நாடகவியலாளரும், எழுத்தாளருமான குழந்தை ம.சண்முகலிங்கம் மறைவு! ஆழ்ந்த இரங்கல்!
எழுத்தாளரும், நாடகவியலாளருமான குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்களின் மறைவுச் செய்தியினை முகநூல்வாயிலாக அறிந்தேன். இலங்கைத் தமிழ்க் கலை, இலக்கிய உலகில் முக்கியமானதோர் ஆளுமை குழந்தை ம.சண்முகலிங்கம். நாடகம், கவிதை, மொழிபெயர்ப்புவ் திறனாய்வு என இவரது பங்களிப்பு பன்முகப்பட்டது குறிப்பாக நாடகத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பு முக்கியமானது. முதன்மையானது. சகல அடக்குமுறைகளுக்கும் (சமூக,தேசிய, வர்க்க) எதிராகக்குரல் கொடுப்பவை இவரது நாடகங்கள். நாடக அரங்கக் கல்லூரியொன்றினை நிறுவி அதன் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பு செய்தவர். இதுவரை நூற்றி இருபதிற்கும் மேற்பட்ட நாடகங்களை இவர் எழுதியிருப்பதாக விக்கிபீடியா கூறுகிறது. உலக நாடகாசிரியர்கள் பலரின் நாடகங்கள் பலவற்றையும் தமிழில் மொழிபெயர்த்திருக்கின்றார்.
போர்ச்சூழற் காலகட்டத்தில் அரங்கேறிய இவர் எழுதி இயக்கிய 'மண் சுமந்த மேனியர்' மக்களின் பேராதரவைப் பெற்ற நாடகம். விழிப்புணர்வை ஏற்படுத்திய அக்காலகட்டத்தின் முக்கியமான நாடகம். இது தவிர அன்னை இட்ட தீ, எந்தையும் தாயும் ஆகிய இவரது நாடகங்களும் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நாடகங்கள்.
சிறுவர் இலக்கியத்துக்கும் முக்கிய பங்காற்றியவர். அவ்வகையில் இவரது கூடிவிளையாடு பாப்பா, காட்டுராஜா, முயலார் முயல்கிறார் போன்றவை முக்கியமானவை.
இவர் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.