தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (13) - நானொரு காலவெளிக்காட்டி வல்லுனன்! - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் 13 - நானொரு காலவெளிக்காட்டி வல்லுனன்!
காலவெளிப் பிரபஞ்சம் பற்றிய கண்ணம்மாவுடனான எனது உரையாடல் தொடர்ந்துகொண்டிருந்தது. இயற்கையை இரசிப்பதில் எனக்கு நேரம் தெரிவதில்லை. நல்ல இலக்கியப் படைப்புகளைப் படிப்பதில் எனக்கு நேரம் தெரிவதில்லை. இருப்பு பற்றிய அறிவியல் பூர்வமான உரையாடல்களிலும் எனக்கு நேரம் தெரிவதில்லை. கண்ணம்மாவுடன் இப்பொழுது நடத்திக்கொண்டிருக்கும் உரையாடலும் இத்தகையதொன்றுதான். இந்த விடயத்தில் அவளும் என் அலைவரிசையில் இருந்தாள். அது எனக்குச் சாதகமாக அமைந்து விட்டது. இவை போன்ற உரையாடல்கள் இல்லையென்றால் இருப்பில் என்ன அர்த்தமிருக்க முடியுமென்றும் சிந்திப்பதுண்டு. அதனால் இவற்றை எப்பொழுதும் வரவேற்பவன். பங்குகொள்பவன்.
கண்ணம்மாவே மிகுந்த ஆர்வத்துடன் தொடர்ந்து இக்கேள்வியினைக் கேட்டாள்:
"கண்ணா, காலவெளிச் சட்டங்களால் ஆன இப்பிரபஞ்சம் பல படத்துண்டுகளால் ஆன திரைச்சித்திரம் போன்ற காலவெளிச் சித்திரம் என்று கூறினாய் அல்லவா?"
"ஓம். கூறினேன் கண்ணம்மா. அதற்கென்ன?"
"கண்ணா, திரைப்படச் சுருளை நாம் முன்னோக்கி இயக்கலாம். அல்லது பின்னோக்கி இயக்கலாம். இல்லையா என் செல்லக்கண்ணா?"
"உண்மைதான் கண்ணம்மா. நீ சொல்வது முற்றிலும் சரியானதுதான் கண்ணம்மா."
''அப்படியென்றால் காலவெளிச் சட்டங்களால் ஆன காலவெளிச்சித்திரமான நம் இருப்பை உள்ளடக்கிய சித்திரத்தின் துண்டுகளான காலவெளித் துண்டுகளையும் முன்னோக்கி அல்லது பின்னோக்கி இயக்குவதற்கான சாத்தியங்கள் எவையாயினுமுண்டா கண்ணா?''
மனோரஞ்சிதத்தின் , என் கண்ணம்மாவின் இக்கேள்வி என்னை உண்மையில் மிகுந்த பிரமிப்புக்குள்ளாக்கியது. அப்பிரமிப்புடன் அவளை நோக்கினேன். அவளது இக்கேள்வி மிகவும் சாதாரணமானதொரு கேள்வியாகப் பலருக்கும் தென்படக்கூடும். மாங்காய் கீழே விழுவது ஏன் என்று நியூட்டன் கேட்ட கேள்வியும் பலருக்கும் இப்படித்தான் மிகவும் சாதாரணமானதொன்றாகத் தென்பட்டிருக்கும். ஆனால் அவருக்கு அது நவீன அறிவியல் துறையில் மிகுந்த புவியீர்ப்பு பற்றி மிகுந்த பாய்ச்சலை ஏற்படுத்திய சிந்தனைக்கான கேள்வி.
"கண்ணம்மா, உண்மையைச் சொல். இதுவரையில் உபநிடதங்கள் போன்ற சமயத் தத்துவ நூல்களில்தான் நீ நாட்டமுள்ளதாக நினைத்திருந்தேன். ஆனால் இக்கேள்வியைப் பார்க்கையில் நீ யாராவது நவீன வானியற்பியல் அறிஞர்களின் நூல்களையும் படித்திருப்பாயோ என்னுமொரு சந்தேகத்தையும் ஏற்படுத்திகிறதடி. அப்படி எவற்றையாவது படித்திருக்கிறாயா கண்ணம்மா?"
"இல்லை கண்ணா, அவற்றை நான் படித்ததில்லை. அவை பற்றி நீ கூறுவதை மட்டுமே கேட்டிருகின்றேன். ஆனால் இந்தக் கேள்வியை மிகவும் சாதாரணமாகத்தான் கேட்டேன். திரைப்படச் சுருளுடன் நீ இப்பிரபஞ்சத்தை ஒப்பிட்டதனால் மிகவும் இயல்பாக எனக்குள் எழுந்த கேள்வி அது கண்ணா. அவ்வளவுதான்."
"கண்ணம்மா இதற்கான எனது பதிலை அல்லது சிந்தனையைக் கூறுவதற்கு முன் இன்னுமொரு விடயத்தைப்பற்றியும் கூற வேண்டுமென்று நினைக்கின்றேன்."
"என்ன நினைக்கின்றாய் கண்ணா? என்ன நினைக்கின்றாயோ அதைக் கூறு கண்ணா?"