- எழுத்தாளர் அ.கந்தசாமி ('கந்தசாமி மாஸ்டர்') -
நான் க.பொ.த (உயர்தரம்) பெளதிகம் பாடம் ஒன்றைத்தான் முழுமையாக டியூசன் சென்று படித்திருக்கின்றேன். டியூசன் மாஸ்டர் கந்தசாமி மாஸ்டர்தான். அவருக்கு இன்று பிறந்தநாள் என்பதை முகநூல் அறிவித்தது. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
இவரது டியூசன் வகுப்புகள் பற்றி நான் முதன் முறையாக அறிந்தது என் ஒன்று விட்ட அக்கா ஒருத்தி மூலம். அவர் சில வருடங்களுக்கு முன்னர் கனடாவில் மறைந்து விட்டார். மீனா என்றழைப்பார்கள். சிறந்த ஓவியர்.அப்போது ஆச்சி வீட்டில் தங்கியிருந்து யாழ் இந்துவில் படித்துக்கொண்டிருந்தேன். அக்காவும் , சிநேகிதிகளும் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து க.பொ.த (சாதாரண தரம்) பாடங்களுக்காக கந்தசாமி மாஸ்டரின் டியூசன் வகுப்புகளுக்குச் செல்வார்கள். அக்காலகட்டத்தில் யாழ் நகரில் புகழ்பெற்று விளங்கிய டியூசன் சென்ரர்களில் கந்தசாமி மாஸ்டரின் டியூசன் சென்ரரும் ஒன்று.
பின்னர் புகழ் பெற்று விளங்கிய 'பொன்ட் மாஸ்டர்' (இவரது இயற்பெயர் கனகசபை ஆனந்தகுமார்) கந்தசாமி மாஸ்டரின் டியூசன் சென்ரரில் க.பொ.த(சாதாரண தரம்) இரசாயன மாஸ்ட்டராகவிருந்தவர்.
நான் க.பொ.த (உயர்தரம்) படித்துக்கொண்டிருந்தபோது கந்தசாமி மாஸ்டரிடமே பெளதிகம் பாடத்துக்காக டியூசன் எடுத்தேன். அங்குதான் கணிதப் பாடத்துக்கான மீட்டல் வகுப்பையும் சிவஞானசுந்தரம் மாஸ்டரிடம் எடுத்தேன். எப்பொழுதும் மாணவர்கள் நிரம்பி வழியும் டியூசன் சென்ரராக விளங்கியது மாஸ்டரின் டியூசன் சென்ரர்.
இவரது டியூசன் சென்ரரை நினைத்தால் எனக்கு இன்னுமொருவர் நினைவும் வரும். அவரது பெயர் ஃபிளின்ட் என்று பெயர். இயற்பெயர் தெரியவில்லை. கணிதத்தில் புலி. ஆனால் ஏனைய பாடங்களில் அவர் கவனம் எடுக்கவில்லை என்று கூறுவர். டெனிம் ஜீனஸ் அணிந்து நடிகர் ஒருவரைப்போல் தெரிவார். அவரிடமும் பலர் கணிதப் பாடங்கள் எடுத்தனர். ஆனால் நான் எடுக்கவில்லை. அவரைப்பற்றிக் கேள்விப்பட்டதுடன் சரி.
நகரில் அவ்வப்போது சிரித்த முகத்துடன் ஸ்கூட்டரில் வரும் கந்தசாமி மாஸ்டரின் முகம் நினைவில் நிற்கிறது. சேர்ட்டின் மேற்பகுதி , பட்டன்கள் போடாமல் திறந்து நிற்கும். அதனூடு தங்கச் சங்கிலி தெரியும், காற்றில் சுருண்ட தலை மயிர் சிலிர்த்து நிற்க அவர் ஸ்கூட்டரில் பவனி வருவார்.
அப்போது அவர் ஓர் எழுத்தாளர் என்னும் விடயமே எனக்குத் தெரியாது. கனடா வந்த பின்பே எழுத்தாளர் அ.கந்தசாமி அவர் என்று அறிந்து பிரமித்தேன். சிறுகதை, கவிதை, நாவல், விமர்சனம், நடிப்பு என அவரது கலை, இலக்கியப் பங்களிப்பு பரந்தது. அவரது தொடர் நாவல்கள் டி.பி.எஸ்.ஜெயராஜ் ஆசிரியராகவிருந்த செந்தாமரை, மஞ்சரி பத்திரிகைகளில் வெளியாகின. அவரது ஒரு காலப்படைப்புகள் என்னும் வகையில் , கனடாவில் வெளியான ஆரம்பக் காலத்து நாவல்கள் என்னும் வகையில் அவை முக்கியத்துவம் மிக்கவை. அக்காரணங்களுக்காகவே அவை நூலுருப் பெற வேண்டியவை என்பது என் கருத்து. அண்மைக்காலமாக மீண்டும் சிறந்த சிறுகதைகளை 'தாய் வீடு' பத்திரிகையில் எழுதி வருகின்றார்.
இவர் ஆசிரியராகவிருந்து வெளியிட்ட ழகரம் சஞ்சிகை கனடாத் தமிழ் இலக்கியத்க்கு வளம் சேர்த்த முக்கியமான சஞ்சிகைகளில் ஒன்று.
கனடாத் தமிழ் இலக்கியத்தில், புகலிடத் தமிழ் இலக்கியத்தில் அவரது எழுத்துகள் முக்கியமானவை. எஸ்.பொ, இந்திரா பார்த்தசாரதி தொகுத்த 'பனியும் பனையும்' சிறுகதைத் தொகுப்பிலும் இவரது சிறுகதையான 'விடிவு தூரத்தில்' இடம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் இருந்த காலத்திலும் அறுபதுகளில் இருந்தே எழுதி வந்திருக்கின்றார் என்பதும் முக்கியமானது.
கந்தசாமி மாஸ்டர் சிறந்த நடிகரும் கூட. கனடாவில் தேடகம் அமைப்பினரின் ஏற்பாட்டில், 'காலம்' செல்வத்தின் இயக்கத்தில் மேடையேற்றப்பட்ட 'நிரபராதிகளின் காலம்' நாடகத்திலும் இவர் நடித்திருக்கின்றார். சிறந்த குரல் வளம் மிக்க இவர் சிறந்த மேடைப் பேச்சாளரும் கூட. உவமைகள்.. படிமங்கள் செறிந்த உரைகளை ஆற்றுவதில் வல்லவர் இவர்.
இதுவரை இவரது கவிதைகள் இரு தொகுப்புகளாக வெளியாகியுள்ளன.
1. கானல்நீர்க் கனவுகள் - நான்காவது பரிமாண வெளியீடு (1994) - வாசிக்க
2. காலத்தின் பதிவுகள் - அ.கந்தசாமி, ரதன் & மலையன்பன் (ஆர்.என்.லோகேந்திரலிங்கம்) (மூன்று கவிஞர்களின் தொகுப்பு) (1991) இத்தொகுப்பை வெளியிட்டவர் எழுத்தாளர் ரதன் (எம்.ரகுநாதன்). இந்நூலின் வடிவமைப்பைச் செய்தவர் 'தாயகம்' ஜோர்ஜ் இ.குருஷேவ். கனடாவில் கந்தசாமி மாஸ்டரின் எழுத்துகள் முதலில் வெளியானது 'தாயகம்' பத்திரிகை/சஞ்சிகையில்தான். அதில் வெளியான கவிதைகளே மேற்படி 'காலத்தின் பதிவுகள் 'தொகுப்பிலும் உள்ளடங்கியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. நூலை வாசிக்க
3. ழகரம் சஞ்சிகைப் பிரதிகளை வாசிக்க
இன்னுமொரு விடயத்துக்காகவும் இவரை நான் நன்றியுடன் நினைவு கூர்வதுண்டு. தேடகம் அமைப்பினர் எனது 'அமெரிக்கா' தொகுப்புக்கான விமர்சன நிகழ்வை நடத்தியபோது அதில் நூல் பற்றிய விமர்சனக் கட்டுரைகளை வாசித்தவர்களில் ஒருவர் கந்தசாமி மாஸ்டர்.
மீண்டும் ஒரு முறை என் அபிமான டியூசன் மாஸ்டர்களில் ஒருவரும், எழுத்தாளருமான அ.கந்தசாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.