எழுத்தாளர் முருகபூபதியுடனான நேர்காணல் - 'அவுஸ்திரேலியத் தமிழ்ச்செயற்பாடுகளில் ஆழமோ அர்த்தமோ இல்லை!' - சந்திப்பு : - ஜேகே -
- அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியாகும் இளவேனில் சஞ்சிகைக்காக இந்த நேர்காணலைச் செய்தவர் ஜேகே . -
எழுத்தாளர் லெ. முருகபூபதிக்கு அறிமுகம் தேவையில்லை. எழுத்தாளர், இலக்கியச் செயற்பாட்டாளர், மனித நேயப் பணியாளர் எனப் பன்முகங்களைத் தாங்கிநிற்கும் முருகபூபதியை அறியாதவர் அரிது. அவுஸ்திரேலியாவில் முன்னெடுக்கப்படும் எந்தத் தமிழ்ச் செயற்பாட்டிற்கும் தன் உழைப்பையும் அனுபவத்தையும் ஆற்றலையும் உவந்து கொடுப்பவர் முருகபூபதி. இளவேனில் சஞ்சிகையும் இதற்கு விதிவிலக்கல்ல. கனடாவில் பல ஆண்டுகளாக இயங்கிவரும் ‘கனடா இலக்கியத் தோட்டம்’ என்ற அமைப்பு தன்னுடைய வருடாந்த இயல் விருதினை இம்முறை திரு லெ. முருகபூபதிக்கு வழங்குவதன்மூலம் பெருமைகொள்கிறது. இளவேனில் சஞ்சிகை இச்செய்தி கேட்டுப் பெரு மகிழ்வு அடைகிறது. ஏற்றவருக்கு விருது வழங்கி உயர்ந்து நிற்கும் இலக்கியத்தோட்டத்திற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். தன்னயராத் தொண்டினால் தரணி நிமிர்ந்து நிற்கும் நம் முருகபூபதிக்கு எங்கள் அன்பான வணக்கங்கள். இச்செய்தியை ஒட்டி நமக்கொரு செவ்வி தரமுடியுமா என்று அவரைத் தொடர்புகொண்டபோது உடனடியாகவே ஒப்புக்கொண்டமைக்குப் பெரு நன்றி.
வணக்கம். கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது இம்முறை உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. உங்களின் தொடர்ந்த இலக்கிய, சமூகச் செயற்பாடுகள் எல்லாமே எந்த விருதுகளுக்கும் அப்பாற்பட்டவை. எனினும் இவ்விருது அறிவிப்பை நீங்கள் எவ்வண்ணம் எதிர்கொள்கிறீர்கள்?