நூல் அறிமுகம்: எஸ்.ரி.ஆர் - நினைத்ததை முடித்தவர்! - நவரத்தினம் கிரிதரன் -
2021இல் யாழ் ராஜா திரையரங்கு உரிமையாளர் எஸ்.தியாகராஜா மறைந்தபோது நான் முகநூலில் 'நாங்கள் அறிந்த 'சுப்பர் ஸ்டார்' - எஸ்.ரி.ஆர் . என்றொரு பதிவிட்டிருந்தேன். எம் பதின்ம வாழ்க்கையில் பின்னிப்பிணைந்த ஆளுமை எஸ்.ரி.ஆர். ஏனைய திரையரங்கு உரிமையாளர்களின் பெயர்களையெல்லாம் நினைவில் வைத்திருக்காத எம் நினைவில் நிற்பவர் எஸ்.ரி.ஆர். எஸ்.ரி.ஆர் என்றால் முதலில் நினைவுக்கு வருவது ராஜா திரையரங்கும், அதன் காவல்காரன் 'கட் அவுட்'டும்தாம்.
தற்போது எஸ்.ரி.ஆர் - நினைத்ததை முடித்தவர்' என்னும் தலைப்பில் அவரது வாழ்க்கையை , சாதனைகளை நினைவு கூரும் நூல் வெளியாகியுள்ளது. மேற்படி நூல் எனது மேற்படி கட்டுரையினையும் உள்ளடக்கி வெளியாகியுள்ளது. மகிழ்ச்சி.
நூல் இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை. கிடைத்ததும் அது பற்றிய என் கருத்துகளைப் பதிவு செய்வேன். நூல் சிறப்பான வடிவமைப்புடன் வெளியாகியிருப்பதைக் காண முடிகின்றது. இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான எஸ்.ரி.ஆர் பற்றிய இந்நூல் அவரை நினைவு கூரும் முக்கியமானதோர் ஆவணம். நூலை வெளியிட்ட அவரது குடும்பத்தினருக்கு வாழ்த்துகள்.
இவர் அரசியலில் பதவி நாட்டமில்லாதவரென்று நினைக்கின்றேன். இருந்திருந்தால் மிகவும் இலகுவாக பாராளுமன்ற உறுப்பினராக இவர் வந்திருக்க முடியும். முக்கிய தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவராக மிளிர்ந்திருக்க முடியும். அரசியலில் ஒளிர்வதற்கு இவரது வசீகர முகவாகும், ஆளுமையும் உதவியிருக்கும்.