சிறுகதை: அம்மாவின் ஆசைகள்! - வீரவநல்லூர் ஸ்ரீராம் விக்னேஷ், (கல்லிடைக்குறிச்சி) -
அம்மாவுக்கு தூக்குத்தண்டனை உறுதியாகிவிட்டது.
எத்தனையோ வக்கீல்களுடன் கலந்து பேசினோம். எவ்வளவோ பணத்தைச் செலவு செய்துவிட்டோம். ஆனால், ஒட்டுமொத்தமாக அவர்களிடமிருந்து வந்த ஒரே பதில்...,
“என் மூத்தபையனைக் கொலை பண்ணினது நான்தான்.... நான்தான் கொண்ணேன்..... என் கையாலதான் கொண்ணேன்..... பெத்து, பால்குடுத்து வளத்த நானே பால்ல வெசத்த வெச்சுக் கொண்ணேன்.................
கோர்ட்டில வெச்சு ஜட்ஜு ஐயாவும், எதுக்காகக் கொன்னீங்கன்னு எத்தனதடவை கேட்டபோதிலும், கீறல் விழுந்த இசைத்தட்டுப்போல இதைத்தான் சொன்னாங்க.... காரணத்த சொல்லவேயில்லை......”
“என்னய வெச்சுக் காலத்தையும், கோர்ட்டையும் வேஸ்ட் பண்ணாதீங்க..... நான்தான் கொலைபண்ணினேன்னு ஒத்துக்கிட்டேனே..... சட்டுப்புட்டுண்ணு தீர்ப்பைச் சொல்லி தூக்கில போட்டிடுங்கய்யா..... எனக்கு ஒண்ணும் மூளைக்கோளாறோ பைத்தியமோ இல்லை...... நல்ல தெளிவாத்தான் இருக்கேன்..... சந்தேகமாயிருந்தா என்னய கொண்டுபோயி திரும்பத்திரும்ப, ஒண்ணுக்கு நாலு தரக்கான்னாலும் செக்கப்பு பண்ணிப் பாத்திருங்கையா...... நிதானமான சூழல்லதான் அவனைக் கொண்ணேன்.......”
புதிதாகத்தொடர்பு கொள்வதற்காக நான் தேடிச்செல்லும் வக்கீல்கள்கூட, நான் சொல்வதற்குமுன், என் ஜாதகத்தையே என்முன்னிலையில் எடுத்துப்போட்டார்கள்.
“நாங்க அறிஞ்சவரையில உங்க அண்ணன் கொஞ்சம் முரட்டுத்தமும், குடிப்பழக்கமும் உள்ள ஆளுண்ணு தெரியவந்திச்சு.….. உங்களுக்கு எட்டு வயசும், உங்க அண்ணனுக்கு பத்து வயசும் இருக்கிறப்போ, உங்கப்பா மாடிவீடு ஒண்ணில கொத்தனாரு வேலை பாக்கிறப்போ தவறிக் கீழை விழுந்து ஆஸ்பிட்டல்ல கெடந்து எறந்து போனதாகவும், சாகிறப்போ ரண்டு பசங்களையும் நல்லபடியா, எந்தவொரு கெட்டபேரும் இல்லாம வாழச் சொல்லிக்குடுத்து வளத்து மனிசனாக்கணும்னு உங்கம்மாகிட்ட சத்தியம் வாங்கிக்கிட்டதாகவும்……..