அஞ்சலி; கலை, இலக்கியத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன் மறைவு! - வ.ந.கிரிதரன் -
கலை,இலக்கிய விமர்சகர் திரு.கே.எஸ்.சிவகுமாரன் அவர்களின் மறைவுச் செய்தியை எழுத்தாளர் முருகபூபதியின் மின்னஞ்சல் மூலம் அறிந்துகொண்டேன். துயர் உற்றேன். நான் மதிக்கும் கலை, இலக்கிய ஆளுமைகளிலொருவர். என் பல்கலைக்கழகக் காலத்தில் அவர் 'ஃபிளவர் றோட்'டிலுள்ள 'அமெரிக்கன் சென்டரி'ல் அவர் பணி புரிந்துகொண்டிருந்தார். நான் அடிக்கடி அங்கு செல்வதுண்டு. அப்பொழுது அவரை வியப்புடன் பார்த்துச் செல்வேன். பின்னர் அவரே நான் வெளியிட்டு வரும் பதிவுகள் இணைய இதழில் தனது ஆக்கங்களை வெளியிட அனுப்பும் சந்தர்ப்பத்தைக் காலம் ஏற்படுத்தியது. மிகுந்த அன்புடன் என்னுடன் தொடர்பினைப் பேணி வந்தார்.
அவர் முழுமையானதொரு வாழ்க்கை வாழ்ந்து , இலங்கையின் கலை, இலக்கிய வரலாற்றில் ஆழமாகத் தடம் பதித்துச் சென்றிருக்கின்றார். அவரிழப்பால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரை 'பதிவுகள்' சார்பிலும், தனிப்பட்ட ரீதியிலும் நானும் பகிர்ந்து கொள்கின்றேன். ஆழ்ந்த இரங்கல். கூடவே எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூல் பற்றியும் ஆங்கில விமர்சனக் கட்டுரையொன்றினை இலங்கை டெய்லி நியூஸ் பத்திரிகையில் அவர் எழுதியதையும், பதிவுகள் இணைய இதழுக்கான அவரது இலக்கியப் பங்களிப்பையும் இத்தருணத்தில் நன்றியுடன் நினைத்துப் பார்க்கின்றேன். அவரது நினைவாக பதிவுகள் இணைய இதழில் முன்னரெழுதிய எனது கட்டுரையினையும் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.