இலங்கையில் புற்றுநோய்ச் சிகிச்சைக்கு தேவைப்படும் உதவிகளை ஏழை மக்களுக்கு வழங்கும் நோக்கத்துடன், அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் மருத்துவர் சியாமளா நடேசன், தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதன் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 26 ஆம் திகதி கண்டி, ரீஜன்னர் விடுதியில் நடைபெற்றது. குறிப்பிட்ட புற்றுநோய் சிகிச்சைக்கு உதவி வழங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் இணையத்தளத்தை, மகப்பேற்று மருத்துவ நிபுணர் இந்தர்ஜித் சமரசிங்க தொடக்கி வைத்தார். பேராதனை மருத்துவ, பல் மருத்துவ, மற்றும் மிருக மருத்துவ பீட முதல்வர்களுடன் பல புற்றுநோய்ச் சிகிச்சை மருத்துவர்களும் இந்நிகழ்ச்சியில் சமுகமளித்திருந்திருந்தனர்.
இந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான மருத்துவர் நிரஜ்ஜலா டீ சில்வா தமது வரவேற்புரையில், இந்த நிறுவனத்தின் நோக்கங்கள் செயல்கள் அனைத்தும் புற்றுநோயால் பீடிக்கப்பட்டு சிகிச்கைக்கான வாய்ப்பு வசதிகளற்ற ஏழை மக்களுக்கு உதவும் முகமாகவே அமையும் எனத் தெரிவித்தார். இந்த நிறுவனத்தை இலங்கையில் ஆரம்பித்திருக்கும் மகப்பேற்று மருத்துவ நிபுணர் திருமதி சியாமளா நடேசனின் கணவர் நோயல் நடேசன் இந்நிகழ்வில் உரையாற்றுகையில், தனது மனைவி சியாமளா சிறிது காலத்திற்கு முன்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் , எனினும் விரைவில் குணமாகியதையடுத்து, எங்கள் தாயகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படும் ஏழை மக்களுக்கு உதவவேண்டும் என்ற நோக்கத்தையே கனவாகக்கொண்டிருந்தார். அந்தக்கனவை நனவாக்குவதற்காக தற்போது இலங்கை வந்து இந்த தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை தொடக்கியிருக்கிறார். என்றார்.
மருத்துவர் சியாமளா நடேசன் தனதுரையில், புற்றுநோய் தனக்கு வந்த காலத்தில் தான் பெற்ற அனுபவங்களை விளக்கினார். இந்நிகழ்வில் உரையாற்றிய இதர மருத்துவர்கள், எமது மக்களில் பெரும்பாலானவர்கள் வெற்றிலை பாக்கு பாவனையினால் புற்றுநோய்க்கு ஆளாவதாகக் குறிப்பிட்டதுடன், இலங்கையில் விவசாயிகள், மற்றும் தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களிடம், பாக்குப்பாவனையின் பக்கவிளைவுகள் பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் மிகவும் அவசியமானது என்றும், புற்றுநோய்க்கான அறிகுறி தென்பட்டதுமே மருத்துவர்களின் ஆலோசனைகளை நாடுவதிலும் ஆர்வம் காண்பிப்பதில்லை எனவும் குறிப்பிட்டனர். இந்த நிறுவனத்தின் தொடர் செயற்பாடுகள் புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவர்களோடு இணைந்திருக்கும் என்று இதன் இயக்குனர்கள் தமது கருத்துரையில் தெரிவித்தனர்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.