முற்றுப் பெறாத உரையாடல்கள் – மீண்டும் துளிர்விடும் இலண்டன் நேரடி கலை, இலக்கிய நிகழ்வுகள் தொடர்பாக... - வாகீசன் -
கடந்த இரண்டு வருடங்களாக எம்மை அச்சுறுத்தி வருகின்ற பெருந்தொற்றும் அதனூடாக எம்மீது திணிக்கப்பட்ட உள்ளிருப்பு வாழ்வும் எமது வாழ்வில் மட்டுமல்ல நாம் இயங்குகின்ற எமது சமூக, அரசியல், பண்பாட்டு தளங்களிலும் கூட பல்வேறுவிதமான மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தன. இப் பெருந்தொற்று காலகட்டத்தில் மாபெரும் வல்லரசுகள், அரசாங்கங்கள், மிகப் பணபலம் படைத்த பன்னாட்டு நிறுவனங்கள் கூட இயங்கமுடியாமல் முடக்கம் பெற்றிருந்த நிலையில் சமூக, பண்பாட்டு தளங்களில் இயங்கிய எமது சிறிய அமைப்புக்களும் முடங்கிப் போனதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. முக்கியமாக நேரடி நிகழ்வுகளாக நிகழ்த்தப்பட்ட இலக்கியக் கூடுகைகளும் பல்வேறு விதமான கலந்துரையாடல்களும் முடக்கம் பெற்று, அவை மெய்நிகர் நிகழ்வுகளாக காணொளி வாயிலாக நடைபெறும் நிகழ்வுகளாக மாற்றம் பெற்றன. இதனால் உள்ளூர் ஆளுமைகளைக் கொண்டே மட்டும் நிகழ்த்தப்படக் கூடிய நேரடி நிகழ்வுகள் ஆனது மெய்நிகர் நிகழ்வாக மாற்றம் பெற்ற போது அது உலகெங்குமுள்ள ஆளுமைகளை இலகுவாக ஒன்றிணைத்து மாபெரும் கூடுகைகளாக இடம்பெற்றன. இது இந்நிகழ்வுகள் குறித்த ஒரு முக்கியமான நேர்மறை அம்சமாகும். இது போன்ற பல்வேறு நேர்மறை அம்சங்களினாலும் மக்களிடையே பலத்த வரவேற்பினை பெற்றிருந்த இம்மெய்நிகர் நிகழ்வுகளானது காலப்போக்கில் கட்டுக்கடங்காமல் வரம்பு மீறிப் பல்கிப் பெருகியமையாலும், அனுபவங்கள் அற்ற, ஆளுமைகள் அற்ற பலரும் இதனை செய்ய தலைப்பட்டமையாலும் இந்நிகழ்வுகளில் காத்திரத் தன்மை மறைந்து, பெறுமதியற்ற நிகழ்வுகளாக மாறிப் போய் விட்டிருந்தது. அத்துடன் இந்நிகழ்வுகளில் பங்கேற்ற பலரது அசிரத்தையானதும் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளும் கூட இந்நிகழ்வுகளை மிகவும் கேலிக் கூத்தாக மாற்றிப் போட்டு விட்டிருந்தது. இந்நிலையில் நேரடி நிகழ்வுகள் இனிமேலும் நடைபெறாதா என்ற எதிர்பார்ப்பினை பலரின் மத்தியிலும் ஏற்படுத்தியிருந்தன.