ஆறு தசாப்த காலங்களுக்கும் மேலாக அயர்ச்சியின்றி இயங்கும் ஆளுமை கலைஞர் க. பாலேந்திரா ! - முருகபூபதி -
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், 1974 ஆம் ஆண்டு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் கொழும்பு கட்டுப்பெத்தை பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்சங்கத்தின் தமிழ் விழா நடந்தது. இவ்விழாவில் காலை, முதல் மாலை வரையில் கருத்தரங்குகள் இடம்பெற்றன. இரவு நிகழ்ச்சியில் நாதஸ்வர கலைமேதை அளவெட்டி என்.கே. பத்மநாதன் குழுவினரின் கச்சேரியைத் தொடர்ந்து சங்கத்தின் நுட்பம் மலர் வெளியிடப்பட்டது.
அதன்பின்னர் இரண்டு நாடங்கள் மேடையேறின. இரண்டுமே அக்காலப்பகுதியின் இலங்கை அரசியலையும் தொழிற்சங்கங்களின் செயற்பாடுகளையும் அங்கதச்சுவையுடன் சித்திரித்திருந்தன. மாவை நித்தியானந்தனின் ஐயா லெக்ஷன் கேட்கிறார் என்ற நாடகம் நவீன நாடக வரிசையில் சபையோரை சிரிப்பிலும் சிந்தனையிலும் ஆழ்த்தியது.
அடுத்து, கலைஞர் ( அமரர் ) சுஹேர் ஹமீட் எழுதி, இயக்கிய ஏணிப்படிகள் நாடகம் மேடையேறியது. வழக்கத்திலிருந்து மாறுபட்ட முற்றிலும் வித்தியாசமான நாடகம் ஏணிப்படிகள். இதில் பிரதான பாத்திரம் ஏற்று திறம்பட நடித்தவர் க. பாலேந்திரா என்ற மாணவர்.