வரலாற்றில் நிஜப் பாத்திரங்கள் :
ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன். (கண்டியின் கடைசித் தமிழ் மன்னன்)
பிலிமத்லாவ. (கண்டி அரசின் மகா மந்திரி)
எகிலப்பொல. (பிலிமத்லாவவின் மருகன். கண்டி அரசில் மந்திரி பதவி வகித்தவன்.)
பிரடரிக் நோத், தோமஸ் மெயிற்லண்ட், ரொபேட் பிரவுண்ரிக். (இலங்கையில் அடுத்தடுத்து ஆள்பதியாக இருந்தவர்கள்.)
டேவி (1809ல் கண்டிமீது படையெடுத்த பிரித்தானியப் படைக்கு தலைவன்.)-
சிறுகதைக்காகப் புனையப்பட்ட பாத்திரங்கள் :
1.மாலினி.
2.(சித்த வைத்தியன்) மாலினியின் காதலன். கண்டி அரசுப் படையில் ஒரு வீரன். (முக்கியமாக : இக்கதையின் நாயகன். கதையை நகர்த்திச் செல்பவன்.)
வரலாற்றுப் பின்னணி (நடந்த உண்மை):
இலங்கையில் அந்நிய ஏகாதிபத்தியத்திடம் பிடிபடாது, நின்ற கடைசி ராஜ்ஜியம் மலையகத்தைத் தன்னகமாகக் கொண்ட கண்டி ராஜ்ஜியமே. மன்னன் பெயர் ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன்.(இயற்பெயர் – கண்ணுச்சாமி). ஏற்கனவே கண்டி மன்னனாக இருந்த ராஜாதி ராஜசிங்கன் வாரிசு இல்லாமல் காலமானபோது, மன்னனாக வருவதற்கு மந்திரி பிலிமத்லாவ முயற்சிக்கின்றார். மக்களின் எதிர்ப்பினால் முடியாதுபோகவே, தனது பேச்சுக்கு கட்டுப்படக்கூடியவன் ஒருவனை மன்னனாக்க முயற்சித்து, இறந்த மன்னரின் நெருங்கிய உறவினனான கண்ணுச்சாமியை (மதுரையிலிருந்து) கூட்டிவந்து, ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன் என்னும் பெயரில் மன்னனாக்குகின்றார். மந்திரியின் உள்நோக்கத்தை தெரிந்துகொண்ட மன்னன், மந்திரி விசயத்தில் எச்சரிக்கை கொள்கின்றார். புரிந்துகொண்ட மந்திரி பிலிமத்லாவ குறுக்குவழியில் சதிசெய்து, ஆட்சியை கைப்பற்றும் நோக்கோடு பிரித்தானியர் உதவியை நாடுகின்றார்.
கண்டியை கைப்பற்றி, தன்னை மன்னனாக்கும்படியும், தானே கப்பம் செலுத்தும் சிற்றரசனாக இருந்து, ஆட்சிபுரிவதாகவும் ஆசை காட்டி வேண்டுகின்றார். கண்டியரசுமீது பிரித்தானிய அரசு போர் தொடுக்கும்படியான சூழலை உருவாக்குகின்றார். இரண்டு தடவைகள் முயற்சித்த பிரித்தானிய படைகள் தோல்வியை தழுவுகின்றன. கண்டியின் படைகள் வலிமையும், மக்களின் ராஜபக்தியும் மண்ணைக் காக்கின்றன, பிலிமத்லாவ சிரச்சேதம் செய்து கொல்லப்படுகின்றார். பின் நாட்களில், மன்னனின் போக்குகள் மாறி, கொடுங்கோலனாக மாறுகின்றார். மக்கள் எதிர்ப்பு வலுக்கின்றது. 10.02.1815ல், ஆங்கிலேயரின் படையெடுப்பு நிகழ்கின்றது. அவர்களிடம் எந்த எதிர்ப்புமின்றி, மக்கள் வரவேற்று அரண்மனைக்கு வழிகாட்டி வைக்கின்றனர். மன்னர் கைதாகின்றார். குடும்பத்தோடு வேலூர் சிறைக்கு அனுப்பப்படுகின்றார்.
வரலாற்றுச் சிறுகதை : சதியாலே சிதைந்த விதி! - (தமிழகத்து) நெல்லை - வீரவநல்லுர் ., ஸ்ரீராம் விக்னேஷ் -
படித்து முடித்ததும் எனக்காக இரண்டு நிமிடம் மெளனாஞ்சலி செய்வீர்கள் என்னும் நம்பிக்கையோடு பத்தொன்பதாம் நூற்றாண்டின் நுழை வாயிலில் தடம் பதிக்கிறேன். இலங்கையின் மத்திய மலையக கண்டி அரசின் பகுதி, சலசலத்தோடும் மகாவலி ஆற்றின் குளிர்ச்சியால் பொலிவுற்று விளங்கியது. முழு நிலாக் காலம். இரவின் இரண்டாம் பொழுது. வருடிச் செல்லும் பனியின் குளிர். அது வாழ்த்திச் செல்லும் சூட்டினைத் தாங்கிய அரவணைப்பில் இளம் காதலர்கள் - நானும், மாலினியும்.
மாலினி..! கண்டிப் பேரரசின் பிரதான மந்திரி, “பிலிமத்லாவை” யின் தூரத்து உறவுக்கார அண்ணனின் ஒரேமகள். தமிழை நன்றாகப் பேசும் சிங்களக்குயில். சிலகாலத்துக்கு முன்புதான், மாலினியின் அப்பா, யாராலோ மறைமுகமாகக் கொல்லப்பட்டார். பிலிமத்லாவையின் பராமரிப்பில்தான் இப்போது இவள் வாழ்கின்றாள். நான் ஒரு சித்த வைத்தியன். மூலிகை பறிப்பதற்காக காட்டுக்குச் சென்றபோது, மலைக் குன்று ஒன்றின் அருகே, மாலினியை ஒரு மலைப்பாம்பு பிடித்துக்கொண்டிருப்பது கண்டு, வெகு சிரமப்பட்டு அவளக் காப்பாற்றினேன். அவளது பார்வை என்மீது விழுந்தது. காதல் வசப்பட்டோம். மந்திரி மாளிகையின் பின்னால் பருத்ததோர் ஆலமரம். அருகே அரண் போல் ஒரு சிறுகுன்று. அதன் உள்ளே அழகான வட்டப்பாறை. நமது சந்திப்பிடம் இதுதான்.
“மாலினி…. இதே வாய்ப்பு தினமும் கிடைக்குமா….”
“நமது திருமணத்தின் பின்…. நிச்சயம் கிடைக்கும்.... அதற்கென உள்ளத்துள் அழகான விதியொன்றை வகுத்து வைத்திருக்கின்றேன்....”
“என்னது.... விதியா..... விதியை வகுக்க நீயென்ன கடவுளா.....”
சிரித்தபடி கேட்டேன். அவளோ.......,
“ஒரு சிங்களத்தி, எனக்குத் தெரிந்ததுகூட உனக்குத் தெரியவில்லையே.... பொதுவாக விதி என்றால், நியதி.... ஒழுங்கு முறை......கிட்டத்தட்ட இலட்சியம் என்றுகூட வைத்துக்கொள்ளலாம்..... பயணத்தைத் தொடங்கமுன், பாதையை நல்லபடி வகுத்துக்கொண்டால், அதிலே பயணம் நடத்தும்போது பயமே இருக்காதல்லவா....”
ஆலமரத்தை நெருங்கியபோது, எங்களின் முன்னே ஓர் உருவம்.
“ஆ..........” என்று அலறியபடி மாலினி என்னை அணைத்துக்கொண்டாள்.
“பயப்படாதே மாலினி......”
எனக்குப் பின்னே நிறுத்திக்கொண்டேன்.
எதிரே நிற்பவரோ, முதியவர் போலிருந்தது. வயிறுவரை நீளமான வெள்ளைநிறத் தாடி.
“தாங்கள் யார்....... இந்த வேளையில் இங்கு தங்களுக்கென்ன வேலை.....”
கேட்டேன் நான்.
“இது உன்னிடம் நான் கேட்கவேண்டிய கேள்வி...... யார் அந்தப் பெண்.... மாலினி அல்லவா....”
எதிர்பாரா கேள்வியால் அதிர்ந்தோம்.
“முதலில் நீங்கள் யார் என்பதைச் சொல்லுங்கள்....”
“வாயால் சொல்வதைவிட, வாளால் சொன்னால் நன்றாக இருக்குமல்லவா.....”
சொல்லியபடி இடையிலே தான் மறைத்து வைத்திருந்த இரண்டு வாட்கனை உருவினார்.
“ உன்னிடம் ஆயுதம் எதுவும் இல்லையல்லவா.... இதோ இந்த வாளினைப் பிடி.... “
ஒரு வாளினை என்னிடம் போட்டார்.
அதனைப் பக்குவமாகப் பிடித்துக்கொண்டேன்.
“மாலினி..... சற்று அப்பால் விலகி நில்.... விளையாடிவிட்டு வருகின்றேன்.....”
என்னை ஆச்சரியமாகப் பார்த்தாள் அவள். அவள் முகத்திலே மகிழ்ச்சி.
மறுகணம், அங்கே இரண்டு வாள்களும் மோதின.
வேகம் உக்கிரமானபோது, வயோதிபரின் வாள் இரு துண்டாக உடைந்தது. நானும் நிறுத்திக்கொண்டேன்.
“ஏன் நிறுத்திவிட்டாய் இளைஞனே..... உன் வாளால் என் நெஞ்சினைக் குறிபார்க்கவேண்டியதுதானே.....”
இறுமாப்போடு கேட்டார்.
பணிவாகப் பதிலுரைத்தேன் நான்.
“ஏன், அதை தாங்களும் செய்திருக்கலாமே.... நிராயுதபாணியாக வந்த என்னை இரண்டு போர்வாள்கள் வைத்திருந்த நீங்கள் கொன்றிருக்கலாமே..... போர் தர்மத்தை தங்களின் ஆசான்கள் மட்டுந்தான் சொல்லிக்கொடுப்பார்களா....அதை எனது ஆசான்கள் சொல்லித்தந்திருக்க மாட்டார்களா.....”
“உன்னையும், உன் ஆசான்களையும் தெரிந்ததனால்தான் உன்னோடு விளையாட வந்தேன்.....”
“என்னைப்பற்றி என்னதெரியும் உங்களுக்கு.....”
“நீ யாழ்ப்பாணத்தில் ஒரு சித்தவைத்திய பரம்பரையில் பிறந்தவன். .. தொழில் தெரிந்தபோதிலும் அதன்மேல் நாட்டம் வைக்காது, போர்க்கலையை கற்க விரும்பினாய்…. தென்னிந்தியா சென்றாய்....
பாஞ்சாலங்குறிச்சி ஊமைத்துரை, சிவகங்கைக் காளையார் கோவில் சின்ன மருது ஆகியோரிடம் போர்க்கலையைக் கற்றாய்.... அவர்களோடு சேர்ந்து ஆங்கிலேயரிடம் கைதாகியபோது தப்பி இலங்கை வந்தாய்….. அப்போது உன் பெற்றோர் இருவரும் உயிரோடில்லை….. போர்க்கலையையே வெறுத்தாய்….. பெற்றோரின் உயிர்திருப்தியை வேண்டி உன்னை ஒரு முழுநேர வைத்தியனாய் மாற்ற முடிவெடுத்தாய்….. உள்ளூரில் இருக்க விரும்பாமல், மலையகத்துக்கு வந்தாய்….. வைத்தியப் பணியை தொடங்கினாய்…. கடந்த 1803ல் பங்குனி மாதத்தில், பிரித்தானிய ஆள்பதி, “பிரடரிக் நோத்” கண்டிமீது படையெடுத்தபோது, காயம்பட்ட வீரர்களுக்கு முதலுதவி வைத்தியம் பார்த்தாய்….. போதுமா.... உன்னைபற்றி நான் கொடுத்த விபரங்கள்.....”
நான் திகைத்தேன். தொடர்ந்தார் முதியவர்.
மூலிகை செடிபறிக்க வந்தாய் ..
அப்போது மலைப்பாம்பிடம் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த மாலினியை காப்பாற்றினாய்... இந்த ஒரு சம்பவமே போதும்…. . உன்னை ஒரு போர்வீரனாக சந்தேகிக்க….. அதை நேரிலே பரிசோதிக்கவேதான் இரண்டு வாள்களுடன் வந்தேன் ….. ”
அதுவரை நேரமும் பொறுமை காத்த மாலினி ,
“ஐயா.... எனக்கே தெரியாத இத்தனை விபரங்களையும் தெரிந்த தாங்கள் நிச்சயமாகச் சாதாரணமானவராக இருக்க முடியாது..... என்னுடைய கணிப்பின்படி தாங்கள் நகர்புறச் சோதனைக்காக மாறுவேடத்தில் வந்த, மகாகனம் பொருந்திய மன்னர்பிரானேதான்....எங்கள்மீது தவறிருந்தால் கருணையோடு மன்னித்து, எங்களை ஆசீர்வதியுங்கள்....”
அவரது காலடியில் விழுந்து வணங்கினாள். நானும் வணங்கினேன்.
நிமிர்ந்தபோது, அங்கே வயோதிபர் இல்லை.
கண்டியின் மாமன்னர், ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கர் பிரகாசித்தார்.
“மகளே மாலினி.... கலங்காதே.... அரசுக்காக உயிரைத் தியாகம் செய்தவன் உன் அப்பன்.... அவனின் பிள்ளை நீ..... ஒரு இளைஞனோடு பழகுகின்றாய் என்னும் செய்தி என் காதில் விழுந்த மறுகணமே, இவனைப்பற்றிய விபரங்களை அறிந்தேன்.... தன் உயிரைக்கூட மதிக்காமல் ,உன்னைக் காத்த இந்த வீரன் உனக்குப் பொருத்தமானவன்..... ஆனால், வீரத்திற்கு ஏற்ற விவேகம் இவனிடம் போதவில்லையே என்பதுதான் சற்று மனக் குறையாக உள்ளது.....”
அதிர்ந்தேன் நான்.
“என்ன சொல்கின்றீர்கள் மன்னா.... நான் என்னதான் தவறிழைத்துவிட்டேன்...... எனது கடந்தகால ரகசியங்கள் இப்போது வெளியே தெரியவேண்டாம் என எண்ணியதால்தான் நான் என்னை முழுக்க முழுக்க ஒரு சித்த வைத்தியனாகக் காட்டிக்கொண்டேன்.... ஏதாவது சந்தர்ப்பத்தில் பெண்கள், அவசரத்தில் உணர்ச்சிவசப்பட்டு, அடையாளம் காட்டிவிடுவார்கள் என்பதனால்தான் மாலினியிடம்கூட எதையும் கூறவில்லை.....”
மன்னர் குறுக்கிட்டார்.
“ இப்போது நீ மட்டும் என்ன செய்துவிட்டாய்..... பூனை எவ்வளவுதான் பொறுமை கொண்டாலும், எலியைப் பார்த்த மறுகணமே அதனுடைய குணத்தைக் காட்டிவிடும் அல்லவா..... சித்த வைத்தியனாக வாழ முடிவெடுத்த நீ , இப்போது கையிலே வாள் கிடைத்ததும், உன்னை மறந்து, இனம் காட்டிவிட்டாய் அல்லவா.... வாழ்க்கையில் பொறுமையைக் கடைப்பிடிக்காதவர்களால், இரகசியங்களைக் காப்பாற்றவோ, எதையும் சாதிக்கவோ முடியாது.....”
“என்னை மன்னித்துவிடுங்கள் மன்னா...... இனி எச்சரிக்கையாக இருப்பேன்....”
“ஒரு சிறந்த போர்வீரனானவன், கையிலே வேலினையும்,வாளினையும் ஏந்தும் பலத்தையும், நெஞ்சிலே உறுதியையும் கொண்டிருந்தால் மட்டும் போதாது.... தனது புத்தியிலே அரச தந்திரங்களையும் ஏற்றிச் செப்பனிட்டுப் பழகிக்கொள்ள வேண்டும்....
இந்த சந்திப்பானது நமக்குள்ளே மட்டும் இருக்கட்டும்....
மாலினி…… நான் சொல்வதை மட்டும் செய்…..ஏன் எதற்கென்ற பரிசோதனை வேண்டாம்…. நீ உன் சித்தப்பனிடம் பேசு.... இவன் ஒரு சித்த வைத்தியன் .... வடக்கே யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவன்.... கொடிய மலைப்பாம்பிடமிருந்து உன்னைக் காப்பாற்றியவன்..... போர்க்கலையில் ஆர்வமுள்ளவன்.... படையிலே சேர்ந்து முறைப்படி பயிற்சியெடுத்துப் பணியாற்ற விரும்புகின்றான்.... தாங்கள் இவனை உங்களுக்குக் கீழ் வைத்துக்கொள்ளுங்கள்...... என்று மட்டும் பரிந்துரை செய்..... ஏற்கனவே போர்க்கலை கற்றவன் என்பது தெரியதிருப்பது மிகவும் முக்கியம்.. ...... தவிர, இவன் உன்னோடு பழகுவதுபற்றிய தகவல் உன் சித்தப்பனுக்கு இதுவரையில் தெரியாமலிருக்காது..... என்றாலும், நீ தலையிட்டு பரிந்துரை செய்யும் பட்சத்தில், இவன் உனக்காக எதுவும் செய்வான் என்பதை கொஞ்சம் அழுத்திச் சொல்.... முழுமையாகப் புரிந்துகொள்வார்..... சரி.... புறப்படுங்கள்.... மூன்றாம் பொழுது வரப் போகிறது.......”
“நன்றி மன்னா.... நாங்கள் உத்தரவு வாங்கிக்கொள்கின்றோம்....”
இருவரும் மன்னரை வணங்கிவிட்டுப் புறப்பட்டோம்.
மன்னரின் பார்வை என்மீது விழுந்தது.
“நாளை இதே பொழுதில் நீ மட்டும் இங்கேயே வா..... உனக்காக காத்திருக்கின்றேன் ......”
“ஆகட்டும் மன்னா....”
----------------------------------------------------------------------------------------------------------------
மாலினியின் சித்தப்பா.... அதாவது மகாமந்திரி பிலிமத்லாவ செய்துகொண்டிருக்கும் சதிகள்பற்றி மன்னர் சொல்லச்சொல்ல எனக்குத் தலையே வெடித்துவிடும் போல இருந்தது.
”இலங்கையின் கரையோரங்களிலிருந்த ஒல்லாந்தரை விரட்டிவிட்டு, அந்த இடங்களை ஆக்கிரமித்திருந்த பிரித்தானியர்கள் கண்டி அரசின் செயற்பாடுகள் எதிலுமே மூக்கை நுளைக்காதுதான் இருந்தார்கள்..... அந்த வேளையில், இந்தப் பிலிமத்லாவ என்னிடம் வந்து, இந்தப் பிரித்தானியரை முற்றாக விரட்டுவோம்.... நாம் அவர்கள்மீது போர் தொடுப்போம் என்று தூண்டினார்..... அதேவேளை, தனக்கென வைத்திருக்கும் ஆட்கள் மூலமாக கண்டி அரசுக்கு எதிராக மறைமுக பிரச்சாரம் செய்தார்..... அதாவது, ஆங்கிலேயர், இலங்கையின் கரையோரங்களையெல்லாம் கைப்பற்றிவிட்டார்கள்........ இதேநிலை நாளை கண்டிக்கு வராதென்பது என்ன நிச்சயம்.... இதனை நமது மன்னர் புரிந்துகொள்ள மறுக்கின்றார்..... ஆங்கிலேயருடன் போரிடப் பயப்படுகின்றார்.... என்றார். ஆனால், மக்களோ இவரை நம்பத் தயாராக இல்லை..... அதேவேளை நான் இவர்மீது இரக்கம் காட்டியதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு.... ஏற்கனவே கண்டியரசராக இருந்த எனது மாமனார் ராஜதி ராஜசிங்கர், வாரிசு இல்லாமல் இறந்துபோக, வெறும் கண்ணுச்சாமியாக மதுரையிலிருந்த என்னைக் கொண்டுவந்து ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன் ஆக்கினார்...... அரசபக்தியின் நிமித்தம் இவ்வாறு செய்கின்றார், என மதித்த எனக்கு, பின்புதான் தெரியவந்தது, ஆட்சியக் கைப்பற்ற முயற்சி செய்து முடியாமல் போகவே, என்னை ஒரு கைப்பொம்மையாக வைத்துக்கொண்டு ஆட்சிப் பீடத்தை தன் எண்ணத்திற்கேற்ப நகர்த்தப் போடப்பட்ட திட்டம் என்று.. நான் சுதாகரிப்பது தெரிந்ததும், ஏற்கனவே சொன்ன சதிகளை அரங்கேற்றத் தொடங்கினார்….. இறுதியாக, வெள்ளையரிடமே நேரில் பேசினார்….. கண்டியைக் கைப்பற்றி தன்வசம் தரும்படியும், தானோ ஆங்கில அரசுக்குக் கட்டுப்பட்ட சிற்றரசாக இருந்து, கப்பம் செலுத்தி வாழப் பூரண சம்மதம் என்றும் ஆசை காட்டினார்..... விளைவு..... கடந்த 1803ல் போர்...... அதில் வென்றோம்…. உண்மைதான்......
ஆனால், அந்தப் பிரச்சினைக்கு காரணமாய் இருக்கும் நச்சுப்பாம்பை முக்கிய பொறுப்பிலே நம் ஆட்சிக்குள்ளேயே வைத்திருக்கின்றோம்..... தக்க ஆதாரம் கையில் கிடைக்கும்வரை நம்மால் எதுவுமே செய்ய முடியாது..... இதோபார்.... ஆள்பதி பிரடரிக் நோத், இந்தப் பிலிமத்லாவ பேச்சுக்கு ஆடியதால், பதவி பறிக்கப்பட்டு பிரித்தானியாவுக்கே அழைக்கப்பட்டு விட்டார்..... அவருக்குப்பதிலாக புதிய ஆள்பதி, தோமசு மெயிற்லண்ட் என்பவர் வந்திருக்கின்றார்.... அவர் பொறுப்பெடுத்த தருணத்தில் , வரவேற்ற முதல்நபர் நமது மந்திரியார்தான்.... இதற்குமேலும் நீ தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய செய்தி ஒன்று உண்டு....”
“சொல்லுங்கள் மன்னா.....”
“மாலினியின் தந்தையைக் கொன்றது நமது மந்திரியார்தான்....”
அதிர்ந்தே போனேன் நான்.
“உண்மையாகவா மன்னா....”
“இதிலே பொய்யுரைக்க என்ன இருக்கிறது.... பிரடரிக் நோத்தின் படையெடுப்பு நமக்கு வெற்றியானதுக்கு காரணம், மந்திரியாரின் சூழ்ச்சிவலையை தக்க தருணத்தில் அறிந்து , அதனை நமக்குத் தெரிவித்தவரே அவர்தான்....... இந்த உண்மை எப்படியோ மந்திரியாருக்குத் தெரிந்துவிட்டது. அதன் விளைவுதான் இது.... நேற்று மாலினி இருந்ததால்தான், இந்த உண்மையை மறைத்தேன்........ இப்போது சொல்.... நீ சித்த வைத்தியனாய் மட்டும் இருக்கப்போகிறாயா.... அல்லது, மந்திரியாரின் கையாளாக இருந்து, எனது உளவாளியாகப் போகின்றாயா....”
என்னுடலில் , புதிதாக ரத்தம் ஓடுவதுபோல உணர்வு. கண்டிப் பேரரசு எத்தனை பேராபத்துக்குள் சிக்கிக்கொண்டிருக்கின்றது....
மந்திரியாரின் உறவினை நாடி, இந்தக் கண்டி மாநகருக்காக எந்தச் சிக்கலுக்குள்ளும் தலையைக் கொடுக்கத் தயாராகி விட்டேன்.
“ஆகட்டும் மன்னா.... எனக்குக் காதல் எந்தளவு முக்கியமோ, அந்தளவுக்கு கடமையும் முக்கியம்.... ஊமைத்துரையும்,சின்னமருதுவும், எனக்குள் நின்று, உற்சாகம் தருகிறார்கள்....”
மன்னர் என்னைத் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டார்.
உடம்பெல்லாம் புல்லரித்தது. கண்கள் பனித்தன.
----------------------------------------------------------------------------------------------------------------
குள்ள நரி பிலமத்லாவ என்னிடம் கேட்ட முதல் கேள்வி இதுதான்...... “நீ எப்போதாவது மன்னரைச் சந்தித்திருக்கின்றாயா......”
மதுவின் வாடை குமட்டியது.
“ஓரிரு தடவைகள் பார்த்திருக்கின்றேன்...... ஆனால் பேசியதில்லை மகா மந்திரியாரே....”
“அந்த அளவோடு உன்னை நிறுத்திக்கொள்.... என் அண்ணனின் மகளும், என் மகளுக்கு நிகரானவளுமான மாலினியின் பரிந்துரையால்தான் உன்னை என்னோடு சேர்த்துக்கொள்கின்றேன்.... வாள் பிடித்துப் பழகுவது முக்கியமல்ல.... உன்னிடம் நான் தரும் வேலைகளை உரிய நேரத்தில் முடித்துவிட வேண்டும்.... இரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.... எனது இலட்சியம் நிறைவேற்றப்படும்போது இந்தக் கண்டி எனக்கு.... மாலினி உனக்கு....”
“ஆகட்டும் மகா மந்திரியாரே....”
“ஒன்றுமே தெரியாத இவனை மன்னன் ஆக்கியவன் இந்தப் பிலிமத்லாவ......அதையெல்லாம் நினைத்துப் பாராமல், இப்போது என் ஆலோசனையெதுவுமே கேளாமல், எதிலும் தன்னிச்சையாக முடிவெடுக்கின்றான் மன்னன்.... இவனது நிம்மதி, மகிழ்ச்சி அனைத்துக்கும் நான்கு நாட்களுக்கு முன், வலுவான இடர் வைத்துவிட்டேன்....”
“அப்படியா மந்திரியாரே....”
“ஆமாம்.... கரையோரங்களிலிருந்து வியாபாரத்துக்காக வந்திருந்த பிரித்தானிய வியாபாரிகள் சிலபேரை அடித்துத் துன்புறுத்தி, இருந்த உடமைகள் அனைத்தையும் கொள்ளையடித்து ஒருசிலருக்கு மூக்கு,காதுகளைக்கூட அறுத்து அவமானப்படுத்தி அனுப்பியிருக்கின்றேன்.... அவர்கள் அனைவரும் ஆங்கில ஆள்பதி தோமசு மெயிற்லண்டுக்கு மிகவும் வேண்டப்பட்டவர்கள்.... மன்னனுக்கு சிங்களவர்கள் எப்படி ஆதரவாயிருக்கின்றனரோ அதேபோல எனது ஆபத்துதவிகளாய் இருபது தமிழர்கள் இருக்கின்றார்கள்.... அவர்கள் அரசுப் படையினரின் உடையை அணிந்துகொண்டு பிரித்தானியருக்கு கொடுத்த தொல்லைகளால் கொதித்துப்போய் கிடக்கின்ற ஆள்பதி, நாளை மறுதினம், டேவி என்பவன் தலைமையில் கண்டிமீது படையெடுத்துவரத் தயாராகிவிட்டார்.... 1803ல் கைகூடாத வெற்றி, ஆறு ஆண்டுகள் கழித்து இந்த 1809ல் கைகூடும்..... முக்கியமாக ஒன்றைக் கவனித்துக்கொள்.... இந்த ஆபத்துதவிகள் இருபதுபேரையும் வழிநடத்த எனக்கு மிகவும் வேண்டியவன் ஒருவன்.... பண்டார என்னும் போலிப் பெயரோடு வயோதிப வீரன்போல் வருகின்றான்….. ஏனென்றால் , மன்னனுக்கு நன்கு அறிமுகமானவன்.... ஆங்கிலேயரை எதிர்க்கும் கண்டிப் படைக்குள் எனது ஆபத்துதவிகள் இருபது பேரும், இந்த பண்டாரவும் கண்டிப் படைவீரரின் உடையில்தான் வருவார்கள்.... படைக்குள்ளே கலந்து, போர்த் தருணத்தில், கண்டிப் படையின் முக்கிய வீரர்களைப் புறமுதுகிலே குத்திக் கொல்வார்கள்.... இதிலே இருபத்தியிரண்டாவது வீரனாக நீயும் கலந்துகொள்.... அவசர மருந்துப் பெட்டகத்தை உன்னோடு வைத்துக்கொள்.... எனது ஆபத்துதவிகள் இருபத்தியொருபேரில் யாருக்குக் காயம் வந்தாலும் உடனடிச் சிகிச்சை தர வேண்டியது உனது பொறுப்பு.... உனக்கு போரைப்பற்றி எதுவுமே தெரியாது எனினும், ஏனய படை வீரருக்கு சந்தேகம் தோன்றாதிருக்கும் பொருட்டு, உன்கையிலும் ஒரு வாளும்,கேடயமும் வைத்துக்கொண்டு மற்றவரை ஏமாற்று.....”
அத்தனை நேரமும் கொதித்துக்கொண்டிருந்த என் உள்ளம், இந்த வார்த்தைகளால் குளிர்ந்தது.
“கையிலே வாளும், கேடயமுமா...... இதைவிட வேறு என்ன வேண்டும்....
யார் ... யாரை ஏமாற்றுகின்றார் என்று பார்க்கலாம்....”
அதிகாலை போர் தொடங்கியது.
நகரினைக் கடந்து, கண்டியின் மலையெல்லைபுறத்தை அடைந்துவிட்டோம்.
யாருமே எதிர்பாராதவண்ணம் கண்டியரசின் உண்மையான வீரர்கள், தாங்கள் அம்புகளை வைத்திருக்கும் கொள்கலனான அம்பறாத்தூணிகளின் உள்ளிருந்து சிவப்பு நிறத்திலே அமைந்த மேற்சட்டை ஒன்றை எடுத்து அணிந்து தம்மைத் தனியாக அடையாளம் காட்டிக்கொண்டார்கள்.
இது பிலிமத்லாவ சூழ்ச்சி பற்றி, மன்னருக்கு நான் கொடுத்த தகவலின் நிமித்தம் செய்யப்பட்ட அவசர ஏற்பாடு.
எங்கள் படைப்பிரிவில் ஒருபகுதி, சிவப்புநிறச் சட்டையில்லா சதிகார ஆபத்துதவிகளைக் களையெடுப்பதில் ஈடுபட, மீதமுள்ளோரில் சிலர் குன்றுகளின் உச்சியிலும், ஏனையோர் காலாட்படையாகவும் நின்று பிரித்தானியாருடன் தாக்குதலை நடத்தினார்கள்.....
மழையும் கொட்டியது. மகாவலி ஆறானது திடீரெனப் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றைக் கடந்து நமது எல்லைகுள்ளே வந்த எதிரிகளால் திரும்பி ஓடவும் முடியவில்லை....
அவர்களின் உணவுத் தானிய வண்டியை கண்டி வீரர்கள் பாழக்கினார்.
காட்டுக்குள்ளே பறந்துகொண்டிருக்கும் நச்சுத் தன்மை கொண்ட வண்டுகளும், “நுளம்பு” எனப்படும் பெருங் கொசுவும் கடித்ததனால், பழக்கமில்லா வெள்ளையர் பலர், காட்டுக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.
இந்தப் பாதிப்புக்களிலிருந்து தற்காத்துக்கொள்ளும் பொருட்டு, எமது வீரர்களுக்கு, போருக்கு முதல்நாளே பாதுகாப்புக் கசாயங்கள் கொடுத்துக் குடிக்கவைத்திருந்தேன்.
ஆங்கிலப் படையின் வீழ்ச்சி மிகவும் மோசமடையும்போது , சதிகார ஆபத்துதவிகளில் , பதினெட்டுப்பேர்வரை கொல்லப்பட்டு விட்டனர்.
நான், வாள் எடுத்துச் சுழற்றி வீசும் பக்குவத்தைக் கண்ட பண்டார தங்களோடு சேர்ந்து, தம்மை அனுப்பிய பிலிமத்லாவ வும் ஏமாந்ததை எண்ணிக் கொதித்தான்.
மின்னல் வேகத்தில் அவனும், அவனோடு மிஞ்சியிருந்த இருவரும் தத்தமது குதிரைகளில் தப்பி ஓடினர்.
சில நொடிப்பொழுதுகள்தான் ஆகியிருக்கும். தப்பிச் சென்ற பண்டாரவின் குதிரையோடு தானும் ஒரு குதிரையில் வந்தார் பிலிமத்லாவ.
அவரது கண்கள் சிவந்திருந்தன.
“ஏய்.... பச்சைத் துரோகியே.... மாலினி சொன்னாளே என்பதற்காக உன்னைப்பற்றி ஆழமாக அலசி ஆராயாமல் என்னோடு சேர்த்துக்கொண்டேன்..... உன்முன்னால் வைத்தே எனது இரகசிய திட்டங்கள் பற்றிப் பேசினேன்.... கடைசியில் என் ஆபத்துதவிகள் பதினெட்டுப் பேர் அநியாயமாய் அழிவதற்குக் காரணமாகிவிட்டேன்.... இவை அனைத்துக்கும் காரணமானவள் இவள்தானே.... இந்தா வைத்துக்கொள்......”
இரத்தம் தோய்ந்த பை ஒன்றிலிருந்து எடுத்து என்னிடம் வீசினான் பாவி.
அது மாலினியின் தலை.
“ஐயோ மாலினி........”
என் சத்தத்தால் கண்டிமலைக் காடே அதிர்ந்தது.
வார்த்தைகள் வந்து,வந்து தொண்டைக்குள் அடைத்தன. பேசவே முடியவில்லை.
பிலிமத்லாவ யை நோக்கியது என்பார்வை.
“என் மாலினியைக் கொன்ற உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன்....”
என் குதிரை அவனை நோக்கிப் பாய்ந்தது.
கையிலேயிருந்த வாளின் வேகத் துக்குத் தப்ப முடியாமல் அவனது வலதுகரம் துண்டிக்கப்பட்டுத் தூர விழுந்தது.
இப்போது அவனது அலறலால் காடு அதிர்ந்தது. கண்கள் சுழல அரை மயக்கத்திலிருந்தான் பிலிமத் லாவ.
அவனைக் கொல்வதற்காக மீண்டும் வாளை ஓங்கினேன்.
“வேண்டாம்... இப்போது அவனைக் கொல்லாதே.... மன்னரிடம் இவனை ஒப்படைத்து, அவரின் ஆணைப்படிதான் இவனது சிரச்சேதம் நிகழ வேண்டும்....”
என் பக்கத்திலிருந்த வீரன் ஒருவன் தடுத்தான்.
அப்போது எங்கள் படைக்குளிருந்து மன்னரின் குரல் வெளிவந்தது.
“மன்னன் பக்கத்திலேதான் இருக்கின்றான்.... ஆணையும் இட்டுவிட்டான்.... இவனைக் கொன்றுவிடு....”
ஆமாம்-
சாதாரண குதிரைப்படை வீரரில் ஒருவராக மாறுவேடத்தில் வந்து, எங்களில் ஒருவராக நின்று போராடியிருக்கின்றார்.
மறுகணம் என்னால் சிரச்சேதம் செய்யப்பட்டான் பிலிமத்லாவ.
மாலினியின் இறுதிக் கடன்களை வட்டப்பாறை ஓரமாக முடித்தேன்.
தகனம் முடித்த கையோடு மன்னர் கூப்பிட்டார்.
“நீங்கள் எல்லோரும் செல்லுங்கள்.... நான் சற்று ஆறுதலாக இருந்துவிட்டு வருகின்றேன்....”
வேண்டிக் கேட்டுக்கொண்டேன்.
வாழ்க்கையே வெறுத்துவிட்ட துறவிபோல எங்கள் வட்டப்பாறையில் படுத்துக் கிடந்தேன். கண்கள் குளமாக , மாலினியின் நினைவு மார்பினை அழுத்தியது.
என்னைச் சுற்றிப் பல காலடித் தடங்கள் கேட்டன. திரும்பிப் பார்த்தேன்.
ஆயுதங்களுடன் பண்டாரவும், அவனின் கையாட்கள் சிலரும்.
அவர்களுடன் ஒருசில பிரித்தானியப் படையினரும் நின்றனர்.
புரிந்தது. எல்லாம் கைமீறிவிட்டன.
நடக்கும் சம்பவத்தை அரண்மனைக்கு தெரிவிக்கவும் யாருமில்லை.
எனக்கு விலங்கு மாட்டினான் பண்டார.
“என்ன பார்க்கின்றாய்.... இந்த பண்டார யார் என்றா.... நான் பண்டார அல்ல.... என் பெயர் 'எகிலப் பொல' இறந்துபோன மகா மந்திரியின் மருமகன்....”
ஒட்டுத்தாடி மீசைகளை உருவினான்.
“என்னை நல்லவன் என்று நம்பிக்கொண்டிருக்கும் முட்டாள் மன்னன், என்னை மந்திரியாக நியமித்திருக்கிறான்.... தருணம் பார்த்து மன்னனுக்கு வைக்கின்றேன் குறி....”
“இறைவா.... கண்டியைக் காப்பாற்று....”
வேண்டிக்கொண்டேன்.
குரூரவதைகளின் வாழ்விடமே கொழும்பு சிறைச்சாலை போலும்.
கைதிகளின் உடம்பை எப்படியெல்லாம் சிதைப்பது என்பதிலே போட்டியிடும் வதைகள்.
எகிலப்பொல மந்திரியாகிச் சில நாட்களிலேயே அவனது ஒப்பனை கலைந்துபோனது. மன்னரிடம் பிடிபடாமல் தப்பி கொழும்புக்கு ஓடிவந்துவிட்டான்.
1815ல், ஆங்கில மாதம் பெப்ரவரி10ம் தேதி, இரவு என்னைச் சந்திக்க சிறைச்சாலைக்கு வந்திருந்தான் எகிலப்பொல. நடை,உடை பாவனையெல்லாம் பிரித்தானியன்போலவே இருந்தது.
ஆள்பதி தோமஸ் மெயிற்லண்ட் என்பரை மாற்றி, ரொபேட் பிரவுண்ரிக் என்பவர் பொறுப்புக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதையும், அவரது தலைமையிலேதான் கண்டி அரசு இன்று காலை கைப்பற்றப்பட்டது என்னும் செய்தியையும் எனக்குச் சொல்வதற்காகவே வந்திருக்கின்றான்.
முதலில் என்னால் நம்ப முடியவில்லை. பின்புதான் மன்னரது போக்கு அனைத்துமே தப்பாகிவிட்டன என்பதையும், அவர் முழுநேரக் குடிகாரர் ஆகியதோடு மட்டுமில்லாமல், கொடுங்கோலின் உச்சத்துக்கே சென்றுவிட்ட செய்தியையும், அதன் விளைவாக யார்யார்மீதெல்லாம் ஐயம் தோன்றுகின்றதோ அவர்களையெல்லாம் விசாரணை ஏதுமின்றி, வெட்டிக் கொல்லும் பாதகனாக மாறிவிட்ட செய்திகள் அனைத்தையுமே தெரிவித்தான்.
பிரித்தானியப்படை இருதடவை கண்டிக்குள் நுளைந்தபோது, யார்யாரெல்லாம் எதிர்த்தார்களோ, அவரெல்லாம் இப்போது வணங்கி வரவேற்றார் கள் என்பதைக் கேள்விப்பட்டபோது இதயம் வலுவாகக் கனத்தது.
“சீ.... இவர்களுக்காகவா நான் இத்தனை சிரமப்பட்டேன்....மாலினி.... என் இதயராணியே.... இவர்களுக்காகவா உன்னை இழந்தேன்.... எங்கள் நல்வாழ்வுக்காக நீ வகுத்த விதியை, வலியதாக்காமல், ஒருசிலரின் சதிக்குள் சிதையவிட்டதற்கு என்னை மன்னித்துவிடு.... எனக்காக நீ கொடுத்த உயிருக்கு ஈடாக, நான் படும் துன்பங்கள் பெரிதல்ல.....”
என் சிந்தனையைக் குலைத்தான் எகிலப்பொல. அவனது பேச்சிலே உண்மை தெரிந்தது. சிறைக் கம்பிகளுக்குள்ளால் தனது கையை நுளைத்து எனது கரத்தினைப் பற்றினான்.
“மன்னரையும், குடும்பத்தையும் வேலூர் சிறைச்சாலைக்கு அனுப்புகிறார்கள்.. உன்னைத் தூக்கிலிடப் போகிறார்கள்...... உனக்கு விருப்பமாயிருந்தால் சொல்.... அவர்களோடு ஒன்றாக உன்னையும் சேர்த்து வேலூருக்கே அனுப்பிவைக்கவேண்டியது எனது பொறுப்பு.... சகல அரச மரியாதைகளுடனும் உன் வாழ்நாளைக் கழிக்கலாம்.....”
அத்தனை வேதனைகளுக்கு மத்தியிலும் எனக்குள் சிரிப்பு வந்தது.
என் கரத்தினைப் பற்றியிருக்கும் அவனது கரத்தினை இறுக்கமாக அழுத்திப் பிடித்தேன்.
“எகிலப்பொல.... நீ எனக்காக சிரமப்பட முன்வந்ததற்கு நன்றி.... நான் உயிரோடு இருக்கும் உண்மை மன்னருக்குத் தெரியவேண்டாம்....
எத்தனை சிரமங்கள் வந்தபோதிலும் அற்ப சலுகைகளுக்காக மயங்காமல், தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர்களால் வளர்க்கப்பட்டவன் நான்.... அப்படிப்பட்டவன் தூக்குக்கு தயங்குவேனா.... எனது உருவம்தான் சிதைந்தது…. உள்ளத்தின் உறுதி சிதையவில்லை..... எப்போதும் அது சிதையப்போவதுமில்லை ......”
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.