சிறுகதை; விவசாயி - கடல்புத்திரன் -
கோபி பகலில் அந்த சாக்கு கட்டிலில் செம தூக்கம் போட்டிருந்தான் . காடு வெட்டி விவசாயம் செய்கிறவர்கள் பயன்படுத்துற மடிக்கிற மரக்கட்டில் அதிசயமாக அவன் வீட்டிலும் ஐயாவால் பயன்பாட்டில் இருக்கிறது . யாழ்ப்பாணத்தில் சுகமான தூக்கம் வருகிற ...இதை யார் பயன்படுத்துகிறார் ? . அவரை சுத்தத் தமிழர் என சமயத்தில் நினைப்பான் . ஐயாவிடம் அவன் விடுத்து விடுத்து கேள்விகள் கேட்க முடியாது . ஒருநாள் ரகுவிடம் கேள்விகளை எழுதிக் கொடுத்து அவன் மூலமாக பேட்டி எடுக்க வேண்டும் . தனக்குள் சிரித்துக் கொண்டு நெட்டி முறித்தான் . அம்மா காதலித்து ஐயாவை முடித்தேன் என்று சொல்வார் . அதுவும் நினைப்பில் வந்தது . அம்மாட வலது கை சின்ன மாமா தான் . அவருக்கும் தம்பிக்கும் இடையில் வயசு வித்தியாசம் நாலு, ஐந்து இருக்கும் . அது தான் ... அக்கா சொன்னால் கேட்பவராக இருந்தார் . அடுத்த ஆண்டில் பிறந்திருந்தால் வில்லனாக அல்லவா இருந்திருப்பார் . ஆனால் , அந்த காலம் இலக்கியக்காதலாக இருந்தது . இன்று இருப்பது போல இல்லை . அட அவனுக்கும் காதலுக்கும் வெகு தூரம் விடுங்கள் . ஐயாவை , அம்மா முதலில் விரும்பவில்லை . அம்மம்மா தான் , அயலுக்குள் இருந்த அவரை " " எடியே , இவன் பிரயாசைக்காரனாக இருக்கிறான், கட்டுவாயா ? " எனக் கேட்டார் . அம்மா " என்னாலே கறுப்பனைக் கட்ட முடியாது " என்று விட்டுப் போய் விட்டார் .