சைபீரிய ஐஸ் இளவரசி இப்படித்தான் இருந்திருப்பார்.
பல உண்மைகளை மனத்துக்குள் போட்டு மறைத்து, அதனை வெளியே விடாமல் வைத்திருப்போர்களிடம் சில கேள்விகளை நாம் கேட்கின்றோம். அக்கேள்விகள் கொண்டு வரும் பதில்கள் உள் மன ஆழங்களை வெளியே கொண்டு வருகின்றது. மூடி வைத்திருக்கும் பல உண்மைகள் வெளிப்படுகின்றது. வழக்கறிஞன் கேட்கின்ற கேள்விகளே உண்மைக் குற்றவாளியை இனம் கண்டு பிடிக்கிறது. உண்மை நிரபராதிகளை வெளிக் கொண்டுவருகின்றது. சொல் படாமல் எதுவும் வெளிவராது. அதுபோல் உழியில்லாமல் மண் உண்மையைத் தராது.
மனிதனின் ஆரம்பம் எங்கே இருக்கின்றது? மொழி எப்போது தோன்றியது? எந்த இனம் முதல் தோன்றிய இனம்? மனிதனின் கலாசாரம் எவ்வாறு அமைந்திருந்தது? கலைகள் எவ்வாறு அமைந்திருந்தன? வேற்று இனத்தவர்களுடைய இனம் எவ்வாறு அமைந்திருந்தது? இவ்வாறான ஆராய்ச்சிகள் அகழ்வாராய்ச்சி மேற்கொள்பவர்களிடம் மேம்பட்டுக் காணப்படுவதே பல உண்மைகளை வெளியே கொண்டு வந்து கொட்டிவிடுகின்றன. ஆராய்ச்சிகளில் மேம்படுவோர் நிலத்தைக் குடைகின்றார்கள், நீரினுள் பயணம் செய்கின்றார்கள், பனிமலையின் அருகே போய் ஆய்வுகள் செய்கின்றார்கள், கொதித்துக் கொண்டிருக்கும் எரிமலையின் அருகே நின்று ஆய்வுகளை மேற்கொள்ளுகின்றார்கள். முடிவில் உண்மைகளை வெளியே எடுத்து வருகின்றார்கள். ஆனால், சிலரோ எம்முடைய வரலாற்றில் பாதகம் ஏற்படும் என்ற பட்சத்தில் உண்மைகள் மறைக்கப்பட வேண்டும் என்று பிரசாரம் செய்கின்றார்கள்.
எகிப்திய நாட்டிலும், ரஷ்யாவிலும், இந்தியாவிலும் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் காட்டியுள்ள உண்மைகளை இக்கட்டுரையில் நான் எடுத்து வருகின்றேன்.
இரஷ்யாவில் கண்டெடுக்கப்பட்ட, இயற்கைப் பாதுகாத்துத் தந்த சைபீரிய ஐஸ் இளவரசியானவர் 2600 ஆண்டுகளுக்கு முன் பழைமையான யூபோக்கில் புனிதமாகப் போற்றப்பட்ட ஒரு பெண் என்பதை இரஷ்யாவின் அகழ்வாராய்ச்சி நிறுவனம் 1993 ஆம் ஆண்டு கண்டுபிடித்துக் கொடுத்துள்ளது. இவருடைய உடல் இருந்த பெட்டி சீனாவின் எல்லைக்கு அருகாமையிலுள்ள யூபோக் பீட பூமியில் காணப்பட்டது. நடாலியா போலோஸ்மார்க் குழுவினர் சைபீரியாவின் ஆரம்ப கால வாழ்விடங்கள் குறித்து ஆராய்வு மேற்கொண்ட போதே இவருடைய உடலை கண்டுபிடித்தனர். கி.மு. 2 ஆம் 6 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சைபீரிய நிலப்பகுதியில் காணப்பட்ட கலாசாரத்தின் பிரதிநிதியாகவும் புனிதமான ஒருவராகவும் இப் பெண் காணப்பட்டிருந்தார் என்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்தனர்.
இந்தப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட போது ஒரு பெட்டி கண்டெடுக்கப்பட்டது. அதனுள் பழுதடையாத ஒரு பெண்ணின் சடலம் காணப்பட்டது. அந்த உடலுடன் 6 குதிரைகளின் எலும்புக் கூடுகள், மாமிசங்கள் பலருடைய எலும்புக்கூடுகள் (இவர்கள் அடிமைகளாக இருக்கலாம்) காணப்பட்டன. இவற்றைத் தற்கால டெஜிரல் முறையில் வாசித்தார்கள். இவ் உடல் உள் உறுப்புக்கள் அகற்றப்பட்டு புல்லினாலும், கம்பளியினாலும் அடைக்கப்பட்டிருந்தது. பனி நுழைந்த காரணத்தினால் அவளுடைய வெள்ளைத் தோல் பாதுகாக்கப்பட்டிருக்கின்றது. அவளுடைய கையில் மான் பச்சை குத்தப்பட்டிருக்கின்றது. அதுகூட அழிவடையாமல் அப்படியே இருந்திருக்கின்றது. இவருடைய உடல் இருந்த பெட்டிக்குள் பனி எப்படி உள்ளே நுழைந்திருக்கிறது என்று சிந்தித்தால், இந்தப் பெண் மிகவும் முக்கியமானவர் என்ற காரணத்தினால் அவருடைய உடலுடன் விலைகூடிய ஆபரணங்கள் சேர்த்துப் புதைக்கப்பட்டிருந்தன.
- சைபீரிய ஐஸ் இளவரசியின் எலும்புக்கூடு -
இதனைக் களவாடுவதற்காக யாரோ ஒருவர், இவருடைய புதைகுழியைத் தோண்டியிருக்கின்றார். அவருடைய புதைக்குழியைத் தோண்டியதற்குரிய தண்டும் அங்கு காணப்பட்டுள்ளது. கொள்ளையடித்தவன் சரியான முறையில் சவப்பெட்டியை மூடாத காரணத்தினால் பனி உள்நுழைந்து உடலைப் பழுதடையாமல் பாதுகாத்துள்ளது. தற்போது நாம் பெறும் ஐஸ் மீன்கள் எப்படிப் பதப்படுத்தப்பட்டு இருக்குமோ, அதேபோல் பதப்படுத்தப்பட்டு உடல் உறைந்து இருந்தது. இவ்வுடல் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியாக இருக்கலாம் என்று கண்டுபிடித்திருக்கின்றார்கள். இந்தப் பெண் இறக்கும் போது 25, 28 வயது இருக்கலாம். அவ்வயதுத் தோற்றத்துடனேயே அவ்வுடல் காணப்பட்டிருக்கின்றது. இவள் மார்பகப் புற்று நோயினால் இறந்திருக்கலாம் என்று 2014 ஆம் ஆண்டு மரணத்திற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது. அவளுடைய பக்கத்தில் காணப்பட்ட கஞ்சாப் பொட்டலாம் இவள் வலியை நீக்குவதற்காகப் பயன் படுத்தியிருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது. மஞ்சள் பட்டு, துஸ்ஸா ரவிக்கை, வெள்ளைநிறக் கோடுகள் கொண்ட கம்பளிப் பாவாடை, தொடை வரை உயர்ந்த லெகிங்ஸ் அணிந்திருந்தாள். 3 அடி உயரமுள்ள தலைப்பாகை தலைக்கவசம் மரத்தால் செய்யப்பட்டிருந்தது. மருத்துவத்திற்குப் பயன்படுத்திய கல் பாத்திரத்தில் கொத்தமல்லி விதைகள் இருந்தன. அழகான பெண்ணாகக் காட்சியளித்த அவளுடைய உடல் ஆராய்ச்சிக்காகக் கொண்டு செல்லப்பட்ட போது தோற்றம் அழகிழந்தது. அத்துடன் அவளுடைய உடலிலே அபின் காணப்பட்டதாக சொல்கின்றார்கள். தோண்டத் தோண்ட இறந்த பெண் வெளிப்பட்டாள். தற்போது சைபீரிய தேசிய நூலகத்தில் அவருடைய உடல் வைக்கப்பட்டிருக்கின்றது.
- Howard Carter அகழ்வாராய்ச்சியின்போது...
இதே போன்று 1922 ஆம் ஆண்டு எகிப்திலே பிரமிட்டுக்களைப் பற்றி Howard Carter என்பவர் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டிருந்தார். அப்போது தீப்ஸ் நகரத்திற்கு அருகாமையிலுள்ள பார்வோன் கிங்ஸ் பள்ளத்தாக்கில் ஒரு நிலப்பகுதியைக் காணுகின்றார்கள். அதனைத் தோண்டிக் கொண்டு செல்லுகின்ற போது படிக்கட்டுக்கள் காணப்படுகின்றன. இன்னும் இன்னும் தோண்டுகின்றார்கள். அங்கு ஒரு அழகான அறை காணப்படுகின்றது. அந்த அறையினுள் ஒரு பெட்டியைக் காணுகின்றார்கள். அதனைத் திறந்து பார்க்கும் போது ஒரு 18 வயது ஆண்மகனின் உடல் மம்மியாகக் காணப்படுகின்றது. இப்போதுள்ள ஆய்வுப் பொருட்களைக் கொண்டு ஆய்வு செய்த போது இது இது 3000 ஆண்டு பழைமையானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது Tutankhamun என்னும் ஒரு 18 வயது மன்னனுடைய உடல் என்று கண்டுபிடிக்கப்படுகிறது. அங்கு கண்டெடுக்கப்பட்ட 5000 க்கும் மேற்பட்ட பொருள்கள், சுவரிலே கீறப்பட்டுள்ள சித்திரங்கள், எழுத்துக்களை வாசித்து ஆய்வு செய்கின்ற போது அவருடைய வாழ்க்கை பற்றி அறியக் கூடியதாக இருந்தது.
இம்மன்னன் Tutankhamun தன்னுடைய அக்காவையே திருமணம் செய்திருக்கின்றார். அவர் இறந்து போனபின் அவனுடைய தாத்தாவின் மனைவியைத் திருமணம் செய்திருக்கின்றார். எகிப்திய மண்ணிலே இரத்த உறவுகள் தமக்குள்ளேயே திருமணம் செய்ய வேண்டும் என்னும் வழக்கம் இருந்திருக்கின்றது என்பதை அறியக் கூடியதாக இருந்திருக்கின்றது. இப்போது விஞ்ஞான உலகம் எடுத்துக் காட்டுவதற்கமைய அக்காலகட்டத்தில் எகிப்திலே பலர் அங்கவீனர்களாகவே பிறந்திருக்கின்றார்கள் என்றும் இவ்விடத்தில் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. மன்னன் Tutankhamun க்குக் கூட ஒரு கால் நடக்க முடியாத காரணத்தினால், தடியைப் பயன்படுத்தியே நடந்திருக்கின்றார் என்பது தெரியவருகின்றது. இவர் 9 வயதில் எகிப்திய அரசின் சிம்மாசனம் ஏறி 9 ஆண்டுகள் மன்னனாக ஆட்சி புரிந்திருந்தார்.
இவருடைய இறப்புக்கான காரணத்தை ஆய்வு செய்த போது இவருடைய மார்பு எலும்பின் மேல் ஒரு வாகனம் சென்றிருக்கும் அறிகுறி தெரிவதனால், இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இவ்வாறு 3000 வருட காலப்பகுதியில் எகிப்திய நாட்டு மக்கள் ஆடை, அணிகலன், மொழி, கலாசாரம் போன்றவை எப்படி இருந்திருக்கின்றன என்பதை Tutankhamun புதைகுழி போன்ற அகழ்வாய்வுகள் மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றது. உலகநாடுகள் அனைத்திலும் மனிதர்கள் ஒரு பண்பட்ட கலாசாரத்துடனேயே வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதை பரந்த மனதுடன் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கின்றது.
19ம் நூற்றாண்டில் ஜேர்மனியுள்ள பேர்லின் மியூசித்திற்காக தொழிற்படுபவர்கள் உலகம் முழுவதும் தேடல் நடத்திய போது ஒரு ஜேர்மன் ஆராய்ச்சியாளரால் தாமரைபரணி நதிக்கரையில் இருக்கின்ற ஆதிச்சநல்லூரில் தோண்டிப் பார்த்த போது முதுமக்கள் தாளியைக் கண்டுபிடித்தார்கள். ஒரு பானைக்குள் இறந்தவர்களை வைத்து அவர்களுக்குப் பிடித்த பொருள்களை, ஆடைகளை மண்ணுக்குள் புதைத்து வைத்துவிடுவார்கள். இதைக் கண்டுபிடித்த பின் இவ் அகழ்வில் பல தாளிகள் கண்டுபிடித்தனர். அதற்குள்ளிருந்து பல பொருட்களை எடுத்து பேர்ளின் மியூசியத்தில் வைத்திருக்கின்றார். இதைப் படித்தவர்கள் இரண்டாவது தரம் அகழ்வு மேற்கொண்டு பல எலும்புக்கூடுகளைக் கண்டுபிடித்தார்கள். இவற்றை படித்துப் பார்த்தபோது இவ் எலும்புக் கூடுகள் 3000 ஆண்டு பழைமையானவை என அறிந்தனர். இவை தமிழர்களின் எலும்புகளுக்கு ஒத்துப் போகவில்லை. இது ஆபிரிக்காவில் இருந்த மனிதர்களினதும் அவுஸ்திரேலியாவின் மனிதர்களின் எலும்புகளுக்கும் ஒத்துப் போவதை அறிந்தனர். எப்படி ஆதிச்சநல்லூரில் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா மனிதர்களின் எலும்புக்கூடுகள் வந்தன. இங்கு அம்மனிதர்கள் வாழ்ந்தார்களா? என்ற கேள்வி எழும்போது ஆய்வு மேற்கொண்ட இடம் சுடுகாடு என்பதும், இந்த இடத்தில் ஒரு பெரிய வணிகம் நடந்திருக்கின்றது. அதனாலேயே இம்மக்கள் இவ்விடத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம். அவர்கள் இங்கு வாழ்ந்திருக்கலாம் என்பதை ஆய்வாளர்கள் உறுதி கூறினர்.
வைகை மாவட்டம் கீழடி ஊராட்சியில் உள்ள கீழடி கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கட்டிடங்கள், பொருட்கள், ஆபரணங்கள், எலும்புக்கருவிகள், மட்பாண்டங்கள், இரும்புவேல், செங்கற்சுவர்கள், குறியீடுகள், தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானையோடுகள், கழிவுநீர் வாய்க்கால் வசதியுள்ள கட்டிடங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து பார்க்கும் போது வைகை ஆற்றங்கரையில் உருவான எமது கலாசாரம் சுமார் 3000 ஆண்டு காலம் பழமையானது என அறியக்கூடியதாக இருக்கின்றது. ஆதன், உதிரன், திசன் போன்ற பெயர்கள் தமிழர்களின் பெயர்களாகக் காணப்படுகின்றன. இந்திய தொல்லியல் ஆய்வுநிறுவனத்தால் நடத்தப்படுகின்ற அகழ்வாராய்ச்சியில் இவ் அடையாளச் சுவடுகள் வைகை நதிக்கரை நாகரீகம் என்று கூறக் கூடியதாகக் காணப்படுகின்றது.
கீழடி ஆய்வினை இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் அகழ்வாய்வுப் பிரிவினைச் சேர்ந்த கி.அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் ஜுன் 2015 ஆம் ஆண்டு தலைமை தாங்கிச் செய்தார். கிட்டத்தட்ட 48 சதுரக்குழிகள் வெட்டப்பட்டு இவ் அகழ்வு வேலைகள் செய்யப்பட்டன. இங்கு காணப்பட்ட பொருள்கள் 2300 ஆண்டு தமிழ் பழைமையானது என்று அவர் கூறிய போது, மேலும் இவர் ஆராய்ச்சி செய்ய முடியாது இவரை அசாம் மாநிலத்திற்கு மாற்றி விட்டார்கள். அப்படியென்றால், இதனைப்பற்றிய ஆராய்ச்சிக் குறிப்பை நான் விளக்கமாக எழுதித் தருகின்றேன் சர்வதேச நிறுவனத்திற்கு ஆராய்ச்சிக்கு இதை அனுப்பி விடுங்கள் என்று கேட்ட போது, நீங்கள் இப்போது அங்கு வேலையில் இல்லை. அதனால் அதை செய்ய முடியாது என்று மறுத்து விட்டார்கள். இதனைக் கவனத்தில் கொண்ட தமிழ்நாட்டு மக்கள் எடுத்த முயற்சியின் காரணமாக தமிழ்நாடு அகழ்வாராய்ச்சி முயற்சியை மேற்கொண்டது. இப்போது 6 ஆவது கட்டமாக அகழ்வாராய்வு வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இதேபோல் இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள், சலவன் குப்பத்தில் ஒரு கோயிலைக் கண்டுபிடித்திருக்கின்றார்கள். இது கிறினைட் கல்லினால் கட்டப்பட்டதாகக் காணப்பட்டிருந்திருக்கிறது. இது பல்லவர் காலத்தில் கட்டப்பட்டதாக அறியப்பட்ட போது எப்படி கிறினைட் கல்லால் கட்டியிருக்கலாம் என்று சிந்தித்து, அக்கோயிலை நகர்த்திக் கீழே அகழ்வாராய்ச்சி செய்து பார்த்த போது 2500 வருடங்களுக்கு முற்பட்ட ஒரு முருகன் கோயிலைக் கண்டுபிடித்திருக்கின்றார்கள். இக்கோயில் இப்போது கூறப்படுகின்ற எந்தவித கோயில் கட்டும் முறைகளுமின்றி கட்டப்பட்டிருக்கின்றது. இக்கோயில் தற்போதுள்ள மூடநம்பிக்கைகளை தகர்த்தெறிவதாக இருக்கின்றது.
சங்ககாலம் என்பது கி.மு. முதலாம் நூற்றாண்டு என்று Mortimer Wheeler அவர்கள் அரிக்கமேட்டில் செய்த அகழ்வாராய்ச்சியில் முடிவு செய்கின்றார். இவரே ரோமர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நடைபெற்ற வணிகம் பற்றித் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். முசிறி, தொண்டி, காவரி பூம்பட்டினம், கொற்கை இவையெல்லாம் சங்ககாலத் துறைமுகங்கள் என்று கொண்டு ஆராய்ச்சி மேற்கொண்ட போது அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருள்களைக் கொண்டே இம்முடிவை எடுத்துக் கூறினார். ஆனால் ரொபேர்ட் சுவேல் (Robert Sewell) அவர்கள் மதுரை மாங்குளத்தில் காணப்பட்ட கல்வெட்டுக்களை ஆராய்ச்சி செய்த போது அதில் காணப்பட்ட எழுத்துக்கள் அசோகரது கல்வெட்டு பிராமி எழுத்துக்கள் என்றும் அது கி.பி. 3 ஆம் நூற்றாண்டு என்றும் கூறினார். ஆனால், அவ்வெழுத்துக்களை James Prinsep என்பவர் இதிலுள்ள எழுத்துக்களை வாசிக்க முடியவில்லை. இது பிராமி எழுத்தல்ல. அதன் வரிவடிவமுள்ள பிராகிருத மொழி எழுத்துக்கள் என்ற போது கே. சுப்பிரமணியம் அவர்கள் அவ்வெழுத்துக்கள் பிராமியும் அல்ல, பிரகிருதமும் அல்ல தமிழ் எழுத்துக்கள் என்று நிறுவிக் காட்டினார். அவ்வாறு அவ்வெழுத்துக்கள் தமிழானால், அதன் முற்பட்ட காலத்தைக் கணக்கிட்டு (அதாவது ஒரு மொழி வளர்ச்சியடைய 100 வருடங்கள் தேவை) தமிழ் மொழி கி.மு. 2 ஆம் நூற்றாண்டு பழைமையானது என ஐராவதம் மகாதேவன் அவர்கள் எடுத்து விளக்குகின்றார். இந்த வகையில் சங்ககாலம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலப்பகுதி என்று பதிவு செய்கின்றார்.
மொழி, இலக்கியங்கள், தொல்பொருள் தடயங்கள், கல்வெட்டுக்கள் மனிதன் வாழ்ந்த காலகட்டத்தையும், அவனின் வரலாற்றுப் பின்னணியையும், கலாசார பண்பாட்டு அம்சங்களையும் பறைசாற்றுகின்றன.
ஒரு தரமான ஒரு மொழி கி.மு. 3 நூற்றாண்டுகள் பழைமையானது என்றால், அம்மொழியைப் பேசிய மனிதன் அம்மொழி தோன்றுவதற்கு முன் எத்தனை வருடங்கள் வாழ்ந்திருப்பான் என்பது தெளிவாகப் புலப்படுகின்றது.
இவ்வாறு இலங்கையில் மேற்கொள்ளும் அகழ்வாராய்ச்சிகளும் பல உண்மைகளைக் கொண்டு வரலாம். இலங்கையில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற வேடர் இனத்தவர்கள் பற்றிய சான்றுகளும் பல உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட முடியும். இன்னும் மேற்கொள்ளும் அகழ்வாராய்ச்சிகள் தமிழன் பற்றிய தெளிவை ஏற்படுத்தும். ஆனால், இதற்கு அரசின் ஒத்துழைப்பும் பணபலமும் தேவைப்படுகின்றது. தோண்டத் தோண்டத்தான் உண்மைகள் துலங்கும்
உசாத்துணைப் பட்டியல்
1. Wikiepedia - Arikamedu -
2. BBC: The 'curse' of Siberia's 2,500-year-old 'Ice Maiden' - BBC REEL
3. What Does Keeladi Excavation Tell About Sangam Period? | Amarnath Ramakrishna | Keeladi Excavation -
4. BBC: Tutankhamun king of Egypt -
c.gowry@yahoo.d