோர்ஜ்.இ.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் 'அபத்தம்' இதழின் மூன்றாவது இதழில் வெளியாகியுள்ள வ.ந.கிரிதரனின் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி பற்றிய விரிவானதோர் அறிமுகக் கட்டுரை. 'அபத்தம்' இதழை வாசிக்க -  


எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் நினைவு தினம் பெப்ருவரி 14. அவர் மறைந்து 55 ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தருணத்தில்  இலக்கியப் புலமை காரணமாக அறிஞர் அ.ந.கந்தசாமி என்றழைக்கப்பட்ட  அவரது கலை, இலக்கியப் பங்களிப்பை நினைவு கூர்வதும் பொருத்தமானதே. சிறுகதை, கவிதை, நாடகம், நாவல், இலக்கியத்திறனாய்வு, மொழிபெயர்ப்பு என இலங்கை மற்றும் உலகத் தமிழ்  இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் காத்திரமான பங்களிப்பை நல்கியவர் அ.ந.க. அத்துடன் ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முக்கியமான ஒருவராகவும் கருதப்படுபவர்.  தன் குறுகிய வாழ்வில் தனக்குப் பின்னால்  எழுத்தாளர் பரம்பரையையே உருவாக்கிச் சென்றவர். அத்துடன் சமூக, அரசியற் செயற்பாட்டாளராகவும் விளங்கியவர்.   நாற்பதுகளில் வில்லூன்றி மயான சாதிப் படுகொலை பற்றி முதற்தடவையாகத் துணிச்சலுடன் குரல் கொடுத்த கவிஞர் அ.ந.கந்தசாமியே.

தமிழ் இலக்கியத்துக்குக் காத்திரமான பங்களிப்பை நல்கிய அ.ந.க.வை விரிவாக இனம் காண்பது முக்கியம்.  அவரது பன்முகப் பார்வைகளையும் வெளிக்கொணரும் வரையில்  அவரது படைப்புகள் முழுமையாக சேகரிக்கப்பட்டுத் தொகுப்புகளாக வெளிவருவதும் அவசியம்.    இது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல அந்த மகத்தான எழுத்துக் கலைஞனின் தன்னலமற்ற , இலட்சிய வேட்கை மிக்க இலக்கியப்பணிக்கு  செய்யப்பட வேண்டிய  கைம்மாறுமாகும். இதுவரையில் அவரது இரு படைப்புகள்  நூலுருப் பெற்றுள்ளன. அதுவும் அவரது இறுதிக் காலத்தில் தமிழகத்தில் வெளிவந்த ‘வெற்றியின் இரகசியங்கள்’. அடுத்தது ‘மதமாற்றம்’ மதமாற்றம் கூடத் தனிப்பட்ட ஒருவரின் நிதியுதவியின் மூலம் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம்  வெளியிட்ட நூல்.  'பதிவுகள்.காம்' பதிப்பில் அமேசன் - கிண்டில் மின்னூல்களாக  மனக்கண் (நாவல்) ,  எதிர்காலச்சித்தன் பாடல் (கவிதைத்தொகுப்பு) &  நான் ஏன் எழுதுகிறேன்? (கட்டுரைத் தொகுப்பு) ஆகிய படைப்புகள் வெளிவந்துள்ளன.

ஆரம்ப வாழ்க்கை பற்றிய தகவல்கள்…

யாழ் வண்ணார்பண்ணையில் 8-8-1924 பிறந்த அ.ந.க. 44 ஆண்டுகள் வாழ்ந்திருந்தார். பெப்ருவரி 14, 1968 அன்று மறைந்தார்.  அ.ந.க.வின் வாழ்நாள் பாரதியின் வாழ்நாளைப் போலக் குறுகியது. பாரதி 39 வருடங்களே வாழ்ந்திருந்தார். அ.ந.கவின் தந்தையாரான நடராஜா யாழ் வண்ணார்பண்ணையைச் சேர்ந்தவர்.  யாழ் சிறைச்சாலை மருத்துவராகப் பணி புரிந்தவர். தாயார் பெயர்: கெளரியம்மா.  இவர் அளவெட்டியைச் சேர்ந்தவர். ஒரு சகோதரர் - நவரத்தினம். சகோதரி - தையல்நாயகி. ஆறுமுகம் நடராஜா பல சொத்துக்களின் அதிபதியாக விளங்கியவர். அ.ந.கவுக்கு ஐந்து வயதாயுள்ளபோது தந்தை இறந்து விட்டார். தாயாரும் தந்தை இறந்து 41ஆம் நாள் இறந்து விட்டார். குழந்தைகள் மூவரையும் நீதிமன்றம் சட்டரீதியான பாதுகாவலர் ஒருவர் பொறுப்பில் விட்டது. [உண்மையில் கொழும்பிலிருந்த தந்தை வழி  உறவினரொருவர் மூன்று குழந்தைகளையும் தன் பாதுகாப்பில் எடுத்துச் சென்றதாகவும், அ.ந.க.வின் பாட்டி நீதிமன்ற உதவியின் மூலம் தன்வசம் எடுத்துக் கொண்டதாகவும் அறியப்படுகிறது.]  சொத்துகள் முறையாகப் பராமரிக்கப்படவில்லையெனத் தெரிய வருகிறது.  

தன்  ஆரம்பக் கல்வியை யாழ் இந்துக் கல்லூரியில் கற்ற அ.ந.க. சிறிதுகாலம் அளவெட்டி சென்று உறவினர் சிலருடன் வாழ்ந்து வந்தார். அளவெட்டியிலிருந்த காலத்தில் அ.ந.க. தனது கல்வியினைத் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் தொடர்ந்தார். பின்னர் மீண்டும் யாழ் இந்துக் கல்லூரியில் எஸ்.எஸ்.எல்.சி கல்வி கற்று பின்னர் கொழும்பு சென்றார். அ.ந.க. பதினாலு வயதிலிருந்தே எழுதத் தொடங்கி விட்டார். ஈழகேசரி சிறுவர் பகுதியில் எழுத ஆரம்பித்தார். அச்சமயம் ஈழகேசரி நடத்திய பேச்சு, கதை, கட்டுரைப் போட்டிகளில் பங்குபற்றியுள்ளார். கதைப்போட்டியில் முதற்பரிசும் பெற்றுள்ளதாக அறிகின்றோம்.
 
இள வயதிலேயே அ.ந.க வீட்டை விட்டு வெளியேறி கொழும்பு சென்று தன் வாழ்வை அமைத்துக்கொண்டார்.  கொழும்பில் இவ்விதம் இவர் வாழ்க்கையை ஆரம்பித்த காலகட்டத்தில் இவரது நெருங்கிய நண்பர்களிலொருவராக  விளங்கியவர் எழுத்தாளர் சில்லையூர் செல்வராசன். அவர் தனது 'கந்தனுடன் உள்ளம் கலந்த சுவைக் கணங்கள் 'என்னும் 6-2-1986 வெளியான  வீரகேசரிக் கவிதையில் இதனை விரிவாகப் பதிவு செய்துள்ளார்.  இவ்விதமானதொரு சூழலில்  குறுகிய காலத்தில் அவர் நிறைய நூல்களைக் கற்று, இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் வெற்றிகரமாகக் கால் பதித்ததோடு, செயல்வீரராகவும் விளங்கியது அவரது ஆற்றலைத்தான் காட்டுகிறது.  

அ.ந.க சிறிதுகாலம் கொழும்பு கறுவாக்காட்டுப் பகுதியில் மணமுடித்து வாழ்ந்திருந்ததாக அறியப்படுகின்றது. இவரது குடும்பவாழ்க்கை நீடிக்கவில்லை. சிறுவயதிலேயே வீட்டை விட்டுத் தனியாகக் கொழும்பு சென்ற அ.ந.க பட்டதாரியல்லர். ஆனால் கலாநிதிகள் தமது நூல்களை அவருக்கு அர்ப்பணிக்குமளவுக்குப் புலமை வாய்ந்தவர். கலாநிதி கைலாசபதி தனது ‘ஓப்பியல் இலக்கியம்’ என்னும் நூலினை அறிஞர் அ.ந.கந்தசாமிக்கு அர்ப்பணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை வாய்ந்தவர். 'ட்ரிபியூ'பில்  ஆங்கிலக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார்.

மேற்படி 'கந்தனுடன் உள்ளம் கலந்த சுவைக்கணங்கள்'  கவிதையில் சில்லையூர் செல்வராசன் அ.ந.க.வுடனான தனது நட்பு பற்றியும், அவரது பன்முக ஆளுமை பற்றியும் விரிவாகவே பின்வருமாறு பதிவு செய்திருக்கின்றார்:

"பேனா நிமிர்த்திப் பிடிக்கின்ற வல்லமையைத்
தானும் பெறுகின்ற தருணத்தில், தன்னோடு
நானும் பெறுமாறு நல்வழிகள் காட்டியவன்
'கந்தன்' எனச் செல்லக்கனிவுப் பெயர் கொண்டு
பந்தமுடன் நான் அழைத்த பரிவு மனமுடையான்.
எந்தக் கணமும் இலக்கியத்துக்கே உயிரைச்
சொந்தம் கொடுத்துச் சுகம் அழித்துக் கொண்டமகன்!
வாழ்வு முழுவதையும் வைத்தான் கலைக்கென்றே!
தாழ்வென்று மற்றோர்கள் தள்ளும் பழக்கங்கள்
ஒழுக்க வழக்கங்கள் என்கின்ற வேறுபாடான நெறித்
தடங்கள் அவன் சிந்தனைக்குத் தடங்கல் புரிந்ததில்லை!
சடங்கு முறையான சம்பிரதாயங்கள் எல்லாம்
தூக்கியெறிந்து, துணிந்து,புதுவேக
நோக்கும், நடப்பும், நுணுகிப் பொருள் ஆய்ந்து
பார்த்துச் 'சரி இந்தப் பார் உயர' என்றுணர்ந்த
நேர்த்திக் கருத்தை, நின்று நெற்றிக்கு நேராக
ஓங்கி எறிந்து அடித்தே உறைப்பாகச் சொல்திறனும்
ஆங்காரம் இன்றி உண்மை அறிவு நெறிமாணவனாய்
எந்தக் கணமும் இருக்கின்ற தன்னிறைவும்
நிந்தை கலவாமல் நேர்மையுடன் கண்டிப்புச்
செய்கின்ற போதும் திகழ்கின்ற கண்ணியமும்
வைகின்ற பேர்களையும் வாசாலகமாக
வாதாடி நா மடங்க வைக்கின்ற வல்லமையும்
தீதாடிச் சமூகத்தில் திரியும் பிற்போக்குகளைக்
கண்டால், உளம் உயிர் மெய்க் கரணங்கள் அத்தனையும்
விண்டு ஆடிப்போனது போல் வெந்து வெந்து போராடும்
உண்மை உளக்கலப்பும் ஒருங்கே திரண்ட பெரும்
திண்மை, அவன் 'நடத்தை'- கலைச்சிருஷ்டி இரண்டினிலும்
தோய்ந்திருக்கக் காணக்கொடுத்து வைத்த பாக்கியன் நான்.
ஓய்ந்திருக்கான். வாடி, உடல் நோயில் ஆழ்ந்திருந்த
வேளையிலும் நோய்க்கட்டில் மீதிருந்து கால் மீது
தாளை வைத்து நூலெழுதித் , தாழாதுஎம் நாட்டெழுத்து
மேன்மை விளங்க விடாமல் உழைத்தவன்! செந்
தேன் போற் கருத்துத் தெறிக்கும் அவன் படைப்பில்!
'ஸோலா'வின் 'நானா' சுவைத் தமிழில் தந்தநாள்;
மேலானதென்று ஈ.வே.ரா.பெரியார் பாராட்டி,
'விடுதலை'யிலே தொடராய் வெளியிட்ட ஆய்வு சுடர்
விடும் 'சிலம்புக் கட்டுரைகள் விநோதப் புனை நாமம்
பண்டிதர் திருமலைராயர் என்று பூண்டெழுதிக்
கண்டாய் அளித்திட்ட காலம்; திருச்சியிலே
வானொலியில் இலக்கண வரம்பு முறை பற்றித்
தேனொலிகள் செய்த தினம்; என்றிவ்வாறாக
'எதிர்காலச் சித்தன்' எனும் பாடல்; சிந்தனைகள்
முதிரக் கடவுளையே முந்த முந்தத் தன்னுடைய
'சோர நாயகன்' என்று சொல்கின்ற தீம்பனுவல்;
வேறதிக மேதகைமை மிளிரும் படைப்புகளும்,
'மனக்கண்', 'களனிவெள்ளம்'; மற்றும் வெளியாகாப்
புனைப்புகள் பற்பலவும் புத்தறிவு போதிக்கும்
'வெற்றியின் இரகசியங்கள்' விளக்கும் நூல் 'மதமாற்றம்'
முற்றிலும் நாடகத்துறை முதிர்விக்கக் கூர்தமிழில்
செய்தளித்துச் சென்ற திருக்கலைஞன் கந்தனது
மெய்யாம் திறமைகளை மிகவும் தெரிந்தவன் நான்.
பந்தமுடன் ஒன்றாய்ப் பணியாற்றிப் பல்லாண்டு
சிந்தைகலந்து ஒரே வீட்டிற் சேர்ந்திருந்தும் வந்ததனால்
கந்தன் எழுதாத காவியங்கள் நானறிவேன்!
சிந்தையுடன் கொண்டு சென்ற செய்திகளும் நானறிவேன்."

மறுமலர்ச்சிக்காலகட்டமும் அ.ந.க.வும்...

மறுமலர்ச்சிக் குழுவின் உருவாக்கத்துக்குரிய முக்கிய காரணகர்த்தாக்களில் ஒருவர் அ.ந.க. ஏனையவர்கள்: தி.ச.வரதராசன், பஞ்சாட்சர சர்மா, நாவற்குழியூர் நடராசன். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தோற்றத்துக்கு முக்கியமானவர்களிலொருவர் அ.ந.க. அதன் சங்கக் கீதத்தை இயற்றியவரும் அவரே. மறுமலர்ச்சிக் காலகட்டம் என்னும் பொழுது ‘மறுமலர்ச்சி’ என்னும் சஞ்சிகையின் காலகட்டத்தை மட்டும் கருதுவது தவறு. மறுமலர்ச்சி அமைப்பினரால் வெளியிடப்பட்ட சஞ்சிகையே ‘மறுமலர்ச்சி’ சஞ்சிகை என்பதை நினைவில் வைத்துக் கொள்வது அவசியம். அ.ந.கந்தசாமி மறுமலர்ச்சி சஞ்சிகையில் சிறுகதைகள் எழுதாவிட்டாலும் ‘மறுமலர்ச்சி’ அமைப்பு உருவாவதற்குரிய முக்கிய காரணகர்த்தாக்களிலொருவர்.இந்த வகையில் அ.ந.க.வை மறுமலர்ச்சி எழுத்தாளரென்று கூறுவதில் எந்தவிதத் தவறுமில்லை.

மறுமலர்ச்சி இயக்கத்தை உருவாக்கிய இளைஞர்கள் பற்றிக் குறிப்பிடுகையில் ஜனவரி 2007   ஞானம் சஞ்சிகையில்   வெளியான 'ஒரு காலத்தின் காலாக அமைந்தவர்' என்னும் கட்டுரையில் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பை மறக்காமல் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் பின்வருமாறு நினைவு கூர்வார்: "1940களில் மறுமலர்ச்சிச் சங்கம் நிறுவப்பட்டது. இதனை வரதராசன், சோ.தியாகராசா, நாவற்குழியூர் நடராஜன், பஞ்சாட்சர சர்மா, அ,ந,கந்தசாமி ஆகியோர் நிறுவினர்" ஆனால் இங்கு பேராசிரியர் அ.செ.முருகானந்தனைத்தவற விட்டு விட்டார். சோ.தியாகராஜாவுக்குப் பதிலாக அ.செ.மு என்றிருக்க வேண்டும்.

எழுத்தாளர் பஞ்சாட்சரசர்மா 1987இல் வெளியிட்ட 'பஞ்சாஷர்ம்' தொகுப்பு நூலில் 'மறுமலர்ச்சிக்காலத்து மறக்க முடியாத நண்பர்' என்னும் கட்டுரையில் வரதர் மறுமலர்ச்சிச் சங்கத்தை உருவாக்கிய ஐவர்களாக அ.செ.முருகானந்தன், தி.ச.வரதராசன், க.செ.நடராசா, அ.ந.கந்தசாமி, பஞ்சாட்சரசர்மா ஆகியோரைக் குறிப்பிடுவார். ஆனால் 2007இல் அவர் 'ஞானம்' சஞ்சிகைக்கு அளித்த நேர்காணலில் அவர் அ.ந.கந்தசாமி பற்றி நேர் காணலில் எங்குமே குறிப்பிடவில்லை. இது திட்டமிட்ட இருட்டடிப்பாகவே நான் கருதுகின்றேன். அந்தச் சங்கத்தை உருவாக்கியதில் அ.ந.கந்தசாமியின் பங்கு முக்கியமானது. அவரே பஞ்சாட்சர சர்மாவுக்குக் கடிதம் எழுதிச் சங்கத்துக்குள் கொண்டு வந்தவர். அதனைப் பஞ்சாட்சர சர்மா வெளியிட்ட 'பஞ்சாஷரம்' தொகுப்பு நூலிலுள்ள அ.ந,கந்தசாமி பஞ்சாட்சர சர்மாவுக்கு 10.6.1943 எழுதிய கடிதத்தின் மூலம் அறியலாம்.

இவ்விதம் உருவாக்கிய மறுமலர்ச்சிச் சங்கத்தின் இணைக்காரியதரிசிகளாக இருந்தவர்கள் அ.ந.கந்தசாமியும், வரதருமே. இதனை மார்ச் 1970 மல்லிகையில் வெளியான அ.ந.கந்தசாமி எழுதிய கடிதத்தில் காணலாம்.  

உண்மையில் ஆரம்பத்தில் அ.ந.க மாணவனாக இருந்த சமயம் மறுமலர்ச்சி  கையெழுத்துச் சஞ்சிகையாக வெளியாகியுள்ளது.  பின்னர் அப்பெயரில் அமைப்பு உருவானபோது அவர் அதன் இணைச்செயலாளராக இருந்துள்ளார். அப்பொழுது அவர் யாழ் இந்துக்கல்லூரி மாணவனும் கூட.   மறுமலர்ச்சி அமைப்பு முதலில் மறுமலர்ச்சி என்னும் கையெழுத்துச் சஞ்சிகையை வெளியிட்ட  காலம் 1943 -1946. பின்னரே மறுமலர்ச்சி அச்சிதழாக (1946 -1948) வெளியானது.

மறூமலர்ச்சி அமைப்பு, அதன் பங்களிப்பு மற்றும்  மறுமலர்ச்சி சஞ்சிகை பற்றிய ஆராய விரும்பும் எவரும் மறுமலர்ச்சி கையெழுத்துச் சஞ்சிகை, மறுமலர்ச்சி அமைப்பு, மறுமலர்ச்சி அச்சிதழ் என ஆய்வினை விரிவு படுத்த வேண்டியது அவசியம் என்பதையே இத்தகவல்கள் எடுத்துக்காட்டுகின்றன.

அ.ந.கந்தசாமியின் சிறுகதைகள்….

அறிஞர் அ.ந.கந்தசாமி சுமார் 60 சிறுகதைகளாவது எழுதியிருப்பாரென அறியக் கிடக்கின்றது. இவற்றில் உதவி வந்தது (பாரதி இதழ்) , வழிகாட்டி ( பாரதி இதழ்) , .இரத்த உறவு (பாரதி) , .புதுப் புனல் ( உதயம் மலரில்) , .நாயினும் கடையர் ( வீரகேசரி) , .காளிமுத்து இலங்கை வந்த கதை ( தேசாபிமானி) , .பாதாள மோகினி (சுதந்திரன்) , .நள்ளிரவு (சுதந்திரன்) , .ஐந்தாவது சந்திப்பு ( சுதந்திரன்) , .பரிசு ( சுதந்திரன்) , குருட்டு வாழ்க்கை .,.உலகப் பிரவேசம் , .ஸ்ரீதனம் , .பிக்பொக்கட் , சாகும் உரிமை , கொலைகாரன் , சாவுமணி போன்றவை பற்றிய தகவல்களையே பெற முடிந்தது. இவற்றிலும் ஒரு சிலவற்றையே பெற முடிந்தது. ஏனையவை ஆங்காங்கே பத்திரிகை, சஞ்சிகைகளில் சிதறிக் கிடக்கின்றன. இவற்றில் எத்தனை காலத்தால் அழியுண்டு போயினவோ நாமறியோம். இந்நிலையில் இயலுமானவரையில் அவை சேகரிக்கப்பட வேண்டும். ஆவணப் படுத்தப்பட வேண்டும்.

இவரது சிறுகதைகள் பற்றித் தனது ‘ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை மணிகள்’ நூலில் அண்மையில் மறைந்த எழுத்தாளர் செம்பியன் செல்வன் ‘இரத்த உறவு (மறுமலர்ச்சி), நாயிலும் படையர் (வீரகேசரி), காளிமுத்து இலங்கை வந்த கதை (தேசாபிமானி) பாதாள மோகினி, நள்ளிரவு, ஐந்தாவது சந்திப்பு (சுதந்திரன்), பரிசு, குருட்டுவாழ்க்கை, உலகப்பிரவேசம், ஸ்ரீதனம், பிக்பொக்கட், சாகும் உரிமை, கொலைகாரன், உதவிவந்தது, வழிகாட்டி ஆகிய கதைகளை அ.ந.க. தனது நல்ல கதைகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.  இரத்தஉறவு, ஐந்தாவது சந்திப்பு, நாயிலும் கடையர், – ஆகிய கதைகள் இவருக்குப் பெரும் புகழீட்டிக் கொடுத்தன. முதலிரு கதைகளும் சிங்கள மொழியில் பெயர்க்கப்பட்டு புகழ்பெற்றவை. தேயிலைத் தோட்டவாழ்வு பற்றிய நாயிலும் கடையர் – மிகச் சிறந்த தமிழ்ச் சிறுகதை என பல்வேறு ஈழத்து விமர்சகர்களால் பாராட்டப்பட்டதொன்று…. அத்துடன் வாழ்வின் உயிர் நாடியான சமூகப்பிரச்சினையான இவற்றைப் பொருளாகக் கொண்டு இவரின் கதைகள் எழுந்தன. சமூக ஆராய்வின்போது எழும் முடிவுகள் – தத்துவஞானிக்குத் தத்துவங்களாகவும், எழுத்தாளனுக்கு கதைகளாகவும் வெளியாகின்றன. உண்மையில் சிறந்த எழுத்துக்கள் வாழ்வின் நடப்பியல்பில் பிறப்பன அல்ல. அவ்வியல்புகளின் ஆராய்வின் முடிவிலேயே பிறக்கின்றன என்பதற்கு இவரின் கதைகள் சிறந்த உதாரணங்களாகும்’ என்று கூறுவது கவனிக்கத் தக்கது. பேராசிரியர் கா.சிவத்தம்பி 'அ.ந.க.வின் இரத்த உறவு போன்ற கதைகள் சமூகத்தை வன்மையாகச் சாடுபவை' என்பார்.

 

- அமேசன் - கிண்டில் பதிப்பு. மின்னூல். பதிவுகள்.காம் வெளியீடு. -

அ.ந.கந்தசாமியின் கவிதைகள்..

கவீந்திரன், பண்டிதர் திருமலைராயர், கலையரசன், சிப்பி, புரூனே என்னும் புனைபெயர்களிலும் எழுதிக் குவித்தவர்.  இவரது கவிதைகள் தமிழமுது, தேன்மொழி, ஈழகேசரி, வசந்தம், வீரகேசரி, பாரதி, தினகரன், ம்ல்லிகை, நோக்கு, இளவேனில், சுதந்திரன், ஸ்ரீலங்கா போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளிவந்திருக்கின்றன . அ.ந.க.வின் கவிதைகள் வெளிவந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் அவர் பங்கு பற்றிய கவியரங்குகள் பற்றிய விரிவான ஆய்வொன்று மேற்கொள்ளப்படவேண்டியதவசியம்.

மரபுக் கவிதை எழுதுவதில் மிகுந்த பாண்டித்தியம் மிக்கவர் அ.ந.க. ஆனால் இவரது மரபுக்கவிதைகள் ஏனைய பண்டிதர்களின் மரபுக்கவிதைகளைப் போன்றவையல்ல. துள்ளு தமிழ் கொஞ்சுபவை.அன்றொருநாள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வள்ளிப்பிள்ளை என்பவரின் பிரேதத்தை நகரசபைக்குச் சொந்தமான வில்லூன்றிமயானத்தில் புதைப்பதற்காகத் தலைமை தாங்கிச் சென்ற ஆரியகுளத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் சாதி வெறியர்களால் கொல்லப்பட்ட நிகழ்வை இவரது ‘வில்லூன்றி மயானம்’ என்னும் கவிதை சாடுகிறது. இச்சம்பவம் நிகழ்ந்த காலத்தில் ஏனைய கவிஞர்கள், எழுத்தாளர்களெல்லாம் அதனை விமர்சிக்கப் பயந்திருந்த நிலையில் அறிஞர் அ.ந.க அதனை வன்மையாகக் கண்டித்தார். தீண்டாமைக்கெதிராக வெடித்திட்ட புரட்சித்தீயாக அதனைக் கண்டார்.

‘சிறுகதையைப் போலவே, கவிதைத் துறையிலும் இவர் வெற்றியீட்டினார். ‘எதிர்காலச் சித்தன் பாட்டு’, துறவியும் குஷ்டரோகியும், சத்திய தரிசனம் என்பன சிறந்தவை’ என்பார் எழுத்தாளர் செம்பியன் செல்வன். இவரது ஆரம்பக் கவிதைகளிலொன்றான ‘சிந்தனையும், மின்னொளியும்’  நல்லதொரு கவிதை. ‘ஈழத்துச் சாகித்திய அமைப்பின் இலக்கிய நிகழ்வொன்றில் பாடப்பட்ட இவரது ‘கடவுள் – என்சோரநாயகன்’ என்ற கவிதையைக் கேட்ட, தென் புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை ‘ ஒரு நூற்றாண்டிற்கு ஒருமுறைதான் இப்படிப் பட்ட நல்ல கவிதை தோன்றும்’ என்று கூறியதாக அநதனி ஜீவா, செம்பியன் செல்வன் போன்ற பல எழுத்தாளர்கள் தமது கட்டுரைகளில், ஆய்வு நூல்களில் பதிவு செய்துள்ளார்கள். எழுத்தாளர் காவலூர் ராஜதுரையும் அ.ந.க.பற்றியத் தினகரனில் எழுதிய கட்டுரையில் “சாகித்திய மண்டலத்தின் ‘பா ஓதல்’ கவி அரங்கிலும் கந்தசாமியின் குரல் ஒலித்தது. ‘கடவுள் என் சோர நாயகன்’ என்னும் தலைப்பில் அவர் ஓதிய பா, அவரே குறிப்பிட்டதுபோல, தமிழுக்கே புதியது. ‘நாயகனாகவும், நாயகியாகவும், குழந்தையாகவும் மற்றும் பலவாறாகவும் கடவுளைத் தமிழ்க் கவிஞர் பலர் பாவித்திருக்கின்றார்கள். ஆனால் எவராவது சோர நாயகனாகப் பாவித்ததிண்டோ?’ என்றார் கந்தசாமி” என்று குறிப்பிட்டுள்ளார். இவையெல்லாம் அ.ந.க ஈழத்துக் கவிதையுலகில் தவிர்க்கப்படாத முக்கிய படைப்பாளியென்பதை உறுதி செய்யும்.

இவரது ஆரம்ப காலத்துக் கவிதைகளிலொன்றான , ஈழகேசரியில் வெளிவந்த, 'சிந்தனையும், மின்னொளியும்' என்ற கவிதை முக்கியமான கவிதைகளிலொன்று. 'அர்த்த இராத்திரியில் கொட்டுமிடித்தாளத்துடனும், மின்னலுடனும் பெய்யும் மழையைப் பற்றிப் பாடப்படும் இக்கவிதையில் , அந்த இயறகை நிகழ்வு கூடக் கவிஞரிடம் சிந்தனையோட்டமொன்றினை ஏற்படுத்தி விடுகின்றது. கணப்பொழுதில் தோன்றி அழியும் மின்னல் கூட ஒரு சேதியைக் கூறிவிடுகிறது. அது என்ன?

'கொட்டுமிடித்தாளம் இசைய நடம் செய்யும்
மட்டற்ற பேரழகு வான்வனிதை போல் மின்னல்
தோன்றி மறைந்ததுவே; சிந்தனையின் தரங்கங்கள்
ஊன்றியெழுந்தன இவ் வொளிமின்னல் செயல் என்னே?
வாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ?
சாவும் பிறப்புமக் கணநேரத் தடங்குமன்றோ?
ஐனனப் படுக்கையிலே ஏழைமின்னல் தன்னுடைய
மரணத்தைக் கண்டு துடிதுடித்து மடிகின்ற
சேதி புதினமன்று....'

இவ்விதமாகக் கணப்பொழுதில் தோன்றி மறையும் மின்னல் கூறும் சேதிதானென்ன? அதன் சோதிதான் அதன் சேதி. சிறுகணமே வாழ்ந்தாலும் அம்மின்னல் உலகிற்கு ஒளி வழங்குவதன் மூலம் நல்லதொரு சேவையைச் செய்து விட்டுத்தான் ஓடி மறைகிறது. மனித வாழ்வும் இத்தகைய மின்னலைப் போன்றுதான் விளங்க வேண்டும். இதுதான் மண்ணின் மக்களுக்கு கணப்பொழுதில் தோன்றி மறையும் மின்னல் சொல்லும் சேதி. இதுதான் கவிஞரிடத்தில் அவ்வியற்கை நிகழ்வு தூண்டிவிட்ட சிந்தனையின் தரங்கங்கள்.

'....அச் சேதியிலே நான் காணும்
சோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு
ஓடி மறைகிறது; வாழும் சிறு கணத்தில்
தேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்ததுவே!
சேவையதன் மூச்சு; அச்சேவை யிழந்தவுடன்
ஆவிபிரிந்து அகல்வானில் கலந்ததுவே!
என்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன்.
மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும்.
வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே
நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்.'

மேற்படி 'சிந்தனையும் மின்னொளியும்' என்னும் அ.ந.க.வின் ஆரம்பகாலக் கவிதை அ.ந.கவிற்கு மிகவும் பிடித்ததொரு கவிதை. மேற்படி மின்னலைப் போலவே தோன்றி குறுகிய காலமே வாழ்ந்து ஒளி வீசி மறைந்தவர் அ.ந.க. மின்னல் கூறிய பாடத்தினையே பின்பற்றி வாழ்ந்தவர் அவரென்பதை அவரது 'தேசாபிமானி' பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையான 'நான் ஏன் எழுதுகிறேன்? ' என்னும் கட்டுரை புலப்படுத்துகிறது. (வ.ந.கிரிதரனை இதழாசிரியராக கொண்டு வெளிவந்த மொறட்டுவைப் ப்லகலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தினரின் 'நுட்பம்' (1981) வருடாந்தச் சஞ்சிகையிலும் இக்கட்டுரை மீள்பிரசுரம் செய்யப் பட்டிருக்கின்றது. ஜோர்ஜ் இ.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான தாயகம் பத்திரிகையிலும் மேற்படி அ.ந.க.வின் கட்டுரை மீள்பிரசுரமாகியுள்ளது] அக்க்ட்டுரையில் மேற்படி தனது ஆரம்பகாலக் கவிதையினைக் குறிப்பிடும் அ.ந.க. மேலும் தொடர்ந்து கூறுவார்:

'....இம்மின்னல் எனக்குணர்த்தும் செய்தி என்ன? "சில நாட்களே நீ இவ்வுலகில் வாழ்ந்தாலும் மக்களுக்கும், உலகுக்கும் பயனுள்ளவனாக வாழ். இன்று நீ இருக்கிறாய். நாளை இறந்து விடலாம். ஆகவே நன்றே செய்க. அதையும் இன்றே செய்க" இது தான் மின்னல் சொல்லித் தரும் பாடம். இருளை விரட்டி ஒளியைப் பரப்பும் மின்னல் சமுதாயத்தில் சூழ்ந்துள்ள மடமை, வறுமை முதலான இருள்களை நீக்கி, அறிவையும் ஆனந்தத்தையும் பரப்பும்படி எனக்குப் பணித்தது. வாழ்க்கையையே இதற்காக அர்ப்பணிக்கவேண்டும் என்ற ஆசை மேலிட்ட நான் என் எழுத்தையும் அத்துறைக்கே பயன்படுத்த வேண்டும் என்று நினைத்ததில் வியப்பில்லை அல்லவா?...'

இதன் மூலம் அ.ந.கவின் ஆரம்பகாலக் கவிதையான் 'சிந்தனையும், மின்னொளியும்' கவிதை அவரது எதிர்கால இலக்கிய வாழ்வின் அடித்தளமாக, உந்து சக்தியாக விளங்குவதைக் காணமுடிகிறது. அவரது படைப்புகள் எல்லாமே மேற்படி அவரது இலட்சிய வேட்கையைப் புலப்படுத்துவனவாகவேயிருக்கின்றன.

 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் தினகரனில் வெளிவந்த தொடர்கட்டுரையில் எழுத்தாளர் அநதனி ஜீவா 'அ.ந.க. ஆரம்பகாலத்தில் கவீந்திரன் என்னும் பெயரில் நிறைய எழுதியிருப்பதாகக் குறிப்பிடுவார். 'தேசபக்தன்' பத்திரிகையில் 'கசையடிக் கவிராயர்' என்னும் பெயரில் அ.ந.க இலக்கிய உலகின் மோசடிகளைச் சாடிக் கவிதைகள் பல எழுதியுள்ளதாகவும் மேற்படி அந்தனி ஜீவாவின் கட்டுரை தெரிவிக்கின்றது.  'தேயிலைத் தோட்டத்திலே' என்ற இவரது கவிதை 'பாரதி' சஞ்சிகையில் 'கவீந்திரன்' என்னும் புனைபெயரில் வெளிவந்தது. காலையில் விழித்தெழுந்து, குழந்தைக்குப் பாலூட்டி விட்டு, அக்குழந்தை பற்றிய எதிர்காலக் கனவுகளில் மூழ்கி, பழையதை உண்டுவிட்டு, மூங்கிற் கூடையினை முதுகினில் மாட்டிவிட்டு வேலைக்குச் செல்லும் தோட்டத் தொழிலாளப் பெண்ணொருத்தியைப் பற்றிப் பாடும் கவிதையிது.

'பானையிலே தண்ணீரில இட்டிருநத
பழயதனை எடுத்தே உண்டுமிஞ்ச
மானைநிகர் கண்ணாள் தன் மணவாளர்க்கு
மற்றதனை வைத்துவிட்டு விரைந்து சென்று
கானகத்து மூங்கிலிலே வேய்ந்த கூடை
கழுத்தினிலே பின்புறமாய்த் தொங்கவிட்டு
தானெழுந்து விரைவாள் தன் வேலைக்காடு!
தன் கண்ணின் ஓரத்தைத் துடைத்துக்கொள்வாள்! '

இது போல் இன்னுமொரு கவிதையான 'முன்னேற்றச் சேனை' (மேற்படி இரு கவிதைகளும் 'பாரதி' என்னும் சஞ்சிகையில் வெளிவந்தவை ) 'மூடத்தனம் யாவு நிர் மூலமாகி வீழ்ந்திட', 'மங்கி நிற்கும் பாசிசத்தை மண்ணிடத்தே புதைத்திடப்' புறப்பட்ட 'முன்னேற்றச் சேனை' பற்றிப் பாடும்.

அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாட்டு'  தேன்மொழி கவிதை  சஞ்சிகையின் முதலாவது இதழில் (புரட்டாசி 1955)  வெளியான கவிதை.  நிகழ்கால மனிதன் எதிர்கால மனிதனின் இருப்பிடத்துக்குக் காலம் தாண்டிச் சென்று, சந்தித்து, உரையாடி மீண்டு வருவதைக் கூறும் கவிதை. நிகழ்கால மனிதனொருவன் காலத்தைத் தாண்டி எதிர்காலச் சித்தன் வாழும் உலகிற்கு வந்துவிடுகின்றான். நாடு, மதம், மொழி, இனம், ஏழை, பணக்காரன், சாதியென்று பிளவுண்டு, போர்களினால் சூழப்பட்டிருக்கும் நிகழ்கால உலகிற்கு எதிராகப் பிரிவினைகளற்ற, பேதங்களற்ற மனிதர்களென்றவொருரீதியில் அன்புடன் வாழும் சமுதாயமொன்றில் வாழும் எதிர்காலச்சித்தனொருவனின் உலகினைச் சித்திரிக்கும் கவிதையிது. அருமையான கவிதை. எதிர்காலச் சித்தனிற்கும், நிகழ்கால மனிதனுக்குமிடையில் நிகழும் உரையாடலாக அமைந்துள்ள நீண்ட கவிதை.

'அரசெல்லாம் ஒழிந்துலகில் ஓரரசே யுண்டாம்
அறங்கூறும் ஒருமதமே உலகெல்லாம் ஆகும்
விரசமொடு விகற்பங்கள் வளர்க்குமொழி எல்லாம்
வீழ்ந்துவிடும் ஒருமொழியே ­அவ்வுலகில் உண்டாம்
சரசமொடு உலகத்து மககளெல்லாம் தம்மைச்
சமானர்கள் மனிதகுலம் என்ற இன மென்பார்
அரசர்கள் ஏழைபணக்காரனென்ற பேதம்
அத்தனையும் ஒழிந்து விடும் எதிர்கால உலகில்'

என்று எதிர்காலச் சித்தன் கூறுவான். அத்துடன் அச்சித்தன் வாழும் புதுயுகத்தில் மானிடர்கள் இனம், மதம், நாடு போன்ற எல்லைகளைக் கடந்து மனிதர்களென்ற ஓரினமாகவும், ஒரே மொழிபேசுபவர்களாகவும் விளங்குவர். அவ்வெதிர்காலச் சித்தன் வாழும் உலகு காலம் தாண்டிச் சென்ற நிகழ்கால மனிதனுக்கு மிகுந்த உவகையினைக் கொடுத்தது. அதன் விளைவாக அவன் எதிர்காலச் சித்தனைப் பார்த்து,

"எதிர்காலச் சித்தா உன் இனியமொழி கேட்டேன்.
எண்ணங்கள் விரிவடையும் என்னுடன் நீவந்து
மதி கெட்டார் வாழ்கின்ற வையகத்தில் புதிய
வாழ்வேற்றிச்செல்வாயோ..' என்றிறைஞ்சி நிற்கிறான்.

அதனைக் கேட்டதும் எதிர்காலச்சித்தனின் இதழ்களிலே குஞ்சிரிப்பொன்று பிறக்கின்றது. அச்சிரிப்பினூடு 'காலத்தின் கடல்தாவி நீ இங்கு வந்த காரணத்தால் ஏதறிவு என்பதை நீ கண்டாய். ஆனால் உன்னுலகில் நிகழ்கால மயக்கத்தில் வாழ்வோர் இந்த ஞானத்தினைக் காண்பாரோ? இல்லை. இத்தகையதொரு நிலையில் காலத்தை நான் தாண்டிக் காசினிக்கு வந்தால் விடத்தைத் தந்து சோக்கிரதரைக் கொண்ட உன் சோதரர்கள் கட்டாயம் என்னை ஏற்றி மிதித்திடுவார்கள்' என்கின்றான். அதனால் 'நிகழ்கால மனிதா! நான் அங்கு வரேன். நீ போவாய்' என்கின்றான். எனவே ஏமாற்றத்துடன் மீண்டும் நிகழ்கால உலகிற்கே நிகழ்கால மானுடன் திரும்புகின்றான். திரும்பியவனை நடைபெறும் மடைமைப் போர்களும், நடம் புரியும் தீதுகளும் திடுக்கிட வைக்கின்றன. 'என்றிவர்கள் உண்மை காண்பாரோ?' என ஏக்கமுற வைக்கின்றன. அதனையே கவிஞர் பின்வருமாறு கூறுவார்:

'புதுயுகத்தின் குரல்போல் எதிர்காலச் சித்தன்
புகன்றமொழி கேட்டபின்னர் யானவனைப் பார்த்து
"எதிர்காலச் சித்தா உன் இனியமொழி கேட்டேன்.
எண்ணங்கள் விரிவடையும் என்னுடன் நீவந்து
மதி கெட்டார் வாழ்கின்ற வையகத்தில் புதிய
வாழ்வேற்றிச்செல்வாயோ என்றிறைஞ்சி நிற்க
மெதுவாகச் செவ்விதழ்கள் திறந்ததையுமங்கே
மென்னிலவுக் குஞ்சிரிப்புப் பிறந்ததையும் கண்டேன்.

காலத்தின் கடல் தாவி நீ­ங்கு வந்த
காரணத்தால் ஏதறிவு என்பதை நீ கண்டாய்
ஞாலத்தில் நிகழ்கால மயக்கத்தி லுள்ளோர்.
ஞானத்தைக் காண்பாரோ? காணார்களப்பா
காலத்தை யான்தாண்டிக் காசினிக்கு வந்தால்
கட்டாயம் ஏனையவர்கள் ஏற்றிமிதித்திடுவார்
ஆலத்தைத் தந்தன்று சோக்கிரதரைக் கொன்ற
அன்பர்களுன் மனிதச் சோதரர்களன்றோ?

ஆதலினால் நிகழ்கால மனிதா அங்கு
யான்வரேன் நீபோவாய் என்றான் ஐயன்
காதலினால் கால்களென்னும் கமலம் தொட்டுக்
கண்ணொற்றி விடைபெற்றேன் திரை நீங்கிற்று.
பாதகர்கள் முழுமடைமைப் போர்கள் சூழும்
பாருக்கு நிகழ்காலம் வந்தேன் எங்கும்
தீதுகளே நடம்புரியும் நிலைமை கண்டு
திடுக்கிட்டேன் என்றிவர்கள் உண்மைகாண்டல்?'

மேற்படி கவிதையினை நவீனத்தமிழ்க் கவிதையுலகில் வெளிவந்த முதலாவது விஞ்ஞானக் கவிதையெனக் குறிப்பிடலாமா? ஆய்வாளர்கள்தான் பதிலிறுக்க வேண்டும். ஆயினும் நான் அவ்விதம்தான் கருதுவேன். மேற்படி 'எதிர்காலச் சித்தன்' கவிதை நிகழ்கால மனிதன் காலம் கடந்து செல்வதை மட்டும் குறிக்கவில்லை. அ.ந.க கண்ட இலட்சிய உலகினையும், கனவினையும் கூடவே வெளிப்படுத்தி நிற்கின்றது. நவீனத்தமிழ்க் கவிதையுலகில் குறிப்பிடத்தக்க முக்கியமான கவிதைகளிலொன்றாக இதனை நான் இனங்காணுகின்றேன். அ.ந.க.வையே மேற்படி கவிதையில் வரும் எதிர்காலச்சித்தனாகவும் நான் உணருகின்றேன். அவரது உள்ளத்தில் கனன்று கொண்டிருந்த இலட்சியக் கனவின் வடிவமாகவே எதிர்காலச் சித்தன் விளங்குகின்றான். அத்துடன் அ.ந.க.வின் சிந்தனைத் தெளிவினையும், கவி புனையும் ஆற்றலையும் கூட மேற்படி கவிதை விளக்கி நிற்கின்றது.

அ.ந.கந்தசாமி அவ்வப்போது கவியரங்கங்களிலும் பங்குபற்றித் தலைமை வகித்துள்ளார்; கவிதைகள் பாடியிருக்கின்றார்.  இவ்விதமாக அவர் பங்குபற்றிய கவிதையரங்கொன்றுதான் வேலணையூர்த் தொல்காவிய மன்றில் நடைபெற்ற தமிழ்மறை விழாக் கவியரங்கு. தமிழ் மறையாம் திருக்குறளினை வழங்கிய 'வள்ளுவர்' பற்றிய நீண்ட கவிதை தமிழ்க் கவிதையுலகில் திருவள்ளுவர் பற்றி வெளிவந்த அற்புதமான கவிதைகளில் நானறிந்த வரையில் முதன்மையானது. மேற்படி கவிதை வள்ளுவரின் சிறப்பினையும், கூடவே அ.ந.க அவர்மேல் வைத்திருந்த அபிமானத்தையும் புலப்படுத்தி நிற்கும். அத்துடன் அழகாகச் சொற்களை அடுக்கிச் சிந்தனையைத் தூண்டும் வகையில், மனதினை ஈர்க்கும் வகையில் கவிபுனையும் அ.ந.க.வின் ஆற்றலுக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகின்றது.

'மதங்களை அடிப்ப்டையாக புலவர்கள் கொள்ளுமொரு காலகட்டத்தில் வள்ளுவரோ மன்னுலக வாழ்வை மட்டுமே அடிப்படையாகக் கொள்கின்றார். மற்றவரோ வீடென்றும், மோட்சமென்றும் புனைய வள்ளுவரோ இல்வாழ்வுக்குரிய அறம், பொருள், இன்பம் பற்றி உரைத்திடுகின்றார்' இவ்விதம் கூறும் அ.ந.க

'இது நல்ல மாற்றமென இங்கெடுத்துச் சொல்வோம்.
இவர் குறளைக் கையேந்தி இவ்வுலகை வெல்வோம்' என்கின்றார்.

அத்துடன் 'வறுமையினை ஒழித்திடுதல் வேண்டுமெனும் நெஞ்சினை வள்ளுவனார் கொண்டிருந்தார் என்பதை'

'வேந்தரது அரண்சிறப்புச் சொல்லவந்தபோது 1"உறுபசியும் பிணிநோயும் செறுபகையும் சேரா(து) உற்றிடுதல் ஒன்றல்ல நா"டென்று கேட்டார்' என்று குறிப்பிடும் அ.ந.க மேலும் 'பெரும்பசியை முதற்குற்ற மெனஎடுத்துச் சொன்னார் பெரும்புலவர் வள்ளுவனார் ஏழைகளின் தோழன்' என்று விபரிக்கும் அ.ந.க மேலும் தொடர்ந்து வள்ளுவனார் வழிவந்த பாரதியார் 'தனி யொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்றார். ஆனால் வள்ளுவரோ 'தள்ளுவதோ வாழ்க்கையினைப் பிச்சைஎடுத் திங்கே? அவ்விதமேல் சாய்கஅந்த ஆண்டவனும்' என்று பல்லாண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டதைச் சுட்டிக் காட்டுவார்:

'வள்ளுவனார் வழிவந்த பாரதியார் சொன்னார்
2"வையத்தை அழித்திடுவோம் தனிமனிதன் ஒருவன்
உள்ளநிறை வோடுண்ண உணவில்லை என்று
உளம்வருந்து வானாயின்" என்பதவர் பாட்டு.
வள்ளுவர் தாமும்பல் லாண்டுகட்கு முன்னர்
வழுத்தினார் இதன் பொருளை ஆவேசத்தோடு
3"தள்ளுவதோ வாழ்க்கையினைப் பிச்சைஎடுத் திங்கே?
அவ்விதமேல் சாய்கஅந்த ஆண்டவனும்" என்றார்'

இவ்விதமாக வள்ளுவரை மக்கள் கவிஞ்னாக, ஏழைகளின் தோழனாக அவனது குறட்பாக்களினூடு காணும் கவிஞர்

'கலைக்காகக் கலைஎன்று கதறுபவர் உண்டு
கருத்துக்கே முதன்மை தரும் வள்ளுவனார்கண்டு
கலைஇந்தச் சமுதாய வளர்ச்சிக்கே என்று
கருத்துடையார் உணரட்டும் காசினியில் அன்று
விலையில்லாத் திருக்குறளைத் தந்திட்ட மேதை
வியனுலகில் காட்டுகின்றார் பாதையதே பாதை.
கலைஞர்களே எழுந்திடுங்கள் வள்ளுவனார் காட்டும்
கவினுடைய பாதையிலே பேனாவை ஓட்டும்'

என்று மேலும் பாடி , வள்ளுவரை கருத்துக்கு முக்கியம் தரும் கலை படைக்குமொரு சமுதாயச் சிந்தனை மிக்க படைப்பாளியாகச் சித்திரிப்பார். கலை கலைக்காக என்று கருதுபவர்கள் கலை இந்தச் சமுதாய வளர்ச்சிக்கே என்று வள்ளுவரைப் பார்த்து உணரட்டுமென்கின்றார். அவர் காட்டும் பாதையிலே பேனாவை ஓட்டட்டுமென்கின்றார். மக்களுக்காக இலக்கியம் படைப்பதையே தனது இலட்சியமாகக் கொண்டு செயலாற்றிவந்த அ.ந.க. வள்ளுவரையும் அத்தகையதொரு கோணத்திலேயே அவனது குறட்பாக்களினூட் இனம் காண்கின்றார்.  மக்களுக்காக இலக்கியம் படைத்த் படைப்பாளியாகவே இனங்காண்கின்றார். அதனால்தான்

'நெசவுசெயும் தொழிலாளி நேர்மையுள நெஞ்சன்
செய்திட்ட நிறைநூ லில் பெய்திட்ட எண்ணம்
இசைவுடனே காலத்தை வென்றிங்கு வாழும்!
எல்லைகளைக் கடந்திங்கு உலகெல்லாம் சூழும்' என்கின்றார்.

அ.ந.க. வை வள்ளுவரைப் போல் மகாதமா காந்தியின் மனைவி அன்னை கஸ்தூரிபாயும் மிகவும் கவர்ந்தவர். அவரது மறைவையொட்டி அவர் எழுதிய 'அன்னையார் பிரிவு' என்னும் ஈழகேசரியில் வெளியான நினைவுக் கவிதையொன்றே அதற்குச் சான்று. அதிலவர் அன்னை பற்றி

'ஒப்பரிய காந்தியரி னொப்பில்லாத
ஓர்மனைவி செம்மையறங் காத்த சீர்மைச்
செப்பரிய பெரும்புகழாள் தேய மெல்லாம்
தாயெனவே செப்பிடுமோர் இல்லின் தெய்வம்' எனவும்

'சீதையும் சாவித்திரியாம் தேவி மற்றும்
சிறப்புள்ள நளாயினி என்போரெல்லாம்
காதையிலே உலாவுகின்ற கன்னியர்கள்
கடுகேனும் உண்மையங்கு இல்லை யென்று
ஓதியவர் தலைநாணச் செய்து பெண்மைப்
பெருங்குலத்தின் உயர்வுதனை நாட்டினாய்'

எனவும் குறிப்பிடும் அ.ந.க, அன்னையார் இறந்த செய்தியினை 'மாரியினிலே பெருமழைதான் கொட்டுகின்ற காரிரவில் பல்லிடிகள் பின்னே வந்த பேரிடி'யாய் உணருகின்றார்.

இவ்விதமாகக் கவீந்திரனின் கவிதைகள் ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் முக்கியமான படைப்புகளாக விளங்கி நிற்கின்றன. அ.ந.க. வின் கவிதைகள் எல்லாமே போர்ச்சுவாலைகளாகத்தான் இருந்தன என்பதற்கில்லை, அவ்வப்போது காதல் போன்ற மென்மையான மானுட உள்ளத்துணர்வுகள் பற்றியும் பாடியுள்ளார்.

அ.ந.க.வின் நாவல், நாடக முயற்சிகள்….

அ.ந.க.வின் ஒரேயொரு நாவல் ‘மனக்கண்’ தினகரனில் 1967இல் தொடராக வெளிவந்து வாசகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பினைப் பெற்றது. இதன காரணமாகவே பின்னர் அ.ந.க.வின் உற்ற நண்பர்களிலொருவரான சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனத்தினரால் ஒலிபரப்பப் பட்டது. பதிவுகள் இணைய இதழிலும் இந்நாவல் அண்மையில் தொடராக வெளிவந்திருந்தது.  இந்த நாவல் முடிந்தபொழுது அ.ந.க. தனது முடிவுரையினை ‘நாவல்’ பற்றியதொரு நல்லதொரு ஆய்வுக்கட்டுரையாக வடித்துள்ளார். அதிலவர் மனக்கண் பற்றிய தனது எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார். இது தவிர அ.ந.க. தனது இறுதிக்காலத்தில் ‘களனி வெள்ளம்’ என்னுமொரு நாவலினையும் தோட்டத்தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதிக் கொண்டிருந்ததாகவும், அவர் இறந்ததும் எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்த அப்பிரதி 1983 கலவரத்தில் எரியுண்டு போனதாகவும் அறிகின்றோம். செ.கணேசலிங்கன் அ.ந.க.வின் இறுதிக் காலத்தில் அவரைப் பராமரித்தவர்களிலொருவர். அதுபற்றித் தனது குமரன் சஞ்சிகையில் அ.ந.க.வின் இறுதிக்காலம் பற்றிய தொடர் கட்டுரையொன்றினையும் எழுதியுள்ளது குறிப்பிடத் தக்கது.

'மனக்கண்' சுவையான , சிந்தையைக் கவரும் கதைப்பின்னல்,  குறை , நிறைகளுடன் யதார்த்தபூர்வமாகப் படைக்கப்பட்ட பாத்திரங்கள், .  நடை, ஆங்காங்கே ஆசிரியரின் புலமையினை வெளிப்படுத்தும் வகையில் பரவிக்கிடக்கும் தகவல்கள்  மற்றும்  நாவல் கூறும் பொருள் ஆகியவை காரணமாக வாசகர்கள் மத்தியில் தினகரனில் தொடராக வெளியானபோது மிகுந்த வரவேற்பினைப் பெற்றது. 'மனக்கண்'  தொடராக வெளியானபோது அதற்கு அழகான ஓவியங்களை வரைந்திருந்தார் ஓவியர் மூர்த்தி.

அ.ந.க. தாஜ்மகால் பற்றிய ‘கடைசி ஆசை’ , ‘அமர வாழ்வு’ போன்ற குறுநாடகங்கள் சில எழுதியுள்ளதாக அறிகின்றோம். ஆயினும் 1967இல் கொழும்பில் நான்கு தடவைகள் மேடையேற்றப்பட்டுப் பலத்த வாதப்பிரதிவாதங்களை ஈழத்து இலக்கிய உலகில் எழுப்பிய ‘மதமாற்றம்’ என்னும் நாடகம் அவரது காத்திரமான பங்களிப்பினை என்றும் வெளிப்படுத்தி நிற்கும். இந்நாடகம் கலாநிதி கைலாசபதி அவர்களை மிகவும் கவர்ந்த நாடகங்களிலொன்று. அது பற்றி அவர் ‘இதுவே தமிழில் இதுவரை எழுதப்பட்ட நாடகங்களில் ஆகச்சிறந்தது’ என்று குறிப்பிட்டுள்ளது இதனைப் புலப்படுத்தும்.  இது பற்றி அ.ந.கந்தசாமியே விமர்சனக் கட்டுரையொன்றினை இலங்கையிலிருந்து வெளிவந்த ‘ராதா’ என்னும் பத்திரிகையில் எழுதியுள்ளார்.

அ.ந.க.வின் 'மதமாற்றம்' நாடகத்தை இயக்கியவர் கலைஞர் லடீஸ் வீர்மணி.  தயாரித்தவர் எழுத்தாளர் காவலூர் இராசதுரை. இந்நாடகம் முதலில் பேராசிரியர் கா.சிவத்தம்பியின் இயக்கத்திலும் மேடையேற்றப்பட்டிருந்ததாயினும், லடீஸ் வீரமணியின் இயக்கத்தில் வெளியானபோது மிகுந்த வரவேற்பைப் பெற்றதுடன் கொழும்பில் பல தடவைகள் மேடையேறியதென்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நாடகம் 'எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம்' மூலம்  1989இல்  நூலுருப்பெற்றபோது அதற்குச் சிறப்பானதொரு அனிந்துரையினை எழுத்தாளர் செ.கணேசலிங்கன் எழுதியிருக்கின்றார். அதிலவர் பின்வருமாறு குறிப்பிடுவார்:

"நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் மேலாதிக்கம் செலுத்தும் கருத் தியல் (Ideology) மதம் என்றும் முதலாளித்துவத்தில் கல்வி என்றும் நவ மார்க்சிய அறிஞர் அல்துரசர் கூறுவார். கலை, இலக்கியத்தில் கருத்தியல்கள் உடைக்கப்பட்டு விஞ்ஞான ரீதியான சிந்த னையைக் கொணர வேண்டும் என்பதும் அன்னாரின் கோட்பாடாகும். அத்தோடு இத்தகைய போக்கு பண்டைய நாடகங்கள், இலக்கியங் களில் காணமுடியாதது அவற்றின் பயனற்ற தன்மையைக் காட்டுகிறது என்பதும் அவரது கூற்றகும். கந்தசாமி மதம் என்ற கருத்தியலை இந் நாடகத்தில் சாடி இருப்பது இந் நாடகத்தின் தனிச் சிறப்பாகும். அதுவும் நேரடியாகத் தாக்கவில்லை. பார்வையாளர் எம் மதத்தவராயினும் நகைச்சுவையுடன் நாடகத்தைப் பார்ப்பர். அதன் பின்புறத்தில் மதத்தின் பொய்மையை ஆசிரியர் உடைத்தெறிவதை சிந்தண்மூலம் அறிவர். இராமலிங்கம் என்றேர் பாத்திரத்தை ஆசிரியர் தன் பகுத்தறிவுக் கருத்துக்களையும் தருக்க நியாயங்களையும் கூறுவதற்காக நாடகத்தில் கொண்டு வந்துள்ளார். இராமலிங்கம் என்ற பாத்திரம் கந்தசாமியே. கதாநாயகன் அசல் கிறிஸ்தவன்; கதாநாயகி சைவப் பழம். காதலுக்காக இருவரும் மதம் மாறுகின்றனர். மாறிய மதத்தை இறுகத் தழுவி காதலைக் கைவிடுகின்றனர். இதுவே கதையின் கருவான போதும் "மதம், காதல்" என்ற பொய்மைகளை கந்தசாமி சாடும் திறமை அபாரம். 'மதமே பொய். இருவரும் பொய்களை நம்புகிறர்கள். ஆனல் வெவ்வேறு பொய்கள் - கந்தசாமி இராமலிங்கம் என்ற பாத்திரம் மூலம் கூறுகிறார், நல்ல நாடகம் சமூக முரண்பாடுகளைக் கையாள வேண்டும். சிந்தனையில் மோதலை ஏற்படுத்துவதோடு தன்னை உணர்ந்து கொள்ள உதவ வேண்டும். நாடகம் பார்க்கும் வேளை நடிகனக இருந்தவன் நாடகம் முடிந்ததும் புது நடிகனாக வேண்டும், வாழ்க்கையில். இந் நாடகம் மேடையில் நடிப்பதற்காக எழுதப்பட்டபோதும் படித்துச் சுவைப்பதற்குமாக அமைந்திருப்பது அதன் தனிச் சிறப்பாகும். புதிதாக நாடகம் எழுதுவோருக்கும் காட்சி அமைப்பையும் கருத்தின் ஆழத்தைக் கையாளும் முறையையும் கற்பிக்கத் தக்கதாக இந் நாடகம் உள்ளது. "

எழுத்தாளர் அந்தனி ஜீவா தினகரனில் அ.ந.க. பற்றி எழுதிய ‘சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்; என்னும் தொடரில் ‘எதிர்காலத்தில் ஈழத்து நாடகத்தைப் பற்றி விமர்சகர்கள் விமர்சிக்கும் பொழுது அ.ந.க.வின் மதமாற்றத்தை மைல்கல்லாக வைத்துத் தான் கணக்கிடுவார்கள்’ என்று குறிப்பிடுவது மிகையான கூற்றல்ல. இது பற்றிய விமர்சனக்கட்டுரையொன்றினை ஆங்கில ஏடான ‘ட்ரிபியூ’னில் இலங்கையின் பிரபல இலக்கியத் திறனாய்வாளர்களிலொருவரான கே.எஸ்.சிவகுமாரனும் எழுதியிருக்கின்றார்.மேற்படி அ.ந.க.வின் நாடகத்தைப் பற்றிய தனது ‘டெய்லி மிரர்’ விமர்சனத்தில் விமர்சகர் அர்ஜூனா அ.ந.க.வின் நாடகத் திறமையினை ஆங்கில அறிஞர் பெர்னாட்ஷாவோடு ஒப்பிட்டு விமர்சித்திருப்பது அ.ந.க.வின் நாடகப் புலமையினை வெளிப்படுத்தும்.

அ.ந.கவும் உளவியலும்…

வெற்றியின் இரகசியங்கள்” என்ற அ.ந.கந்தசாமியின் உளவியல் நூலினைப் பாரி பதிப்பகத்தினர் தமிழகத்தில் வெளியிட்டுள்ளனர். மேற்படி நூலில் பல்வேறு உளவியற் கோடுபாடுகள் பற்றியெல்லாம், அவற்றை வாழ்வின் வெற்றிக்கு எவ்வகையில் பாவிக்கலாம் என்பது பற்றியெல்லாம் தனக்கேயுரிய துள்ளுதமிழ் நடையில் அ.ந.க. விபரித்திருப்பார். எம்.எஸ்.உதயமூர்த்தி போன்றவர்கள் தமிழில் இத்தகைய வாழ்வின் வெற்றிக்கான நூல்களை எழுதத்தொடங்குவதற்கு முன்னரே அ.ந.க இத்துறையில் கவனத்தைச் செலுத்தியதும் , எழுதியதும் முக்கியத்துவம் வாய்ந்தது. சிக்மண்ட் ஃபிராய்ட், கார்ல் ஜூங், அல்ஃபிரெட் அட்லர் போன்ற மேனாட்டு உளவியல் அறிஞர்கள்தம் கோட்பாடுகளையெல்லாம் சாதாரண வாசகர்களும் புரியும் வகையில் எழுதப்பட்டுள்ள நல்லதொரு நூல் 'வெற்றியின் இரகசியங்கள்'.

அ.ந.க.வின் மொழிபெயர்ப்பு முயற்சிகள் மற்றும் இதழாசிரியப் பங்களிப்புகள்..

1943இலிருந்து 1953வரை இலங்கைத் தகவற் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிந்தார். அச்சமயம் பல ஆங்கில நூல்களைப் பணிநிமித்தம் மொழிபெயர்த்துள்ளார். (அந்தனி ஜீவா தனது ‘சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்’ என்னும் கட்டுரையில் அ.ந.க இலங்கை அரச தகவற் துறையில் 12, 13 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றதாகக் குறிப்பிடுவார். தகவற்துறையில் பணிபுரிந்த் காலகட்டத்தில் தகவற்துறையினால் வெளியிடப்பட்ட ‘ஸ்ரீலங்கா’ இதழாசிரியராகவும் அ.ந.க.வே விளங்கினார்). அதன் பின்னர் தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் முழுநேர ஊழியராகப் பணியாற்றினார். தனியார் நிறுவனங்களுக்கு ஆங்கில நூல்களை மொழிபெயர்க்கும் பணியினையும் செய்து வந்தார். ஒப்சேவரில் புரூவ் ரீடராகவும் சில காலம் வேலை பார்த்துள்ளார். வீரகேசரி ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக விளங்கிய அ.ந.க தேசாபிமானி பத்திரிகையின் ஆரம்பகால ஆசிரியர்களில் ஒருவர். பின்னர் அக்கட்சியிலிருந்து வெளியேறினார். அக்காலகட்டத்தில் சுதந்திரன் பத்திரிகையில் சேர்ந்து அதன் ஆசிரியராகச் சிறிது காலம் பணியாற்றினார். ஆங்கிலப் பத்திரிகையான டிரிபியூனில் சிலகாலம் பணியாற்றினார். அச்சமயம் நிறைய திருக்குறள் பற்றிய ஆங்கில ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார்.

எமிலிசோலாவின் நாவலான ‘நானா’வைச் சுதந்திரனில் மொழிபெயர்த்து அ.ந.க. வெளியிட்டபோது அது பெரும் வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பியதை சுதந்திரனில் பிரசுரிக்கப்பட்டுள்ள கடிதங்களிலிருந்து அறியமுடிகின்றது. அ.ந.க.வின் மொழிபெயர்ப்பில் எமிலி சோலாவின் ‘நானா’ சுதந்திரனில் 21-10-51தொடக்கம் -28-8-1952 வரையில் மொத்தம் 19 அத்தியாயங்கள் வெளிவந்துள்ளன. முதலாவது அத்தியாயம் ‘முதலிரவு’ என்னும் தலைப்பிலும், பத்தொன்பதாவது அத்தியாயம் ‘போலிஸ்’ என்னும் தலைப்பிலும் வெளிவந்துள்ளன. பத்தொன்பதாவது அத்தியாயம் , தொடரும் அல்லது முற்றும் என்பவையின்றி, ஓசையின்றி முடிந்துள்ளதைப் பார்க்கும்போது ‘ நானா’ நாவல் அத்துடன் முடிவு பெற்றுள்ளதா அல்லது நடுவழியில் வாதப்பிரதிவாதங்கள் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதா என்பதை மூல நூல் பார்த்துத்தான், நாவலை வாசித்துப் பார்த்துத்தான் முடிவு செய்யவேண்டும். நாவல் வெளிவந்தபோது வெளிவந்த வாசகர் கடிதங்களிலிருந்து பெரும்பாலான வாசகர்களை நானா அடிமையாக்கி விட்டாளென்றுதான் தெரிகின்றது. எதிர்த்தவர்கள் கூட அ.ந.க.வின் மொழிபெயர்ப்பினைப் பெரிதும் பாராட்டியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. நாவலை அ.ந.க தனக்கேயுரிய அந்தத் துள்ளுதமிழ் நடையில் மொழிபெயர்த்துள்ளார்.

நாவல் காரணமாகச் சுதந்திரனின் விற்பனை அதிகரித்துள்ளதையும், நானாவை வாசிப்பதில் வாசகர்களுக்கேற்பட்ட போட்டி நானா வெளிவந்த சுதந்திரனின் பக்கங்களைக் களவாடுவதில் முடிந்துள்ளதையும் அறிய முடிகிறது. . மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா ‘நானா’ பற்றி சுதந்திரனுக்கு எழுதிய வாசகர் கடிதமொன்றில் ‘”நானா” கதை சுதந்திரனில் வெளிவரத்தொடங்கிய பின்பு மார்க்கெட்டில் சுதந்திரன் பத்திரிகைக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பலர் கடைகளுக்குச் சென்று பத்திரிகை கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றுள்ளதை நான் கண்ணாரக் கண்டேன். அதனால் பலர் சேர்ந்து ஒரு பத்திரிகையை வாசிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏறபட்டுள்ளது. தமிழாக்கம் அபாரம்’ என்று தனது கருத்தினைப் பதிவு செய்திருக்கின்றார். இலங்கையிலிருந்தும் மட்டுமல்ல தமிழகத்திலிருந்தும் பலர் ‘நானா’ பற்றிய தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதுபோல் பண்டிதர் திருமலைராயர் என்னும் பெயரில் அ.ந.கந்தசாமி எழுதிய ‘கண்ணகி பாத்திரம் பெண்மையின் சிறப்பைக் காட்டுகிறதா? பெண்ணடிமையின் சிகரம் என்பதே சாலப் பொருந்தும்’ என்னும் கட்டுரையும் பலத்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளதை அன்றைய சுதந்திரன் இதழின் பக்கங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.

- அமேசன் - கிண்டில் பதிப்பு. மின்னூல். பதிவுகள்.காம் வெளியீடு. -

அ.ந.க. என்றொரு விமர்சகர்….

சிறுகதை, கவிதைகள், நாடகம், நாவல், மொழிபெயர்ப்பு என்றெல்லாம் எழுத்தில் கால் பதித்த அ.ந.க. பல்வேறு அரிய இலக்கியக் கட்டுரைகளை, விமர்சனக் கட்டுரைகளை, நூல் மதிப்புரைகள் மற்றும் சினிமா பற்றிய விமர்சனக் கட்டுரைகள்,தேசிய இலக்கியம், கவிதை, நாடகத் தமிழ், சிலப்பதிகாரம்’ என்றெல்லாம் பல்வேறு விடயங்கள் பற்றி  எழுதிய படைப்புகள் பல்வேறு சிற்றிதழ்கள், பத்திரிகைகளிலெல்லாம் வெளிவந்திருக்கின்றன. வெண்பா பற்றிய தொடர் கட்டுரைகளை வீரகேசரியில் எழுதியுள்ளதாகவும் அறிகின்றோம். இதனால் அ.ந.க.வை ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய விமர்சகர்களிலொருவராகவும் ஆய்வாளர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.

பண்டிதர் திருமலைராயர் என்னும் பெயரில் இவர் சுதந்திரனில் எழுதிய சிலப்பதிகாரம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் தமிழகத்திலும், இலங்கையிலும் வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பின. பெரியாரின் குடியரசு பத்திரிகையிலும் இவற்றில் சில மீள்பிரசுரம் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது.

தமிழ் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை பெற்ற அ.ந.க. ஆங்கிலத்திலும் சிலப்பதிகாரம், திருக்குறள், கெளடில்யரின் அர்த்தசாத்திரம் பற்றியெல்லாம் விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவை டிரிபியூன் போன்ற ஆங்கில சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளதாகவும் அறியப்படுகிறது.

அ.ந.க.வும் சிறுவர் இலக்கியமும்!

சிறுவர் இலக்கியத் துறையில் அ.ந.க தன் பால்ய காலத்தில் ஈழகேசரி மாணவர் மலரில் எழுதியுள்ளதாக அறிகின்றோம். இவையும் சேகரிக்கப்பட வேண்டுமெனக் கருதுகின்றோம். இது தவிர ‘சங்கீதப் பிசாசு’ என்றொரு சிறுவர் நாவலொன்றினையும் அ.ந.க எழுதியுள்ளார். எழுபதுகளின் இறுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரத்தால் வெளியிடப்பட்ட ‘கண்மணி’ என்னும் சிறுவர் சஞ்சிகையில் அந்நாவலின் சில அத்தியாயங்கள் வெளிவந்துள்ளன. பின்னர் ‘கண்மணி’ நின்று விடவே அந்நாவலும் குறையுடன் நின்று விட்டது. அந்நாவல் முதன் முதலில் ‘சிரித்திரனில்’ வெளிவந்ததது.

அ.ந.க.வின் உரைநடை…

அ.ந.க என்னும் கிணறினைத் தோண்டத் தோண்டப் பெருகிவரும் இலக்கிய ஊற்று எம்மைப் பெரிதும் பிரமிக்க வைக்கின்றது. அவருக்குப் பெருமை சேர்க்குமின்னுமொரு விடயம் அவரது அந்தத் துள்ளுதமிழ் உரைநடை. இது பற்றிய செம்பியன் செல்வனின் ‘ஈழத்தமிழ்ச் சிறுகதை மணிகள்’ “இவரின் படைப்புக்களின் வெற்றிகளுக்கு இவரின் உரை நடையும் முக்கிய காரணம் எனலாம். எளிய வாக்கியங்களாக கருத்துக்களை வெளியிட்டார். அக் கருத்துக்களை உவமை, உருவகச் சொல்லாட்சிகளினால் அழகுபடுத்தியும், கம்பீரத் தொனியேற்றியும், எல்லாருக்கும் புரியும்வண்ணம் மக்கள் முன் வைத்தார். இப் பண்பு சிறுகதைகளில் மட்டுமல்லாது, ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும், கொள்கை விளக்கக் கட்டுரைகளிலும் எல்லாரையும் வசீகரிக்கும் வண்ணம் அழகழகான, ஆழமான, எளிய உவமை உருவங்களை அமைத்து எழுதுவார். சாதாரணமாக ஒரு சிறு கட்டுரையிற் கூட குறைந்தது பத்தோ பதினைந்து உவமை உருவங்களைக் காணலாம்.” என்று குறிப்பிடும்.

வானொலியில் அ.ந.க….

இலங்கை வானொலியின் “கலைக்கோல” நிகழ்ச்சியிலும் மாதந்தோறும் அ.ந.க. வின் விமரிசனங்கள், “உலக நாடகாசிரியர்கள்” பற்றிய அறிமுகவுரைகள் ஒலிபரப்பப்பட்டதாகவும் அறிகின்றோம். அவரது இறுதிப் படைப்பாக ‘மொழிபெயர்ப்பு நாடக’மொன்று ஒலி பரப்பப்பட்டதாகவும் அறிகின்றோம். அ.ந.க.வின் வானொலி முயற்சிகளைப் பற்றி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்திலும் இவர் பற்றிய தேடலினைத் தொடர வேண்டிய தேவையினை இது வலியுறுத்தும்.

இவை தவிர பேச்சுக் கலையிலும் வல்லவர் அ.ந.க. அத்துடன் பல கவியரங்குகளிலும் பங்கு பற்றிய அன்றைய காலத்து இலக்கிய வானில் நட்சத்திரமாக மின்னியவர் அ.ந.க என்பதைத்தான் அவர் பற்றிய கட்டுரைகள், நூல்கள் தெரிவிக்கின்றன.

செயல் வீரர் அ.ந.க!

அ.ந.க. எழுதியதுடன் மட்டும நின்று விட்டவரல்லர். செயல் வீரரும் கூட. தான் கொண்ட கொள்கைகளுக்காக இறுதி இறுதி வரையில் போராடியவர். ‘வீரகேசரியில் பணிபுரிந்தபோது, இவரின் கடமை, எழுத்துடன் மட்டும் நின்றுவிடாது. செயல் முறையிலும் தீவிரமடைந்தது. வீரகேசரியில் முதன் முதலாகத் தொழிற் சங்கம் ஒன்றினைத் தாபித்து தொழிலாளர் உரிமைக்காகப் பாடுபட்டவர்’ என்று தனது ”ஈழத்துச் சிறுகதை மணிகள்’ நூலில் குறிப்பிடுவார் எழுத்தாளர் செம்பியன் செல்வன். இது பற்றிய அந்தனி ஜீவாவின் ‘சாகாத இலக்கியத்தின் சரித்திரன் நாயகன்’ ”வீரகேசரி’ ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் அச்சகத் தொழிலாளர்கள் படும் துன்பத்தைக் கண்டு மனம் நொந்தார். அவர்களின் நலனில் அக்கறை கொண்டார். பொதுவுடமைக் கருத்துகளில் ஊறிப்போயிருந்த அ.ந.க. அச்சகத் தொழிலாளர்களுக்காகப் போராடத் தயங்கவில்லை. அதனால் அச்சக முதலாளிகளின் வெறுப்பினைச் சம்பாதித்துக் கொண்டார். அதனால் வீரகேசரியிலிருந்து விலக்கப் பட்டார்.” என்று பதிவு செய்யும்.

மேற்படி கட்டுரையில் அந்தனி ஜீவா அ.ந.க.வின் மார்க்சிய ஈடுபாடு பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுவார்:

“பின்பு கம்யூனிஸ்ட் கட்சி முழுநேர ஊழியரானார். கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்ப் பத்திரிகையான ‘தேசாபிமானி’யின் முதலாவது ஆரம்பகால ஆசிரியர் அ.ந.கந்தசாமியே. ‘தேசாபிமானி’யின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார். அப்பத்திரிகையில் அவர் எழுதிய சிறுகதைகள், அரசியற் கட்டுரைகள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தன. கம்யூனிஸ்ட கட்சியின் முழுநேர ஊழியராகக் கடமையாற்றிய காலத்தில் அ.ந.கந்தசாமி தொழிற்சங்க இயக்கங்களில் பெரும் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார். மலையகத்தின் எல்பிட்டி என்னுமிடத்தில் சிலகாலம் தோட்டத் தொழிலாளர்கள் பிரதிநிதியாகக் கடமையாற்றினார். உழைப்பையே நம்பி வாழும் தோட்டத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டித் தீவிரமாக உழைத்தார். அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டார். அ.ந.கந்தசாமி மலைநாட்டு உழைக்கும் தொழிலாளர்கள் மீது எப்பொழுதும் பெருமதிப்பு வைத்திருந்தார். தொழிலாளர்களினுரிமைப் போராட்டத்தில் முன்னின்று உழைத்துள்ளார். அவர்களின் உரிமைக்காகத் தோட்ட நிர்வாகத்தினரிடம் நியாயம் கோரியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற பிரசித்தி பெற்ற டிராம் தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி பெற உழைத்தவர்களில் முக்கியமான ஒருவராக அ.ந.கந்தசாமி கணிக்கப் படுகின்றார். தொழிற்சங்க ஈடுபாடு கொண்ட காலங்களில் தொழிலாளர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை வைத்து அமர இலக்கியங்களைச் சிருஷ்டித்துள்ளார். கம்யூனிஸ்ட கட்சிக்குள் நடந்த போராட்டத்தின் காரணமாக அ.ந.கந்தசாமியும் அவரைச் சார்ந்த ஏழெட்டுப் பேரும் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.”.


அ.ந.க.வின் இலக்கியக் கோட்பாடுகள்!

“‘மக்கள் இலக்கியம்’ என்ற கருத்தும் ‘சோஷலிஸ்ட் யதார்த்தம்’ என்பனவுமே என் மனதைக் கவர்ந்த இலக்கிய சித்தாந்தங்களாக விளங்குகின்றன” எனத் தனது பிரசித்தி பெற்ற ‘நான் ஏன் எழுதுகிறேன்’ என்னும் கட்டுரையில் குறிப்பிடும் அ.ந.க. பின்வருமாறு தான் எழுதுவதன் நோக்கம் பற்றி விபரிப்பார்:

“எழுத்தாளன் வாழ்க்கையை விமர்சிப்பதுடன் நின்று விடக்கூடாது. அந்த விமர்சனத்தின் அடிப்படையில் வாசகர்களுக்கு எதிர்காலத்தில் நம்பிக்கை ஊட்டவேண்டும். அவ்வித நம்பிக்கையில்லாவிட்டால் முன்னேற்றமில்லை. வாழ்வே இல்லை. இவ்வித பிரக்ஞையில் பிறக்காமல் வெறுமனே யதார்த்தத்தை ஒரு சுத்த இலட்சியமாகக் கொண்டு எழுதும்போது நம்பிக்கைக்குப் பதில் அவநம்பிக்கையின் தொனிகளே கேட்க ஆரம்பிக்கலாம். நைந்த உள்ளத்தின் சோகக்குரலாகக் கேட்கும் எழுத்தால் பயனில்லை. நொந்த உள்ளத்தின் செயல் துணிவுகொண்ட வேகக் குரலாக அது ஒலிக்க வேண்டும். வாழ்வதற்கு நேரடியாகவோ, குறிப்பாகவோ, மெளனமாகவோ வழிகாட்டும் எழுத்தே எழுத்து. இந்தக் கருத்துகள் என்னை உந்துகின்றன. அவற்றுக்காகவே நான் எழுதுகின்றேன்.

மனிதன் சமுதாயத்தின் ஒரு அங்கம். அவனுக்கு சமுதாயப் பொறுப்பொன்று உண்டு. வெறுமனே உண்ணுவதும், உறங்குவதும், புலனுகர்ச்சிகளில் ஈடுபடுவதும் வாழ்க்கையாகாது. அறிவு வளர்ச்சி பெற்ற மனிதன் இவற்றோடு வேறு சில காரியங்களையும் செய்ய விரும்புவான். மற்றவர் முகத்தின் புன்னகை தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் முல்லைமலர் போல் அவனுக்கு இன்பத்தையூட்டும். “இன்று நாம் வாழும் சமுதாயத்தில் நாம் புன்னகையைக் காணவில்லை. துன்பமும், துயரமும், அழுகையும், ஏக்கமும், கண்ணீரும், கபலையுமாக நாம் வாழுமுலகம் இருக்கிறது. ஏழ்மைக்கும், செல்வத்துக்கும் நடக்கும் போரும், அடிமைக்கும், ஆண்டானுக்கும் நடக்கும் போரும், உயர்சாதியானுக்கும் தாழ்ந்த சாதியானுக்கும் நடக்கும் போரும், அசுரசக்திகளுக்கும், மனித சக்திகளுக்கும் நடக்கும் போரும் இன்று உலகையே கலங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. இப்போர்களினால் வாழ்வே ஒரு சோககீதமாகிவிட்டது. இப்போர்களை எவ்வளவு விரைவில் ஒழிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் ஒழித்துவிட வேண்டும். அதன்ப பின்தான் போரொழிந்த சமத்துவ சமுதாயம் பூக்கும். அதைப் பூக்க வைக்கும் பணியில் எழுத்தாளன் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்ற கருத்தை உலகின் புகழ்பெற்ற பேனா மன்னர்கள் என் மனதில் தோற்றுவித்தனர்.

பிரெஞ்சுப் புரட்சி கண்ட ரூசோ, வால்டயர் தொடக்கம் மார்சிம் கோர்க்கி, எஹ்ரென்பேர்க் வரைக்கும் எல்லா நல்ல எழுத்தாளர்களும் இந்தச் செய்தியையே எனக்குக் கூறினர். பேர்னாட் ஷாவின் எழுத்துகளும் இன்றைய பேட்ரண்ட் ரசல் எழுத்துகளும் கூட சமுதாய முன்னேற்றத்துக்குரிய பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு காணும் பணியை அலட்சியம் செய்துவிடவில்லை. வங்கக் கவிஞர் தாகூரும், தமிழ்க் கவிஞன் பாரதியும் தாம் வாழ்ந்த சமுதாயத்தின் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பணிக்குத் தமது பேனாக்களை அர்ப்பணம் செய்ய மறக்கவில்லை….உலகப் பண்பாட்டுப் பாடிய பாரதிதாசனும் சமுதாய ஊழல்களைச் சுட்டெரிக்கும் பணிக்குத் தன்னாளான சேவையைச் செய்திருக்கின்றான்.”

‘தேசாபிமானி’யில் வெளிவந்த மேற்படி கட்டுரை எண்பதுகளில் மொறட்டுவைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்க வெளியீடான ‘நுட்பம்’ சஞ்சிகையிலும் மீள்பிரசுரம் செய்யப்பட்டது. அ.ந.க மறைந்தபொழுது அவரது மேற்படி கட்டுரையினைப் பிரசுரித்த தேசாபிமானி ‘போர்ச்சுவாலை அமரச் சுடராகியது’ என்றொரு ஆசிரியத் தலையங்கத்தினையும் வரைந்து தனது அஞ்சலியினைச் செலுத்தியது.

அ.ந.க.வின் இறுதிக்காலம்

அவரது இறுதிக்காலத்தில் அவர் நோயுற்றிருந்த வேளை   வில்லிசைக் கலைஞரும், நாடக இயக்குநருமான லடீஸ் வீரமணியும், அவரது மனைவியும். எழுத்தாளர் செ.கணேசலிங்கனும்  அவரை நன்கு பராமரித்தார்கள்.  அவரது இறுதிக்காலம் பற்றிய நினைவுகளை செ.கணேசலிங்கன் தனது 'குமரன்' சஞ்சிகையில் கட்டுரைத் தொடரொன்றில்  பதிவு செய்துள்ளார்.  அத்துடன் அவரது 'வெற்றியின் இரகசியங்கள்' நூலைத் தமிழகத்தில் வெளியிடவும் உதவி செய்திருக்கின்றார். அ.ந.க.வின் 'மதமாற்றம்' நூலுருப்பெற்றபோது அவரது குமரன் அச்சகத்திலேயே அச்சிடப்பட்டது.

அ.ந.க பற்றி மேலும் சில...

எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்களின் அ.ந.க பற்றிய தினகரன் கட்டுரைத்தொடரான 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' அ,ந.க.வை இன்றுள்ள தலைமுறையும் அறிவதற்கு வழி செய்த முக்கிய தொடர். எழுத்தாளர் அகஸ்தியரும் பல கட்டுரைகளில் அ.ந.க பற்றிய தனது நினைவுகளைப் பகிர்ந்திருக்கின்றார். எழுத்தாளர் டொமினிக் ஜீவாவும் மல்லிகை சஞ்சிகையின் அட்டைப்படமாக அ.ந.கவை வெளியிட்டிருப்பதுடன், அவர் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டு நினைவு கூர்ந்துள்ளார். தனது நேர்காணலொன்றில் தான் படித்த பல்கலைக்கழகமாக அ.ந.க.வைக் குறிப்பிட்டிருக்கின்றார். பதிவுகள்.காம் அ.ந.கந்தசாமியை இன்றுள்ள தலைமுறை அறிவதற்கு முக்கிய பங்காற்றியுள்ளது. அவரது கவிதைகள், கட்டுரைகள், கதைகள் பலவற்றை வெளியிட்டுள்ளதுடன், மனக்கண் நாவலைத் தேடியெடுத்துத் தொடராக் வெளியிட்டதுடன் மின்னூலாகவும் வெளியிட்டுள்ளது.

இவையெல்லாம் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் அறிஞர் அ.ந.க.வின் அளப்பரிய பங்களிப்பினைத் தெளிவாக விளக்கி நிற்கின்றன. இன்று அ.ந.க பற்றிக் குறிப்பிடும் ஒரு சில எழுத்தாளர்கள் அவரது பன்முக ஆற்றலின் பின்னணியில் அவரை ஆய்வு செய்ய மறந்து சில சமயங்களில் மேலோட்டமாகக் கருத்துகளைத் தெரிவிப்பது அவர்களது அறியாமையின் விளைவே. அ.ந.க.  பற்றிய போதிய ஆய்வுகளின்றி அவர் பற்றிய கருத்துகளைத் தெரிவிப்பதை தவிர்த்து விடுவது நல்லது. அ.ந.க. “ஈழத்தமிழிலக்கிய உலகின் பல்வேறு துறைகளிலும் ஈடுபட்டு மற்றையோரால் மறுக்கவோ மறைக்கவோ முடியாதளவிற்கு சிறந்த தொண்டாற்றினார். நவீன தமிழ்க்கலை வடிவங்களாக உருவகித்த சிறுகதை, நாவல், விமர்சனம், மொழி பெயர்ப்பு என்பனவற்றுடன் நாடகம், கவிதை ஆகிய துறைகளையும் – புத்தாற்றல் நிரம்பிய ஆக்ரோஷ வேகத்துடன் சமூகச் சீர்கேடுகளைக் கெல்லி எறியவும், ‘புதியதோர் உலகு’ அமைக்கவும் ஏற்றகருவிகளாக்கினார்” என்று குறிப்பிடும் செம்பியன் செல்வன் “இவரைப்பற்றிய உண்மையான மதிப்பீடு பல் துறைகளையும் தழுவியதாகவிருந்தாலன்றி முழுமையடையா“வென்று குறிப்பிடுவதை மேற்படி அரைகுறை ஆய்வாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அத்துடன் இது பற்றிய தனது வேதனையினை “அ.ந. கந்தசாமி சுமார் நாற்பது சிறுகதைகள் வரையே எழுதியிருப்பார் என அவரின் நெருங்கிய இலக்கிய நண்பர்களால் அறியவருகின்றது. அவை யாவும் ஆங்காங்கே அவர் பணியாற்றிய பத்திரிகைகளிலும், கையெழுத்துப் பிரதிகளிலும் சிதறிக்கிடக்கின்றன. அவரது சிறுகதைகள் இன்றுவரை தொகுப்பாக வெளிவராதிருப்பது விந்தையான வேதனையே, அவரால் உற்சாகப் படுத்தப்பட்டும் உயர்த்தப்பட்டும் உருவாக்கப்பட்ட இலக்கியவாணர்கள் எத்தனையோ பேர் இன்று ஈழத்தமிழிலக்கிய உலகில் மட்டுமல்லாது சமூக நிலையிலும் உயர்நிலை பெற்று விளங்குகின்றனர். அவர்களோ அன்றிப் பிற பதிப்பங்களோ, அ.ந. கந்தசாமியின் படைப்புக்களை நூலுருவில் கொணர முயலவேண்டும். அவர் தன் ஆயுட்காலம் முழுவதும் தொடர்பு கொண்டிருந்த இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமாவது இவ்விடயத்தில் ஆழ்ந்த கவனம் செலுத்தவேண்டும்” என்றும் வெளிப்படுத்துவார்.

அன்றைய காலகட்டத்தில் வெளிவந்த ‘தமிழமுது’ என்னுமோர் சிற்றிதழின் ஆசிரியரான சரவணையூர் மணிசேகரன் தனது ‘அ.ந.க.வும் அவர் சிருஷ்டிகளும்’ என்னும் ஆசிரியத் தலையங்கத்தில் “அவர் சாகும்போதும் இலக்கியப் பெருமூச்சு விட்டுத்தான் இறந்தார். அவரைச் சந்திக்கப் போனால் எந்த நேரமும் எங்களோடு பேசிக்கொள்வது தமிழ் இலக்கியம்தான். அவர் தமிழ் இலக்கியத்துக்காக தன் உடல், பொருள், ஆவி அத்தனையும் அர்ப்பணித்தார்…. ஏ குளிகைகளே! சமூகத்துக்காக அவர் சிருஷ்டித்தவர். அவர் சிருஷ்டிகளை புத்தக உருவில் கொண்டுவர முயற்சிக்காத இந்த நன்றி கெட்ட சமூகம் போலவா நீ அவர் உயிரைப் பிடித்து வைக்காது துரோகம் செய்து விட்டாய்? ‘தமிழமுது’ அழுகின்றாள். அவள் கண்களில் நீர் துளிக்கின்றது. அவர் படத்தை (அமரர் அ.ந.கந்தசாமி) முகப்பில் தாங்கியபின்புதான் அவள் மனம் கொஞ்சம் சாந்தியடைகின்றது.” என்று சாடியிருப்பார்.

இவ்விதம் ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிற்குப் பல்துறைகளில் அரிய பங்காற்றிய அறிஞர் அ.ந.க.வின் படைப்புகளை இனியாவது இன்றைய தமிழ் உலகு வெளிக்கொணர முயற்சிகள் செய்ய வேண்டும். ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் அவரது படைப்புகளைச் சேகரிக்க உதவினாலே அதுவேயொரு மிகப்பெரிய சேவையாகவிருக்கும்.

- அமேசன் - கிண்டில் பதிப்பு. மின்னூல். பதிவுகள்.காம் வெளியீடு. -

அ.ந.கந்தசாமியின் வெளிவந்த நூல்கள்

1. வெற்றியின் இரகசியங்கள் (உளவியல் கட்டுரைகள்)  - பாரி நிலையம் , தமிழ்நாடு, 1968
2. மதமாற்றம் (நாடகம்) - தேசிய கலை, இலக்கியப் பேரவை
    
பதிவுகள்.காம்  அமேசன் - கிண்டில் பதிப்புகளாக வெளியிட்ட  மின்னூல்கள்

1. மனக்கண் (நாவல்) - அமேசன் & கிண்டில் மின்னூல் பதிப்பு. பதிவுகள்.காம் வெளியீடு.
2. எதிர்காலச்சித்தன் பாடல் - அமேசன் & கிண்டில் மின்னூல் பதிப்பு. பதிவுகள்.காம் வெளியீடு.
3. நான் ஏன் எழுதுகிறேன்?:  அ.ந.கந்தசாமியின் கட்டுரைத் தொகுப்பு!  - - அமேசன் & கிண்டில் மின்னூல் பதிப்பு. பதிவுகள்.காம் வெளியீடு.

நூலுருப்பெறாத நாவல்கள்

1. மனக்கண் (தினகரனில் வெளிவந்த நாவல் - நூலாக இன்னும் வெளியாகவில்லை. ஆனால் மின்னூலாக வெளிவந்துள்ளது. பதிவுகள் இணைய இதழிலும் தொடராக மீள்பிரசுரமாகியுள்ளது.
2. நாநா (மொழிபெயர்ப்பு, பிரெஞ்சு எழுத்தாளரான எமிலி சோலாவின் புதினம், சுதந்திரனில் அக்டோபர் 21, 1951 முதல் ஆகத்து 28, 1952 வரையில் மொத்தம் 19 அத்தியாயங்கள் வெளிவந்துள்ளன).
3. சங்கீதப் பிசாசு (சிரித்திரனில் வெளிவந்த சிறுவர் தொடர் புதினம்). இதன் அத்தியாயங்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை.
4. களனி வெள்ளம் (நாவல் ) - மலையகத் தமிழரை மையமாகக் கொண்ட நாவல். இந்நாவலின் மூலப்பிரதியை எழுத்தாளர் செ.கணேசலிங்கன் வைத்திருந்தார். 83 ஜூலைக் கலவரத்தில் அதனை அவர் இழந்து விட்டது மிகப்பெரிய இழப்பு.

உசாத்துணைப்பட்டியல்

1. சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன் - அந்தனி ஜீவா (தினகரன் தொடர்)
2. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!  - வ.ந.கிரிதரன் (இலக்கியப் பூக்கள் தொகுப்பு 1)
3. 'நான் ஏன் எழுதுகிறேன்?" - தேசாபிமானி பத்திரிகையில் அ.ந.க.வின் மறைவையொட்டி மீள்பிரசுரமான கட்டுரை.
4.‘ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை மணிகள் - செம்பியன் செல்வன்
5. 'தமிழமுது' சஞ்சிகையின் ஆசிரியத் தலையங்கம்
6. தேன்மொழி கவிதை இதழ் 1955. எழுத்தாளர் வரதர் வெளியிட்டது.
7. வெற்றியின் இரகசியங்கள் - அ.ந.கந்தசாமி , பாரி நிலையம்
8. மதமாற்றம் (நாடகம்) - அ.ந.கந்தசாமி , எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் , 1989
9. அ.ந.கந்தசாமியின் படைப்புகள் பற்றிய செல்வி ஜுவானா (யாழ் பல்கலைக்கழகம்) ஆய்வுக்கட்டுரை.
10. கவிதை - 'கந்தனுடன் சில  கணங்கள்' (வீரகேசரி) - சில்லையூர் செல்வராசன்.
11. அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்' நாவல்! ஓர் அறிமுகம்! - வ.ந.கிரிதரன் (ழகரம், பதிவுகள்)
12. பஞ்சாட்சர சர்மாவின் பஞ்சாஷரம்' (நூல்)
13. அ.ந.க.வின் கட்டுரைகள், கவிதைகள், கதைகள் வெளியான பதிவுகள்.காம்
14.1951இல் அ.ந.க சுதந்திரனின் ஆசிரியப்பீடத்திலிருந்தபோது எழுதிய  கட்டுரைகள், கவிதைகள் , மொழிபெயர்ப்பு நாவல் 'நாநா'

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2

விளம்பரம் செய்ய

வ.ந.கிரிதரனின் பாடல்கள்
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here