‘சொற்கள் வனையும் உலகம்’, ‘தடங்களில் அலைதல்’ நடராசா சுசிந்திரனின் கட்டுரைத்தொகுப்பு நூல்கள் வாசிக்கக் கிடைத்தமை மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இரு நூல்களும் ‘சுவடு வெளியீடாக’ 2023 டிசம்பரில் வெளிவந்துள்ளன. இரண்டு நூல்களுமே கட்டுரை வடிவத்தைக் கொண்டிருப்பது என்பது அவற்றினை வகைப்படுத்திப் பலவிடயங்களை திரும்பிப்பார்த்து அசை போடுவதற்கும், பலவற்றை அறிந்து கொள்வதற்கும் மிகச் சுவையாக இருப்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.
சொற்கள் வனையும் உலகம் : புகலிட செயற்பாடுகளின் சில முக்கியமான தடயங்களையும், ஜேர்மன் மொழியுடனான தனது ஆளுமையையும் புலப்படுத்தும் வகையில் கட்டுரைகளை வெளிப்படுத்தியிருப்பது மிகச்சிறப்பான விடயம். தமிழ் மக்கள் அறிந்திராத பல விடயங்களை அனுபவச் செறிவோடும் குறிப்புகளோடும் கட்டுரைகளாக்கி வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரிய விடயமாகும். இக்கட்டுரைத் தொகுதியை ‘தன் பலத்தின் பாதியாயிருந்த அவரது அப்பா சின்னத்தம்பி நடராசாவுக்கே’ சமர்ப்பணம் செய்திருக்கிறார்.
‘கோதேயின் ‘பவுஸ்ட்’’, ‘எதுவரை தொடரும் மனிதரின் கதை’, ‘மக்ஸ் ஃபிறிஷ்ஷின் ‘ஹோமோஃபாபர்’, ‘செ. வே.காசிநாதனின் ‘விற்கன்ஸ்ரைன்: மொழி, அர்த்தம், மனம்’, ஜாக்லண்டனின் ‘கானகத்தின் குரல்’, செல்லத்தம்பி சிறீகந்தராசாவின் ‘ஆங்கிலம் பிறந்த கதையும் வளர்ந்த கதையும்’, அப்துல்றசாக் குர்நாவின்; ‘சொர்க்கம்’, ‘பேராசிரியர் கைலாசபதியும் பாரதி ஆய்வுகளும்’, ‘கே.கணேஷின் மொழியாக்கத்தில் லாஓ ஷேயின் ‘கூனற்பிறை’, ‘அவலங்களின் காட்சியறை குந்தவையின் சிறுகதைகள்’, ‘உறைபனி இடுக்கில் அடம்பன் கொடி வேர் பின்னும் தாயகம் கடந்த தமிழ் இலக்கியத்தில் தமிழ்மனம்’, ‘பாரதிதாசனின் ‘ஓ..கனடா’, ‘வாசுதேவனின் ‘தொலைவில்’ கவிதைத் தொகுப்பு’, ‘விமல் குழந்தைவேலின் ‘கசகறணம்’ நாவல்’, ‘பிராங்போர்ட்’ றஞ்சனியின் ;றஞ்சினி கவிதைகள்’, ‘சி.சிறீறங்கனின் ‘சிவப்புக்கோடு’, ‘என். சரவணனின் ‘பண்டாரநாயக்க கொலை’, ‘இரா. றஜீன்;குமாரின் ‘இருபதாம் நூற்றாண்டின் ஈழத்துப் புறநானூறு’, ‘எவ்வகையில் அமையலாம் பொறுப்புக் கூறுதல் ஜப்பானிய அட்மிரல் தக்கிஜீரோ ஒனிஷி (1891-1945)யின் பதில்’, ‘நிக்கொலாய் கோகோலின் மேலங்கி’, மரணமுகாமிங்கு நேரம் தவறாது ரயில் அனுப்பிய அடொல்வ் ஜஸ்மான்’, ஓய்.பி.சத்தியநாராயணனின் ‘என் தந்தை பாலய்யா’, ‘ஸ்யூஸ்டன், டெக்சாஸ் சட்டத்தரணி ஜார்ஜ் வில்லி அவர்களின் வரவேற்புரை’ போன்ற இருபத்திமூன்று கட்டுரைகள் 168பக்கங்களை உள்ளடக்கியமைந்துள்ளன.
- எழுத்தாளர் நடராசா சுசீந்திரன் -
புலம்பெயர்ந்து நாற்பது வருடங்களாக எழுதிய கட்டுரைகள் கணணி. பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளிவந்த இக்கட்டுரைகளை ஆய்வுக் கட்டுரைகள் என எடுத்துக்கொள்ள முடியாவிட்டாலும் அவரது அனுபவத்தின் ஆவணமாகப் பார்க்க முடிந்தது.
‘கல்வி என்பது வாழ்க்கை. அதை அடையக் கூடிய ஒரே வழி சுய அனுபவமும், அறிவு சேர்க்கும் ஊக்கமும், தளராத அறிவுத் திறனுமாகும்’ என்று கூறியுள்ளார் அறிவுச் சடர் கொழுத்திய சோக்கிரட்டீஸ். இக்கட்டுரைகளை வாசிக்கும்போது அவை நினைவில் வந்து போகின்றன. அத்தகைய அனுபவக் குறிப்புக்களோடு பல தேடல்களைப் பொறித்து, வாசிக்கும் ஆவலைத் தூண்டும் கட்டுரைகளாக என்னால் சுசீந்திரனின் கட்டுரைகளைப் பார்க்க முடிகிறது.
கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை எனப் பரவலாகக் காணும் இன்றைய தமிழ் இலக்கிய உலகில் சுசீந்திரன் தன் கட்டுரைகள் வழியாக தனது அனுபவக் கதைகளையும் கூறி மற்றவர்களின் கதைகள், இலக்கியம், அரசியல் என வலுச்சேர்த்து வாசிக்கத் தூண்டியிருக்கிறார்.
‘செ.வே. காசிநாதனின் விற்கன்ஸ்ரைன்: மொழி, அர்த்தம், மனம்’ என்ற கட்டுரையில் விற்கன்ஸ்ரைன் குறித்த அருமையான மெய்யியல் விளக்கங்களை சிந்தியிருக்கிறார் சுசீந்திரன். நாம் சிந்திக்க விடாதவற்றைப் பற்றியும் சிந்திக்க முடியும் என்று சிந்திக்க வேண்டும் என்றும், உலகென்பது எல்லா நிகழ்வுகளின் மூலம் நிர்ணயிக்கப்படுகின்றது என்று பல விற்கன்ஸ்ரைனின் அறிமுகத்தினை அலாதியாக்கியிருக்கிறார்.
‘கானகத்தின் குரல் நாவல் ஒரு ‘பக்’ என்ற ஒரு நாயின் கதையாக, அந்த நாயின் பார்வையில் எழுதப்பட்டுள்ளபோதும், இன்றைய பார்வையில் ஒரு இடப்பெயர்வின் புகலிடத் தேடலின், அகதியாகவோ எதிலியாகவோ ஆக்கப்படுதலின் ஆகிவிடுதலின் கொடிய அனுபவங்களுடன் பொருந்திப்போகின்றது. நாகரிகம் என்ற மாயையின் போதாமைகள் புலப்படுகின்றபோது, அதிலிருந்து விலகியோடிவிட எத்தனிக்கும் மனித மனங்களைப் போலவும் பக்கின் நடத்தைகள் இருக்கின்றன’ போன்ற சுசீந்திரனின் பார்வை அந்நாவலை தற்போது வாசிக்கத் தூண்டுகின்றது. ஜாக் லண்டன் குறித்த பல்வேறு அருமையான தகவல்களை ‘ஜாக் லண்டனின் ‘கானகத்தின் குரல்’ மூலம் தேடலில் தந்திருக்கிறார்.
‘தாய்மொழியில் கல்வி’ வேண்டும்; என்பதனை ஆதரித்த ஏ.ஜே. கரகரத்தினா ‘ஆங்கிலம் வெற்றிவாகை சூடிய வரலாறு’ என்ற சுருக்கமான கட்டுரையை ‘இளம்பிறை’ என்ற சஞ்சிகையில் வெளிவந்தமையையும் அதுபற்றியும் குறிப்பிட்டு ஆங்கில மொழியின் சொல்வளம் போதவில்லை என்ற போது: 1) பிற மொழிகளில் இருந்து கடன் பெறலாம். 2). பண்டைய சொற்களை மீட்டெடுக்கலாம் 3). பழைய வேர்ச்சொல்லினை வைத்தும், இணைத்தும் புதிய சொற்களை உருவாக்கலாம் என்ற மும் மொழிகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் கடன் பெறுதலே வெற்றியீட்டியுள்ளது. ‘ஆங்கிலம் கடன் பெற்று வளர்ந்தது’ என்ற பல்வேறு தேடல்களில் செல்லத்தம்பி சிறிகந்தராசாவின் ‘ஆங்கிலம் பிறந்த கதையும் வளர்ந்த கதையும்’ என்ற நூல் குறித்த கட்டுரை என்னைச் சற்று விழிப்படைய வைத்தது.
‘பாரதிநேசனின் ‘ஓ...கனடா’ என்ற கட்டுரை இன்றையதுபோன்று வளர்ச்சியற்ற, கவர்ச்சியற்ற பழை நினைவலைகளைப் படம் பிடித்துக் காட்டுவதுபோல் அமைவதென்பது கட்டுரையாசிரியர் கூற்று. 1994ஆம் ஆண்டு வெளியிடப்பட்டாலும் 1948 ஆம் ஆண்டில் இலங்கையின் சுதந்திரம் கிடைத்தது தொடக்கம் போராட்ட ஆரம்ப நாட்கள் - 1970களின் இறுதி – 1997 கடல் கடந்த இடப்பெயர்வு வரையிலான காலப்பகுதில் தமிழ்ச் சமூகத்தின் கதையாக எழுதப்பட்டிருப்பது முக்கிய ஆவணமாகத் தோன்றுகின்றது. 1939 ஆம் ஆண்டு பிறந்த 2001அம் ஆண்டு வட்டுக்போட்டையில் காலமானார். சீனா வானொலியில் பணியாற்றி சீனாவில் பதினைந்து வருடங்கள் வாழ்ந்த அனுபவம்கொண்ட பாரதிநேசன் ஊடகவியலாளராக அறியப்பட்டமை’ பெருமைக்குரிய விடயம்.
‘மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே! தமிழர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய சிலவற்றை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். அவர்களுக்கு அவர்களது மொழி வழிபடும் தெய்வம். உலகில் அவ்வாறு தம் மொழியை வழிபடும் கலாசாரங்கள் மிகச் சிலவே. நீங்கள் ஒரு சட்டத்தரணியாகப் பயிற்றப்பட்டவர். உங்கள் ஆரம்பகாலத்தில் நீங்;கள் ஒரு கடும் மனித உரிமைப் பாதுகாவலனாக கீர்த்தி பெற்றிருக்கிறீர்கள். இப்போது உங்களுக்குப் பேரும் புகழும் வந்துவிட்டது. படை நடத்திச்சென்று சமராடி ரோமாபுரிக்குத் திரும்பிவரும் ஜூலியஸ்சீஸரைப் போல அதிகாரம் படைத்த மாவீரனாகி விட்டீர்கள். நீங்கள் கேட்பதை மறுப்பவர் இல்லை. சட்டக் கல்லூரியில் படித்தபோது நீங்களும் நானும் கற்றக்கொண்ட சோல்பரி அரசியல் யாப்பின் நீக்கப்பட்ட சரத்துக்களை மீண்டும் அங்கீகரிக்குமாறு பாராளுமன்றத்திடம் கேளுங்கள். என் உதவி வேண்டுமானால் இங்கே குழுமியிருக்கும் அநேகரைப்போல் நானும் இலவசமாகவே அதனைச் செய்து தருவேன்’ என்று ‘ஹயூஸ்டன், டெக்சாஸ் சட்டத்தரணி ஜோர்ஜ் ஆர்.வில்லி அவர்களின் வரவேற்புரை’ என்ற தலைப்பில் அமைந்ததில் குறிப்பிட்டமை என்னை அசத்திப் போட்டது.
இந்த வகையில் பல விடயங்களை விபரிக்கலாம். ஆனால் சுசீந்திரனின் ’சொற்கள் வனையம் உலகம்’ என்ற கட்டுரைக்தொகுதி நாம் எல்லோரும் வாசித்து அறியவேண்டிய பல விடயங்களை தேடல்களோடு அடக்கிய ஒரு முக்கியமான தொகுதியாக அமைந்திருப்பதைக் கூற விரும்புகின்றேன்.
தடங்களில் அலைதல் :
‘வைகறை தெளியும் ஒளிர் நட்சத்திரம் மு.நித்தியானந்தன்’, ‘மலைபோல் குவிந்த நூல்கள்: அருகில் பத்மநாப ஐயர்’, கவிஞர்கள் அ.யேசுராசாவும் உ.வில்வரத்தினமும்’, ‘எடி ஜேக்கூவின் ‘உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர்’, ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’, ‘மிகயில் ஷோலகவ்வின் ‘டான நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது’, ‘ஹைன்றிஷ் பொல்லின் ‘ஒரு கோமாளியின் பார்வைகள்’, ‘முத்தம்மான் பழனிசாமியின் ‘நாடு விட்டு நாடு’, அசோகமித்திரனின் ‘18ஆவது அட்சக்கோடு’, ‘இரண்டாம் இடம் ‘நாவலும் ஜெயபீம் திரைப்படமும்’, ‘ஃபியோடர் தஸ்தாயெவ்ஸ்கியின் ‘சூதாடி’, ‘குறுந்தொகை’, ‘நூல்கள் நூலகங்கள் நூலகர்கள்’, ‘புத்தி பிடிபடுதல்’, ‘மனிதக் காட்சி சாலைகள்’, ‘எரியும் பனிக்காடு’, ‘கல்,கடல், கவிதை பற்றிய சில நினைவுகள்’, ‘குன்ரர் கிறாஸ்’, ‘மறத்தலும் நினைத்தலும்’ ‘லட்சுமி வாத்தியார்’, ‘ஹெப்ஸிபா ஜேசுதாசன்:’புத்தம்வீடு’’, ‘விமானங்களைத் தவறவிடுதல்’, ‘அம்மாவின் தையல் மெஷின்’, ‘என்தாய்’, ‘ஏழு பிள்ளை நல்ல தங்காள்’, ‘தொட்டில்- பழக்கம்’, நீர்க்குமிழி எண்ணங்கள்’, ‘குழந்தைகளின் வலி அறியார்’, ‘கல்வி ஜிப்ரானும் செங்கள்ளுச் சித்தனும்’, ‘மார்ஸிம் கார்க்கியின் ‘வழித்துணை’யில் வரும் ஷாக்ரோ’ போன்ற முற்பது கட்டுரைகளையும் - ‘சபாலிங்கம் ஈழப்போராட்ட முன்னோடிகளில் ஒருவர்’, ‘கலைச்செல்வன் (1960 – 2005)’, ‘தோழர் குமாரசாமி பரராசசிங்கம் (1935 – 2007)’, ‘தமிழ் டைம்ஸ் ராஜநாயகம் (1936 -2022)’, ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ தமிழினியின் கணவன் ஜெயன் தேவா (1961 -2022)’, ‘தோழர் விடியல் சிவா (1955 – 2012)’, ‘பேராசிரியர் தொ.பரமசிவன் (1950 – 2020)’, கவிஞர் முத்துசிவன் முத்தையா சிவலிங்கம் (1943 – 2021)’, ‘சின்னத்துரை பரராசசிங்கம் (1958 -2020)’, ‘திச்நாட்ஹான் (1926 -2022) போன்ற அஞ்சலிக் குறிப்புகளோடு 120 பக்கங்களில் அனைத்தும் அடங்கியுள்ளன.
‘எழுபத்தைந்தாவது அகவையை முன்னிட்டு விமர்சகர் மு நித்தியானந்தன், பத்பநாப ஐயர் பற்றியன நினைவுகளைச் சான்றாக்கிய சிறப்பான கட்டுரைகள். ‘தமிழுகப் புகலிடப் பரப்பில் அவரது வழிகாட்டலிலும் பங்களிப்பிலும் நடைபெற்ற மிகலும் ஆக்கபூர்வமான இலக்கிய அரசியல் நிகழ்ச்சிகள், புத்தக வெளியீடுகள், நூலாக்கங்கள், விமர்சன் அரங்குகள்;, மேடைகள், ஊடகத்துறைசார் ஆக்கங்கங்கள் என்று பலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். குறிப்பாக இலங்கை மலையகத்தில் - மக்கள், வரலாறு, அரசியல், இலக்கியம், போராட்டம் இன்ன பிறவற்றை பிரக்ஞை பூர்வமாக முன் எடுத்துச் செல்பவராக அவர் இன்றும் இருந்துவருகின்றார். அவரை வாழ்த்துவதில் நான் மிகுந்த பெருமை கொள்கின்றேன்’ என்று ‘வைகறை தெளியும் ஒளிர் நட்சத்திரம் மு.நித்தியானந்தன்’ என்ற வாழ்த்து மனங்கொள்ளத் தக்கது.
‘நல்லன எழதுவதல்ல. அவற்றை மக்களிடம் கொண்டு சென்று கொடுப்பதுவே மகத்தான இலக்கிய சேவை என்ற பொருள்பட விலானந்த அடிகள் ஒரு கட்டுரையில் எழுதுகின்றார். இவ்வாறான சிறுதுளிச் சேவைகள் மூலம் இலங்கையின் பல எழுத்தாளர்களின் பெயர்கள், அவர்களது ஆக்கங்கள், இந்தியாவில் இருக்கின்ற சமகாலப் படைப்பாளர்களுக்கு அறிமுகமாகின. அவர்களின் எழுத்துக்களைத் தேடிப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டின...’ இத்தகைய பத்பநாப ஐயர் குறித்த அவரது பணிகளைப்பாராட்டி ‘மலைபோல் குவிந்த நூல்கள்: அருகில் பத்மநாப ஐயர்’ என்ற கட்டுரையில் அலசியிருக்கிறார் சுசீந்திரன்.
‘அம்மாவின் தையல் மெசின்’ சிறிய கட்டுரையாக அமைந்தாலும் அம்மாவின் சீதனமாகிய தையல் மெஷினை சுக்குநூறாக்க முயன்ற தந்தையின் செயலை சுவையாக்கியிருப்பமை அலாதிதான். மனிதர்கள என்பவர்கள் எல்லாச் சுபாவங்களையும் கொண்டவர்கள்தானே!’ இப்படி அவரது கட்டுரைகள் பலதையும் விபரித்துச் செல்லலாம்!...
புகலிட இலக்கியங்களை முன்னெடுத்து, அதில் பங்கேற்றி தமிழகம் உட்பட தமிழ் புகலிட இலக்கியத்தில் பெரும் பங்காற்றியவர் என்ற வகையில் சுசீந்தரனின் இக் கட்டுரைத் தொகுப்புகள் மிகவும் சிறப்பானவை. கட்டுரைகளில் மனித மனங்களின் வக்கிரமும். நெகிழ்வும் செறிந்து நம்மை வந்து தாக்கியபடியே இருக்கின்றன. மனிதர்களை வைத்து பெரும் வியாபாரம் விரிந்து செல்லும் இன்றைய கால கட்டத்தில் மனிதர்களின் அஞ்சலிகளும் யதார்ததமாகி நுட்பமான சித்தரிப்புகளோடு கட்டுரைகளாகி அமைந்துள்யள்ளமை பாராட்டுக்குரியது! யாவரும் வாசித்து பல்வேறு தகவல்களை அறிந்து பயன்பெறவேண்டிய முக்கியமான கட்டுரைத் தொகுதிகள் என்பது என் குரலின் ஓசை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.