பதிவுகள் முகப்பு

'காற்றுவெளி'யின் இங்கிலாந்து சிறப்பிதழ் 2024

விவரங்கள்
- முல்லைஅமுதன் -
நிகழ்வுகள்
23 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

யாவரும் நலமா? காற்றுவெளி விரைவில் இங்கிலாந்து படைப்பாளர்களின் படைப்புக்களைத் தாங்கி இங்கிலாந்து சிறப்பிதழாக கொண்டுவரவுள்ளது. ஆகவே, சிறப்பிதழுகான படைப்புகளை(கவிதை,சிறுகதை,இலக்கிய ஆய்வுக்கட்டுரைகள்)அனுப்பி சிறப்பியுங்கள்.அச்சிலும் கொண்டுவரும் எண்ணமுண்டு. சந்தா,விளம்பரம் ஏதுமின்றி வெளிவரும் மின்னிதழ் இதுவாகும்.இத் தகவலை நண்பர்களுடனும் பகிருங்கள்.

நட்புடன்,

முல்லைஅமுதன்
mullaiamuthan1954£gmail.com
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

வேந்தனார் இளஞ்சேய் கவிதைகள் இரண்டு!

விவரங்கள்
- வேந்தனார் இளஞ்சேய் -
வேந்தனார் இளஞ்சேய்
23 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1. வீழ்ந்தவராயினும் நல்லவர் புகழ் வாழும்

காணொளி ஒன்று பார்த்தேனின்று
கதைதான் என்றாலும் கனமானது
காவியத் தலைவன் கர்ணமாவீரன்
கவிதைபிறந்ததுஒலிவடிவிலிங்கே

சின்ன வயதினில் மனதினைக்
கவர்ந்தவன்
சிந்தையில் நிறைந்த கொடைவள்ளல்
இவன்
உன்னதமான குணம் கொண்டவன்
இவன்
உலகம் போற்றும் மாவீரன் கர்ணனேயாம்

மேலும் படிக்க ...

இருபத்து மூன்று வயதில் பாரதி ! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
22 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


1

பாரதி பிறப்பதற்குச் சரியாக ‘ஐம்பத்து இரண்டு’ வருடங்களுக்கு முன், பிரிட்டிஷாரின் பிரதான காலனிகளில் ஒன்றாக விளங்கிய, இந்துஸ்தானம் (இந்தியா) குறித்து, கார்ல்மார்க்ஸ், 1853ல், பின்வரும் பொருள்பட எழுத நேர்ந்தது : “இந்துஸ்தான் ஆனது, ஒரு பார்வையில், ஆசிய கண்டத்தின் இத்தாலி எனலாம். அல்ப்ஸ் மலைத்தொடருக்கு நிகரான ஒரு இமாலயமும், லொம்பார்டி சமவெளிக்காய் வங்காளத்தின் பரந்த சமவெளிகளும், அபேன்சிக்கு சமமாக டெக்கானும், இலங்கை தீவுக்காக ஒரு சிசிலியும் - மொத்தத்தில் - பூகோள ரீதியாக, இந்தியா, ஆசிய கண்டத்தின் இத்தாலி ஆகின்றது…”

“ஆனாலும் ஒரு சமூகவியல் பார்வையில் - இது இத்தாலியல்ல – ஆனால், கிழக்கின் அயர்லாந்து ஆகின்றது”.

“இந்தப் புதிரான ஒன்று சேர்க்கையின் - இரு அம்சங்கள் - அதாவது இத்தாலியையும் அயர்லாந்தையும் ஒருங்கே உள்ளடக்கும் இப்பண்பலை – ஒரு புறம் அதன் செல்வக்குவிப்பை அர்த்தப்படுத்தினாலும், மறு புறத்தில் அதன் துயரங்களின் சேர்க்கையை எடுத்தியம்புவதாய் உள்ளது”.

“பல நூற்றாண்டு மத சம்பிரதாயங்களின் பின்னணியில், இம்முரண் புரிந்துக்கொள்ளக் கூடியதே”.

“இந்திய மதங்கள், ஒரு புறத்தே இன்ப புலன்நுகர்ச்சிகளை அங்கீகரிப்பதாயும் மறுபுறத்தே முற்றும் துறந்த ஆழ்துறவு நிலையை போதிப்பதாயும் -; கணிகைகளையும், முற்றும் துறந்த முனிவர்களையும், லிங்கங்களில் இருந்து கிருஷ்ண பரமாத்மாவின் சக்கரம் வரை ஒருங்கே ஆராதிப்பனவாக இருக்கின்றன”

மேலும் படிக்க ...

ஆலமரம் நிற்கிறது ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண் , அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
கவிதை
22 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அழகான ஆலமரம்
         கிளைவிட்டு நின்றதங்கே
 விழுதெல்லாம் விட்டுஅது
          வேரோடி நின்றதங்கே

ஆலமர நிழல்தேடி
           அனைவருமே வருவார்கள்
 வேலையில்லா நிற்போரும்
           விரும்பி வந்திருப்பார்கள்

காலைமாலை என்றின்றி
          காளையரும் வருவார்கள்
 சேலையுடன் பெண்கள்வந்து
           சிரித்து விளையாடிடுவர்

 நாலுமணி ஆனவுடன்
        ஆளரவம் கூடிவிடும்
 ஓடிடுவார் ஆடிடுவார்
         உல்லாசம் கூடிவிடும்

மேலும் படிக்க ...

'காஞ்சி' சேரன் கவிதைகள் நூல் வெளியீடு! - தகவல்: 'காலம்' செல்வம் -

விவரங்கள்
- தகவல்: 'காலம்' செல்வம் -
நிகழ்வுகள்
22 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சிறுகதை: நெருடல்கள் - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
சிறுகதை
20 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வலது கன்னத்தில் குழி விழ, அழகாகச் சிரித்தபடி,  “லுக் அற் யுவர் பியூட்டிபுல் சண்”, எனச் சொல்லி, அந்தத் தாதி என் கையில் தந்த என் மகனை இனம்புரியா மகிழ்வுடனும் பதட்டத்துடனும் வாங்கி என் மடியில் வைக்கிறேன், நான். பஞ்சிலும் மிருதுவான அந்தக் கால்கள் என் கைகளில் பட்டபோது என் மனதில் பல வண்ணத்துப் பூச்சிகள் வட்டமிட்டுப் பறக்கின்றன.

இவன் என் மகன், எனக்குச் சொந்தமானவன், என் அன்பில் நனைந்து பதிலுக்குத் தன் அன்பில் என்னை முழுக வைக்கப் போகிறவன் என்ற நினைப்பே இனித்தது. அவன் நெற்றியை என் உதட்டருகே எடுத்து மெல்ல முத்தமிடுகிறேன்.

இவனை உருவாக்குவதில் நானும் ஒரு பங்கு வகித்திருக்கிறேன். என் ஒரு பகுதி இவனில் வாழ்கிறது என்பது நம்ப முடியாத அதிசயமாக மனதில் படபடப்பையம் நிறைவையும் தந்ததில் மனசு மிகவும் சிலிர்த்துப் போகிறது.

அரைத் தூக்கத்திலிருந்து விழித்த என் மனைவி சர்மி, என்னைப் பார்த்து மிகுந்த காதலுடன் புன்னகைக்கிறாள். களைப்பாகவும் மருந்து மயக்கத்தில் ஆயாசமாகவும் இருந்தாலும் கூட, அவள் முகத்தில் தாய்மையின் ஜோதி தெரிந்தது. மகனுடன் அவளருகே போன நான் மகனை அவளருகே வளர்த்தி விட்டு, அவள் தலையை வாஞ்சையுடன் வருடிக் கொடுக்கிறேன்.

 “சர்மி, என்ன அமைதியாக, எவ்வளவு நிறைவாக என் மகன் நித்திரை கொள்கிறான் பாரேன். என்னால் இவனுக்கு ஒரு நல்ல அப்பாவாக, இவன் வாழ்வுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக, இவனின் நிம்மதிக்கு இடைஞ்சல் இல்லாத உறவாக வாழமுடியுமா?” சொல்லும் போது என் நாக்கு தளுதளுக்க கண்கள் பனிக்கின்றன.

மேலும் படிக்க ...

ஜீவகுமாரனின் 'கடைக்குட்டியன்' சிறுகதைத் தொகுப்பு - ரசனைக் குறிப்பு - ரஞ்ஜனி சுப்ரமணியம் -

விவரங்கள்
- ரஞ்ஜனி சுப்ரமணியம் -
ரஞ்ஜனி சுப்ரமணியம்
19 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நிகழ்காலத்தை கடந்த காலத்துடனும் , தாயக வாழ்வினை புலம்பெயர் வாழ்வுடனும் ஒரே புள்ளியில் இணைப்பதில் அதீத திறமையைக் கொண்டிருக்கும் ஈழத்துப் படைப்பாளிகளில்  எழுத்தாளர் வி.ஜீவகுமாரன் முக்கியமானவர்.  ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் நீட்சி எனக் கூறக் கூடிய புலம்பெயர் இலக்கியங்களில் இவரது பங்கும் காத்திரமானது.  தனது தாயக வேர்களை மறவாமலும் அதே சமயம் புலம்பெயர்ந்த சமூகத்தின் கலாசார பண்பாட்டு மாற்றங்களை உள்வாங்கி ஒப்பிட்டும் இவர் படைக்கும் கதைகளின் இணைவுப் புள்ளி , சில சமயங்களில் பிரமிக்க வைக்கிறது. சில சமயங்களில் சிந்திக்க வைக்கிறது. பல சமயங்களில் மனதை வலிக்கச் செய்கிறது. இதனால் இக்கதைகள் எப்போதும் வாசக ஈர்ப்புக் கொண்ட படைப்புகளாக விளங்குகின்றன. டென்மார்க் நாட்டில் வாழும் இவரது கதைகளில் பெரும்பாலானவை அந்நாட்டின் கலாசாரக் கூறுகளை இனம் காட்டுபவையாகவும் அமைந்துள்ளன.

 இருபது சிறுகதைகள் மற்றும் கதைகள் பற்றிய  புகழ்பெற்ற எழுத்தாளர்களின் சிறு விமர்சனங்களுடன் கூடிய 'கடைக்குட்டியன்' எனும் இத்தொகுப்பு , ஜீவநதி பதிப்பகத்தின் 200 வது வெளியீடாகும். சாம்பல் நிற அட்டைப்படத்தில் கூழாங்கற்களிடையே செல்லும் வெற்றுக் காலடித் தடங்கள், ஒருவிதத்தில் ஈழத் தமிழினம் கடந்து வந்த அவல வாழ்வைக் குறியீட்டு ரீதியாகக் காட்டுகின்றதோ என்ற எண்ணமும் பொருத்தமானது தான்.

இத்தொகுப்பின் ஓரிடத்தில் தமிழினத்தின் புலம்பெயர் வாழ்வு பற்றி இவ்வாறு கூறுகிறார் ஆசிரியர்: "மாற்றங்கள் இப்படித்தான் சின்னச் சின்னதாகத் தொடங்கும். கடைசியில் எல்லாவற்றிலும் நாங்கள் மூழ்கிப் போய் விடுவோம் "

மேலும் படிக்க ...

படித்தோம் சொல்கின்றோம் : வேடர் நாட்டில் சிங்கங்களும் புலிகளும் ! தி. லஜபதிராய் எழுதிய - வரலாற்றை வழிகாட்டியாகக் கொள்ள விரும்புவோர் படிக்கவேண்டிய நூல் !! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
19 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், தோன்றிய அனைத்து சிங்கள – தமிழ் – முஸ்லிம் அரசியல் கட்சிகளும் பல சந்தர்ப்பங்களில் பிளவடைந்துள்ளன. அல்லது நீதிமன்றங்களைச் சந்தித்துள்ளன. ஆயுதம் ஏந்திப்போராடிய தமிழ், சிங்கள இயக்கங்களும் அரசியல் ரீதியாக தமது இனத்திற்கு விடிவைத் தேடித் தருவதற்காகவே அவ்வாறு ஆயுதம் ஏந்தியதாகச் சொன்னாலும், ஆளும் அதிகார வர்க்கத்தினால்தான் அடக்குறைக்கு ஆளாகின. ஆனால், இவ்வியக்கங்கள் தமது இயக்க உறுப்பினர்களினால், நீதிமன்றத்தை நாடவில்லை. தம்மிடமிருந்த ஆயுதங்களினாலேயே தீர்வுகளை கண்டடைய முற்பட்டனர். இவர்களுக்கு நீதிச்சட்டங்களில் நம்பிக்கை இருக்கவில்லை. ஆயுதங்களை மட்டுமே நம்பினர் ! சமகாலத்தில், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், தமிழரசுக்கட்சியும், தமிழர் விடுதலைக்கூட்டணியும் தங்கள் உட்கட்சி விவகாரங்களை தீர்த்துக்கொள்வதற்காக நீதிமன்றத்தை நாடியிருக்கின்றன.

இந்தப்பின்னணிகளுடன்தான், தமிழ்த்தேசிய விடுதலைக்கு ஆயுதப்போராட்டம்தான் தீர்வு, என்ற நோக்கத்தை இலக்காகக்கொண்டிருந்த ஈ.பி. டி. பி, ஈ.பி. ஆர். எல். எஃப், புளட், டெலோ, ஈரோஸ் ஆகிய இயக்கங்கள் ஜனநாயக வழிக்குத் திரும்பி, தேர்தல்களிலும் போட்டியிடத் தொடங்கின. 1971 இல் நடந்த ஏப்ரில் கிளர்ச்சியை முன்னெடுத்த மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜே. வி. பி. இயக்கமும் அக்காலப்பகுதியில் தடைசெய்யப்பட்டு, பொது மன்னிப்பின்பேரில் அதன் முக்கிய தலைவர்கள் 1977 இல் சிறையிலிருந்து விடுதலையாகி, மீண்டும் ஃபீனிக்ஸ் பறவைபோன்று எழுந்து, ஜனநாயக வழிக்குத் திரும்பி தேர்தல்களிலும் ஈடுபட்டு, 1983 ஆம் ஆண்டு அன்றைய ஜே. ஆர். ஜெயவர்தனாவின் ஐ. தே. க. அரசின் பதவிக் காலத்தில் மீண்டும் தடைசெய்யப்பட்டது, 1987 இல் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து கிளர்ச்சிகளை நடத்தியதையடுத்து, இவ்வியக்கத்தினர் கொடுரமாக அழிக்கப்பட்டனர். அதன் தலைவர்கள் ரோகண விஜேவீரா, உபதிஸ்ஸ கமநாயக்க, சாந்த பண்டார, மாரசிங்க உட்பட பலர் கொல்லப்பட்டனர்.

மேலும் படிக்க ...

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (6): எதிர்காலத்திட்டங்கள் பற்றிய உரையாடலொன்று. - வ.ந.கிரிதரன்-

விவரங்கள்
- வ.ந.கிரிதரன்-
நாவல்
18 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் ஆறு: எதிர்காலத்திட்டங்கள் பற்றிய உரையாடலொன்று.

ஒரு சில  மாதங்கள் ஓடி  மறைந்தன. இதற்கிடையில் பானுமதியும் மாதவனும் நெருங்கிய நண்பர்களாகி விட்டிருந்தனர். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர்கள் அருகிலிருந்த  பூங்காவுக்குச் சென்று உரையாடுவதும், குரோசரி ஷொப்பிங் செய்வதற்காக இரு வாரத்துக்கொருமுறை செல்வதும், நூலகங்கள்செல்வதும்,  அவரவர் இருப்பிடங்களில் சந்தித்துக்கொள்வதும், இலக்கியம், அறிவியல் எனப் பல்வேறு விடயங்களைப் பற்றி உரையாடுவதுமெனப் பொழுதுகள் கழிந்துகொண்டிருந்தன.  இவ்விதமானதொரு நாளில் அன்று அவள் அவனது அப்பார்ட்மென்ட்டிற்கு வேலை முடிந்ததும் வந்திருந்தாள். சிறிது களைப்பாகவிருந்தாள்.

"ஏன்ன பானுமதி, களைப்பாகவிருக்கிறீர்கள்? ' என்றான் மாதவன்.

"இன்று நாள் முழுவதும் ஒரே பிஸி. மீட்டிங், செர்வர் அப் கிரேடிங்  என்று சரியான வேலை.  அதுதான். வேறொன்றுமில்லை. " என்றாள் பானுமதி பதிலுக்கு. அத்துடன் அவள் ஏதோ நினைவுக்கு வந்தவளாக அவனை நோக்கிக் கேட்டாள்: "இப்பொழுதுதான் நினைவுக்கு வருகிறது. மாது, உனக்கு லினக்ஸ் செர்வர் பற்றி நல்லாத்தெரியும்தானே. "

"ஏன் கேட்கின்றாய் பானு. எனக்கு விருப்பமான ஒபரேட்டிங் சிஸ்டமே அதுதான். "

"எங்கள் கொம்பனியில் லினக்ஸ் சேர்வர் அட்மினுக்கு ஆள் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். உனக்கு விருப்பமென்றால் உன்னுடைய 'ரெசுமே'யைத்   தா. பிடித்திருந்தால் இன்டர்வியுக்குக்கு அழைப்பார்கள். உனக்கு ஏற்கனவே லினக்ச் தெரிந்திருப்பதால் வேலை பிரச்சினையிருக்காது. நானும் உன்னை ரெகமன்ட் பண்ணுவேன்."

"பானு தாங்ஸ். படுக்கப் போவதற்குள் உன்னுடைய இமெயிலுக்கு அனுப்புவேன். "

இவ்விதம் பதிலளித்தான் மாதவன். இதனைத்தொடர்ந்து அவர்களது உரையாடல் பல்வேறு பல்வேறு விடயஙக்ளைப் பற்றித் தொடர்ந்தது.

"மாது , வாழ்க்கையிலைன் செட்டில் ஆகிற பிளான் ஏதாவதிருக்குதா?"

"பானு, செட்டில் என்று எதைச் சொல்லுறாய்?"

"குடும்பம், குழந்தை, வீடு, வாசலென்று.. ஏதாவது ஐடியா இருக்குதா என்று கேட்டேன் மாது." என்று கூறிவிட்டு இலேசாகச் சிரித்தாள்  பானுமதி.

இதைக்கேட்டதும் மாதவன் பலமாகவே சிரித்து விட்டான். இது பானுமதிக்குச் சிறிது கோபத்தையே ஏற்படுத்தி விட்டது.

மேலும் படிக்க ...

முள்ளிவாய்க்கால் கஞ்சி!

விவரங்கள்
- வ.ந.கி -
அரசியல்
17 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரும் மனித அழிவைத் தந்த யுத்தம் முடிவுக்கு வந்த தினம் மே 18. யுத்தம் முடிந்து பதினைந்து வருடங்கள் கழிந்து விட்டன. ஆனால் இதுவரை இந்த யுத்தம் ஏற்படுத்திய வடுக்கள் ஆறவில்லை. யுத்தத்துக்குப் பிரதான காரனமாக அமைந்த இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிட்டவில்லை.  யுத்தக்குற்றங்களுக்குக் காரணமானவர்களின் மீதான சட்டரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. காணாமல்போனவர்களுக்கான நீதி இன்னும் கிட்டவில்லை.  இன்றும் மக்களின் காணிகள் முற்றாக விடுபடாத நிலைதான் காணப்படுகின்றது. இவற்றுக்கான தீர்வு இனங்களுக்கான நல்லிணக்கத்துக்கு மிகவும் அடிப்படை.

அண்மையில் தமிழ்த் தேடியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் 'போர் முடிவடைந்து எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் 15 வருடங்கள் ஆகின்றன. ஆனால் போருக்கு வழிசமைத்த பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. நல்லிணக்கமும் பிறக்கவில்லை. தாம் இன்னும் வலியுடனேயே வாழ்கின்றனர் என்ற தகவலையும், தமக்கு அரசியல் தீர்வு அவசியம் என்ற செய்தியையுமே இந்த கஞ்சி சிரட்டை ஊடாக தமிழ் மக்கள் வழங்குகின்றனர்.' என்று கூறியிருந்தார். உண்மை. இலங்கையில் நிரந்தரமான சமாதானமும், நல்லிணக்கமும் ஏற்பட வேண்டுமானால் நிரந்தர அரசியல் தீர்வும், நல்லிணக்கச் செயற்பாடுகளும் அவசியம்.

மேலும் படிக்க ...

சிறுகதை: மகிழ்ச்சி - அன்டன் செக்கோவ் | தமிழில் (ஆங்கிலம் வழியாக) அகணி சுரேஸ் -

விவரங்கள்
- அன்டன் செக்கோவ் | தமிழில் (ஆங்கிலம் வழியாக) அகணி சுரேஸ் -
சிறுகதை
16 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இப்பொழுது  இரவு பன்னிரண்டு மணி.

மித்யா குல்தரோவ், உற்சாகமான முகத்துடனும், குழம்பிய  தலை முடியுடனும் , தனது பெற்றோரின் குடியிருப்பில் பறந்து, அனைத்து அறைகளிலும் அவசரமாக ஓடினான் . அவனது பெற்றோர் ஏற்கனவே படுக்கைக்குச் சென்றுவிட்டனர். அவனது சகோதரி படுக்கையில் இருந்தார், ஒரு நாவலின் கடைசி பக்கத்தை படித்து முடித்திருந்தார்  அவனுடைய பள்ளிச் சகோதரர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர்.

"எங்கிருந்து வந்தாய்?" அவரது பெற்றோர் ஆச்சரியத்தில் அழுதனர். "உனக்கு என்ன ஆச்சு?

"ஓ, கேட்காதீர்கள்! நான் அதை எதிர்பார்க்கவே இல்லை; இல்லை, நான் அதை எதிர்பார்க்கவே இல்லை! இது . . இது நேர்மறையாக நம்பமுடியாதது!"

மித்யா சிரித்துக்கொண்டே ஒரு நாற்காலியில் இருந்தான் , அவனால்  கால்களில் நிற்க முடியவில்லை.

"இது நம்பமுடியாதது! நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாது! பாருங்கள்!"

அவனது சகோதரி படுக்கையில் இருந்து குதித்து, ஒரு குவளையை எறிந்துவிட்டு, தனது சகோதரனிடம் சென்றார். பள்ளிச் சிறுவர்கள் எழுந்தனர்.

"என்ன விஷயம்? நீ உன்னைப் போல் இல்லை!"

"அம்மா! நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அம்மா! உங்களுக்குத் தெரியுமா, இப்போது ரஷ்யா முழுவதும் என்னைப் பற்றித்  தெரியும்! ரஷ்யா முழுவதும்! டிமிட்ரி குல்தரோவ் என்று ஒரு பதிவு எழுத்தர்  இருக்கிறார் என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும், இப்போது ரஷ்யாவிற்கும் தெரியும்! அம்மா! ஓ, இறைவா!"

மித்யா துள்ளிக் குதித்து, எல்லா அறைகளிலும் ஏறி இறங்கி ஓடி, மீண்டும் அமர்ந்தான் .

"ஏன், என்ன நடந்தது? தெளிவாகச்  சொல்லுங்கள்!"

"நீங்கள் காட்டு வாசிகளைப்போல்  போல வாழ்கிறீர்கள், நீங்கள் செய்தித்தாள்களைப் படிக்க மாட்டீர்கள், செய்தி வெளியானதைக் கவனிக்க மாட்டீர்கள், காகிதங்களில் சுவாரஸ்யமாக நிறைய இருக்கிறது, எதுவும் நடந்தால் அது உடனடியாகத் தெரியும், எதுவும் மறைக்கப்படாது! நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஓ, ஆண்டவரே! யாருடைய பெயர்கள் பத்திரிகைகளில் வெளியிடப்படுகின்றன, இப்போது அவர்கள் என்னுடைய பெயரைப் பிரசுரித்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்!

மேலும் படிக்க ...

"சிந்திக்கச் சொன்னவர் பெரியார். தந்தை பெரியார்" - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்கிருஷ்ணா

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
16 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


'சிந்திக்கச் சொன்னவர் பெரியார். தந்தை பெரியார். சொந்தப் புத்தியை கொண்டே சிந்திக்கச் சொன்னவர் பெரியார். தந்தை பெரியார்.' என்று பாடுபவர் பிரபல கர்நாடக இசைப்பாடகர் டி.எம்கிருஷ்ணா - https://www.youtube.com/watch?v=b5vJNf3l63s

ஒரு படைப்பைப்பற்றி ஒருவருக்குப் பல்வேறு காரணங்களுக்காக விமர்சனங்கள் இருக்கும், பெரியாரின் அன்றைய காலகட்டடத்தில் அவர் சமூக, நீதிக்காக, சமத்துவத்துக்காக, ஆரியரின் ஆதிக்கத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தவர். போராடியவர். அவருக்குத் தமிழ்க் காப்பியங்கள் மீது ஆரியரின் தாக்கம் அவற்றில் இருக்கும் காரணத்துகாக எதிர்ப்பு இருந்தால் அவற்றை அவர் தர்க்கரீதியாக எடுத்துரைத்திருந்தால் அவை அவரது கருத்துரிமை. அவற்றைத் தர்க்கரீதியாக எதிர்கொள்ள வேண்டும். உணர்ச்சியின் அடிப்படையில் குரல் எழுப்புவதால் அர்த்தமில்லை. கம்பரைப்பற்றி, தொல்காப்பியரைப் பற்றியெல்லாம் அவருக்கு விமர்சனங்கள் இருந்தால் அவற்றைத் தர்க்கரீதியாக எதிர்கொள்ள வேண்டும். அண்ணா கம்பரசம் எழுதியவர். அக்காலகட்டப் பின்னணியில் வைத்து அவர்கள் அன்று தெரிவித்த கருத்துகள் ஆராயப்பட வேண்டும்.

மேலும் படிக்க ...

வாழ்த்துகள்: வாசுகி கணேசானந்தனின் (V. V. Ganeshananthan) Brotherless Night (சகோதரனற்ற இரவு) நாவலுக்கு 2023ற்குரிய புனைவுக்கான Carol Shields Prize இலக்கிய விருது $150,000

விவரங்கள்
- வ.ந.கி -
நூல் அறிமுகம்
15 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வாசுகி கணேசானந்தனின் (ஆங்கில இலக்கிய உலகில் V. V. Ganeshananthan என்றறியப்பட்டவர்)  Brotherless Night (சகோதரனற்ற இரவு)  நாவலுக்குப் புனைவுக்கான , 2023ஆம் ஆண்டுக்குரிய,   $150,000 (US) மதிப்புள்ள  Carol Shields Prize என்னும்  இலக்கிய விருது கிடைத்துள்ளது. வாழ்த்துகள்.  

இவர் இலங்கைத் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்.   ஏற்கனவே  Love Marriage  என்னும் நாவலையும் எழுதியுள்ளார். இரு நாவல்களுமே இலங்கையில் நிலவிய போர்ச்சூழலை மையமாகக் கொண்டவை.  இதுவரை நான் வாசிக்கவில்லை. இணையத்தில் இவை பற்றிக் கிடைக்கும் குறிப்புகள் அடிப்படையில் இவ்விதம் கூறுகின்றேன்.

சகோதரனற்ற இரவு நாவலின் கதைச்சுருக்கம் மருத்துவம் படிக்க விரும்பிய பதின்ம வயதுத் தமிழ்ப் பெண்ணின் போர்ச்சூழல் அனுபவங்களை மையமாகக்கொண்டது. இவரது நான்கு சகோதரர்களை போர்ச்சூழல் இவரிடமிருந்து பிரித்து விடுகின்றது.  பெண் மருத்துவ விரிவுரையாளர் ஒருவர் இவரை மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஊக்கப்படுத்துகின்றார். இவ்விதம் நாவல் செல்வதை  இந்நாவலைப்பற்றி எழுத்தாளர் இளங்கோ ( டி.செ.தமிழன் ) 'எழுநா'வில் எழுதிய விமர்சனக்குறிப்பிலிருந்து அறிய முடிகின்றது.

மேலும் படிக்க ...

காலமும் கணங்களும்: மூத்த இலக்கியவாதி கே. கணேஷ் (1920 - 2004) நினைவுகள்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
15 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மூத்த எழுத்தாளர் கே. கணேஷ் நூற்றாண்டு

இலங்கையின் மூத்த படைப்பிலக்கியவாதியும், மொழிபெயர்ப்பாளரும், பாரதி இலக்கிய இதழை முன்னர் வெளியிட்டவருமான தலாத்து ஓயா கே. கணேஷ் ( 1920 – 2004 ) அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, அன்னாரின் புதல்வி திருமதி ஜெயந்தி சங்கர் சிறப்பு மலர் வெளியிடவிருக்கிறார். ( அமரர் ) கே. கணேஷ் அவர்களுடன் இலக்கிய நட்புறவிலிருந்த எழுத்தாளர்களிடமிருந்தும் கே. கணேஷ் அவர்களின் வாழ்வையும் பணிகளையும் பற்றி அறிந்தவர்களிடமிருந்தும் ஆக்கங்கள் கோரப்படுகின்றன. அன்னாரின் படைப்புகள் குறித்தும் இம்மலருக்கு எழுதலாம். நூற்றாண்டு மலருக்கு ஆக்கங்கள் அனுப்பவிரும்பும் அன்பர்கள் பின்வரும் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


மின்னஞ்சல்  யுகம்  வந்த பின்னர்  காகிதமும்  பேனையும்  எடுத்து கடிதம்  எழுதி  தபாலில்  அனுப்பும்  வழக்கம்  அரிதாகிவிட்டது. தொலைபேசி, கைப்பேசி,  ஸ்கைப், டுவிட்டர், வாட்ஸ்அப் , முகநூல், மெய்நிகர் முதலான   சாதனங்கள்  விஞ்ஞானம்  எமக்களித்த வரப்பிரசாதமாகியிருந்தபோதிலும் , அந்நாட்களில்  பேனையால் எழுதப்பட்ட   கடிதங்கள்  தொடர்பாடலை  ஆரோக்கியமாக  வளர்த்து, மனித  நெஞ்சங்களிடையே  உணர்வுபூர்வமான நெருக்கத்தை வழங்கின. உலகம்  கிராமமாகச் சுருங்கிவரும்  அதே  சமயம்,  மனித  மனங்களும் இந்த   அவசர  யுகத்தில்  சுருங்கி வருகின்றன. இலக்கியங்கள்   மனிதர்களை  செம்மைப்படுத்தி மேன்மையுறச்செய்துள்ளன. அவ்வாறே  கடித  இலக்கியங்களும் படைப்பாளிகளிடத்தே  அறிவுபூர்வமாகவும்  உணர்வு   பூர்வமாகவும் நெருக்கத்தையும் தேடலையும் வளர்த்து வந்துள்ளன.

இலங்கையில் மலையகம் தலாத்துஓயாவில்  வாழ்ந்து  மறைந்த எமது இனிய   இலக்கிய   நண்பர்  கே.கணேஷ் அவர்கள்  சுவாமி விபுலானந்தர், சிங்கள  இலக்கிய  மேதை  மார்டின்  விக்கிரமசிங்கா    ஆகியோருடன் இணைந்து   ஒருகாலத்தில்  அகில  இலங்கை எழுத்தாளர்   சங்கத்தை ஸ்தாபித்தவர்.   பின்னர்  இலங்கை  முற்போக்கு  எழுத்தாளர் சங்கத்தை 1950 களில்  உருவாக்கியவர். அப்பொழுது  நான்  இந்த உலகத்தையே எட்டிப்பார்க்கவில்லை.   

மேலும் படிக்க ...

காலம் செய்த கோலம் - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
சிறுகதை
14 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

(வட அமெரிக்க தமிழ் சங்க (FeTNA) அருவி இதழ் நடத்திய குறுங்கதைப் போட்டி – 2024 இல் முதற்பரிசு பெற்ற கதை)

அவள் மேடைக்கு வந்த போது அழகு மயில் ஒன்று உலா வருவது போலவே இருந்தது. அவள் ஒலி வாங்கியை வலது கையில் பிடித்தபடி மெல்ல மெல்ல அசைந்தாடியபடி அந்தப் பிரபலமான பாடலைப் பாடத்தொடங்கினாள். வெள்ளை நிறப்பட்டுத்துணியில் ஆடை அணிந்திருந்ததால், ‘ஆகா, வெண்மயில் ஒன்று மேடையில் மெல்ல அசைந்தாடுகின்றதே..!’ என்று இவன் மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.

ஆனால் அவள் பாடத்தொடங்கிய போது மயிலாகக்காட்சி தந்தவளின் குரலோ குயிலாக மாறியிருந்தது. அவனை அறியாமலே அவளது அழகிலும், இனிய குரலிசையிலும் தன்னை மறந்து அப்படியே சிறிது நேரம் உறைந்து போயிருந்தான்.

இவன் ஒரு இசை ரசிகன் என்பதால் இவனால் இசையை ரசிக்க முடிந்துது. நிகழ்ச்சி முடிந்து அவள் மேடையை விட்டு வெளியே வந்தபோது அவளுக்காகக் காத்திருந்து அவளைப் பாராட்டினான்.

‘உங்க பெயரைத் தெரிந்து கொள்ளலாமா?’

இவ்வளவு பிரபலமான தனது பெயரைக்கூடத் தெரிந்து கொள்ளாமல் இவன் இருக்கிறானே என்று அவள் நினைத்தாலும், நல்லதொரு ரசிகனின் மனம் நோகக்கூடாது என்பதால், சட்டென்று இறங்கிவந்து ‘நிலா’ என்று சொன்னாள்.

அவன் தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.

 அவர்களுக்குள் ஒருவகை ஈர்ப்பு இருந்திருக்கலாம், அதன் பின் ஏதோவொரு காரணத்தை முன்வைத்து அவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள். நேரம் கிடைத்த போதெல்லாம் இருவரும் உல்லாசமாகத் திரிந்தார்கள்.  

ஒருநாள் உணவகத்தில் அவர்கள் பேசிக்கொண்டிருந்த போது, அவன் திடீரெனச் சிந்தனையில் மூழ்கியிருப்பதை அவள் அவதானித்தாள்.

‘என்ன யோசிக்கிறீங்க?’ என்று கேட்டாள்.

மேலும் படிக்க ...

முனைவர் பீ. பெரியசாமி கவிதைகள்

விவரங்கள்
- முனைவர் பீ. பெரியசாமி -
கவிதை
14 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சிறை

இறகுகள் சிறைகளாகின்றன
சிரிப்பை சிறைப்படுத்தியதால்
அன்பே நீ மட்டும்
புன்னகை பூக்களைத்
தூவிக்கொண்டே இரு
நாட்கள் நகர்ந்துவிடும்
நானும் விடைபெற்றுவிடுவேன்
உன்னிலிருந்தும் உலகிலிருந்தும்…

எழுத்தாளர்களே..!

படிக்கத்தான் ஆசை
புத்தகங்களெல்லாம் புழுக்கள்
சாதிய மத வடுக்கள்
யார்தான் இங்கே –
இலக்கியம் படைக்கிறார்கள்
கழகங்களையும் காமங்களையும்
அரசியலையும் விற்கிறார்கள்
மறந்தேபோனது கடைசியாய்
வாசித்து வியந்ததை…
ஆசான்களே..!
சமுகத்தைச் சிந்தியுங்கள்
உங்கள் கண்களுக்கு
என்ன மாலைக்கண்ணா?
விறகொடிக்கும் தாயும்
தாலியில்லா தங்கையும்
குடித்து அழியும் சகோதரனும்
வன்கொடுமையால் பாழான சகோதரிகளும்
உங்களுக்கு தெரியவில்லையே…!
சற்று திரும்பிப்பாருங்கள்
எழுத்துக்கள் அறியா மாணவன்
சோற்றுக்கில்லா விவசாயிகள்
வேலையில்லா இளைஞர்கள்
இவர்களையும் சற்று எழுதுங்கள்
உங்கள் எழுத்துக்கள் அரியணை ஏறட்டும்
தமிழ்க்குடி உயரட்டும்..!

மேலும் படிக்க ...

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடா ஒருங்கிணைக்கும் வெவ்வேறு பிரிவுகளுக்கான (Inter Batch) மென்பந்து துடுப்பாட்டப் போட்டிகள் 2024! - தகவல்; சுதர்சன் -

விவரங்கள்
- தகவல்; சுதர்சன் -
நிகழ்வுகள்
13 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடா ஒருங்கிணைக்கும் வெவ்வேறு பிரிவுகளைச் (Inter Batch) சேர்ந்த பழைய மாணவர்களுக்கு இடையிலான மென்பந்து துடுப்பாட்டப் போட்டிகள் இவ்வருடம் சனிக்கிழமை ஜூன் 15, 2024 அன்று 16 Corinthian Blvd, Toronto என்ற முகவரியில் அமைந்துள்ள Fairglen Park மைதானத்தில் நடைபெற இருக்கின்றன.

அணியொன்றுக்கு 6 பேரையும் ஐந்து பந்துப் பரிமாற்றங்களையும் கொண்ட இந்தப் போட்டிகள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர்களை ஒன்றிணைப்பதையும் அவர்களுக்கிடையிலான நெருக்கமான உறவுகளைக் கட்டியெழுப்புவதையும் நோக்கமாகக் கொண்டு ஒருங்கிணைக்கப்படுகின்றது.  இந்தப் போட்டிகளில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் பங்கேற்று சிறப்பிக்குமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் படிக்க ...

புகலிட இலக்கியமும் - வ.ந.கிரிதரனின் கட்டடக்கா(கூ)ட்டு முயல்களும் - ஈழக்கவி -

விவரங்கள்
- ஈழக்கவி -
ஆய்வு
13 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

‘டயஸ்போர’ (Diaspora) என்பது ஒரு பயங்கரவாத/ தீவிரவாத அமைப்பு என்ற மாயை பெரும்பான்மை மக்களிடையே தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. ஈழத்து அரசியல் நிலவரங்களும் இனவாத ஊடகங்களும் இந்த பிம்பத்தை உருவாக்கியுள்ளன. அண்மையில் சியத டிவி (Siyatha TV) இன் ‘டெலிவகிய’ (Telewakiya) நிகழ்ச்சியில் ஊடகவிலாளர் லால் மாவலகே (Lal Mawalage) இந்த மாயத்தை அல்லது பிம்பத்தை சுட்டிக் காட்டி, ‘டயஸ்போர’ என்பது புலம்பெயர் மக்களை குறிக்கின்ற ஒரு சொற்றொடர் என்றும் குறிப்பாக, ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து சர்வதேசமெங்கும் வாழும் தமிழ் மக்களையும் சுட்டுகின்றது - போன்ற கருத்துக்களை நேர்மையாகவும் வரலாற்று ரீதியான கருத்தியல்களோடும் உலகலாவிய விவரணங்க ளோடும் மிகத்தெளிவாக முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புலம் பெயர்ந்தவர்களைக் குறிப்பிடும் ஆங்கிலச் சொல்லான டயஸ்போரா என்பது யூதர்களில் புலம் பெயர்ந்தவர்களைக் குறிக்கும் சொல்லாகத்தான் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. யூதர்கள்தான் பல காலமாகவே உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழ்ந்தவர்கள். இரண்டாம் உலகப்போருக்குப் பின் இஸ்லாமியர் வாழ்ந்த நாடுகளிலிருந்து சில பகுதிகள் வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்டு அவர்களுக்கென ஒரு நாடு ஏற்படுத்தப்பட்டது, இதுவே உலகத்திற்கு சாபக்கேடாகிவிட்டது. உலகில் பல சமூகங்கள் புலம் பெயர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். சான்றாக ஆப்பிரிக்க மக்கள் பலநாடுகளுக்குப் புலம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. உலகில் அதிகமாகப் புலம்பெயர்ந்தது ஈழத்தமிழர்கள்தான். அரசியல் அடாவடித்தனம் காரணமாக சொந்த நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து அந்நிய நாடுகளில் வாழவேண்டிய நிர்ப்பந்தம் ஈழத்தமிழர்களுக்கு உருவானது. குடிபெயர் தலைக்குறிக்க மைக்ரேஷன் (Migation) டிஸ்ப்ளேஸ்மெண்ட் (Displacement) என்னும் இரு சொற்களும் ஆளப்படுகின்றன. மைக்ரேசன் என்பது ஒரு நாட்டைவிட்டு இன்னொரு நாட்டுக்குப் பெயர்தல். டிஸ்ப்ளேஸ்மெண்ட் என்பது ஒரே நாட்டுக்குள் நிகழும் இடப்பெயர்ச்சி. இடப்பெயர்ச்சியைப் புலம்பெயர்த லாகக் காணக்கூடாது என்பது பன்னாட்டு வரையறை ஆகும்.

மேலும் படிக்க ...

முதல் சந்திப்பு: கலைக்குடும்பத்தின் வாரிசு கலையரசி சின்னையா ! வளரிளம் பருவம் முதல், புகலிட நாடுகள் வரையில் இலக்கியம் பேசும் ஆளுமை ! ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
இலக்கியம்
13 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எனக்கு அப்போது பன்னிரண்டு வயதிருக்கும். யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்திருந்த ஸ்ரான்லி கல்லூரி ( பின்னாளில் இக்கல்லூரி கனகரத்தினம் மத்திய கல்லூரி என பெயர் மாற்றம் பெற்றது ) ஆண்கள் விடுதியிலிருந்து ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். நவராத்திரி காலத்தில் நடந்த கலைமகள் விழாவில் ஒரு பெரியவர் கல்வி, செல்வம், வீரம் பற்றி பேசினார். அவர்தான் வித்துவான் வேந்தனார் என்று கல்லூரி அதிபர் மண்டலேஸ்வரன் அறிமுகப்படுத்தினார்.

“வித்துவான் வேந்தனார், கொழும்புத்துறை ஆசிரியப்பயிற்சிக் கலாசாலையிலும் விரிவுரையாளராகப்பணியாற்றியவர்.“ என்று அவரிடம் கற்ற எழுத்தாளர் தெணியான், பின்னாட்களில் என்னிடம் சொல்லியிருக்கிறார். ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் வித்துவான் வேந்தனார் குழந்தை இலக்கியத்திற்கு வளமூட்டியவர். அவரது

“காலைத்தூக்கிக் கண்ணில் ஒற்றிக் கட்டிக் கொஞ்சும் அம்மா
பாலைக்காய்ச்சிச் சீனி போட்டுப் பருகத் தந்த அம்மா,

பள்ளிக்கூடம் விட்டபோது பாதி வழிக்கு வந்து
துள்ளித் குதிக்கும் என்னைத்தூக்கித் தோளில் போடும் அம்மா…"

என்ற பாடலை நாம் ஓசைநயத்துடன் பாடமுடியும். இலங்கையில் பல தமிழ்ப்பாடசாலைகளில் ஆரம்ப வகுப்பு படித்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொல்லிக்கொடுத்த பிரபல்யமான பாடல் !

மேலும் படிக்க ...

காலத்தால் அழியாத கானம் - எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா? - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
11 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மானுடரின் முதற் காதல் அனுபவமென்பது வளர்ச்சியின் ஒரு படிக்கட்டு.  பெரும்பாலும் நிறைவேறுவதில்லை. காரணம் முதிர்ச்சியடையாத மானுடப் பருவத்தில் ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை மையமாக வைத்து உருவாகும் அனுபவம் அது. ஆனால் அதுவே அதன் சிறப்பம்சமும் கூட. அவ்வனுபவத்தில் உள்ளங்கள் உணர்வை மட்டுமே மையமாக வைத்துச் செயற்படுகின்றன.அதற்குப் பின் வளர்கையில் இலாப, நட்டங்களைச் சீர் தூக்கிப் பார்க்கும் பக்குவத்துக்கு அவை மாறி விடுகின்றன. இதுவே பெரும்பாலும் முதற் காதல் நிறைவேறாமல் போவதற்கு முக்கிய காரணம்.

சமூக, பொருளியல் தாக்கங்களுக்கு உட்படாத உள்ளங்களில் ஏற்படும் காதலென்பதால் பெரும்பாலும் நிறைவேறாவிட்டாலும் வாழ்வு முழுவதும் நினைவுகளில் தொடருமோர் அனுபவமாக நிலைத்து விடுகின்றது அது. அதனைத்தான்  இவ்வகையான காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்களைக் கேட்பவர்கள் எழுதும் எதிர்வினைகள் வெளிப்படுத்துகின்றன, உதாரணத்துக்கு இப்பாடலை யு டியூப்பில் கேட்டுச் சிலர் எழுதிய எதிர்வினைகளைப் பார்ப்போம்:

இப்பாடலின் சிறந்த வரி 'அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்'. உளவியல் அடிப்படையில் உண்மையான வரி.  ஒருவர் அன்புக்குரியவரை மனப்பூர்வமாக, மனமொன்றி நினைத்தால் அவர் எத்தனை  ஆயிரம் மைல்களுக்கப்பால் இருந்தாலும் அதைப் புரிந்து  கொள்வார் என்பது உளவியல் அறிஞர்கள் சிலரின் கருத்து.

மேலும் படிக்க ...

காலத்தால் அழியாத கானம் - 'பக்கத்து வீட்டுப் பருவ மச்சான் பார்வையிலே படம் புடிச்சான்' - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
11 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சங்ககாலப்பாடலான 'குறுந்தொகை'யில் பதுமனார் என்னும் புலவர் ஒருவரின் பாடலொன்று பெண்ணொருத்தியின் காதல் உணர்வுகளை அழகாகப் படம் பிடிக்கும். ஓசைகள் யாவுமடங்கி ஊரே உறங்கும் நள்ளிரவில் அவள் மட்டும் உறங்காமல் விழித்திருக்கின்றாள். இதனை அழகாகப்படம் பிடிக்கும் குறுந்தொகைப்பாடல்:

"நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே" - பதுமனார் -

நள் என்னும் சொல்லுக்குப் பல அர்த்தங்களை உரையாசிரியர்கள் வழங்கியிருக்கின்றார்கள். செறிவு, ஒலி, நடு என அர்த்தங்கள் பல. இங்கு நள் என்றது செறிவு மிக்க யாமம் என்பதற்கும் பொருந்தும், இரவின் நடுப்பகுதி என்பதற்கும் பொருந்தும்.  இங்கு தலைவனின் பிரிவைத் தாங்க மாட்டாதவளான தலைவி, உலகத்து மாந்தரெல்லாரும் தூங்குகையில், தலைவியின் தோழியுட்பட,  தூக்கமின்றித் தவிக்கின்றாள். அவள் தோழியை எழுப்பித் தன் நிலையை எடுத்துரைக்கின்றாள்.  'உலகமும் துஞ்சுகையில் தான் மட்டும் துஞ்சாமல் இருக்கின்றேன்' என்கின்றாள்.

மேலும் படிக்க ...

சிதைவுறும் கிடுகு வேலிகள்: ‘அகதியின் பேர்ளின் வாசல்’ காட்டும் சித்திரம். - அலைமகன்-

விவரங்கள்
- அலைமகன்-
நூல் அறிமுகம்
10 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஒரு ஈழத்தமிழனுக்கு உலகம் என்பது ஐரோப்பாவும் அமெரிக்காவுமே ஆகும். இவர்களில் கிழக்கு ஐரோப்பிய அனுபவங்களை பெற்றவர்கள், அதனை முறையாக பதிவுசெய்தவர்கள் ஈழத்தில் மிகக்குறைவு. இருந்தாலும் இன்று உலகமெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழர்களின் வாழ்வில் கிழக்கு ஐரோப்பா, அதிலும் குறிப்பாக கிழக்கு ஜெர்மனியின் பங்களிப்பு மிக அதிகம். எனது சிறு பிராயத்தில் எனதூரில் இருந்து வெளிநாடு செல்பவர்கள் எப்போதும் ஜெர்மனிக்கே செல்வது வழக்கம். அந்த மர்மத்தை சரியாக உணர்ந்துகொள்ள எனக்கு இரண்டு சகாப்தங்கள் தேவைப்பட்டன. கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியின் அனுபவங்களை பனிப்போர் சூழலின் பின்னணியில் விவரிக்கும் நாவல், அகதியின் பேர்ளின் வாசல்.

வரலாற்றில் சம்பவங்கள் திரும்பவும் நடக்கின்றன. முதல் தடவை அது சோகமாக முடிகிறது. அடுத்த தடவை அது கேலிக்கூத்தாக முடிகிறது என்ற கார்ல் மார்க்ஸின் வாசகம் ஆய்வாளர்களிடையே பிரபலமானது. நாம் ஏன் வரலாற்றை தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்கு நியாயமான, தர்க்கபூர்வமான காரணங்கள்தான் மேற்கூறிய கூற்றுக்கள்.

வரலாறை மிக சுவாரஸ்யமாக அதே நேரம் முறையான தரவுகளுடன் தந்த நூல்கள் பல. அந்தவகையில் நள்ளிரவில் சுதந்திரம் (Freedom at midnight) முக்கியமான ஒரு நூல். அதேபோல தமிழர்களின் விடுதலைப்போரில் நடந்த நிகழ்ச்சிகளை காய்தல் உவத்தல் இன்றி பதிவுசெய்த நூல்களில் ஒன்று புஸ்பராசாவால் எழுதப்பட்ட "ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்".

இந்த வழிமுறைகளை தவிர்த்து ஆசி. கந்தராஜா அவர்கள் இன்னொரு வழியை பின்பற்றுகிறார். அதாவது வரலாற்றை ஒரு புனைகதையூடாக வெளிப்படுத்துவது. வரலாற்றுப் புனைவு என்று கூறும்போது நாம் அறிந்த சரித்திரப் புதினங்களுடன் இதனை குழப்பிக்கொள்ளக்கூடாது. நாவலாசிரியர் தனது நாவலில் சித்தரிக்கும் வரலாற்றுக் காலகட்டத்தில் கூடவே வாழ்ந்து பயணித்திருக்கிறார் என்பதுதான் இங்கே உள்ள சிறப்பம்சம்.

மேலும் படிக்க ...

கனடா, ரொறன்ரோவில் கலைஞர்களுக்கு மதிப்பளிப்பு. - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்
10 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முத்தமிழ் என்று அழைக்கப்படுகின்ற இயல், இசை, நாடக வடிவங்களைக் கட்டிக் காப்பதில் புலம் பெயர்ந்து கனடா வந்த ஈழத்தமிழர்கள், வேலைப் பளுவுக்கு மத்தியிலும் மிகவும் ஆர்வத்தோடு அத்துறையில் ஈடுபட்டார்கள். தொடக்கத்தில் பொருளாதார ரீதியாகத் தங்களைத் தாங்களே நிலை நிறுத்திக் கொள்வதில் கஸ்டங்களை அனுபவித்தாலும், தங்களுடன் ஒன்றாக இணைந்த கலை வடிவங்களைப் புலம் பெயர்ந்த மண்ணில் வெளிக் கொண்டுவருவதில் அவர்கள் தயக்கம் காட்டவில்லை.

மேலும் படிக்க ...

நான் சந்தித்த ஆளுமைகள் : Hugo Anthony - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார்
ஜோதிகுமார்
09 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1

அவரது முகத்தில் ஒரு சிறிய புன்னகை  இழையோடிக் கொண்டிருந்தது.  அப்பப்பா… பிய்த்து எடுத்து விட்டார்கள்… பிய்த்து!  இப்போது, ஆழ்ந்த ஓர் அமைதி… நிம்மதி!!  பெயர் தெரியாத ஒரு பயங்கர விலங்கின் கவ்வலில் இருந்து விடுபட்டு, அதன் கோரப் பற்களில் இருந்து தப்பி, … இப்போது அவரது இதழோரத்தில் அந்த நிம்மதி குடியிருக்க, அவரது இறுதிச்சித்திரம், அந்த கம்பீரமான, மிக மிக விலையுயர்ந்த அந்த சவப்பெட்டிக்குள், அடக்கமாய் கிடத்தப்பட்டிருந்தது.  உண்மை. அவரது வாழ்க்கையும் ஒரு விதத்தில் அப்படித்தான் அமைந்திருந்தது.

2

“ஆ… நீங்கள்… உங்களுக்கு ஏற்கனவே அறையொன்று ஒதுக்கப்பட்டிருக்கின்றது… உள்ளே வாருங்கள்… இப்படி… இங்கே… சாப்பிடுவீர்களா…”

“ஓ… துறவறத்தை அவர் இருமுறை விட்டகர்ந்தார்… வலது கையை முன்னால் நீட்டி, நாயொன்று பாய்ந்து வெடுக்கென கவ்வுவதுப் போல், விரல்களை வெடுக்கென முன்னால் நீட்டி மடக்கி கூறினார் :

“எல்லாமே சாத்தான்தான்… சாத்தான் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மனிதனைப் பாய்ந்து கவ்வும். சாத்தானிடமிருந்து தப்புவது அப்படியொன்றும் எளிதான விஷயமல்ல. கடினமான காரியம்… அதற்கு தெரியும் - எப்படி வருவது – எப்படி கவ்வுவது என்பது…” முன்பு அது ஏஞ்சலஸ் ஆகத்தானே இருந்தது… அதன் பிறகுத்தானே… அதற்கும் ஆசை வந்தது… தானும் ஓர் கடவுளாக மாற வேண்டும் என்று… அப்படித்தானே இவரும்…“உலகை அழகாக்க கடவுள் மனிதனை அனுப்பினார் பின்னர், மனிதன், பாவம், தனியாக இருப்பானே என்று ஒரு பெண்ணை அனுப்பி வைத்தார்… அந்த இடத்தில்தான் சாத்தானும் வந்து புகுந்தது… அதனால்தானே இவ்வளவு கஷ்டமும் மனிதருக்கு…”

“கடவுள்தான் கூறிவிட்டாரே... மனிதா... உன்னை இவ்வளவு அறிவுடன் படைத்துவிட்டேன்... சாத்தானும் இருக்கின்றான். நானும் இருக்கின்றேன்... இனி தேர்வு செய்ய வேண்டியது நீ... ஹீயூகோ பாவம்... அவர் துறவறத்தை விட்டகன்று... அந்நேரம் நான் இந்தியாவில் படித்துக்கொண்டிருந்தேன்... அவர் பெரியவராய் இருந்த போது நாங்கள் எல்லோரும் சின்னஞ் சிறுசுகள்... உயர்ந்த வளர்ந்த மனிதர் அவர்... சுற்றி சுற்றி வருவார்... அனைத்தையும் பார்க்கும் திறன் கொண்ட ஒரு மனிதர்... நம்ப முடியவில்லை... கேள்விபட்டதும்...’

மேலும் படிக்க ...

தேவகாந்தனின் 'இலங்கைத் தமிழ் நாவல் இலக்கியம்' - ஒரு வரலாற்றுத் திறனாய்வுநிலை நோக்கு குறித்த ஓர் அறிமுகம் - கலாநிதி மைதிலி தயாநிதி -

விவரங்கள்
- கலாநிதி மைதிலி தயாநிதி -
நூல் அறிமுகம்
08 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சில்லையூர் செல்வராசனின் ஈழத்துத் தமிழ் நாவல் வளர்ச்சி (1967), க. கைலாசபதியின் தமிழ்நாவல் இலக்கியம் (1968), நா. சுப்பிரமணியனின் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் (1978) போன்ற தமிழ்நாவல் வரலாற்று நூல்வரிசையிலே 1895 முதல் 2020 வரையிலான காலத்தில் எழுந்த நாவல்களை அவை எழுந்த காலப் பின்னணியில் வைத்து நோக்குவதும், கூரிய விமர்சனப் பார்வையை முன்வைப்பதுமான தேவகாந்தனின் இலங்கைத் தமிழ் நாவல்இலக்கியம் - ஒரு வரலாற்றுத் திறனாய்வுநிலை நோக்கு என்ற நூல் (காலச்சுவடு பதிப்பகம், 2021) தனக்கென ஓரிடத்தைப் பிடித்துள்ளது.

இந்நூலின் முகப்பை அசன்பேயுடைய கதை (1885) மோகனாங்கி (1895)) எனும் தமிழ் நாவல்களின் பழைய மங்கித் தேய்ந்து போன அட்டைகள் அலங்கரிக்கின்றன. இலங்கையில் நாவல் எனும் இலக்கிய வகை தோன்றிய குறிப்பிட்டதொரு வரலாற்றுக்காலகட்டத்தை இவ் அட்டை பிரதிபலிக்கும் அதேசமயம் கால மாற்றத்தையும், தமிழ் நாவல் வரலாற்றின் தொடர்ச்சியையும் குறிப்பால் உணர்த்துகிறது. அத்துடன், இந்நூல்களின் அட்டைகளை நூலின் முன்னட்டையில் பதித்தமைக்கு வேறு முக்கிய காரணங்களும் உள. சுந்தரராஜனும், சிவபாதசுந்தரமும் எழுதிய தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும் என்ற நூல் சித்திலெப்பை மரைக்காயரின் அசன்பேயுடைய கதை இலங்கையைக் களனாகக் கொண்டிராத காரணத்தால் இலங்கைத் தமிழ் நாவல் அல்ல என்று கூறுகிறது. ஆனால், களத்தை அடிப்படையாகக் கொண்டு கூறப்படும் இக்கருத்தை தேவகாந்தன் , சல்மான் ருஷ்டியின் மிட்நைட் சில்ட்ரன் (1981), சியாம் செல்வதுரையின் ஃபணிபோய் (1994) போன்ற நாவல்கள் முறையே இந்தியா, இலங்கை எனும் நாடுகளைக் களங்களாகக் கொண்டிருப்பினும், பிரிட்டிஷ், கனேடிய நாவல்களாகவே கொள்ளப்படுமாற்றைச் சுட்டிக்காட்டி, அசன்பேயுடைய கதை இலங்கைத் தமிழ்நாவலே என நிலைநாட்டுகின்றார்.

மோகனாங்கியும் பல்கலைக்கழகம் சார்ந்த புலமையாளரின் கவனத்தை ஆரம்பத்தில் பெறாதிருந்து, பின்னர், உயர்கல்வி நிறுவனங்களுக்கு வெளியே இருந்து எடுக்கப்பட்ட முயற்சிகளின் விளைவாகவே தமிழிலே எழுந்த முதல் வரலாற்று நாவல் என்ற தகுதிப்பாட்டை எய்தியது. அது குறித்த வரலாற்றையும் தேவகாந்தன் பதிவிட்டுள்ளார். நூலாசிரியர் தன் கவனத்தைக் குவித்து மிகுந்த அக்கறையுடன் எழுதிய பகுதிகள் இவையாதலால், இவ்விருநாவல்களுக்கும் இந்நூலில் விசேட இடம் உண்டு. அம்முக்கியத்துவத்தினை உணர்த்தும் வகையில் இந்நூல்கள் முன்னட்டையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன எனலாம்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. கல்வி, மருத்துவத்தில் உதவி நாடும் அனைவருக்கும் உதவும் 'அபயம்'! மருத்துவர் கந்தப்பிள்ளை பார்த்திபனின் சிறப்பான சமுதாயப் பங்களிப்பு! - வ.ந.கிரிதரன் -
  2. சந்தியாப்பிள்ளை மாஸ்டர் என்னும் இளைஞர்! - வ.ந.கிரிதரன் -
  3. கடைசி இலை - ஆங்கிலத்தில்: ஒ.ஹென்றி தமிழில்: அகணி சுரேஷ் -
  4. கனடா, ரொறன்ரோவில் நூல் வெளியீட்டு விழா. - சுலோச்சனா அருண். -
  5. அளவெட்டியின் நாடகர்: சிறுநண்டு மணல் மீது படமொன்று கீறும்! - இரவி அருணாசலம் -
  6. இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - அரங்கு 38 - “தொ. மு. சி. ரகுநாதனின் பன்முக ஆளுமை” - தகவல்: அகில் -
  7. சிந்தனைக் களம் : நாதஸ்வர வாசிப்பின் நுட்பமுறைமைகளும் வழக்கங்களும்’ - தகவல்: முனைவர் கெளசல்யா சுப்ரமணியன் -
  8. சாரங்காவின் கடலினை வரைபவள்: ரசனைக் குறிப்பு - நவஜோதி ஜோகரட்னம், லண்டன். -
  9. மரண அறிவித்தல்: காசித்தம்பி கந்தவனம் பேரம்பலம் - தகவல்: பேரா சவுந்தரநாதன் -
  10. மணிக்கொடி எழுதியவர் : ஜோதிர்லதா கிரிஜா - ஜெயஸ்ரீ ஷங்கர்-
  11. ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் - தமிழியல் ஆய்வும், உலகத்தமிழாராய்ச்சி மாநாடுகளும்!
  12. கனடாவில் எழுத்தாளர் தேவகாந்தனின் நூல்கள் வெளியீடு - ஊர்க்குருவி -
  13. வடக்கு, தெற்கு அரசியல் மற்றும் ரஷ்ய-உக்ரைன் போர் பற்றியோர் அலசல்! - ஜோதிகுமார் -
  14. அம்பியெனும் தமிழ்த்தும்பி அவ்வுலகம் சென்றது ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண் , அவுஸ்திரேலியா -
பக்கம் 28 / 108
  • முதல்
  • முந்தைய
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • அடுத்த
  • கடைசி