2021 ஒரு பார்வை! - சக்தி சக்திதாசன், இலண்டன் -
கோவிட் எனும் ஒரு நுண்கிருமியின் தாக்கத்தோடு ஆரம்பித்து அதே நுண்கிருமியின் தாக்கத்துடன் முடிவடைந்துள்ளது. இந்நுண்கிருமி கொடுத்த நோய்த்தாக்கத்திலிருந்து தப்பும் வழிகளில் மனதைச் செலுத்துவதிலேயே இவ்வகிலத்தின் பல நாடுகளின் முழுமுயற்சியும் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்த அதேவேளையில் வேறு பல நிகழ்வுகள் ஆரவாரமின்றியே நடந்தேறி விட்டிருக்கின்றன. உலக அரசியலை எடுத்துக் கொள்வோம், மிகுந்த அமர்க்களத்துடனும், ஆரவாரத்துடனும் அமெரிக்க முன்னாள் ஐனாதிபதி ட்ரம்ப் அவர்கள் தனது தேர்தல் தோல்வியை ஏற்றுப் பதவி துறக்கச் செய்யப்பட்டு, புதிய ஐனாதிபதியாக பைடன் அவர்கள் பலத்த எதிர்பார்ப்புகளோடு பதவியலமர்ந்தது 2021ம் ஆண்டின் ஆரம்பத்திலே. இவரின் மீதான எதிர்பார்ப்புகள் அமேரிக்க நாட்டு மக்களிடையே மட்டுமல்லாது சர்வதேச நாடுகளிலும் இருந்தது என்பதே உண்மை. இன்று அந்த எதிர்பார்ப்புகள் எந்நிலையிலுள்ளன என்பது ஒரு கேள்விக்குறியே!
முன்னாள் ஐனாதிபதி ட்ரம்ப் அவர்கள் மீதிருந்த மாபெரும் குற்றச்சாட்டு, அவரின் உலகை நோக்கிய பார்வையாகும். அமேரிக்கா அமேரிக்கர்களுக்கு மட்டும் எனும் வகையில் அவரது செயற்பாடுகள் அமைந்திருந்ததே அதற்குக் காரணம் என்றார்கள் அனுபவமிகுந்த அரசியல் அவதானிகள். அத்தோடு ட்ரம்ப் அவர்களின் செயற்பாடுகள் உலக சமாதானத்துக்கு குந்தகம் விளைவிப்பவை எனும் கருத்தும் வலிமையாக நிலவி வந்தது. ஆனால் இன்று மாற்று எதிர்பார்ப்புகளோடு ஐனாதிபதியான பைடன் அவர்களின் செயற்பாடுகள் அக்கருத்துகளில் எத்தகைய மாற்றங்களை விளைவித்திருக்கின்றது என்பதும் கேள்விக்குறியே! விடையை 2022 நல்குமா? என்பதற்குக் காலம்தான் விடை பகர வேண்டும். சரி இனி ஐக்கிய இராச்சியத்தின் நிலையைப் பார்ப்போமா?
2020ம் ஆன்டு டிசம்பர் 31ம் திகதியோடு பிரெக்ஸிட் எனும் கத்தி கொண்டு ஐக்கிய இராச்சியத்துக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்குமான 40 வருட உறவென்னும் தொடர்பை முற்றாக அறுத்தது ஐக்கிய இராச்சியம். இருப்பினும் இதன் முக்கியத்துவம் கோவிட் எனும் நுண்கிருமியின் முக்கியத்துவத்தினுள் புதைந்து போயிற்று என்பதே உண்மையாயிற்று. வழமையாக இந்நிகழ்வினை அறுத்து உருத்துப் புரட்டி எடுக்கும் ஊடகங்கள் தமது முழுக்கவனத்தையும் இதன்பால் திருப்ப முடியாமல் போனதுக்கு பிரதமர் பொரிஸ் ஜான்சன் கோவிட்டுக்கு நன்றி சொல்லியிருப்பாரோ?