நனவிடை தோய்தல் (16): நினைத்தாலே இனிக்கும் நினைவுகள் - அந்தநாள் ஞாபகம்! - இந்து.லிங்கேஸ் -
* ஓவியம் AI
எமக்கு பத்து வயதிருக்கும். மாலைப்பொழுதின் இதமான சுகத்தில் தேகம் திளைக்க கடைச்சுவாமி கோயில் ஒழுங்கைக்குள் நாலுபேர் கூடி ரோட்டில கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம். அக்காலம் 69 களாக இருக்கலாம். கூடுகின்ற கூட்டத்தை பொறுத்து முதலில ரோட்டிலதான் ஆட்டம் ஆரம்பிக்கும்.அதற்கு விக்கெற் இருக்காது.மாறாக,ஒரு மட்டையை எடுத்து அதற்கு ஏதாவது பொறுப்பு வைத்து எதிராய் ஒரு கல்லை வைத்து அங்கிருந்து போலிங் போட 'பற்ஸ்மான்' போலை மிஸ் பண்ணாமல் தடுப்பதுவே ஆட்டத்தின் விதிமுறை.3 தடவை தவறவிட்டால் அவர் ஆட்டமிழப்பார்.தவிர,முண்டு வைத்திருந்த மட்டையில் பந்து பட்டாலும் ஆட்டமிழப்பது உறுதி. அதேநேரம் பந்தை கூடிய தூரத்திற்கு அடிக்கவும் கூடாது. அப்படியே மெதுவாக ஆட்டம் ஆரம்பிக்க, எங்களின் குரல்களை கேட்டதும் பக்கத்து வீடுகளிலிருந்து அடுத்தவர்களும் வந்து இணைவார்கள். இணைபவர்கள் இளசுகள் மட்டுமல்ல,பெரியவர்களும்தான்.
ஆரம்பத்தில் நான்குபேராக இருந்த கூட்டம் கிட்டத்தட்ட பத்து பன்னிரண்டு என நிரம்பும்.மாலைப் பொழுதுக்கு முதலில் இந்த மயக்கம் போதுமானதாக இருக்கும்.வளவுக்குள் நின்ற பாண்டி மாங்காயின்கிளைகளும், கொப்புக்களும் ரோட்டுப்பக்கமும் படர்ந்து காய்த்துத் தொங்கும்.பக்கத்து மதில்களில் அணில்களும் பாய்ந்து பாய்ந்து எங்களைப் பார்த்து கண்சிமிட்டுவதும் பொழுதுக்கு உகந்த அழகுதான்!