எழுத்தாளர் த. இராஜகோபாலன் (மல்லிகை ஆசிரியர் எழுத்தாளர் டொமினிக் ஜீவாவால் இராஜகோபாலன் மாஸ்டர் என்று அழைக்கப்பட்டவர்) வயது தொண்ணூறுகளைக் கடந்த நிலையில் மறைந்த செய்தியினை அவரது உறவினர் எழுத்தாளர் வதிரி சி ரவீந்திரன் அறியத்தந்தார். இவர் யாழ் இந்துக்கல்லூரி முன்னாள் மாணவர் ராஜா மதியழகன் அவர்களின் தந்தையாரும் கூட.
இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் இவரது படைப்புகள் அதிகமாக வெளிவந்ததா என்பது பற்றி நான் அறியவில்லை. ஆனால் இவரது சிறுகதைகள் சில சுதந்திரனில் ஐம்பதுகளில், அறுபதுகளில் வெளியாகியிருந்தன. 3.3.1967 வெளியான சுதந்திரனில் இவரது 'எங்கே போவேன்' சிறுகதை வெளியாகியுள்ளது. எழுத்தாளர் அ.ந.கந்தசாமி பற்றிய முக்கிய ஆவணச்சிறப்பு மிக்க தகவல்களை உள்ளடக்கிய இவரது கட்டுரையொன்று மல்லிகையின் செப்டம்பர் 1972 இதழில் 'இலக்கிய நினைவு - அமரர் அ.ந.கந்தசாமி' என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது. அ.ந.க பற்றி எங்குமே குறிப்பிடப்பட்டிருக்காத தகவல்களை உள்ளடக்கிய ஆவணச்சிறப்பு மிக்க கட்டுரை.
த.இராஜகோபாலன் குடத்திலிட்ட விளக்காக வாழ்ந்து மறைந்தவர். ஒரு காலத்தில் இவர் சமசமாஜக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்த விபரத்தை இவரை அட்டைப்பட நாயகனாக்கி ஏப்ரல் 2009 வெளிவந்த மல்லிகை சஞ்சிகையில் இவர் பற்றிய எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் கட்டுரை மூலம் அறிய முடிகின்றது.
அந்தக் கட்டுரையில் இவரைப்பற்றிப் பல முக்கிய தகவல்களைக் கூறியுள்ளார் எழுத்தாளர் டொமினிக் ஜீவா. அதில் தன்னையும், எழுத்தாளர் எஸ்.பொ.வையும் கண்டெடுத்து வளர்த்து விட்டவர் இராஜகோபாலன் மாஸ்டரே என்பார் அவர். மேற்படி கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய தகவல்கள் சில வருமாறு:
1. 'ராஜகோபாலன் மாஸ்டரின் நுண்ணிய அவதானிப்பினூடாக எனது வாசிப்புத் தன்மையைப் பன்முகப்படுத்திக்கொண்டேன்.. இன்னுமின்னும் நெருக்கமாக அவரிடம் பழக முற்பட்டேன். எனது வளர்ச்சியில் மிக மிக அக்கறை காட்டினார். அவர்தான் என்னை வாசிக்க மாத்திரமல்ல எழுதவும்ம் ஆரம்பத்தில் கற்றுத்தந்தவர். நண்பர் எஸ்.பொன்னுத்துரையை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தவரும் அவரே தான்.'
2. 'இதுதான் ராஜகோபாலனின் தனிப்பெருஞ்சிறப்பு. மகா திறமைசாலி. ஆட்களை அடையாளங் கண்டு , ஊக்கமூட்டி, அவர்களின் சிறப்புக்களை முன்னெடுத்து வளர்த்தெடுத்ததில் நேரடிச் சாட்சிகளாக நானும் நண்பர் பொன்னுத்துரையும் இன்று இருந்து வருகின்றோம். இவர் பற்றிய தகவல்களை எனது சுய வரலாற்று நூலான 'எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்' புத்தகத்தில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளேன் எனது மல்லிகை வரலாற்று வாழ்க்கையில் நான் இதுவரை எந்தக் காலத்திலும் நினைவு கூர்ந்து வந்திருக்கின்றேன். ஒருவர் தோழர் கார்த்திகேசன். இன்னொருவர் நண்பர் ராஜகோபாலன் மாஸ்டர்.'
இக்கட்டுரையில் தன்னை இராஜகோபாலன் மாஸ்டருக்கு அறிமுகம் செய்து வைத்தவர் பூபாலசிங்கம் புத்தகசாலையின் நிறுவனர் பூபாலசிங்கம் என்றும் ஜீவா அவர்கள் குறிப்பிட்டிருப்பார்.
டொமினிக் ஜீவா அவர்களின் கட்டுரை வெளியான மல்லிகை இதழினை வாசிப்பதற்கான இணைய இணைப்பு - https://noolaham.net/project/410/40911/40911.pdf
இவரது பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளியான படைப்புகள் தேடி எடுக்கப்படுவதும் அவை நூலுருப்பெறுவதும் அவசியம்.
எழுத்தாளர் த.இராஜகோபாலன் (இராஜகோபாலன் மாஸ்டர்) அவரது மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தவர், உறவினர் மற்றும் கலை, இலக்கிய ஆர்வலர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைப் பதிவுகள் சார்பிலும், என் சார்பிலும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.