அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் நாடகக் கலை வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் நாடகக் கலைஞர் க. பாலேந்திராவின் அரங்கக் கட்டுரைகள் எனும் புதிய நூலின் வெளியீட்டு அரங்கு இம்மாதம் 07 ஆம் திகதி ( 07-01-2023 ) சனிக்கிழமை மாலை 4-30 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்கம் வினோதன் மண்டபத்தில் நடைபெறும்.
ஈழத்து நவீன தமிழ் நாடக உலகில் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இயங்கிவருபவரும், தற்போது இங்கிலாந்தில் வசிப்பவருமான கலைஞரும் நாடக இயக்குநருமான க. பாலேந்திரா எழுதி கொழும்பு குமரன் இல்லம் பதிப்பகத்தினால் வெளியாகியிருக்கும் பாலேந்திராவின் அரங்கக்கட்டுரைகள் நூலில், அவர் ஏற்கனவே எழுதி ஊடகங்களில் வெளியான பல ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.
- நாடகக் கலைஞர் க. பாலேந்திரா -
சுமார் நான்கு தசாப்தங்களுக்கு முன்னரே பாலேந்திரா நவீன நாடக அரங்கு பற்றி எழுதியிருப்பவர். அக்காலப்பகுதியில் அத்தகைய எழுத்துக்களை காண்பது அரிது. அந்தவகையில் அக்கட்டுரைகள் இடம்பெற்றிருக்கும் இத்தொகுப்பு நாடகக்கலை தொடர்பாக பயிலும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உசாத்துணையாக அமையும். நான்கு உப தலைப்புகளில் இக்கட்டுரைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
அரங்காற்றுகையில் தோன்றும் பிரச்சினைகள், நாடக சர்ச்சைகள், பாலேந்திரா தமிழுக்கு அறிமுகப்படுத்திய பிற மொழி நாடகாசிரியர்கள், புலம்பெயர் நாடக அனுபவங்கள் முதலான பிரிவுகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.
இந்திய மூத்த தமிழ்ப்படைப்பாளியும் சிறந்த நாடக ஆசிரியருமான இந்திரா பார்த்தசாரதி இந்நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கிறார். பாரிஸ் இளம் கலைஞர் ஓவியர் வாசுகனின் ஓவியம் நூலின் முகப்பினை அலங்கரிக்கிறது. இங்கிலாந்தில் வதியும் நூலகவியலாளர் என். செல்வராஜா, பாலேந்திரா பற்றிய பல தகவல்களை இந்நூலில் தெரிவித்துள்ளார். கொழும்பு தமிழ்ச்சங்கம் வினோதன் மண்டபத்தில் இம்மாதம் 07 ஆம் திகதி மாலை 4-30 மணிக்கு நடக்கவிருக்கும் இந்நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு கலை இலக்கியவாதிகள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.