புராதனமான காஞ்சிரமோடை, ‘பரராசசேகரன் அணை’ எல்லைப் பிரதேசங்களும் பண்டிதர் க. சச்சிதானந்தனின் ‘யாழ்ப்பாணக் காவியமும்’ - வ.ந.கிரிதரன் -
- எழுநா சஞ்சிகையின் ஏப்ரில் 2024 இதழில் வெளியான எனது கட்டுரை புராதனமான காஞ்சிரமோடை, ‘பரராசசேகரன் அணை’ எல்லைப் பிரதேசங்களும் பண்டிதர் க. சச்சிதானந்தனின் ‘யாழ்ப்பாணக் காவியமும்’ -
காஞ்சிரமோடை என்னும் இப்பகுதியை நான் அறியக் காரணமாகவிருந்தது எண்பதுகளில் மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம் பொறுப்பேற்று நடத்திய காந்தியத்தின் ‘நாவலர் பண்ணைத் தன்னார்வத் திட்டம்’ ஆகும். நாவலர் பண்ணையில் மலையகத்திலிருந்து 77 இனக்கலவரத்தில் அகதிகளாக வந்திருந்த மக்களைக் காந்தியம் அமைப்பு குடியேற்றியிருந்தது. நாவலர் பண்ணைக்கும், மருதோடைக்குமிடையில் அமைந்திருக்கும் காஞ்சிரமோடை என்னும் பகுதி அப்போது காடாகவிருந்தது. மருதோடை வரை மட்டுமே பஸ் செல்லும். அங்கிருந்து பண்ணைக்கு மூன்று மைல்கள் வரையில் நடக்க வேண்டும். பண்ணைவாசிகள் அங்கிருந்து நடந்தே பண்ணைக்குச் செல்ல வேண்டும். இத்தூரத்தைக் குறைப்பதற்காக காஞ்சிரமோடைக் காட்டினூடு பாதை அமைப்பதும் அத் தன்னார்வத் திட்டத்தின் ஓரம்சம். அத்திட்டத்தின் மூலம் அப் பண்ணைவாசிகளின் பயணம் இலகுவானதாகவும், பாதுகாப்பானதாகவும் அமையும் என்று தீர்மானிக்கப்பட்டது.
காந்தியம் அமைப்பின் நாவலர் பண்ணையின் முக்கிய காரணங்களில் ஒன்று எல்லைப் பகுதியைப் பாதுகாப்பது. அத்திட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்றவர்களில் நானுமொருவன். அப்பொழுது நான் என் படிப்பை முடித்து வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது அப்பகுதி மக்கள் அக்காட்டுப் பகுதியைக் ‘காஞ்சிரமொட்டை’ என்றே அழைத்தார்கள். ஆனால் அதன் உண்மையான பெயர் காஞ்சிரமோடை. பண்டிதர் க. சச்சிதானந்தனின் ‘யாழ்ப்பாணக் காவியம்’ நூலின் முன்னுரை அப்பகுதியின் வரலாற்று முக்கியத்துவத்தை விரிவாகவே எடுத்துரைக்கின்றது.