ஜீவநதியின் சிற்றிதழ்கள் சிறப்பிதழ் 175: இலக்கு, கலைச்செல்வி பற்றிய கட்டுரைகள்! - வ.ந.கிரிதரன் -
'கலைச்செல்வி' சஞ்சிகையும் அதன் இலக்கியப் பங்களிப்பும்!
கலைச்செல்வி சஞ்சிகையின் ஆரம்பமும், நோக்கங்களும் பற்றி.....
இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த முக்கியமான சஞ்சிகைகளிலொன்று 'கலைச்செல்வி'. இச் சஞ்சிகை எழுத்தாளர் சிற்பி (சிவசரவணபவன்) அவர்களை ஆசிரியராகக்கொண்டு ஆடி 1958இலிருந்து வெளியானது.
'புதிய சொல' சஞ்சிகையின் , ஜனவரி-மார்ச் 2016 வெளியான, முதலாவது இதழில் எழுத்தாளர் அருண்மொழிவர்மன் எழுதிய 'கலைச்செல்வி' பற்றிய கட்டுரையில் முதலாவது கலைச்செல்வி இதழ் ஆகஸ்ட் 1958 வெளியானதாகக் குறிப்பிட்டிருந்தாலும், அதன் முதலாவது இதழ் ஆடி 1958 வெளியானது என்பதை 'நூலகம்' தளத்திலுள்ள ஆடி 1958 இதழிலிருந்து அறிய முடிகின்றது. 1966 வரை வெளியான சஞ்சிகை. அக்காலகட்டத்தில் அதன் 70 இதழ்கள் வெளிவந்துள்ளதாக எழுத்தாளர் அருண்மொழிவர்மன் கலைச்செல்வி பற்றிய 'புதிய சொல்' இதழில் வெளியான கட்டுரையில் 'ஈழத்தின் மிகமுக்கியமான இதழ்களில் ஒன்றாக கலைச்செல்வி 1958 முதல் 1966 வரையாக 8 ஆண்டு காலத்தில் கிட்டத்தட்ட 70 இதழ்கள் வரை வெளியானது' என்று குறிப்பிட்டிருப்பார். ஆனால் ஜூன் 2008 ஞானம் இதழில் வெளியான சிற்பியின் 'கலைச்செல்விக்காலம்' கட்டுரையின் இறுதியில் கலைச்செல்வி 71 இதழ்கள் வெளியானதாகக் கட்டுரையாளர் சிற்பி கூறுவார்: "அவர் கையளித்த பிரதிகளுடன் என்னிடமிருந்த பிரதிகளையும் சேர்த்து, ஆண்டு - மாத வாரியாக ஒழுங்கு படுத்தினேன். அந்த எட்டு ஆண்டுகளில் 71 பிரதிகள் மட்டுமே வெளியாகியிருந்தன; அவற்றுள் இரண்டு பிரதிகள் தொலைந்தே விட்டன. " (ஞானம் ஜூன் 2009 பக்கம் 129)