கம்பராமாயணத்தில் அசதியாடல்! - முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, - (சுழல் - II), மீனம்பாக்கம், சென்னை -
முன்னுரை
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுள் ஒன்று அசதியாடல் ஆகும். அசதியாடல் குறித்துப் பல்வேறு இலக்கியங்களில் காணப்பட்டாலும் பக்தி இலக்கியங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. சிலம்பில் இளங்கோவடிகளும், பெரியபுராணத்தில் சேக்கிழாரும், மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ், திருவானைக்கா அகிலாண்டநாயகி மாலை ஆகிய நூல்களிலும் அசதியாடல் குறித்துப் பாடல்கள் பாடப்பட்டுள்ளன.கம்பரும் தம் இராமாயணத்தில் அசதியாடல் குறித்துப் பாடியுள்ளார் என்பது குறித்து இக்கட்டுரையில் ஆராய்வோம்.
அசதியாடல்
அசதியாடல் என்பது தனித்தும், ஓரிருவரைத் துணையாகச் சேர்த்துக் கொண்டும் விளையாடும் விளையாட்டாகும். அசதியாடல் என்பது பரிகசித்தல், வேடிக்கை வார்த்தைக் கூறுதல், சிரித்துப் பேசுதல் என்று தமிழ் அகராதி பொருள் தருகிறது. உடன்பாடாக உரைப்பதுபோல் எதிர்மறைப் பொருள் பேசுவதே அசதியாடல் என்பதாகும்.அவ்வாறு எதிர்மறைப் பொருள்கள் வெளிப்படுவதேப் பாடலை அமைப்பது கவிஞரின் திறமையாகும்.
சிலம்பில் அசதியாடல்
இராமன் வனம் சென்று போது உயர்திணை, அஃறிணை உயிர்கள் எல்லாம் அழுதன. இதை வைத்துக் கொண்டு இளங்கோவடிகள் ஆய்ச்சியர் குரவையில்
‘மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகை முடியத்
தாலிய சேவடி சேப்பத் தம்பியொரடும் கான் போந்து
(ஆய்ச்சியர் குரவை- படர்க்கைப் பரவல் 1 )
இராமா காலில் கல்லும், முள்ளும் குத்த கானகம் செல்கிறாயா, மகாபலிச்சக்கரவர்த்தி மூன்று அடி நிலம் எடுத்துக் கொள்ளச் சொன்னபோது, நீ ஒழுங்காக உன் பிஞ்சு விரல்களால் மூன்று அடி நிலத்தை எடுத்துக் கொண்டிருக்கவேண்டும். அதைவிட்டு விட்டு அவன் தலைமேல் கால் வைத்து விளையாடினாய். இப்போது அனுபவி என்பது போல் பாடுகிறார்.