இருபத்து நான்காம் வயதில் பாரதி : பகுதி III - ஜோதிகுமார் -
திலகரின் அரசியலை, பாரதி அறிமுகப்படுத்தும் முறைமை…
1906 இன் துவக்கத்தில், இவ் இளைஞன் பின்வருமாறு எழுதுகிறான்: “நமது தேசத்தின் ஆதார சக்திகளாகிய மாதர்களின் ஹிருதயமும், அவர்களது ஆன்மாவும் இருளடைந்துபோக விட்டுவிடுவதைக் காட்டிலும் பாதகச் செயல் வேறில்லை. ஞானக் கிரணங்கள் அவர்களது ஆன்மாவில் தாக்குமாறு செய்தாலன்றி நமக்கு வேறு விமோசனம் கிடையாது "(பக்கம் 145: சக்கரவர்த்தினி: பாரத குமாரிகள்)
எழுத்தின் நோக்கத்தை, இதைவிட நேர்த்தியாகச் சொல்வது கடினம். இவ் இளவயதில், இவ் இளைஞன் தனது எழுத்தின் நோக்கத்திற்கான மேற்படி தாரக மந்திரத்தை இப்படியாக வரையறுத்துக் கொள்வது மாத்திரம் இல்லாமல், மேற்படி எழுத்தானது மக்களை அதிலும் குறிப்பாக, மாதரைச் சென்றடைய வேண்டிய தேவைப்பாட்டினையும் இவன் நன்கு உணர்வதினை, மேற்படி வரிகள் எமக்கு எடுத்தியம்புவதாக உள்ளன.
இதற்காக, ‘சொல்’ ஒன்றைத் தேடி அலையும் இவ் இளைஞன், இப்பயணத்தின் போது, மக்கள் விரும்பக் கூடிய ‘எளிய பதங்களை’ தேடுவதும் தர்க்கப்பூர்வமாகின்றது. வேறு வார்த்தையில் கூறினால், சொல் ஒன்றைத் தேடியும் எளிய பதங்களை நாடியும் நகரக் கூடியவன், மக்களின் தேசப்பற்றை மதப்பற்றாக மாற்றும் எண்ணக்கருவிற்கு (அல்லது மதப்பற்றைத் தேசப்பற்றாக மாற்றும் ஒரு எண்ணக்கருவிற்கு,) இக்காலப்பகுதியில், அதாவது தனது 24ம் வயதில், வந்து சேர்ந்துவிட்டானா என்பதுவே கேள்வியாக உருவெடுக்கின்றது.