தமிழ் – மராட்டி தொடர்புகள் - ஒரு பருந்து பார்வை! - முனைவர் க.சக்திவேல், தவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தொன்போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி,கீழ்ப்பாக்கம், சென்னை – 600010. -
- சரஸ்வதி மஹால் நூல் நிலையம் -
மராட்டி-தமிழ் தொடர்புகள்; வரலாற்றுப்பின்னணி
பண்டைக் காலந்தொட்டே ஆசியக் கண்டத்தின் முக்கிய நிலப்பரப்பாக இந்தியா விளங்கி வருவதால், உலக நாடுகள் பலவும் பல்வேறு நிலைகளில் இந்தியாவுடான உறவுகளைப் பேணுவதில் முனைப்புடன் செயல்பட்டு வந்துள்ளன. குறிப்பாக வணிகம் செய்தல், சமயத்தைப் பரப்புதல், அரசியல், பொருளாதாரத்தில் மேலாதிக்கம் செலுத்துதல் போன்றவை அவர்களின் முக்கிய நோக்கங்களாக இன்றளவும் உள்ளன. வெளிநாட்டவர்கள் தாக்கத்தில் இந்தியாவை ஆட்சி செய்த மன்னர்களும், குறுநில மன்னர்களும் தங்களின் மேலாதிக்கத்தைச் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஒரு மொழிசார் நாகரிகம் பிற மொழிசார் நாகரிகத்திலிருந்து கடன் பெறுவது தொன்றுத்தொட்டு உலக மக்களிடையே காணப்படும் பண்பாட்டுப் பரிமாற்றப் போக்காக அமைகிறது. பொதுவாக வேற்றுநாட்டு அரசர்கள் பிற நாட்டின் மீதான தங்களுடைய ஆதிக்கத்தை, சமயத்தின் வழியாகவும் மொழியின் வழியாகவும் செலுத்திப் பண்பாட்டு மாற்றங்களை நிகழ்த்தினர். இதனை மணவாளன் அவர்கள் பின்வருமாறுக் கூறுகிறார். “கி.பி இரண்டாம் நூற்றாண்டிற்கும் கி.பி ஐந்தாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தே விளைந்த அரசியல் மாற்றங்கள் தமிழ்நாட்டிலும் சமுதாயத்திலும் பல்வேறு பண்பாட்டு மாற்றங்களை ஏற்படுத்தின என்று வரலாற்று வல்லுநர்கள் கருதுகின்றனர். வேற்று அரசர்களின் ஆட்சி, வேற்றுச் சமயத்தின் செல்வாக்கு, வேற்று மொழியின் ஆதிக்கம் போன்றன இம்மாற்றங்களை உண்டு பண்ணின” (அ.அ.மணவாளன்:2009:100) இவரின் கருத்தும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.