மிக நீண்டகால வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்க் கவிதை மரபில், கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில், ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர், பாரதி. தமிழுக்குக் கிடைத்த அரும்பெருஞ் சொத்து என்பதை தமிழினம் உணரத்தவறியிருந்த காலத்தினைக் கடந்து, மறைந்துபோன பாரதியை, கற்றோரும் மற்றோரும் இனங்காணக்கூடிய வகையில், சரிவர அறிமுகம் செய்தவர்களில், ஈழத்து அறிஞர்கள் இருவர் முக்கியமானவர்கள். ஒருவர் சுவாமி விபுலானந்த அடிகள்; மற்றவர் பேராசிரியர் கைலாசபதி.
தமிழ்க் கவிதை இலக்கியம் நவீன தமிழ்க் கவிதை எனும் வடிவத்தினைக் கண்டடைந்த போது, அதன் பிதாமகராக இன்றும் நன்றியோடு நினைவுகூரப்படுபவர், திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட, இன்னொரு ஈழத்தவரான ’பிரமிள்’ எனப்படும் அரூப் தர்மு சிவராமு (தருமலிங்கம் சிவராமலிங்கம்).
தமிழ்ப் புதுக் கவிதையினை, ஈழத்தில் பிறிதொரு தளத்தில் நின்று, பரிசோதித்து, வெற்றி கண்டவர், உருத்திரமூர்த்தி என்ற இயற்பெயரைக் கொண்ட மஹாகவி. இவரது வழிநடந்து, கவிதை படைத்து, ஈழத் தமிழ்ப் புதுக்கவிதை மரபின் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்களில் சண்முகம் சிவலிங்கம், நுஃமான், வில்வரத்தினம் ஆகியோர் முக்கியமானவர்கள்.
இன்று, சேரன், ஜெயபாலன் உட்பட, எண்ணிறந்த நவீன தமிழ்க் கவிஞர்கள் பலரும் ஈழத்திலும் சரி, புலம்பெயர் தேசங்களிலும்சரி காத்திரமான ஒரு நவீன தமிழ்க் கவிஞர் பரம்பரையினராகத் தோற்றம் பெறுவதற்கு, இவர்கள் காரணர்களாக அமைந்திருந்தனர் எனத் துணிந்து கூறலாம்.
அதுமட்டுமன்றி, ‘சேரன் இன்றி, நவீன தமிழ்க் கவிதை இல்லை’ என்ற ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிகின்றோம்’ என்பது நமக்கெல்லாம் பெருமை தரும் ஒரு விடயமாகும்.
”ஓர் எழுத்தாளர், புத்தியாளர் எனும் வகையில், சேரனது கவிதைப் பணியின் தொடர்ச்சியான அக்கறைகளாக, பல ஆண்டுகளாக வெளிப்பட்ட கருப் பொருட்களாவன: அவரது மண்ணினதும் - மக்களினதும் தலைவிதி, உள்நாட்டுப் போரின் கொடூரங்களும் வன்முறையும், ஈழவிடுதலைப் போரின் கதை சொல்லப்பட வேண்டும் என்ற நம்பிக்கையும் தொடர்ச்சியான வலியுறுத்தலும் ஆகும்” என்று
- கவிஞர் சேரன் -
சேரனது கவிதைகள் பற்றி ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வு ஒன்றில், சிகாகோ பல்கலைக் கழகத்தின் மானுடவியல் துறைத் தலைவர், பேராசிரியர் ஸாஷா எப்லிங் (Saascha Ebling) குறிப்பிடுகின்றார்.
”ஆயினும் சேரனை வெறுமனே ‘ஒரு போர்க் கவிஞர்’ என்று கருதுவது, அவரைக் குறைத்து மதிப்பிடுவதாக இருக்கும்; அத்தகைய வகைப்படுத்தல் அவரது கவிதை முயற்சிகளின் ஆழ, அகலத்திற்கு நியாயம் செய்யாது; அவர் இலங்கைப் போரின் சாட்சியாக வந்தமைந்த ஒரு கவிஞர்தான். ஆனால், அவரைக் கவிஞராக்கியது, போர் மட்டுல்ல. அவரது பெரும்பாலான கவிதைகள், பாரிய மனிதப் பிரச்சினைகள் - மானுட வாழ்க்கையினதும், நாகரிகத்தினதும் விழுமியங்கள் என்பவற்றுடன் – அன்பு, நெருக்கமான உறவு என்பவற்றிலும் கரிசனை காட்டுகின்றன எனவும், அவரது கவிதைகளில் வெளிப்படும் மிக முக்கியமான, கருப்பொருட்களான: காதல், வன்செயல், இலங்கையில் யுத்தம், கடல் போன்றனவும் அவற்றுள் அடங்கும்” எனவும் பேராசிரியர் பேராசிரியர் எப்லிங் கூறுகின்றார்.
மேலும் எழுத்தாளர், சுந்தரராமசாமி ”சேரனது கவிதைகளில் ஆண்களையும் பெண்களையும் நாம் அடிக்கடி காண்கின்றோம். ஆனால் அவர்கள் அனைவரும் மறைக்கப்பட்டும், நிழற் படமாக்கப்பட்டும் உள்ளார்கள். அவற்றை வெளிக்கொணர எங்களால் முடிந்தவரை நாங்கள் முயற்சி செய்கின்றோம், ஆனால் அது எங்களால் முடியாது. அந்த முயற்சியில் நாங்கள் விரக்தியடைகின்றோம். அந்த விரக்தியே ஒரு கவிஞரின் மாபெரும் வெற்றி” என, சேரனின் கவிதைகள் குறித்து, தமது கட்டுரை ஒன்றில் கூறுகின்றார்.
இவ்வாறாக, சேரனது கவிதைகள் பற்றி, ஏனைய கவிஞர்கள், கல்வியாளர்கள், புத்தியாளர்கள், விமர்சகர்கள் போன்ற பெருந்தொகையானோர் சொன்ன கருத்துகள் ஏராளம் உண்டு. அவையனைத்தையும் பகிர்ந்துகொள்ள, எனக்கெனத் தரப்பட்ட காலமும் களமும் இடந்தர மாட்டா. இருப்பினும், மிக முக்கியமான இன்னொருவரது வாக்குமூலத்தினையும் உங்களோடு பகிர்ந்துகொள்ளல் பயன்தரும் என நான் நம்புகிறேன்.இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில், அந்த இன்னொருவர் எழுதிய கவிதைத் திரட்டு ஒன்றில் இது வெளிவந்திருந்தது.
அதற்கு முன்னர், நண்பர் காலம் செல்வம் அவர்கள் 99ஆம் ஆண்டு வெளியிட்ட 12ஆவது காலம் இதழின் 55ஆம் பக்கத்திலும் காணப்படும் ஒரு கவிதையாகும்; ”கவிதை பற்றிய காதலர்களின் உரையாடலின் ஒருபகுதி.” இதில், காதலி கேட்கின்றாள் –
”உனது கவிதையைப்பற்றிக் கேட்கலாமல்லவா?
இப்போது உனது கவிதையின் இயல்பு என்ன? இலக்கு என்ன?”
காதலன் கூறுகின்றான் –
”எனது கவிதை சிக்கலற்றது
ஆழமான உணர்ச்சிச் சுழிப்புகளில் அது
தன்னுடைய ஆழத்தை இழக்கவில்லை
அதற்குப் பல அர்த்தங்கள் கிடையாது
நான் எல்லா நேரங்களிலும் அதனை எழுதிவிடலாம்
அது தயக்கமற்றது; துணிவில் உரம் பெறுவது
பாடபேதம் அற்றது
அதனைப் பக்கம் பக்கமாக எழுதிவிடத் தேவையில்லை
மலைக்கும் கடலுக்கும் அது உறவற்றது
காற்றைப் புணராதது
நீ கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும் –
சில சிக்கலானவை, சில நகைப்புக்கிடமானவை
சில என் இருப்பையே குலைப்பன
சில ஒருவருக்குமே புரியாதவை
சில பொறாமையால் விளைவன
சில என்னைப் புறம் காண்பவை
அது தரும் மறுமொழி: ஒரு மெல்லிய முறுவல்
என்றாலும்
அதன் ஆயிரக் கணக்கான வார்த்தைகளையும்
எண்ணற்ற படிமங்களையும்
அளவற்ற சந்தத்தையும்
எல்லாவற்றிற்கும் மேலாக, அதன் பொழிப்பையும்
நான் உனக்குத் தரமுடியும்:
உன் நேசத்தில் உருகும் என் நெஞ்சு”
என்று முடிவடைகின்ற கவிதை, அது.
இது வேறுயாரும் எழுதிய கவிதையல்ல - சேரன் தொண்ணூறுகளில் எழுதிய கவிதை. இக்கவிதையிலிருந்து இரண்டு முக்கிய விடயங்களை ஊகிக்க முடிகின்றது.
முதலாவது, சேரன் மீதும் அவரது கவிதைகள் மீதும் அவ்வப்போது முன்வைக்கப்படும் விமர்சனங்களையும், கண்டனங்களையும் கடந்துசெல்லவென, பொதுவாகவே அவர் பயன்படுத்தும் அந்தப் புன்முறுவல் அல்லது புன்னகை;
இரண்டாவது, அத்தகைய விமர்சனங்கள், கண்டனங்களுக்கும் மத்தியிலும், தமது கவிதைகள் மீதான அவரது தன்னம்பிக்கையுடன் கூடிய சுயமதிப்பீடு.
மொத்தம் 102 கவிதைகளை உள்ளடக்கியிருக்கும் ’காஞ்சி’ என்ற இக்கவிதைத் திரட்டின் முதலாவது கவிதை, கடைசிக் கவிதை என்பன உட்பட,
ஆங்காங்கே பல கவிதைகளும் கவிஞரின் புன்னகையையே காவலரண்களாகக் காவி வந்துள்ளன. உதாரணமாக ஒரு கவிதை -
பார்சிலோனாவில் ஒரு சிறிய அழகிய
புத்தக நிலையம்
கவிதை நிகழ்த்திய பின்
இறங்குகிறேன்.
காலடி தளர்கிறது.
“உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?”
மூன்று ஆண்டுகள் முன்பு என்பதால்
கேட்டவரின் முகம் முற்றாக நினைவில் இல்லை
அவரின் வாசனை மட்டும் தெரியும் –
”கேளுங்கோ”
இவ்வளவு அவலம்,
இனப்படுகொலை,
சொற்கள் தாங்காத துயரம்
இவற்றின் நடுவே
எங்கிருந்து வருகிறது புன்சிரிப்பு?
ஆமாம் ….. ஆயிரம் வலிகளை உள்ளடக்கியவாறு, நகைத்துக்கொண்டே நகர்வது அவ்வளவு எளிதல்ல. இன்னல்களையும் இழிமொழிகளையும் புன்னகையுடன் கடந்து செல்ல, நண்பர் சேரன் எப்படிப் பழகிக்கொண்டுள்ளார் என நான் அடிக்கடி எண்ணி வியப்பதுண்டு. உண்மையில் பிறரைக் காயப்படுத்தாத புன்னகையும், தன் காயத்தை மறைக்கும் புன்னகையும் பேரழகுதான்!
அதேவேளை, சேரனின் கவிதைகளிலும்சரி, தனிப்பட்ட வாழ்விலும்சரி, இப்புன்னகையே அவரது பலமும் பலவீனமும் என, சில தருணங்களில் நான் எண்ணுவதுண்டு!
புதுக்கவிதையின் பிதாமகர் என மதிக்கப்பட்டு வரும் எஸ்ரா பவுண்டு, புதுக்கவிதையின் 4 பொதுத்தன்மைகளைச் சொல்லி வைத்திருக்கின்றார். அதில் ஒன்று படிமங்களைப் பயன்படுத்தல். ஆனால் கவிதைகளிலும் சரி, கட்டுரைகளிலும் சரி, இப்போதெல்லாம் வலிந்து புகுத்தப்படும் இப்படிமங்கள் கடைச்சரக்காக மலிந்துபோய், நாறிக் கிடக்கின்றன.
இதனையே சேரன் தனது ’மொழி’ என்ற 42ஆவது கவிதையில் -
இதுவரையும் நான் அறியாத சொல்
எனக்குச் சொல்லியது
படிமத்தால் என்னைக் கொல்லாதே
மொழிக்குத் திரும்பு
’மொழி’
மனமும் மொழியும் உச்சநிலையைச் சென்றடைவதுதான் கவித்துவம். கவிதைக்கு அடிப்படை வளமாகவும் வாகனமாகவும் இருப்பது மொழி. எனவே ‘மொழிக்குத் திரும்பு’ எனச் சேரன் கூறுவதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?
இதைக்கூட, நவீன கவிதையினது படிமுறை வளர்ச்சியின், இன்னோர் படிநிலை எனலாமல்லவா?
இனி, இந்த நூலின் 3ஆவது கவிதையிது –
கார்த்திகை
எந்தத் தீப்பெட்டியாலும்
எல்லா நெருப்புப் பொறிகளாலும்
ஏற்றிவைக்க முடியாத ஒரு விளக்கை
அம்மா கடவுளிடம் கொண்டு சென்றாள்
அவர் சொன்னார்:
மகளே,
குருதியில் எரியும் கனவுக்கு
விளக்கேற்ற வேண்டாம்;
இறப்பும் நினைவும் ஒளியில் அல்ல
’அறத்தில்’
என் இதயத்தை வருடிச் சென்ற இன்னொரு கவிதையிது; இந்த நூலின் 17ஆவது கவிதை - படையாள் பாடல் -1
வீழும் மலர்களின் இதழ்கள் எல்லாம் நிலத்துக்கு
ஒன்று மட்டும் தனித்துப் பறக்கிறது
அதுதான்
சாவின் மணத்தைக் காவிச் செல்லும்
காற்றின் குரலோசை
இவ்வாறக, ’காஞ்சி’ சேரனின் 102 பிற்காலக் கவிதைகளை 147 பக்கங்களுக்குள் உள்ளடக்கியிருக்கும் நூல்; சுமார் 2 மணி நேரத்துள் படித்து முடிக்கக்கூடிய நூல்; முடித்தபின் மீண்டு மீண்டும் படிக்கவேண்டுமென்ற ஆவலைத் தூண்டும் நூல்.
இந்நூல் தரும் அழகியல் விழுமியங்களும் மகிழ்வின்பமும், அலாதியானவ.
பசுவையா எனும் பெயரில் சுந்தரராமசாமி, முன்னர் ஒருமுறை தமது கவிதை ஒன்றின் வழியாக -
‘எழுது
உன் கவிதையை நீ எழுது
உன் காதல் பற்றி
கோபங்கள் பற்றி
உன் ரகசிய ஆசைகள் பற்றி…. ’
என விடுத்திருந்த வேண்டுகோள் போல,
சேரன் தனது சொந்த அனுபவங்களையும், கதைகளையும், கற்பனைகளையும், காதல்களையும் மோதல்களையும், மோகங்களையும் கோப-தாபங்களையும், உறவுகளையும் பிரிவுகளையும் நாம் இதுவரை கண்டும் கேட்டும் அறியாத ஏனைய பல புதிய கருப்பொருட்களையும் கூட –
மிகுந்த தன்னம்பிக்கையுடனும் சுயமதிப்பீட்டுடனும், புதுமையான உத்திமுறைகளைப் பயன்படுத்தி, இத்திரட்டினைக் ’காஞ்சி’ என்ற பேரில் எமக்கு ஆக்கி அளித்திருக்கின்றார்.
சேரனின் கவிதை நூல்களென, இரண்டாவது சூரிய உதயம், யமன், கானல் வரி, எலும்புக்கூடுகளின் ஊர்வலம், எரிந்துகொண்டிருக்கும் நேரம், நீ இப்பொழுது இறங்கும் ஆறு, மீண்டும் கடலுக்கு, காடாற்று என 8 நூல்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. இது அவரது 9ஆவது நூலென நம்புகிறேன்.
அவரது கவிதைகள், சிங்களம், கன்னடம், மலையாளம், ஸ்வீடிஷ், டென்னிஷ், ஜேர்மன் டொட்ஜ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. நானறிந்தவரை, சுமார் 7க்கும் மேற்பட்ட வேற்று மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட தமிழ்க் கவிதைகளின் சொந்தக்காரன் சேரனாகவே இருக்க முடியும்.
சேரன் தமிழ் இனத்துக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் மட்டுமல்ல – முழு உலகுக்கும் கிடைக்கப்பெற்ற ஒரு விலை மதிப்பற்ற சொத்து எனக் கூறுவதில், எனக்கு எவ்வித தயக்கமும் கிடையாது!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.