No More Tears Sister: Anatomy of Hope and Betrayal (2004)
சமூக, அரசியற் செயற்பாட்டாளர் ராஜனி திரணகமவின் நினைவு தினம் செப்டம்பர் 21!
சமூக, அரசியற் செயற்பாட்டாளரும், உடற் கூற்றியல் விரிவுரையாளரும், 'முறிந்த பனை' நூலின் ஆசிரியர்களில் ஒருவருமான ராஜனி திரணகமவின் நினைவுதினம் செப்டம்பர் 21. அவர் நினைவாக அவரைப்பற்றிக் கனடிய அரச திரைப்படக் கூட்டுத்தாபனத்தயாரிப்பான No More Tears Sister: Anatomy of Hope and Betrayal (2004) என்னும் இத்திரைப்படத்தைப் பகிர்ந்துகொள்கின்றேன்.
கனடாத்தேசியத் திரைப்படக்கூட்டுத்தாபனத்தின் வெளியீடாக சுயாதீனத் திரைப்படத்தயாரிப்பாளர் ஹெலென் கிளோடாவ்ஸ்கி (Helene Klodawsky) எழுதி, இயக்கிய ஆவணத்திரைப்படமே No More Tears Sister: Anatomy of Hope and Betrayal (2004) என்னும் ஆவணத்திரைப்படம். மனித உரிமைப்போராட்டச் செயற்பாட்டாளரும், மருத்துவ உடற் கூற்றியல் விரிவுரையாளராகவுமிருந்த ராஜனி திரணகம பற்றிய ஆவணத்திரைப்படமிது. இவர் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஸ்தாபர்களில் ஒருவர். ஏனையவர்கள் : ராஜன் ஹூல், சிறிதரன், தயா சோமசுந்தரம். அவர்களுடன் இணைந்து 'The Broken Palmyra' ('முறிந்த பனை') என்னும் ஆவண நூலை எழுதி வெளியிட்டார்.