நிட்டின் கோக்லே, கவிஞர் ஜெயபாலன் பேட்டி, கலாநிதி அகிலன் கதிர்காமரின் கூற்று, மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி பற்றி... ( 18 - 24) - ஜோதிகுமார் -
- இலங்கையில் சீனக் கப்பல் -
18
சென்ற முறை, அத்தியாயம் 17இல், குறிப்பிட்டிருந்த ஆட்சியாளரின் இருசக்கரங்களின் செயற்பாடுகள் குறித்த அம்சங்கள் தொடர்பிலான அக்கறைகள், தமிழ் அரசியலின் ஒரு பிரிவினருக்கு, முக்கியமாக, புலம்பெயர் அரசியலின் ஒரு சார்பினருக்கு, தேவைப்படும் விடயங்கள்தாமா என்ற சந்தேகங்கள் இன்று எழுவதும் தவிர்க்க முடியாததாகின்றது. காரணம், அண்மையில் ‘தமிழ்வின்னில்’ திலீபன் தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரை ஒன்றில் ‘ஆதங்கங்கள்’ குறித்து பின்வருமாறு பிரகடனம் செய்யப்பட்டிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது:
“அந்த அவலத்தின் சாட்சியாக இன்னும் ஒரு சிலர் உலக பந்தின் எங்காவது ஒரு மூலையில் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதியை எதிர்ப்பார்த்து வாழக்கூடும்… …”
இருக்கலாம். ஆனால், இது, உண்மையில், மிக அடிப்படையான, பலம் வாய்ந்த தர்க்கங்களில், ஒன்றாக கருத இடமுண்டு. அதாவது, தாம் எதிர்ப்பார்த்து நிற்கும், சர்வதேச நீதியும் நியாயங்களும், கிட்டாது, காலம் காலமாக, ‘சர்வதேச நீதிமன்றில் இலங்கையை ஏற்றித்தான் தீருவோம்’ என்ற வாதமும் பொய்ப்பட்டு, ஏமாற்றப்பட்டு, இனி இந்த பழம் புளிக்கத்தான் போகின்றது என்று முடிவு செய்து கொண்ட வேளை, உலக பந்தின் எங்காவது ஒரு மூலையில் தனது ‘ஆதங்கங்களுடன்’ நின்றுக்கொண்டு, ஒதுங்கிக் கொள்வது சிறப்பானது–என்ற வாதம் இங்கு கட்டியெழுப்பப்படுகின்றது. ஆனால், இப்படியாக, உலக பந்தின் எங்காவது ஒரு மூலையில், அன்னார் ஆதங்கங்களுடன், வாழத்தான் வாழலாம் என்ற அன்னாரின் இந்த ‘ஆதங்கங்களுக்கு’ இங்குள்ளவர்கள்தாம் ஈற்றில் விலை கொடுத்தாக வேண்டி இருக்கும் என்பதே ‘பூனைக்கு மணி கட்டுவது யார்’ என்பது போன்ற ஓர் கேள்விக்கு எம்மை இட்டு செல்வதாயுள்ளது.