சிரிப்பும் சிந்தனையும் தெறிக்கும் சிரித்திரன்! சிரிப்பே சீவியமாகி செய் தொழிலே தெய்வமாகிட… - ஐங்கரன் விக்கினேஸ்வரா -
(தாயக மண்ணில் இலக்கியப் பணி ஆற்றிய சிரித்திரன் சுந்தர் மார்ச் 3 , 1996இல் மறைந்த நாள் நினைவாக பிரசுரமாகிறது)
நாற்பது வருடங்களுக்கு மேலாக கேலிச் சித்திரத்துறையில் தனது ஆளுமையைச் செலுத்திய சிரித்திரன் சுந்தர் பதினைந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட கேலிச்சித்திரங்களைத் தீட்டியுள்ளார். ‘செய்தொழில் தெய்வம், சிரிப்பே சீவியம்’ என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு கலை இலக்கிய வானில் பறந்து திரிந்தவர் சிரித்திரன் சுந்தர் என அழைக்கப்படும் மாமனிதர் சிவஞானசுந்தரம். மார்ச் 3 ,1924 இல் பிறந்த அவர் மார்ச் 3 , 1996இல் மறைந்தார்.
கேலிச் சித்திரங்கள், பகடிக் கட்டுரைகள் மற்றும் நடைச் சித்திரங்கள் என சிரித்திரனில் சுவைபட இடம்பெற்றன. சிரித்திரன் சுந்தரின் கேலிச்சித்திர நாயகர்களான சவாரித்தம்பர், சின்னக்குட்டி, மைனர் மச்சான், மயில்வாகனத்தார் போன்றவர்கள் வரலாற்றுப் புகழ்பெற்றவர்கள். 'மகுடி பதில்கள்' என்னும் தலைப்பில் சுந்தர் எழுதிய கேள்வி பதில்கள் என்றும் புகழ்பெற்றது.