இப்போது முருகேசர் முழுவதுமாகவே மாறிவிட்டார். இதை பெரியவன் சபேசன் அவதானிக்காமல் இல்லை.
"அப்பு, இந்த கோப்பிய குடிச்சிட்டு இருங்கோவன்" என மருமகள் செல்வி காலையில் கொண்டு வந்த பால் கோப்பியை ஏறெடுத்தும் பார்க்கமல் "அந்த மேசையில வையுங்கோ பிள்ள" என்று அடித்தொண்டையில் இருந்து ஒரு முனுகலாக பதில் சொல்லிவிட்டு திரும்பிப்படுத்துக் கொண்டார். வழமையாக, கோப்பியின் நறுமணம் மூக்கில் நுழைந்ததுமே, எழுந்து கட்டிலில் உட்கார்ந்து இரு கைகளையும் உரசி சூடேற்றி நாக்கில் ஊறும் உமிழ்நீரை ஒரு மடக்கு விழுங்கி எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் அந்த முருகேசர் எங்குதான் தொலைந்தாரோ? ஆம், மாறித்தான் விட்டார்.
முருகேசர் இப்படி கட்டிலில் முடங்கி தூங்குவதை மகன் சபேசன் அவதானித்தே இருந்தான். அவரின் ஆறடி உடல் இப்படி ஏன் குறுகிக்கொண்டது என அவன் கவலைப்படாமல் இல்லை. அப்பா எந்த கூட்டத்தில் நின்றாலும் அவர் கம்பீரம் அனைவரையும் ஆட்கொள்ளும். ஆனால் அவரின் குரலில் உள்ள பணிவு அவர்களுக்கு ஆச்சரியமே. உருவத்தால் உயர்ந்தவர்கள் உறுமத்தான் வேண்டும் என்பது உலக நியதியா என்ன? ஆலமரத்தில் இருந்து தேங்காயா விழுகிறது?
வந்த வேகத்தில் வார்த்தைகளை தெளித்து விட்டுப் போகும் மனிதரல்ல முருகேசர். ஆழ யோசித்து வார்த்தைகளை அடுக்கி அதன் இடையே பரிவு எனும் வெண்ணை பூசி வாயிலிருந்து விடுவிப்பார் அவர். கேட்போரின் செவிப்பறையை லாவகமாய் தட்டித் திறந்து வார்த்தைகள் பந்தியமைத்து அவர்கள் மனதில் உட்கார்ந்து கொள்ளும். அப்படி ஒரு இங்கிதம் அவரிடம்!
அப்பா றிட்டயர் ஆனதில் இருந்து மூத்தவன் சபேசன் வீட்டின் முன் அறையிலேயே முடங்கிக்கொண்டார். தம் இளவயதில் அம்மாவை இழந்த சபேசனைனையும் சின்னவன் மூர்த்தியையும் அப்பாதானே ஒரு தனியனாய் நின்று வளர்த்துவிட்டவர். ஒரு தனிமனிதனின் ரயில் பயணமாய் பேச்சுத்துணைக்குக் கூட ஒரு ஜீவன் இல்லாமல் அப்பா பல தசாப்தங்களாக பயணித்த அந்த தனி வாழ்வை சபேசன் எண்ணிப் பார்த்து கலங்கியதுண்டு. அம்மா காலமானபோது துக்கம் விசாரிக்க வந்த உறவுகளும் ஊராரும் கைதட்டாமல் சர்க்கஸ் பார்க்க வந்த பார்வையாளர்களாகவே அவனுக்குப்பட்டனர். அவர்கள் அப்பாவிற்கு போர்த்திய சோகப் போர்வைகளை காலம்தான் கழற்றிப்போட்டது.
அம்மாக்களை இழந்த அப்பாக்கள் வாழும் அந்த தனிமை வாழ்க்கை சோகமானது. இரவில் விளக்கை அணைத்தபின் மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் அந்த நாட்களின் முடிவுரைகள் இருளில் மௌனமாகிவிடுகின்றன. பகலின் நிகழ்வுகளின் மீட்டெடுதல் பகிரப்படாமல் குறட்டை ஒலிகளுக்கு இரையாகி மாண்டுவிடுகின்றன. நாளைய பொழுதின் வரவு-செலவு கணிப்புகள் கூட்டல் கழித்தல் இன்றி இருளில் கரைந்துபோகின்றன. வாழ்வின் நினைவுகள் ஒரு பின்னோக்கிப்பாய்ந்த நதியாய் கடந்தகால கனவுகளிலேயே கரைந்துபோகும் சோகங்கள்!
சபேசனும் இதை அறிவான். அதை உணர்ந்து கொள்ளும் போது அவனுக்கு பதினேழு வயது. "அம்மா போயிற்றா மவனே. பயப்படாத,....நான் பாத்துக்குவன்" என்று அவன் தோள்களை பலமாய் இறுக்கிப்பற்றி அப்பா அவனிடம் சொன்ன அந்த ஆறுதல் வார்த்தைகளின் ஆழத்தை நன்கு அறிந்தவன் அவன். இரவுகளை தின்று கண்ணீரில் கைகழுவி நாட்களை நகர்த்திய அந்த முதல் சில வருடங்கள் அவனுக்கு இன்னமும் ஞாபகமுண்டு.
இரவில் திடுக்கிட்டு எழும்பி "அம்மா!" என்று அவன் விக்கித்து வியர்த்து படுக்கையில் அமர்ந்து சூனியத்தைப் பார்த்த கணங்களை அவன் எண்ணிப்பார்ப்பதுண்டு. அப்போதெல்லாம் அப்பா தன் படுக்கையில் இருந்து எழுந்துவந்து அவன் தலையைத் தடவி "என்ன ராசா, கனவு கண்டிட்டியா?...ஒன்றையும் யோசிக்காம படு ராசா" என அவனை ஆறுதல்படுத்தி தூங்கப் போன இரவுகள்தான் எத்தனை?
ஜடாகுவாக சிறகு விரித்து அனைவரையும் அரவணைத்து ஒரு குடும்பமாக எல்லோரையும் பார்த்துக்கொண்ட அப்பா, அம்மாவின் மறைவிற்குப் பின் ஒரு மேய்ப்பரானார். சபேசனையும் சின்னவன் மூர்த்தியையும் வழிநடத்தி பட்டதாரிகளாய் கரையேற்றினார். கணக்காளர் சபேசன், கால்நடை வைத்தியர் மூர்த்தி எனும் தொழில் நாமங்கள் அவர்கள் பெயர்களுக்கு முன்னால் வந்து குந்திக் கொண்டன. ஆங்கில அரிச்சுவடியின் சில எழுத்துக்கள் பட்டங்கள் என்ற பெயரில் அவர்கள் பெயரின் பின்னால் வந்து கொழுவிக்கொண்டன.
ஆண்டுகள் உருண்டோடின. காலக் குடுவையின் சிறு துளையில் உதிரும் மணல் பருக்கைகளாய் நாட்கள் வருடங்களாகி கடந்து போயின. எழுதிச் செல்லும் விதியின் கை எழுதி எழுதிக் கொண்டே போயிற்று.
செல்வி, மருமகளாய், சபேசனின் காலக்கோச்சியில் ஏறிக்கொண்டாள். மூர்த்தி சில ஆண்டுகள் உள் ஊரிலேயே ஒரு கால்நடை பண்ணையில் வேலை பார்த்த பின் ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்தான். கடைக்குட்டி என்பதால் அவனுக்கும் அப்பா முருகேசருக்கும் உள்ள உறவு தனித்துவமானது. மூர்த்தியின் துடுக்குத்தனமும் வென்றுவிடுவேன் என்ற மனத்தென்பும் கொண்ட அவனை அம்மாவின் மறைவு புண்ணாக்கவில்லை. நம்பிக்கை எனும் கம்பளத்தை நான்காய் மடித்து தோளில் சுமப்பவன் அவன். சோதனை வேளையில் அதுவே அவன் மாயக்கம்பளம்.
'கானல் நீரையும் கலனில் அடைத்து விற்றுவிடுவான் மூர்த்தி' என்று நண்பர்கள் வட்டாரத்தில் கேலிப்பெயர் பெற்றவன். "சின்னவன் பிழைத்துக் கொள்வான்" என்ற முருகேசரின் முணுமுணுப்பு பொய்க்கவில்லை.
எப்போதும் அவனை சுற்றி நண்பர்கள் கூட்டம் வாடி அடிக்கும். ஆனால் மூர்த்தியின் ஆஸ்திரேலிய குடிபெயர்வு அவனை ஒரு தனியனாய் ஆளாக்கியது என்பது உண்மையே.
மெல்பேனின் கிப்ஸ்லாண்ட் எனும் பசுமைப் புல்வெளி பிரதேசத்தில் உள்ள ஒரு பால்பண்ணைதான் அவன் வேலைத்தலம். ஆஸ்திரேலியாவின் பசும்பால் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் பிரதேசம் இது. எங்கும் ரம்மியமான பசும்புல்வெளி. அங்கு தனியே மேய்ந்து கொண்டிக்கும் தாய்ப்பசுக்கள். நூற்றுக்கணக்கான பால்பண்ணைகளில் கம்பீரமாய் வானைத்தொடும் ராட்ஷச வெள்ளித் தாங்கிகள். இவற்றுள்தான் கன்றுகளுக்கு மறுக்கப்பட்ட பால் மானுட தேவைக்காய் சேர்த்து வைக்கப்பட்டு சந்தைக்கு வந்துசேரும்.
ஒவ்வொரு வார விடுமுறையிலும் முருகேசர் சின்னவன் மூர்த்தியிடம் இருந்து தொலைபேசி அழைப்பை எதிர்பார்த்து காத்திருப்பார். அந்த அழைப்புகளில் முருகேசு வரிசைகட்டி நிற்கும் வார்த்தைகளை சரவாரியாக கொட்டித்தீர்ப்பார். அவை தொலைபேசியினுள் வழுக்கி விழுந்து மறைந்துபோகும். ஒரு உற்சாகமான உணர்ச்சிக் கச்சேரி அங்கே நடந்து முடியும்.
"அப்பு, இங்க நான் தனிச்சுப்பொயிற்றன்....நம்மட ஊர் பொடியன்கள் யாரும் இந்தப் பக்கத்தில இல்லை..... நீங்க மூன்று மாதமாவது என்னோட வந்து இருக்கலாம்தானே" என்ற மூர்த்தியின் கோரிக்கைக்கு ஒத்து ஊதினான் மூத்தவன் சபேசன்.
மகனின் இந்த அழைப்பு முருகேசருக்கு நல்லதாகவே பட்டது.
29.99 கிலோ பொதியுடன் விமானத்தில் ஏறினார் முருகேசர்!
X. X. X. X. X
மெல்பேர்னின் தை மாத 'சம்மர்' வெயிலிலும் குளிராய் இருந்தது முருகேசருக்கு. மூன்று சுற்று மேலாடைகள் அணிந்து கரடி போல் வலம்வரும் அப்பாவைப்பார்த்து மூர்த்தி வெடித்துச்சிரிப்பான்.
மூன்று அறை, மண்டபம் என விரியும் வீட்டை அவனது பால்பண்ணை நிர்வாகமே அவனுக்கு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தது. மேல்நாட்டு வீடுகளில் சமையலறையை வீட்டின் மத்தியில் அமைத்த விசித்திரத்தை எண்ணி அவர் வியப்பதுண்டு.
மூர்த்தி இப்போது தனக்கு வேண்டிய சோறு கறிகளை தானே சமையல் செய்து உண்ணும் பக்குவத்தை அடைந்திருந்ததால் முருகேசருக்கு ஊர் சாப்பாடு பற்றிய சங்கடங்கள் எழவில்லை.
ஆனால் பொழுதை எப்படி கழிப்பது என்பதே முருகேசரின் முதல் சவால்! அவரின் உலகம் மெதுவாய் சுழல்வதாய் தோன்றிற்று. நாழிகைகள் நத்தையில் ஏறிக்கொண்ட பிரமை !
பண்ணையிலிருந்து பத்து நிமிட கார் பயணத்தில் வீடு வந்து சேர்ந்துவிடுவான் மூர்த்தி. "அப்பு, சும்மா அடஞ்சி கிடக்காம கொஞ்சம் நடந்து திரியுங்கோவன். இங்க மனிசர் நல்லா சிரிச்சி கதைப்பினம்......பயப்பட தேவையில்ல" என தைரியமூட்டியதன் விளைவாக முருகேசரும், மூர்த்தி ஆபீசுக்கு போனதும், ஒரு பொடிநடையாய் அருகில் இருந்த ஒரு மினி ஷொப்பிங் சென்டருக்கு போய் வருவார். அங்கு இருந்த பழக்கடையில் ஆப்பிள்,வாழைப்பழங்களைத்தவிர அவருக்கு வேறு பொருட்களை வாங்குவதில் நாட்டம் இருந்ததில்லை.
சென்டரில் இருந்த ஒரு 'பெட் ஷோப்' எனும் வீட்டு வளர்ப்பு மிருகங்களுக்கு வேண்டிய பண்டங்களை விற்பனை செய்யும் கடைக்கு முன் நின்று தினமும் அங்கு விற்பனைக்கு வைத்திருந்த சடை நாய்குட்டிகளையும் குறும்பு செய்யும் பூனைகளையும் விடுப்புப்பார்க்க அவர் தவறுவதில்லை. இங்கு விஜயம் செய்யும்போதெல்லாம் இக்கடை வாசலில் அரைமணி நேரமாவது நின்று போக அவர் தவறுவதில்லை. உயர்ரக நாய் பூனைகளை நல்ல விலை கொடுத்து வாங்கி வளர்க்கும் வெளிநாட்டாரின் நாட்டத்தை அவர் புரிந்துகொண்டதில்லை. 'என்னை தத்தெடுக்க மாட்டீர்களா?' என்று கண்களால் சொல்லும் அப்பிராணிகளின் முகத்தில் உள்ள ஏக்கம் முருகேசரையும் சோகத்தில் ஆழ்த்தும்.
ஒரு திங்கள் காலையில் தன்னை மறந்து இந்த வாயில்லா ஜீவன்கள் செய்யும் குறும்புத்தனங்களை தன்னை மறந்து லயித்துக் கொண்டிருந்தவரின் கவனத்தை "ஹலோ சேர், குட் மோர்னிங்" என்ற குரல் திரும்பிப்பார்க்க வைத்தது. எழடி உயரமிருக்கும்.... ஆஜாகுவான தேகம்....பசிபிக் தீவுக்காரருக்குரிய சுருள் முடி. பளீர் என வெடித்துக் சிரிக்கும் முகம். சிரிப்பிற்கு குஞ்சம் வைக்கும் குறும் தாடி,
" ஹலோ அலெக்ஸ், ஷொப்பிங்?" என விசாரித்தவாறே முருகேசர் கையை நீட்டி குலுக்கிக்கொண்டார்.
மூர்த்திக்கு எல்லா எடுபிடி வேலைகளையும் செய்வது அலெக்ஸ்தான். மூர்த்தியின் வலது கை..... வாராவாரமும் வீட்டை சுத்தம் செய்வது..... வீட்டைச் சுற்றி புல்வெட்டுவது.... தோட்டவேலை என அலெக்ஸின் பணிப்பட்டியல் நீழும்.
வீட்டுவேலைகள் முடிந்ததும் பிஃரிஜை திறந்து ஒரு 'பீர் கானை' உடைத்து பருகியவாறு ஹாவில் உள்ள கதிரையில் அமர்ந்து மூர்த்தியுடன் கதையளக்கும் உரிமை அவனுக்குண்டு. அவனுக்கு மட்டுமென்ன இங்குள்ள எவருக்கு இந்த சம அந்தஸ்தை இந்த சமூகம் வழங்கியிருப்பதை முருகேசர் நேரில் பார்த்து வியந்திருக்கிறார். செய்யும் தொழிலை சாதியத்துடன் பிணைத்து பின் அதன் பிடியிலிருந்து அவர்களும் அவர்கள் சந்ததியும் விடுபட அதே சமூகத்துடன் மல்லுக்கட்டும் நம் ஊர் சமைத்து வைத்த தார்மீக போர்கள்தான் எத்தனை?
அலெக்ஸ் சின்னவனை 'மூர்த்தி' என்று பெயர் சொல்லி அழைப்பது அவருக்கு ஆரம்பத்தில் அசௌகரியத்தை ஏற்படுத்தியது என்பது உண்மை. பெயர் வைப்பதே சொல்லி அழைக்கத்தான் எனும் ஐரோப்பிய நாகரீகத்தின் முதிர்ச்சியின் நியாயப்படுத்தல் சரியாகவே பட்டது முருகேசருக்கு.
அலெக்ஸை இந்த காலை வேளையில் 'ஷொப்பிங் சென்டரில்' கண்டதில் முருகேசருக்கு ஆச்சரியம் ஒன்றுமில்லை. பிஃஜீ தீவில் இருந்து ஆஸ்திரேலிய அரசின் விசேட தற்காலிக வீசா ஒழுங்குமுறையின் கீழ் வந்தவனே அலெக்ஸ். இங்கு நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிரப்ப வந்தவர்களில் ஒருவன் இவன். பகுதிநேர வேலை செய்வதால் மிகுதிநேரங்களில் ஏதாவது உதிரி வேலைகள் செய்து உழைத்து ஊருக்கு பணம் அனுப்புவது தவறல்லவே?
முருகேசர் ஓய்வுபெற்ற அரச அதிகாரி என்பதால் சரளமான ஆங்கில அறிவு அவருக்குண்டு.
"என்ன இந்த நேரத்தில்? நோ வேர்க் டுடே?'"
"'ஓ! இன்றைக்கு வேலை பதினொரு மணிக்குத்தான் ஆரம்பம்....அதுதான் சில சாமான்கள் வாங்க வந்தேன். அது சரி, ஆர் யூ பிஃறி டுடே,?"
"ஓ! எஸ்....எஸ்.. ஆல்வேய்ஸ்......என்றும் விடுமுறையில்தான் இருக்கிறேன்" என்றார் ஒரு புன்முறுவலுடன்.
"அப்படியானால் என்னுடன் என் வேலைத்தளத்திற்கு வந்து நான் செய்வதை பார்க்கலாமே?"
"ஓகே. வை நொட்?....மூர்த்தி வீடு வருமுன் என்னை கொண்டுவந்து வீட்டில் விட்டால் சரி."
"கூல்......லெட்ஸ் கோ..... வாருங்கள் போவோம்."
இருவரும் ஷொப்பிங் சென்டரை விட்டு வெளியேறி அலெக்ஸ்சின் ஜீப்பில் ஏறிக்கொண்டனர். இரு புறமும் பச்சைபபசேல் என்று செழித்து வளர்ந்திருந்த மேய்ச்சல் வயல்களை ஊடறுத்துச் சென்றது ஜீப். புல் வயல்களில் தனியாக மேய்ந்து கொண்டிருந்த பசுக்கள் அவர் கண்களுக்கு முன் ஒரு ரம்யமான காட்சியை விரித்துப்போட்டது. ஒரு தேர்ந்த ஓவியனால் வரையப்பட்ட வண்ணக்கலவைகளின் ஜாலமாய் தொடுவானம் சிவந்து மினுங்கியது.
ஆஸ்திரேலியாவில் வந்து இறங்கிய நாள் முதலாய் அவரை உறுத்திய அந்த கேள்விக்கு அலெக்ஸ் பதில் தருவான் என்ற நம்பிக்கையில் கேள்வியை தொடுத்தார் முருகேசர்.
"டெல் மி அலெக்ஸ்.....அதோ தூரத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் அந்த பசுக்களைப் பார்த்தாயா? அவை எல்லாம் காளை மாடுகள் அல்ல... கறவை மாடுகள் என மூர்த்தி சொல்லியிருக்கிறான். பார்க்க ஒரு ரம்யமான காட்சிதான். ஆனால் ஒரு கேள்வி: ஏன் இவை தனியாக மேய வேண்டும்..... இவற்றின் கன்றுகள் ஏன் இத்தாய்ப்பசுவுடன் மேயவில்லை. எங்கள் ஊரில் தாய்ப்பசுவை விட்டுப் பிரியாத கன்றை பார்த்த எனக்கு இக்காட்சி கண்ணை உறுத்துகிறது அலெக்ஸ். ஏன் இந்த முரண்பாடு? மூர்த்தியிடம் கேட்டால் மழுப்புகிறான். யூ மஸ்ட் ஆன்சர் மி."
"இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் அதற்கான காரணத்தை சொன்னால் உங்களுக்கு அது அதிர்ச்சியாக இருக்கலாம். தாங்கிக் கொள்வீர்களா?" என்றான் அலேக்ஸ், மிகுந்த பீடிகையுடன்.
பதிலுக்கு காத்திராமல் அலெக்ஸ் தொடர்ந்தான்.
"இங்கு பசுக்களை வளர்ப்பது பால் உற்பத்திக்கு மட்டுமே. எனவே ஒரு பசு கன்று ஈன்றதும் உடனேயே தாயும் கன்றும் பிரிக்கப்பட்டு கன்று வேறாக வளர்க்கப்படும். ஒன்றாக இருந்தால் பால் உற்பத்தியை பாதிக்கும் அல்லவா? இதனாலேயே இந்த ஏற்பாடு. சில தாய்ப்பசுக்கள் பிறந்த கன்றை வைக்கோலால் மூடி பாதுகாத்த கதைகளையும் கேள்விப்பட்டிருக்கிறேன். பிறந்த கன்றை தாய்ப்பசு காணும் முன்னே அங்கிருந்து அகற்றிவிடுவார்களாம். தாய்ப்பசுவின் மௌன விண்ணம்பங்கள் முனுகலாய் பெருமூச்சில் அடங்கிப்போகும். ஒன்பது மாதங்கள் தான் சுமந்த செல்வத்தை ஒரு முறை கூட காணும் பாக்கியத்தை இழந்து நிற்கும் இப்பசுக்களின் வாழ்கை சோகமானது. கன்றுகளுக்காய் சுரக்கும் பால் மனிதனின் வயிற்றை நிரப்புகிறது. பசுவின் பால் சுரத்தல் குறைந்ததும் மீண்டும் செயற்கை முறை கருக்கட்டல் மூலம் இவை கர்ப்பம் தரிக்கும். மீண்டும் அதே வாழ்க்கைச்சக்கரம் சுழல ஆரம்பிக்கும். இவை பசுக்கள் அல்ல - பால் தயாரிக்கும் யந்திரங்கள்! இருபது ஆண்டுகள் வரை வாழக்கூடிய இம்மிருகங்கள் பால் உற்பத்தியில் மந்தநிலையை அடையத்தொடங்கியதுமே ஆறு ஏழு வருடங்களில் அறுவைக்கு அனுப்பிவைக்கப்படும்."
முருகேசருக்கு அலெக்சின் வார்த்தைகள் காதில் புகுந்து நெஞ்சை பிழிந்தன. இந்த வாயில்லா ஜீவன்கள் உலகில் உத்தரிப்பதே குழம்பில் கொதிக்கத்தான் எனும் எண்ணம் அவர் நெஞ்சை கடைந்தெடுத்தது.
அலெக்ஸ் ஒரு சுவாரசியமான கதை சொல்லி போல் சம்பாஷணையை தொடர்ந்தான்.
"பிறந்த கன்று பசுவென்றால் நான் சொன்ன பிரிவுடன் அதன் சோகக்கதை முடிந்தது. அவற்றுக்கு செயற்கை உணவுகளை கொடுத்து சில மாதங்கள் பராமரித்தபின் தனியாக மேய்ச்சலுக்கு அனுப்புவார்கள். ஆனால் பிறந்த கன்று காளையாய் இருந்தால்...." என்று கூறிவிட்டு அலெக்ஸ் முருகேசரின் முகத்தை திரும்பிப்பார்த்தான். அவர் இதயத்தில் விழுந்த கீறல்களின் வடுக்கள் அவர் முகத்தில் இன்னும் பதியாமல் இருந்த கணங்கள் அவை.
அலெக்ஸ் தொடர்ந்தான், "காளைக்கன்றுகள் பால் பண்ணைகளுக்கு ஒரு சுமைதான். அவற்றை மூன்று நான்கு மாதங்கள் பராமரித்த பின் இறைச்சிக்காக விற்றுவிடுவார்கள். இக் கன்றுகளின் மாமிசத்தை ஆங்கிலத்தில் வீல் V..E..A..L..என அழைப்பார்கள். சந்தையில் இதன் மவுசு மிக அதிகம். இக்கன்றுகள் ஓடி ஆடித் திரிந்தால் அவற்றின் தசைகள் அதன் மென்மையை இழந்துவிடும் என்பதால் அவைகளை நெடுங் கயிற்றில் கட்டி வைக்காமல் சங்கிலியால் ஒரு மரக்குத்தியுடன் பிணைத்து விடுவார்கள். ஆம், துள்ளித்திரிய வேண்டிய வயதில் மனிதனின் நாவுக்கு ருசிக்க இந்த அடிமை வாழ்க்கை! மூன்று நான்கு மாதமானதும் பண்ணைகள் இறைச்சிக்கு இவற்றை விற்றுவிடுவார்கள். அறுவைக்கு வரிசைகட்டி நிற்கும் இவற்றின் அழுகுரலையும் அந்த "ம்ம்மா....ம்ம்மா" எனும் இதயத்தை பிழியும் மரண ஓலத்தையும் ஒரு முறை கேட்டால் பல இரவுகளுக்கு தூக்கமே வராது."
இவற்றையெல்லாம் சொல்லி முடித்த பின் வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்த அலெக்ஸ் மெதுவாக திரும்பி முருகேசரை பார்த்தான். முருகேசரின் முகம் கறுத்து வியர்வையால் நனைத்திருந்தது. சில உண்மைகள் உலகிற்கு மறைக்கப்பட்டு இருப்பதே சிறப்பு! அவை வெளிப்படுத்தப்பட்டால் அதை தாங்கிக்கொள்ளும் வைராக்கியம் மனித மனதிற்கில்லை.
"இதெல்லாம் எப்படி அலெக்ஸ் உனக்கு விபரமாய் தெரியும்? உனக்கு பண்ணையில் வேலை பார்த்த அனுவம் உண்டோ?"
"நோ...நோ...நான் இங்குள்ள ஒரு இறைச்சிப்பண்ணையில் பகுதி நேர ஊழியனாக வேலை பார்க்கிறேன். இப்போது நாம் அங்கு தான் போகிறோம். ஐ வாண்ட் டு ஷோ த பிளேஸ்."
முருகேசருக்கு நெஞ்சு அடைத்து இதயத்தை யாரோ கெட்டியாகப் பிடித்து கசக்குவது போல் தோன்றிற்று. அலெக்ஸ் சொன்ன சேதிகள் எல்லாம் அவருக்கு புதியவை. பால் மா டப்பாவில் சிரித்துக் கொண்டிருக்கும் பசுக்களின் வாழ்க்கையின் பின்னே இப்படி ஒரு வேதனை கதை உண்டு என்பதை அவர் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. அவரின் உணர்வுகள் எல்லாம் விறைக்க நாவு மட்டும் விழித்துக்கொண்டது.
"ஐ நீட் சம் ரெஸ்ட் அலெக்ஸ்....நான் எதையும் பார்க்க விரும்பவில்லை. டேக் மி ஹோம்....பிளீஸ்....என்னை வீட்டில் கொண்டு விடு அலெக்ஸ்."
மாமிச மடுவத்தில் வேலை செய்தாலும் அவன் உணர்ச்சிகள் மரத்துப் போகவில்லை. ஒரு தனி மனிதனின் உணர்வுகளை புரிந்து கொள்ள இயலாத ஒரு பித்தன் அல்ல அவன். அவனது பொருளாதார நிலையே இப்படிப்பட்ட இடத்தில் வேலை செய்ய அவனை அனுப்பிவைத்தது. ஆரம்பத்தில் மிருகங்களின் மரண ஓலங்களும் குருதியும் சிறுநீரும் மலமும் அவன் புலன்களை ஆட்கொண்டு அலைக்கழித்தாலும் காலச்சக்கரம் அந்த உணர்வின் கூர்நகங்களை தறித்துப்போட்டது.
இங்கு என்ன நடந்தது என்பதை உணர்ந்த அலெக்ஸ் முருகேசரை மூர்த்தியின் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு மீண்டும் தனது வேலைத்தலத்தை நோக்கி வாகனத்தை திருப்பினான்.
பாவம் முருகேசர். உலக பால் உற்பத்தியில் இந்த நடைமுறைகள் காலம்காலமாக நடந்தேறி வருவதே. என்ன செய்வார் அவர்?அவரால் அந்த சமூகத்தை நோக்கி வாள்சுழற்றி போரிடவா முடியும்?
x x x x x x x
மூன்று மாத வீசாவில் ஆஸ்திரேலியாவிற்கு வந்த முருகேசர் வீடு திரும்பும் நாளும் முடிவில் வந்தது. ஆஸ்திரேலிய ஆரோக்கிய வாழ்வு தந்த எடை நகர்வு சில கிலோக்களாக அவர் உடலில் குடியேறின. மகனுடன் கழித்த நாட்கள் தந்த சுகம் தேயும் முன்னே கப்பலேறினார் முருகேசர். ஆனால் பால்பண்ணை பற்றிய அவரின் அறிவு முதிர்ச்சி அவர் நெஞ்சில் ஆழமான வடுக்களாய், ஒரு வரிக்குதிரையின் ரேகைகளாய், ஒட்டிக்கொண்டன. கடல் கடந்த பின் அவை காலச்சக்கரம் கிழப்பிய புழுதியில் மறைந்துபோகும் என அவர் போட்ட தப்புக்கணக்கை சரி செய்யும் நாளும் வரத்தான் செய்தது.
தன் மருமகள் செல்வி 'உண்டாகியிருக்கிறாள்' என்ற நற்செய்தியை மகன் சபேசன் சொன்னதில் இருந்து முருகேசருக்கு ஒரே குதூகலம். "மகன், மூண்டு நாலு மாதத்திற்கு செல்விக்கு நல்ல சத்தான சாப்பாடுகள் கொடுக்கவேணும் கண்டியோ....தண்ணி கலக்காத நல்ல சுத்தமான பால் கொடுக்கவேணும். எங்களின்ட வயல்காறன் ராசு கிட்ட சொல்லி ஒரு கறவை மாடு ஒண்ட வாங்கி இஞ்ச கட்டி வச்சா நான் பால் கறந்து செல்விக்கு கொடுக்கலாம் கண்டியோ" என்ற முருகேசரின் அலோசனை உதாசீனப்படுத்தப்படவில்லை. வீட்டின் பின்னால் இருந்த கொட்டிலில் ஒரு கறவை மாடும் கன்றும் குடியேறின. முருகேசருக்கு இது ஒன்றும் புதிதல்ல. சபேசனும் மூர்த்தியும் பாலகர்களாய் இருந்த போது மாடு கட்டி பால் கறந்த அனுபவம் முருகேசருக்கு இருந்தது. லக்ஷ்மியும் அதன் காளைக்கன்றும் முருகேசர் வீட்டு அங்கத்தினரானார்கள்.
நாட்கள் நகர்ந்தன.
முருகேசருக்கு பேரன் ரூபனுடன் நாட்கள் கழிந்தன.
"அப்பு, இப்போ ரூபனுக்கும் ஒரு வயசாகப் போகிறது. நீங்க மாட்டோட மல்லுக்கட்டாம இருங்க....வயதும் போகுதில்லையோ? வயல்காறனை மாட்டையும் கண்டையும் ஒரு விலைக்கு எடுக்கச் சொல்லுவம்....என்ன சரியோ?"
"வேண்டாம் மகன், இன்னும் கொஞ்ச நாளைக்கு இருக்கட்டும். இளம் கன்று. நாம இதுகள விற்றுப்போட்டா தாயையும் கன்றையும் பிரிச்சுப்போடுவினம். வாயில்லாத ஜீவன்கள். இஞ்ச இருந்தே கொஞ்சம் வளரட்டும்."
முருகேசரின் சிபாரிசை சபேசன் நிராகரிக்கவில்லை. அவை மீதுள்ள மிகைப்பற்றையும் அவை அவருக்கு அளித்த பரிசுத்தமான மன அமைதியையும் அவன் அறிவான். அந்த நட்பின் அடர்த்தியே அவரை குணமாக்கியது என்பதை அவன் அறிவான்.
முருகேசருக்கு லக்ஷ்மியும் கன்றும் வெறும் கால்நடைகள் அல்ல. அவரின் வேதனை ரணங்களை சொஸ்தப்படுத்திய ஜீவன்கள். அவர் மனதில் கால் மடித்து பீடமிட்டு உட்கார்ந்த சோகங்களை சூனியத்திற்கு தூக்கி எறிந்த பிறவிகள்.
முருகேசர் வீட்டின் பின்னே இருந்த படிக்கட்டால் பின் முற்றத்தில் இறங்கி மெதுவாய் லக்ஷ்மியும் கன்றும் கட்டியிருந்த கொட்டிலை நெருங்கினார். லக்ஷ்மி தன் முன்னால் இருந்த வைக்கோல் கும்பத்தில் முகம் புதைத்து உண்பதில் கண்ணாய் இருந்தது. அதன் கன்று தாயின் மடியை முட்டி மீதமிருந்த பாலை வாயில் நூரை தள்ள ருசித்துக் கொண்டிருந்தது.
முருகேசர் லக்ஷ்மியின் முதுகை மெதுவாக பரிவுடன் தடவிக் கொடுத்தார். அவரின் அன்பின் ஸ்பரிசத்தை அந்த வாயில்லா ஜீவன் உணர்த்து கொண்டது.
அவர் தொடுகையை ஆமோதிப்பதுபோல் லக்ஷ்மி தன் முகத்தை திருப்பி தலையை அசைத்து சிரித்தாள்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.