சிறுகதை: அனாதை மரங்கள் - கிறிஸ்டி நல்லரெத்தினம் -
அம்மாவை என்றும் நான் புரிந்து கொண்டதில்லை. எங்களுக்குள் ஏதும் பிணக்கோ பிளவோ என தப்புக்கணக்கு போட்டு விடாதீர்கள். எங்கள் வீட்டில் அவள்தான் எல்லாம். இதைக் கேளுங்கள்...... அக்காவை பெண் பார்க்க எங்கள் வீட்டிற்கு அத்தானின் குடும்பம் வந்திருந்த சமயம் அது. "சத்தியன்..... சத்தியன்" என அம்மா என்னை அழைக்கிறாள். நான் தலைவாரி புது சட்டை அணிந்து அவர்கள் முன் வந்து ' டிப் டாப்' ஆக நிற்கிறேன். அம்மா என் தோளைப் பற்றி "இவன்தான் மகன் சத்தியன். ஹி இஸ் எ டாக்டர்" என்கிறாள். எல்லோர் கண்களும் என்னில் ஆணி அடிக்கின்றன. ஆம், அவர்கள் நம்பவில்லை. பத்தாவது படிக்கும் அரும்பு மீசை கூட முளைக்காத நானா 'டாக்டர்'? 'இவனை டாக்டராக ஆக்க வேண்டியதே என் கனவுணு' சொல்லியிருக்கலாமில்லையோ?
அப்பாவிற்கு இந்த நாடக வாழ்க்கையில் நாட்டமில்லை. ஆறடி உயரம்... கிளி மூக்கு... துறு துறு என எதையோ தேடும் கண்கள்.. அநாதரவாய், புறக்கணிக்கப்பட்ட, சீவாத தலைமுடி ... இதுவே அப்பா. அவர் எங்கள் வீட்டில் ஒரு பார்வையாளனே... ஒரு உருவம்! அதிகம் பேச மாட்டார். வானிலை அறிவிப்பாளனின் வார்த்தைச் சிக்கனம் அவருக்கு. பேச்சில் எப்போதும் ஒரு உண்மைத்தனம்.