கே.எஸ். சிவகுமாரன்; வாழ்நாளில் கற்றதையும் பெற்றதையும் பதிவுசெய்த கலை, இலக்கியவாதி -முருகபூபதி -
- எமது அருமை நண்பர் இலக்கிய திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரன் நேற்று கொழும்பில் மறைந்துவிட்டார் என்ற செய்தி வந்துள்ளது. அவர் குறித்து 2020 ஆம் ஆண்டு நான் எழுதி தினக்குரல் இதழில் வெளியான பதிவை இத்துடன் இணைக்கின்றேன். இறுதியாக அவரை 2019 ஆம் ஆண்டு கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் சந்தித்தேன். நல்ல நண்பர் ஒருவரை இழந்த துயரத்துடன் இந்த நினைவுகளை சமர்ப்பிக்கின்றேன். நண்பர் கே. எஸ். சிவகுமாரனின் அன்புத் துணைவியார் மற்றும் அன்புச்செல்வன்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். - முருகபூபதி -
எனது நீண்ட கால நண்பரும் புகழ்பெற்ற இலக்கியத் திறனாய்வாளருமான கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் சுகவீனமுற்று கொழும்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி எனது செவிக்கு எட்டியதும், அவரது கைத்தொலைபேசிக்கு அழைப்பெடுத்து அவரது சுகம் விசாரித்தேன். மறுமுனையிலிருந்து எனது குரலை அடையாளம் கண்டுகொண்ட அவர், என்னை “ சேர் “ என விளித்து, “தொடர்ந்தும் பேசமுடியவில்லை” என்றார்.
“நீங்கள் ஓய்வெடுங்கள். பின்னர் தொடர்புகொள்கின்றேன்” என்றேன். அவர் இப்படித்தான் என்னை மட்டுமல்ல இன்னும் பலரையும் “சேர்” என்று விளிப்பதுதான் வழக்கம்.
நாம் அவரை சிவா என்றும் சிவகுமாரன் என்றும் அழைப்போம். தப்பித்தவறி அவரை சிவகுமார் என்று விளித்துவிட்டால், சற்று அதட்டலான குரலுடன், “ஐஸே… எனது பெயர் சிவகுமாரன். அவ்வாறு அழையும். அல்லது சிவா என்று கூப்பிடும்” என்பார். ஆனால், என்றைக்குமே அதிர்ந்து பேசமாட்டார்.
இவரது எழுத்துக்களை ஊடகங்களிலும் மல்லிகை முதலான இதழ்களிலும் 1970 காலப்பகுதியில் பார்த்திருக்கின்றேன். எனினும் முதல் முதலில் இவரை சந்தித்தது 1972 இல் கொழும்பில் பூரணி காலாண்டிதழ் வெளியீட்டின்போதுதான்.