உலகம் பூராகவும் சினிமாக் கதையைக் கேட்பதும், சினிமாவைப்பற்றிப் பேசுவதும், அதனைப் பார்ப்பதும் மக்களிடம் அதிமாகிக் கொண்டே இருக்கின்றது. சினிமாக்காட்சிகள் மனித மனதில் ஏற்படுத்தும் காட்சிப்படிமங்கள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. அத்தகையதொரு வலிமையான சாதனமாக நாம் சினிமாவைப் பார்க்கலாம். உண்மையில் ஒரு பயங்கரமான செய்தியை பத்திரிகையில் படிக்கும்போது , அதனை ஒரு செய்தியாகப் படித்துவிட்டுக் கடந்துபோய்விடுவோம். ஆனால், அதே செய்தியை , அந்தக் கதையைக் காட்சியாக்கி, மனித மனதை ஆராய்ந்து கலையாக மாற்றப்பட்டு திரைப்படமாகப் பார்க்கும்போது வலிமையான ஊடகமாகிவிடுகின்றது. உணர்ச்சிகள் மேலோங்கி அவை ஒரு திகைப்பை ஏற்படுத்திச் சாதனை படைத்துவிடுகின்றது.
அந்தவகையில் சிறுகதை, நாவல், கட்டுரை, பயண இலக்கியம், சிறுவர் இலக்கியம் எனத் தொடர்ந்து இலக்கியப்பணியை வேகமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கும் முருகபூபதியின் சினிமா: பார்த்ததும் கேட்டதும் என்ற நூலைப் பார்த்ததும், அவருக்கு சினிமாவைப்பற்றியுமா தெரியும்? ! என்று யோசித்து வாசித்தேன். அவருக்கென்றே உரிய அழகான எழுத்து நடையில் மிகுந்த சுவாரசியமான செய்திகளோடும், நினைவுகளைச் செதுக்கும் புகைப்படங்களோடும் இந்த நூல் காணப்பட்டது. யாழ். ஜீவநதியின் 274 ஆவது வெளியீடாக 2023 இல் வெளிவந்திருக்கும் இந்நூல், பதினாறு தலைப்புக்களுடன் 128 பக்கங்களைக் கொண்ட அடக்கமான நூலாகச் சிறப்புச் சேர்த்திருந்தது.
வருடத்தில் குறைந்தது 200 திரைப்படங்களையாவது பார்க்கிறேன் என்ற முருகபூபதியின் குறிப்பு என்னை அசத்திப்போட்டது. நடிப்பு என்பது ஒரு அற்புதமான கலைதான். ஆனால், எனக்கு இந்த நூல் வாசனையின்போது அறிஞர் ஒருவர் கூறியதுதான் என்நினைவில் வந்தது. ‘தகுதியற்ற பலரின் வெற்றிக்கு இன்றைய உலகில் இதுவும் ஒரு காரணம், உழைப்பவனை விட நடிப்பவன் வாழ்கிறான் உலகில்’ என்பதுதான் அது.