ஷெல்லிதாசனின் “அம்மாவுக்குப் பிடித்த கனி” சிறுவர்களின் மனவுலகில் சஞ்சாரம் செய்யும் பாடல்கள் - சு. குணேஸ்வரன் -
- கவிஞர் ஷெல்லிதாசனை (பே.கனகரத்தினம்) முற்போக்குக் கவிஞர்களிலொருவராகவும், மெல்லிசைப் பாடலாசிரியர்களில் ஒருவராகவும் இனங்காண்பார் கலாநிதி செ.யோகராசா அவர்கள். இங்கு கலாநிதி சு.குணேஸ்வரன் அவர்கள் “அம்மாவுக்குப் பிடித்த கனி” கவிதைத்தொகுப்பின் மூலம் அவரை சிறந்த குழந்தைக்கவிஞர்களில் ஒருவராக அடையாளம் காண்கின்றார். - பதிவுகள் -
அகவுலகில் ஜனித்த கவிதையை புறஉலகில் எழுத்து வடிவம் பெற்ற ஒரு கவிதையாக உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு மொழியின் மீது இயங்கும் செய்நேர்த்தி கவிஞனுக்குக் கைவரவேண்டும்.” என்பார் இந்திரன்.
சிறுவர் இலக்கியத்தின் மீதான ஈடுபாடு கடந்த சில வருடங்களில் அதிக கவனத்தைப் பெற்றிருக்கிறது. சிறுவர் பாடல்கள், சிறுவர் கவிதைகள், சிறுவர் கதைகள், சிறுவர் கட்டுரைகள், மட்டுமன்றி சிறுவர் அரங்கச் செயற்பாடுகளும் காணொளி வடிவிலான கோப்புகளும் தற்காலத்தில் சிறுவர் இலக்கியத்தின் மீதான தேக்கத்தை உடைப்பனவாக அமைந்துள்ளன. இவை வரவேற்க வேண்டியவை ஆகும். அரச திணைக்களங்களும் சமூகநலத் தொண்டு நிறுவனங்களும் சிறுவர்களின் உடல் - உள ஆற்றலை மேம்படுத்தும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றன. சிறுவர்களுக்காகப் பெரியவர்கள் எழுதுகின்ற நிலைமையோடு சிறுவர்களே தங்கள் அனுபவங்களையும் வெளிப்பாடுகளையும் முன்வைப்பதற்குரிய களங்களும் வாய்ப்புக்களும் சமகாலத்தில் ஏற்படுத்தப்படுகின்றன. இந்த வகையில் சிறுவர் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் இலக்கிய முயற்சிகளில் சிறுவர் பாடல்களை முதன்மையாகக் குறிப்பிடலாம்.
சிறுவர் இலக்கியத்தில் தொடர்ச்சியாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஷெல்லிதாசனின் புதிய தொகுப்பான “அம்மாவுக்குப் பிடித்த கனி” சிறுவர்களின் மனவுலகில் சஞ்சாரம் செய்யும் பாடல்களாக அமைந்துள்ளன. ஷெல்லிதாசன் ஏற்கெனவே கவிதை சிறுகதை முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர். சமூகத்தின் அக்கறைகள் குறித்து மிகுந்த கரிசனையுடன் தனது படைப்புக்களையும் தந்திருக்கிறார். இவ்வகையில், தொகுப்புக் குறித்து சில வார்த்தைகளைப் பதிவு செய்யலாம்.