கலாசாதனா கலைக்கூட நடன ஆசிரியை கவிதாலக்ஷ்மி அவர்களது மாணவிகள் ஹரிணி நகுலேஸ்வரதாஸ், தீபிகா மகேசன் இருவரும் 17.08.2024 அன்று மாலை 5.00 மணிக்கு நோர்வே ஒஸ்லோ Sandvika Teater இல் ‘’தீதும் நன்றும்’’ எனும் தலைப்பில் பரதநாட்டிய அரங்கேற்றத்தை நிகழ்த்தித் தந்தனர். அன்றைய பொழுதைக் கலைப் பொழுதாக்கி கண்களுக்கும் மனதுக்கும் இரசனைப் பொழுதாக அமைத்துத் தந்த ஆடலரசிகள் இருவரும் பாராட்டுதல்களுக்குரியவர்களாவர்.
கூத்தப்பெருமான் அண்டம் முழுவதையும் தனது ஆடல் அரங்காகக் கொண்டு ஆடும் போது உயிரினங்கள் அனைத்தும் சுகம் பெறுகின்றன. அந்த இன்பத்தை ஆடலரசிகள் இருவரும் கண்ணுக்கு முன் கொண்டு வந்தனர்.
குரு ஸ்ரீமதி கவிதாலக்ஷ்மி அவர்கள் பல்துறை சார்ந்த ஆளுமைகளைத் தன்னகத்தே கொண்டவர். பரதக்கலை மீது அவர் கொண்ட ஈடுபாட்டை அர்ப்பணிப்பை அதனை மாணவரிடையே கொண்டு சேர்க்கும் முறையையும் அன்றுஅரங்கில் தரிசிக்க முடிந்தது. கவிதாலக்ஷ்மி நடன ஆசிரியர் மட்டுமல்ல. கவிஞர், விமர்சகர், எழுத்தாளர், தமிழ் புலைமையாளர், ஓவியர் எனப் பன்முகத் திறமை வாய்ந்தவர். ஒரு குருவின் தகுதியும் அதுவே. அதனை நன்னூல் ’கலைபயில் தெளிவும் கட்டுரை வன்மையும்’ வேண்டும் எனக் கூறும். அதாவது பல கலை அறிவும் அதனை மாணவருக்குப் போதிக்கும் வன்மையும் வேண்டுமென்பர். புதுமைகளும் நுட்பங்களும் கட்டுடைப்பும் இந்த அரங்க்கில் சிறப்புப் பெற்றன. தமிழ் பாரம்பரிய முறையில் அமைந்த அரங்கேற்ற நிகழ்வாக அமைந்தமை யாவரையும் கவர்ந்திருந்தது. ஆடையலங்கார நேர்த்தியும் பின்னணி ஒலி ஒளியமைப்பும் இன்னோர் உலகிற்கு எம்மை அழைத்துச் சென்றன. பெண் அர்ச்சகர் சிவாஜினி ராஜன் அவர்கள் தமிழில் பூசை செய்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அரங்கேற்றத்தின் போது இதிகாசக் கதைகளிலே வரும் கதாபாத்திரங்கள் மறு வாசிப்புச் செய்யப்பட்டன. தொன்மக் கதை மாந்தர்களை இது வரை எவ்வாறு பார்த்தோமோ அதனைத் தவிர்த்து , தர்க்கரீதியாக புதிய கோணத்தில் அவர்களது மனநிலையில் நின்று நோக்கியமை அரங்கேற்றத்திற்குக் கனதி சேர்த்தது. பாடல்களை ரூபன் சிவராஜா, உமாபாலன் , கவிதாலக்ஷ்மி ஆகியோர் இயற்றியிருந்தனர்.
குரு தந்த அறிவை அப்படியே உள்வாங்கிக் குருவுக்கும் சபைக்கும் களிப்பையும் பெருமிதத்தையும் தந்த இருவரதும் பாவத்துடன் கூடிய அபிநயங்கள், அடவுகள், நளினத்துடன் அமைந்து பார்ப்போரைப் பரவசப்படுத்தின.
மலர் வணக்கம் தொடக்கம் ஒவ்வொரு உருப்படியும் பேசும் படியாக அமைந்தன. அங்கு புதுமையும் இணைந்தமையால் அரங்கேற்றம் இன்னொரு பரிமாணம் பெற்றிருந்தது. ஹம்சத்வனி ராகத்தில் திருக்குறள் விருத்தம் அமைந்ததுடன் தொடர்ந்து லலிதா ராகத்தில் குறட்பாக்களுக்கு மாணவிகள் அலாரிப்பு நடனமாடினர். தர்மவதி ராகத்தில் அமைந்த கவித்துவத்தில் தாடகை பற்றியும், காமவர்த்தினி ராகத்தில் அமைந்த கதையாடலில் கூனி பற்றியும் , நாட்டக் குறிஞ்சி ராகத்தில் அமைந்த வர்ணத்தில் இராவணன் பற்றியும் பாடல்கள் இடம்பெற்றன.
கம்பன், பாத்திரங்களின் முரண்பாடுகளினூடே கதையினை நகர்த்திச் செல்வான். அங்கு எல்லாப் பாத்திரங்களும் தம்மளவில் நியாயம் கற்பிக்கும். இந்த உத்தியை இங்கும் காண முடிந்தது. அத்துடன் கதாபாத்திரங்கள் முன்னிலைப்படுத்தியதன் காரணமாக ஒரு நாட்டிய நாடகத்தைப் பார்ப்பது போன்ற இரசனையை கலாரசிகர்களுக்குத் தந்திருந்தது.
இடைவேளையைத் தொடர்ந்து, நாட்ட குறிஞ்சியில் சூர்ப்பனகைக்கு அமைந்த பதமும், ராகமாலிகையில் பாஞ்சாலிக்கு அமைந்த பதமும் சிருங்கார ரசம் ததும்ப மாணவிகளால் சிறப்பாக ஆடப்பட்டன.
இறைவைனை இறைவியைப் புகழ்வதாக அமையும் கீர்த்தனையை நாட்டக் குறிஞ்சி ராகத்தில் சகுனிக்கும், வாசந்தி ராகத்தில் சிகண்டிக்கும் அமைத்திருந்தமை ரசனைக்குரியனவாகின. பெஹாக் ராகத்தில் அமைந்த தில்லானா ’தீதும் நன்றும்’ என்ற கணியன் பூங்குன்றனின் செய்யுள் வரிகளைக் கொண்டிருந்தது. நிறைவாக மங்களத்துடன் அரங்கேற்றம் நிறைவுற்றது.
அரங்கேற்றத்தின் போது பக்கவாத்தியக் கலைஞர்களின் இணைவு பேசுபொருளாக இருந்தமை சிறப்புறு விடயமாகும். ஹரிகரன் சுயம்பு அவர்களது வாய்ப்பாட்டு, குழைவும் கம்பீரமும் கலந்து நடனத்துக்கு ஒத்திசைந்திருந்தது. பிரபல்ய மிருதங்க வித்துவான் பிரணவநாதனின் மைந்தன் பிரசாந் அவர்கள், மாணவிகள் இருவரது நடனத்திற்கேற்ப மிருதங்கம் வாசித்திருந்து அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றார். அதிசயன் சுரேஸ் அவர்களது வயலின் பாட்டுக்கும் நடனத்துக்கும் மெருக்கூட்டியது. சௌமியா ராமச்சந்திரனது வீணையின் நாதம் கச்சிதமாகவிருந்தது. இவர்களோடு இணைந்து கவிதாலக்ஷ்மி நட்டுவாங்கம் செய்தமை மிகச் சிறப்பாக அரங்கேற்றத்தை அலங்கரித்தது. நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக இலண்டனில் இருந்து மாதவி சிவலீலன் வருகை தந்த்திருந்தார். நிகழ்வு முழுவதனையும் அழகுற கவிஞர் இளவாலை விஜேந்திரன் கலாசாதனா மாணவிகளுடன் சேர்ந்து தொகுத்து வழங்கினார்.
புலம்பெயர் சூழலில் புதுமையும் தமிழும் இணைந்த அரங்கேற்றங்களைத் தரும் கவிதாலக்ஷ்மிக்கு இந்த அரங்கேற்றமும் மேலும் புத்துணர்ச்சியையும் உத்வேகத்தையும் எப்போதும் தரும். ஹரிணிக்கும் தீபிகாவுக்கும் சிறப்பான வாழ்த்துகள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.