இந்திய தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் 55% முதல் 60% வரை தமிழ் மொழியில் உள்ளன. இந்திய தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்ட 100,000 கல்வெட்டுகளில் சுமார் 60,000 கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் இருந்ததையும் , கல்வெட்டும் பட்டியலில் தமிழ் மொழியில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள் தான் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. சில தமிழ் கல்வெட்டுகள் இந்தியாவில் மட்டுமின்றி சீனாவிலும், இலங்கை, தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன. அதேபோல பர்மாவில் காணப்படும் அயல் மொழிகளில் எழுதப்பட்ட கல்வெட்டுகளின் பட்டியலில் தமிழும் ஒன்று.
பர்மாவின் பண்டைய தலைநகரான (Bagan) பாகனில் 12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் கல்வெட்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான பாகன் நகரத்தில் உள்ள ஒரே ஒரு வைணவம் விஷ்ணு கோயிலுடன் ( Nat Hlaung Kyaung Temple) தொடர்புடையதாக இந்த கல் பொறிக்கப்பட்டுள்ளது என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
இந்தியக் கல்வெட்டியல் 1903-ஆம் ஆண்டறிக்கையில் கண்ட ஒரு செய்தியை இங்கு பகிர்ந்துகொள்கிறேன். அரசு கல்வெட்டாய்வாளர் டாக்டர். ஹுல்ட்ஸ் அவர்கள் (Dr. E.Hultzsch), அரசுக்கு அனுப்புகின்ற ஆண்டறிக்கையில் அச்செய்தியைக் குறிப்பிடுகிறார்.
மாண்புமிகு திரு. ஏ.டி. அருண்டேல் அவர்கள் (A.T.Arundel, C.S.I.), பர்மாவில் பயணம் செய்கையில், பகன்(Pagan) என்னும் ஊரில் ஒரு தமிழ்க்கல்வெட்டைக் கண்டுள்ளார். பர்மாவைச் சேர்ந்த திரு. தோ சைன் கோ (Mr. Taw Sein Ko) என்பவர் கல்வெட்டின் மைப்படியை ஹுல்ட்ஸ் அவர்களுக்கு அளித்துள்ளார். கல்வெட்டு சமற்கிருதத்தில் அமைந்த ஒரு செய்யுளையும், தமிழில் அமைந்த ஒரு உரைநடைப்பகுதியையும் கொண்டுள்ளது. சமற்கிருதச் செய்யுள் கிரந்த எழுத்திலும், தமிழ்ப்பகுதி தமிழ் எழுத்திலும் பொறிக்கப்பட்டிருந்தன. தமிழ் எழுத்து, 12-ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் இருக்கிறது. சமற்கிருதச் செய்யுள், வைணவ ஆழ்வாரான குலசேகராழ்வார் எழுதிய “முகுந்தமாலா” என்னும் செய்யுள் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது (செய்யுள் எண்.5). குலசேகர ஆழ்வார் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என திரு. வெங்கய்யா அவர்கள் குறிப்பிட்டுள்ளார். மலைமண்டலத்தைச் ( kerala) சேர்ந்த மகோதயர் பட்டணம் (மலபாரைச் சேர்ந்த கிராங்கனூர்-தற்போதைய கேரளா, கொடுங்கல்லூர்) என்னும் பட்டணத்திலிருக்கும் ஸ்ரீகுலசேகர நம்பி என்பவர் அளித்த நன்கொடைகள் பற்றிக் கல்வெட்டின் தமிழ்ப்பகுதி கூறுகிறது. இவர் தம்மைக் குலசேகர ஆழ்வாரின் அடியான் எனக்குறிப்பிடுகிறார் என்பதை இப்பதிவில் காணப்படுகிறது
இப் பர்மா தமிழ் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள வரிகளில் முதல் நான்கு வரிகள் குலசேகராழ்வார் எழுதிய “முகுந்தமாலா” என்னும் செய்யுள் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள கிரந்தம் எழுத்திலும் (செய்யுள் எண்.5). நான்காவது வரியின் இறுதியில் தமிழ்ப்பகுதி தமிழ் எழுத்தில் தொடங்குகிறது. மொத்தம் 9 வரிகள் உள்ளன. இக்கல்வெட்டில் இடம்பெற்றது பின்வருமாறு எழுதப்பட்டது.
####.?1.ஸவஸ்தி ஸ்ரீ நாஸ்தா² த⁴ர்மே ந வஸுனிசயே நைவ காமோப
2.போ⁴கே³யத்³யத்³ப⁴வ்யம் ப⁴வது ப⁴க³வன்பூர்வகர்மானுரூபம் |ஏத
3.த்ப்ரார்த்²யம் மம ப³ஹுமதம் ஜன்மஜன்மாந்தரே(அ)பித்வத்பாதா³ம்போ⁴ரு
4.ஹயுக³க³தா நிஶ்சலா ப⁴க்திரஸ்து || 5 || ?ஸ்ரீ ஸ்வஸ்திஸ்ரீ திருச்செலப்பெரு(க)
5.புக்கமான அரிவத்தனபுரத்து நானாதேசி விண்ணகராழ்வார் கோ
6 .யில் திருமண்டபமுஞ்செய்து திருக்கதவுமிட்டு இந்த மண்டப
7. த்துக்கு நின்றெரிகைக்கு நிலைவிளக்கொன்றுமிட்டேன் மலை
8.மண்டலத்து மகோதயர்பட்டணத்து இராயிரன் சிறியாநான (சீ )
9. குலசேகர(ந)ம்பியேன் இது ஸ்ரீஇதன்மம் மலைமண்டலத்தான். ####
?கல்வெட்டின் முதற்பகுதி குலசேகர ஆழ்வார் எழுதிய முகுந்த மாலையில் ஐந்தாவது பாடலை (mukutha mala sthortram Vers No.5) கொண்டுள்ளது. தமிழ் கிரந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது.. அதன் விளக்கம்.
"மங்களம் உண்டாகுக. எனக்கு பெயர் புகழ் வாங்குவதில் நாட்டமில்லை. பொருள் சேர்ப்பதில் நாட்டம் இல்லை..உலக இன்பங்களை அனுபவிப்பதில் நாட்டம் இல்லை.. என்னுடைய விதிப்படி என்ன நடக்க வேண்டுமோ அது நடக்கட்டும்.. ஆனால் நான் ஒன்றை மட்டும் உன்னிடம் வேண்டிக்கொள்கிறேன். எத்தனை பிறப்பு எடுத்தாலும் உன்னுடைய திருவடித் தாமரைகள் மீது அசையாத பக்தி இருக்க வேண்டுமென்று..
?கல்வெட்டின் இரண்டாம் பகுதி தமிழில் 12 நூற்றாண்டு தமிழ் வரிவடிவத்தில் அமைந்துள்ளது..அதன் விளக்கம்.
"மங்களம் உண்டாகுக..செல்வம் பெருகட்டும்.. புக்கம் என்னும் அரிவதனாபுரத்தில் அமைந்த நானாதேசி விண்ணகர் ஆழ்வார் கோவில் என்று வைணவக் திருமால் விஷ்ணு கோயிலுக்குப் மலை மண்டலத்தை (சேரநாடு இன்றைய கேரளம்) சேர்ந்த ஈராயிரம் சிறியன் என்றும் ஸ்ரீ குலசேகர நம்பி என்பான் ஒரு அழகிய மண்டபத்தை கட்டி அதற்கு கதவுகளும் செய்துகொண்டு அந்த மண்டபத்தில் எப்போதும் நின்று எரியும் விளக்கு ( எரிந்து ஒளி வீச நிலை விளக்கு ஒன்றையும்) கொடுத்தான்..எந்த தர்மம் மலைமண்டலதான் பெயரில் அறியப்படும்.."
என்று இந்த கல்வெட்டில் இடம் பெற்றது. புக்கம் என்பது பகன் (Bagan) என்னும் ஊரைக்குறிக்கும். பகன் என்னும் இப் பர்மிய ஊரைப்பற்றிய குறிப்பு, கல்யாணி கல்வெட்டொன்றில் காணப்படுகிறது. அக்கல்வெட்டில், ”புகாம” என்னும் அரிமத்தனபுரா எனக் குறிக்கப்படுகிறது. புத்த சமயம் மேலோங்கிய பர்மா நாட்டில் கட்டப்பெற்ற நானாதேசி விண்ணகரம் என்னும் பெயர், (நாலாபக்கங்களிலுமுள்ள) பல்வேறு நாடுகளிலிருந்து வருகின்றவர்களின் கோயில் என்பதைக்குறிக்கிறது. எனவே இப்பெயருள்ள கோயில், இந்தியத் தீபகற்பத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் வைணவர்களுக்காகக் கட்டப்பெற்றதாகும்.
இக்கோயிலை இன்றைய பர்மா நாட்டில் (Nat Hlaung Kyaung @ နတ်လျောင်ကျောင်း) என்று கூறப்பட்டுள்ளது. இந்த கோவில் பர்மாவில் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரே ஒரு வைணவம் கோவிலாகும்.
பர்மா மக்களால் Nat Hlaung Kyaung என்று கூறப்பட்டு தமிழில் நானாதேசி விண்ணகர் ஆழ்வார் கோவில் என்று கூறப்பட்ட இக்கோவில் பர்மாவில் உள்ள பண்டைய நகரான பாகனில் உள்ள பழமையான கோயில்களில் ஒன்றாகும்,பாகனில் எஞ்சியிருக்கும் இன்றைய ஒரே இந்து கோவிலும் ஆகும். 10 ஆம் நூற்றாண்டில் அனவ்ரதா மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. இக்கோயில் அந்தகாலத்தில் அரசன் சேவையை செய்யும் பிராமணர்கள், வணிகர்கள் மற்றும் பர்மாவுக்கு வந்துள்ள இந்தியத் தீபகற்பத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் வைணவர்களுக்காகக் கட்டப்பெற்றதாகும். இதை முதலில் கட்டிய நன்கொடையாளர் யார் என்று உறுதியாக தெரியவில்லை.. 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் சேர நாட்டில் சேர்ந்த குலசேகர நம்பி என்ற வணிகர் என்பவர் இங்கு வந்து ஒரு மண்டபத்தைச் சீர்செய்து கட்டியதாகத் தான் தமிழ்க் கல்வெட்டு கூறுகிறது. (நானாதேசி என்பது பண்டைய தமிழகத்தை சார்ந்த ஒரு வணிகக் குழு.நான்கு திசைகளிலும் சென்று வணிகம் செய்பவர்கள் என்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டிருக்கலாம்.அவர்கள் அமைத்தகோயில் என்பதால் நானாதேசி விண்ணகர் ஆழ்வார் கோயில் எனப்பட்டுள்ளது.பிற்காலத்தில் மண்டபம் அமைத்துக்கொடுத்த ஈராயிரம் சிறியனான குலசேகரநம்பியும் இந்த வணிக கணத்தைச் சேர்ந்தவராகவே இருக்கக்கூடும்.)
செங்குத்தான உயரமான மேல் மொட்டை மாடிகளுடன் சதுர வடிவில் கோயில் அமைக்கப்பட்டு கி.பி 10_11 ஆம் நூற்றாண்டில்,இந்திய கைவினைஞர்களால் இது கட்டப்பட்டிருக்கலாம் என்று அறிஞர்களால் கருதப்படுகிறது. இன்றைய காலத்தில் மூல கோவிலின் பல கட்டமைப்புகள் மறைந்துவிட்டன, இருப்பினும் பிரதான மண்டபம் உள்ளது. முதலில், கோயிலில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களின் சிலைகள் இருந்தன; இருப்பினும், இன்று சேதம் அடைந்த ஏழு சிலைகள் மட்டுமே எஞ்சியுள்ளனர். சில சிலைகள் திருடப்பட்டுள்ளன, சில சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. 19 நூற்றாண்டின் ஒரு ஜெர்மன் எண்ணெய் பொறியாளர் (Fridrich.W Nothlin) என்பவர் புராண கருடனின் மீது நின்ற பெரிய விஷ்ணு உருவச் சிலையை திருடினார்; இச்சிலை இப்போது (The State Hermitage Museum, St. Petersbug) அருங்காட்சியகத்தில் உள்ளது. இக்கோவில் சம்பந்தப்பட்ட மற்ற சிலைகள் இன்று பகன் அருங்காட்சியகத்தில் இருக்கின்றது. செங்கல்லால் கட்டப்பட்ட கோவில், நிலநடுக்கத்தால் சேதமடைந்து, பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் தனிமையில் இருந்தது.
இக்கோவிலில் பொறிக்கப்பட்ட தமிழ் கல்வெட்டில் இடம் பெற்ற முகுந்தமாலை பாடலை எழுதிய குலசேகர ஆழ்வார் தமிழர்களின் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். இவரைக் குலசேகரப் பெருமாள் என்றும் அழைக்கின்றனர்..கி.பி. 8 ம் நூற்றாண்டு ( 750 – 780) காலத்தில் சேர நாட்டு மன்னனின் மகனாய் பிறந்து பக்தி மார்க்கத்தில் திளைத்தவர்.இவர் பிறந்த ஊர் கேரளத்தில் கொடுங்களூ, திருவஞ்சிக்களம்ருக்குத் தெற்கில் மூன்று கிலோமீடர் தொலைவில் உள்ளது. அவ்வூருக்கு தற்காலத்திய பெயர் 'திருக்குலசேகரபுரம்'. அதற்கு வெகு அருகாமையில் கேரளப்பாணியில் கட்டப்பட்ட ஸ்ரீகிருஷ்ணர் கோவில் ஒன்று உளது. இது குலசேகர ஆழ்வாரால் AD 800வில் கட்டப்பட்ட வைணவ கோயி என்று அவ்வூரார் நம்பிக்கை. குலசேகர ஆழ்வார் தன்னுடைய புகழ்பெற்ற சமஸ்கிரதத்தில் எழுதிய பர்மா கல்வெட்டில் இடம் பெற்ற முகுந்தமாலை என்ற ஸ்தோத்திரதை தனது கோவிலில் எழுதி இக்கோயிலில் உள்ள கிருஷ்ணர் மீது பாடப்பட்டது. திருகுலசேகரபுரத்தில் இருக்கும் இந்த கோயிலில்தான் சேர மன்னர்கள் அரசர்களாக முடிசூட்டப்பட்டதாக சில வாய்மொழி மரபுகள் உள்ளன.
குலசேகர ஆழ்வார் தமிழில் பாடிய 105 பாடல்களை “பெருமாள் திருமொழி” என வழங்கப் பெறுகிறது. இவர்கள் இராமனுக்கு தாலாட்டு பாடியவர். குலசேகர ஆழ்வார் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்திலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிற மன்னார் கோவிலில் மோட்சம் அடைந்தார். இக்கோவிலில் தனிச்சன்னிதியில் காட்சி தருகிறார் குலசேகர ஆழ்வார். ஒவ்வொரு வைணவத்திருக்கோயிலிலும் இறைவனின் கருவறைக்கு முன் உள்ள படி “குலசேகரன் படி” என்ற பெயரில் வழங்கப்படுகிறது..
குலசேகர ஆழ்வாரால் இயற்றப்பட்ட முகுந்தமாலா என்பது வைணவம் சமயத்தில் நாராயணனைப் பற்றிய பிரபலமான ஸ்துதி, இது 40 ஸ்லோகங்களைக் கொண்டுள்ளது, இது உலகின் அனைத்து துன்பங்களிலிருந்தும் நிவாரணம் பெறுவதற்கான வழிமுறையாக பகவானின் பக்தியின் மகிமையை விவரிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. பர்மிய தமிழ் கல்வெட்டில் காணப்பட்டது இச் ஸ்லோகங்களில் இருக்கும் 5வது ஸ்லோகங் ஆகும்.
இந்த விடயங்களால் பாகனில் காலத்தில்,பர்மாவில் புத்தமதத்துடன் பிராமணியம் மற்றும் வைணவம் என்ற ஒரு பிரிவும் இருந்தது என்பது அறியப்படுகிறது. வைணவம் விஷ்ணு பிரிவின் சடங்குகள் மரபுகளும் பாகனில் பௌத்தர்களால் மதிக்கப்பட்டன. பாகன் காலத்தில் கியான்சித்தா மன்னரின் முடிசூட்டு விழாவில், கரும்பு, தோரணம், பிரசாதம் வழங்கும் மேடையுடன் விஷ்ணுவுக்கு விளக்குகளுடன் கூடிய காணிக்கைகள் அடங்கிய நிகழ்ச்சி இருந்தனர் என்று பர்மிய அறிஞர்கள் கூறுகிறார்கள்..பர்மாவில் காலங்காலமாக மன்னர்களின் முடிசூட்டு விழாவில் விஷ்ணு வழிபாட்டுடன் வைணவம் நிகழ்ச்சிகள் நடைமுறைகள் பின்பற்றுகிறார்கள் என்பதற்கான சான்றுகளும் உள்ளன என்று பர்மிய அறிஞர்கள் கூறுகிறார்கள்..
இப்பொது இந்த பர்மிய தமிழ் கல்வெட்டை மியான்மரின் பண்டைய நகரமான பாகன் அருங்காட்சியகத்தில் (Bagan Museum) ஆர்வமுள்ள யாரேனும் சென்று படிக்க முடியும் என்பதனையும் பாகன் நகரில் உள்ள ஆயிரம் வருடம் பழமையான விஷ்ணு கோயிலுக்கும் நீங்கள் யார் வேண்டுமானாலும் பார்வையிடலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
https://www.facebook.com/kyaw.m.htet.31/posts/pfbid027rAhm5b3y8e1BFytyvWv9QZqobbcJtrbh8o24rWnt2PAFJAyDBcjsv9GnTWKHQBXl
MyanmarTamil inscription
பர்மாவில் தமிழ்க் கல்வெட்டு
1. பர்மா மக்களால் Nat Hlaung Kyaung என்று கூறப்பட்டு தமிழில் "நானாதேசி விண்ணகர் ஆழ்வார் கோவில்" , ஆயிரம் வருடம் பழமையான விஷ்ணு கோவில்.
2. கோயிலின் மூலஸ்தானத்தில் இன்றைய காலகட்டத்தில் புதுமை பட்டுள்ள கட்டமைப்புகள்...
3. இன்று சேதம் அடைந்த அவதாரங்களின் ஏழு சிலைகள் மட்டுமே எஞ்சியுள்ளனர். சில சிலைகள் திருடப்பட்டுள்ளன, சில சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன
4. 19.ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் இந்திய தொல்லியல் துறையால் பதிவிற்கும் பதிவிற்கப்பட்ட பண்டைய படங்கள்
நன்றி: Kyaw Moe Htet (தனசேகரன்) முகநூல் பக்கம் - https://www.facebook.com/kyaw.m.htet.31